
சூ. அந்தோணிசாமி, நாகர்கோவில்: 'சட்டசபை தேர்தலுக்கு, ஒரு வேட்பாளர், ௪௦ லட்சம் ரூபாய்க்கு மேல் செலவழித்தால், ஊழலாகக் கருதப்படும்...' என, தேர்தல் ஆணையம் எச்சரித்து உள்ளதே...
தேர்தல் ஆணையம் எவ்வளவு எச்சரிக்கை வேண்டுமானாலும் விடலாம்; ஒன்றுமே வேலைக்கு ஆகாது. ஏனெனில், தேர்தல் குற்றங்கள் மீது நடவடிக்கை எடுக்க, தேர்தல் ஆணையத்துக்கு எந்த அதிகாரமும் இன்னும் கொடுக்கப்படவில்லை!
* அ.ஐஸ்வர்யா, ராமநாதபுரம்: 'டாஸ்மாக் மதுவால் பெண்களுக்கு ஏற்படும் கொடுமைகள் தடுக்கப்பட வேண்டும்...' என, தே.மு.தி.க., பிரேமலதா கூறுகிறாரே...
தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்துள்ள, தே.மு.தி.க., பிரேமலதாவுக்கு, அது நடக்கவே நடக்காது என்பது தெரியும். பெண்களைக் கவர்வதற்காக, இப்படி அறிக்கை விடுகிறார்!
* எஸ்.வைத்தியநாதன், மதுரை: 'போகப் போக தெரியும்...' என, பேட்டிகளில் அடிக்கடி பாடி வந்த டாக்டர், ராமதாஸ் நிலைமை, கடைசியில் இப்படி ஆகி விட்டதே...
தன் நிலைமையை தான், 'போகப் போகப் புரியும்...' என பாடியுள்ளார், பெரியவர் ராமதாஸ். நாம் தான் அவர் பாடியதை தவறாகப் புரிந்து கொண்டு விட்டோம் போலிருக்கிறது, வைத்தியநாதன்!
உ.பார்த்திபன் ஜெயகுமார், துாத்துக்குடி: 'நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளில், ௯௯ சதவீதத்தை நிறைவேற்றி விட்டோம். இனி, தனியாக பிரசாரம் செய்ய தேவையில்லை...' என, தி.மு.க.வைச் சேர்ந்த துணை முதல்வர், உதயநிதி கூறுகிறாரே...
அவரது தந்தை ஸ்டாலின் அள்ளி வழங்கிய, 5,000 ரூபாய் உதவும் என்ற மிதப்பில் இப்படி பேசுகிறார்... 5,000 ரூபாய், ஓட்டாக மாறுமா என பொறுத்திருந்து பார்ப்போம்.
எல்.மூர்த்தி, கோவை: மறுபிறவி என்று ஒன்று இருந்தால், விவசாயியாக பிறக்க ஆசைப்படுவதாக, த.வெ.க., தலைவர் விஜய் கூறியுள்ளாரே...
இதுவும் ஒரு தேர்தல் மாய்மாலம் தான். விமர்சனம் செய்யும் அளவுக்கு, இதெல்லாம், 'வொர்த்'தான விஷயமே இல்லை, மூர்த்தி!
* ப.சோமசுந்தரம், சென்னை: 'இந்தியாவிலேயே, மிகக் குறைந்த நாட்கள் லோக்சபா சென்ற ஒரே எம்.பி., அன்புமணி தான்...' என்கிறாரே, தருமபுரி தி.மு.க., - எம்.பி., மணி?
எப்பேர்ப்பட்ட சாதனை! மக்கள் ஓட்டு போடும் வகையில் போட்டியிட்டால், தனக்கு, 'டிபாசிட்' கூட கிடைக்காது என்பது தெரிந்து தான், ஒவ்வொரு முறையும் ராஜ்யசபா சீட் கேட்டுப் பெறுகிறார், அன்புமணி. இந்த லட்சணத்தில், இப்படிப்பட்ட அலப்பறையை செய்கிறார் இவர்!
வெ.சென்னப்பன், உதகை: கூட்டணி கட்சிகளுக்கு, ஆட்சியில் பங்கு கிடையாது என்று, தி.மு.க., கூறிவிட்டது. ஆனாலும், 'ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்பதில் உறுதியாக உள்ளோம்...' என்கிறாரே, வி.சி., கட்சி திருமாவளவன்...
'நாம் கேட்பதை கேட்டு வைப்போம்; அவர்கள் கொடுப்பதைக் கொடுக்கட்டும்!' என்ற மனப்பான்மை தான்!
ஆர்.சேஷாத்ரி, சென்னை: அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி, பா.ஜ.,வை தோற்கடிக்க, உள்ளடி வேலை செய்யாமல் இருப்பாரா?
அ.தி.மு.க.,வுக்கு இந்த சட்டசபை தேர்தல், 'வாழ்வா, சாவா' பிரச்னை. கூட்டணி கட்சிகளைத் தோற்கடித்தால், தன் வாலில் தானே தீ வைத்துக் கொண்ட கதையாகி விடும்!
என்.ஜெயம், கடலுார்: 'என் மூலம் உங்களது காரியத்தை சாதித்துக் கொள்ளலாம் என்ற தவறான எண்ணத்துடன் என்னை சந்திக்க வருவதை தவிர்க்கவும்!' என்ற வாசகம், இறையன்பு ஐ.ஏ.எஸ்., வீட்டின் முன் இருக்கிறதாமே!
மிக நேர்மையான அதிகாரி. தன் பணிக் காலத்தில், நேர்த்தியாக வேலை செய்து, மாநிலத்துக்கு பல நன்மைகள் செய்தவர். இதனாலேயே, பல அரசியல்வாதிகளுக்கு இவர் மேல் கோபம் ஏற்பட்டிருக்கலாம்; ஆனால், அதைப் பற்றியெல்லாம் அவர், அலட்டிக் கொண்டதே இல்லை. மற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளும் இவரின் நேர்மையைக் கடைபிடித்தால், அரசியல்வாதிகளே ஊழல் செய்ய அஞ்சுவர்!
ச.ஷகீலா பானு, துாத்துக்குடி: 'பெண்கள், பாலியல் துன்புறுத்தலை வெளிப்படுத்த வெட்கப்படக் கூடாது...' என, ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி, திலகவதி கூறியுள்ளாரே...
இவர் சொல்வது சரியே. பாலியல் துன்புறுத்தலை, பயப்படாமல் வெளிப்படுத்தினால் மட்டுமே, அப்பிரச்னை குறையும்!
எம்.ராஜேந்திரன், லால்குடி: சீனா, பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகள், நம் நாட்டுக்கு எதிராக செயல்பட என்ன காரணம்?
'பெரியண்ணன்' அமெரிக்காவின் வேலை இது. உலகிலேயே தான் மட்டும் தான், 'சூப்பர் பவர்' ஆக இருக்க வேண்டும் என்ற பேராசையில், வேறு எந்த நாடும் வளரக் கூடாது என திட்டமிட்டு, தீவிரவாதத்திற்கு தீனி போட்டு வளர்க்கிறது, அமெரிக்கா. நம் பிரதமர் மோடி, 16 கால் பாய்ச்சலில், அமெரிக்காவை பல முனையிலும், ராஜ தந்திரத்துடன் பின்னடையச் செய்து வருகிறார் !
* வெ.பரமசிவன், சென்னை: கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத எம்.பி., - எம்.எல்.ஏ.,களை திரும்பப் பெறும் உரிமையும் மக்களுக்கு வேண்டும். அப்படி இருப்பது தானே உண்மையான ஜனநாயகம்?
சபாஷ் பரமசிவன்! இந்த உரிமை மட்டும் மக்களுக்கு கிடைத்து விட்டால், பொங்கலுக்கு பணம் கொடுப்பதும், 'டாஸ்மாக்' சரக்கை ஆறாக ஓட விடுவதும் நின்று போகும்! இப்படிப்பட்ட உரிமையை, அரசியல் சாசனம் நமக்குக் கொடுக்க, சுப்ரீம் கோர்ட் ஏற்பாடு செய்தால் நல்லது!
ஜி.விஜயகுமார், கோவை: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை போல, எளிமையான, ஆடம்பரத்தை விரும்பாத முதல்வர் நமக்கு கிடைக்க வாய்ப்புண்டா?
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, எளிமையானவர்; தனக்கென குடும்பம் இல்லாதவர். காலை வேளையில், இரு சக்கர வாகனத்தில் டீக்கடைக்கு சென்று, தேநீர் அருந்துவார். முன்னும், பின்னும், எந்த வாகனமும் அணி வகுக்காது. கதர் வேட்டி - சட்டை தான் அணிவார். நமக்கு, இப்படி ஒரு முதல்வர் கிடைப்பாரா என்பது சந்தேகமே!
ஏ.கே.சஞ்சீவிநாதன், ஈரோடு: தி.மு.க.,காரர்களை விட, தி.மு.க.,வில் அ.தி.மு.க.,காரர்களே அதிகம் இருக்கின்றனரே...
அறிவாலயத்தை விரைவில், அ.தி.மு.க., தலைமையிடம் என்று, பெயர் மாற்றம் செய்து விடுவரோ என்ற சந்தேகம், எனக்கும் ஏற்படுகிறது, சஞ்சீவிநாதன். அ.தி.மு.க.,வில் இருந்து வந்தவர்களில், நிறைய பேர் இப்போது, அமைச்சர்களாக உள்ளனரே!
* ம.வேல்முருகன், புதுச்சேரி: 'இண்டியா' கூட்டணிக்கு தலைமை ஏற்க, முதல்வர் ஸ்டாலின், தயக்கம் காட்டுவது ஏன்?
ஸ்டாலினுக்கு, ஆங்கிலம், ஹிந்தி இரண்டும், 'நோ நோ கமிங்!' தேசிய தலைவர்களிடமும், உலக தலைவர்களிடமும் தன்னால் உரையாட முடியாது என்பதை நன்கு புரிந்து, 'என் உயரம் எனக்குத் தெரியும்...' எனக் கூறி விட்டார். தமிழ் உரையே, எவரோ எழுதிக் கொடுக்கும் துண்டுச் சீட்டு தான் என்பது வேறு விஷயம்!
வீ.குமாரி, சென்னை: 'இங்கிருந்து ஆசிரியர்கள் அழைத்துச் செல்லப்பட்டு, உ.பி., பள்ளிகளில் தமிழ் மொழி கற்றுக் கொடுக்கப்படுகிறது...' என்கிறாரே, மத்திய இணையமைச்சர் எல்.முருகன்... உண்மை தானா?
உண்மையே! உ.பி.,யில், சில பள்ளிகளில், தமிழ் விருப்பப் பாடமாக சேர்க்கப்பட்டுள்ளது. பல மாணவர்கள், ஆர்வமாக தமிழ் கற்கின்றனர்.
சி.சசிகலா, விருதுநகர்: போரினால் ஏற்படும் இழப்புகளை பற்றி, இஸ்ரேல், அமெரிக்கா, ஈரான் போன்ற நாடுகள் சிந்திக்கவில்லையே...
அதிகார போதை தலைக்கேறினால், மக்கள் அனைவரும் துச்சம் தான். அதிகாரம் கொண்டவராக தன்னை நினைத்துக் கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப், பொருளாதார ரீதியாக பலத்த அடி வாங்கிக் கொண்டிருப்பதால், வளரும் நாடுகளிடம் ஏகப்பட்ட வரி வசூலித்து, வெனிசுலா நாட்டை அடித்துப் பிடுங்கி, தற்போது, ஈரானை நோக்கி காய் நகர்த்துகிறார். அடுத்ததாக, கியூபா நாட்டைக் கைப்பற்றப் போவதாகக் கூறுகிறார். புரிந்ததா, சசிகலா?

