தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : மார் 22, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 22, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பா - கே

மெரினா பீச்... மெட்ரோ ரயில் பாதைக்கான பணிகள் நடைபெறுவதால், நெரிசல் மற்றும் வாகனம் நிறுத்துவதில் இடப்பற்றாக்குறை. நண்பர்களான எங்களை மெயின் ரோட்டிலேயே இறக்கிவிட்டு, காரை, 'பார்க்' செய்துவிட்டு வருவதாக கூறி சென்ற, லென்ஸ் மாமா, நீண்ட நேரமாகியும் வரவில்லை.

'லென்சு, இன்னும் வரலையே... ஏதாவது பிரச்னையா அல்லது தெரிந்தவர்கள் யாருடனாவது பேசிக் கொண்டிருக்கிறாரா?' என்றார், 'திண்ணை' நாராயணன்.

'ஓய்... அவ்வப்போது, உம்மை, லென்ஸ் மாமா கலாய்த்தாலும், அவர் மீது பாசம் இருக்கத்தான் செய்கிறது...' என்று, கிண்டலடித்தார், குப்பண்ணா.

'நெருங்கிய நட்பு கொண்டவர்களிடம் இதுபோன்று ஊடலும், கூடலும் இருப்பது சகஜம் தானே!' என்றார், நாராயணன். 'எல்லாம் சரி, ஏழு வகையான மனிதர்கள் இருக்கின்றனரே, தெரியுமா?' என்றார், குப்பண்ணா. 'மனிதர்களின் குணநலன்களை பற்றி சொல்கிறாரோ...' என்று நினைத்தேன், நான். 'படித்தவன், படிக்காதவன், ஏழை, பணக்காரன், ஜாதி பிரிவினர், ஆன்மிகவாதி, தேவர்கள் இப்படி ஏழு வகையா?' என்றார், புரியாமல், அன்வர் பாய். அதெல்லாம் இல்லை, நானே சொல்கிறேன், என்று கூற ஆரம்பித்தார், குப்பண்ணா:

1. உப்பு மூட்டை மனிதர்கள்:

இத்தகைய மனிதர்கள், உங்கள் ஆற்றலை குறைத்து, நேரத்தை வீணடிப்பவர்கள். உங்கள் தேவைகளை கருத்தில் கொள்ளாமல், அவர்களுக்கு வேண்டிய அனைத்தையும் மற்றவர்கள் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பர். உங்கள் ஆற்றல், நேரம் மற்றும் வளங்களை சுரண்டுபவர்கள்.

2.கொசு மனிதர்கள்:

இவர்கள், உங்கள் மீது எதிர்மறையான எண்ணம் வைத்திருந்தாலும், உங்களிடமிருந்து நன்மைகளை பெற விரும்புவர். அவர்களிடமிருந்து எதுவும் திரும்ப கிடைக்காது. மற்றவர்களிடமிருந்து என்ன வாங்க முடியும் என்பதிலேயே குறியாக இருப்பர்.

3.ஆதிக்க மனிதர்கள்:

இத்தகையவர்கள், பெருமையைத் தேடுபவர்கள். பிறரை கட்டுப்படுத்துபவர்கள். அவர்கள் ஒரே ஒரு முறை உங்களுக்கு உதவி செய்தாலும், உங்கள் வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்துவர். உங்களை, தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க நினைப்பர்.

4.முதலை மனிதர்கள்:

இவர்கள், உண்மையான நோக்கம் ஏதும் இல்லாத பாசாங்கு மனிதர்கள். உங்களின் ரகசியங்களை அறிந்து கொள்வதற்காக, உங்களுடன் நெருங்கி பழகுவர். மேலும், உங்களுக்குள் பிரச்னை ஏற்படும் போது, அந்தத் தகவலை உங்களுக்கு எதிராக பயன்படுத்தக்கூடிய கொடியவர்கள்; முதுகில் குத்துபவர்கள்.

5.பச்சோந்தி மனிதர்கள்:

இவர்கள், பொறாமை குணம் கொண்டவர்கள். உங்களுடன், ஆரோக்கியமற்ற போட்டியில் இருப்பவர்கள். உங்கள் முன்னேற்றத்தை ரகசியமாக கண்காணித்து, உங்கள் வெற்றிகளை அங்கீகரிக்காமலும், கொண்டாடாமலும், உங்கள் குறைகளை பெரிதாக்குபவர்கள். கொஞ்சம் அசந்தால், உங்களை குற்ற உணர்வில் தள்ளி விட்டுவிடுவர்.

6.கனவு கொலையாளிகள்:

ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற முனைப்புடன் கனவு கண்டு, வெளிப்படையாக கூறிவிட்டால் அவ்வளவு தான். உங்களை பாராட்டவோ, ஆதரிக்கவோ மாட்டார்கள், இந்த வகையினர். நீங்கள் தோல்வி அடைய வேண்டும் என்று மனதார நினைப்பவர்கள். எப்போதும் எதிர்மறையான கருத்துகளை கூறுபவர்கள். தீர்வுகளுக்கு பதிலாக, அதிக சிக்கல்களை உருவாக்குபவர்கள்.

7.குப்பை மனிதர்கள்:

இத்தகைய மனிதர்கள், எப்போதும் கெட்ட செய்திகளை கொண்டு வந்து உங்களிடம் குவிப்பர். அவர்களின் வாழ்க்கை, கெட்ட எண்ணம் எனும் குப்பைகளால் நிரம்பியிருக்கும். அத்துடன், உங்கள் ஊக்கத்தைக் கெடுப்பர், மனச்சோர்வை ஏற்படுத்தும் தகவல்களை பரப்புபவர்கள். துரதிருஷ்டவசமாக, பிறர் இதயத்தை நொறுக்கி, அதில் சந்தோஷப்படுபவர்கள்.

ஏழு வகை மனிதர்களை பற்றி இப்போது தெரிந்து கொண்டீர்களா? எனவே, உங்களைச் சுற்றியுள்ள மனிதர்களை மதிப்பீடு செய்து, நேர்மறையான சிந்தனை கொண்டவர்களுடன் இருக்கிறோமா என, உறுதி செய்து கொள்வது உங்கள் பொறுப்பு.

வாழ்க்கையில், எல்லா விஷயமும் நமக்கு பிடித்த மாதிரி நடக்காது. சில விஷயங்கள் தானாகவே நடக்கும், சிலதுகளை நாம் தான் நடத்தணும், என்று குப்பண்ணா கூறி முடிக்க, வேர்க்க, விறுவிறுக்க, பெருமூச்சு விட்டபடி வந்து சேர்ந்தார், லென்ஸ் மாமா.

'மெயின் ரோடிலிருந்து, உள்வட்ட சாலைக்குள் வந்து, வண்டியை, 'பார்க்' செய்வதற்குள் போதும் போதுமென்றாகி விடுகிறது. இனி, நம் சந்திப்பை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டியது தான்...' என்று அலுத்துக் கொண்டார், லென்ஸ் மாமா.

'இன்று சிரமப்பட்டாலும், நாளை வசதியாக இருக்குமே...' என்று, நாராயணன் சொல்ல, 'லென்ஸ் மாமாவுக்கு கோபம் வந்துவிடப் போகிறதே...' என்று நினைத்து, மாமாவை சற்று துாரமாக அழைத்து சென்றார், அன்வர் பாய்.

தன்னிடமிருந்த தோல் பையிலிருந்து ஒரு, கோலா பாட்டிலை எடுத்து, லென்ஸ் மாமாவிடம் தந்தார், அன்வர் பாய்.

ஏதோ, 'சாப்ட் டிரிங்க்' தான் அருந்துகிறாரோ என்று நினைத்தால், அடுத்து, முறுக்கு ஒன்றை பையிலிருந்து எடுத்து மாமாவிடம் நீட்ட, 'கச்சேரி' ஆரம்பித்துவிட்டனர் என்று புரிந்து விட்டது. அவர்களிடமிருந்து, பார்வையை எதிர் திசையில் திருப்பி, நெருப்பில் சுட்ட சோளக்கதிரை கொறிக்க ஆரம்பித்தோம் .



நம் நாட்டைச் சேர்ந்த, சில அரசர்களின் வித்தியாசமான குணநலன்களை பற்றி, புத்தகம் ஒன்றில் படித்தது... கா சிராஜா ஒருவர் பசுவின் முகத்தில் தான் காலையில் விழிப்பது என்ற வழக்கத்தை கொண்டிருந்தார். அவர் எந்த ஊருக்கு சென்றாலும், பசுக்களை கூடவே அழைத்து செல்வார்.

பஞ்சாப், பாட்டியாலா பகுதியின் அரசர் சாஹிப் சிங், ஒருநாள் உணவாக நெய்யில் வறுத்த ஆறு கோழிகள், இரண்டு கிலோ ஆட்டு இறைச்சி, பாலில் செய்யப்பட்ட இனிப்புகள், தொட்டுக்கொள்ள காடை, கவுதாரி, மீன் என்று பொரிக்கப்பட்ட உணவுகளை விதவிதமாக உண்பார். அவரது எடை, 136 கிலோ. ஆனாலும், ஆண்டில் ஒரு மாதம், எந்த உணவும் உட்கொள்ளாமல், வெறும் எலுமிச்சை சாற்றை மட்டுமே குடிப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.

ராம்பூர் நவாப் ஒருவர், கன்னிப் பெண்களின் கற்பை சூறையாடி அவர்கள் அணிந்திருக்கும் மூக்குத்திகளை நினைவுச் சின்னம் போல் சேகரித்து வைத்திருப்பாராம்.

ராஜா பூபிந்தர் சிங் கார்களின் மேல் பிரியம் அதிகம் கொண்டவர். தன் ஆடம்பரக் கார்களை அலங்கரிப்பதில் ஆர்வம் உடையவர். கார்களின் முகப்பினை தங்கத் தகடுகளால் அலங்கரித்தும், கார்களின் பக்கவாட்டில் மணிகள், ரத்தினங்களை பதித்தும் வைத்திருப்பார்.

நவாப் மகபத்கான் ரசூல்கான் என்னும், ஜுனாகத்து மன்னர், 800 நாய்களை வளர்த்து வந்தார். ஒவ்வொரு நாய்க்கும் தனித்தனி அறைகள் அமைத்து, ஒவ்வொரு அறையையும் கவனிக்க தனித்தனி பணியாளையும் நியமித்திருந்தார். ஒவ்வொரு அறைக்கும் தொலைபேசி இணைப்பையும் செய்திருந்தார். நாய்கள் இறந்து போனால், அடக்கம் செய்து, கல்மண்டபம் அமைத்தார் என்கின்றனர்.

இது எப்படி இருக்கு?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us