PUBLISHED ON : ஜூலை 19, 2026

ஜூலை 22 - ஆடி சுவாதி
திருமாலின் வாகனம், கருடன். இவர் ஆடி மாதம், சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தவர். கருடன் மீது, திருமால் அமர்ந்து வரும் படங்களை தான் பார்த்திருப்பீர்கள். ஆனால், மூலஸ்தானத்திலேயே கருடன் மீது அமர்ந்த, கண்ணனை தரிசிக்க வேண்டுமா? உத்தரபிரதேச மாநிலம், மதுரா அருகே, சட்டிகாரா கிராமத்திலுள்ள, கருட கோவிந்தர் கோவிலில், இந்த அபூர்வ கண்ணனை தரிசிக்கலாம். இது, மிகவும் பழமையான சிலை.
இந்தக் கோவிலின் தல வரலாறு சுவையானது...
கண்ணன் பிறந்த மதுரா அருகிலுள்ள, ராவல் கிராமத்தில், அவரது தீவிர பக்தையான, ராதா பிறந்தாள். ராதாவின் அண்ணன், ஸ்ரீதாமா, கண்ணனுக்கு மிக நெருங்கிய நண்பன். திருமால், கிருஷ்ணாவதாரம் எடுத்து, கண்ணன் என்ற பெயரில், கோகுலத்தில் வளர்ந்தார். தான் பிறந்த மதுராவுக்கு சென்று, நண்பர்களுடன் விளையாடுவார்; அவர்களுடன் இணைந்து பசுக்களை மேய்ப்பார். அப்போது, அவருடன் இருந்த நண்பன் தான், ஸ்ரீதாமா.
ஒருமுறை, கண்ணனுக்கு, தானே திருமால் என்ற நினைவு வந்தது. கருடன் மீது அமர்ந்து, பக்தர்களுக்கு சேவை தரும் காட்சியை நினைத்து பார்த்தார். ஸ்ரீதாமாவை அழைத்து, 'நீ கருடன் போல நடிக்கிறாயா?' என கேட்டார். மகிழ்வுடன் ஒப்புக்கொண்டான், ஸ்ரீதாமா.
அவன் கருடன் போல் தன் முகத்தை மாற்றிக்கொண்டு, கைகளை இறகுகள் போல் விரித்து, குனிந்து நின்றான். அவன் மீது ஏறி அமர்ந்தார், கண்ணன். இந்த அமைப்புடன் அவர் காட்சி தருகிறார் என்பது ஒரு வரலாறு.
மற்றொரு நிகழ்வின்படி, சட்டிகாரா கிராமத்தில் இருந்த, திருமால் கோவிலை தரிசிக்க, ஆசைப்பட்டார், கருடன். ஒரு பறவைக்கு கோவிலுக்குள் செல்ல அனுமதி இல்லை என, அங்குள்ளவர்கள் மறுத்தனர். கவலையடைந்த, கருடன், திருமாலை எண்ணி பிரார்த்தித்தார். அவரது வேண்டுதலை ஏற்று, ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் காட்சி தந்தார், திருமால். தன் மீது தேவியருடன் அமர்ந்து, அந்த இடத்தில் கோவில் கொள்ள வேண்டும் என வேண்டினார், கருடன். அதை ஏற்றார், திருமால். கருடனின் பெருமையை எண்ணி வியந்தனர், பக்தர்கள். தாங்கள் பார்த்த கோலத்திலேயே, கருடன் மீது அமர்ந்த திருமால் சிலையை பிரதிஷ்டை செய்தனர்.
இந்தக் கோவிலில் ராகு, கேதுவால் ஏற்படும், காலசர்ப்ப தோஷத்திற்கு பரிகார நிவர்த்தி செய்வது விசேஷம். அட்சய திரிதியை அன்று, 12 ஆயுதங்கள் தாங்கி, கருடன் மீது திருமால் பவனி வருவதைக் காண, பக்தர்கள் அலை மோதுவர். காலை 4:30 மணி முதல் மாலை 3:30 மணி வரையும், மாலை 4:30 மணி முதல் இரவு 10:00 மணி வரையும் கோவில் திறந்திருக்கும்.
மதுராவில் இருந்து, 16 கி.மீ., பிருந்தாவனில் இருந்து, 5 கி.மீ., ஆக்ராவில் இருந்து, 67 கி.மீ., டில்லியில் இருந்து, 160 கி.மீ. துாரத்தில் கோவில் உள்ளது.
தி.செல்லப்பா
