sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஏப்ரல் 21, 2026 ,சித்திரை 8, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பதில்கள்!

/

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : ஏப் 19, 2026

Google News

PUBLISHED ON : ஏப் 19, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பி.ஜெயபிரகாஷ், தேனி: 'குடிக்கும் மக்களின் வாக்கு எனக்கு தேவையில்லை. குடிமக்களின் வாக்கு தான் வேண்டும்...' என்று, சீமான் கூறுகிறாரே...

இன்று, தமிழகம் உள்ள நிலையில், மது அருந்தாதவர்களின் எண்ணிக்கை மிக குறைவு என, 'டாஸ்மாக்' வருமானம் தெளிவாக சொல்கிறதே! அதன்படி பார்த்தால், சீமானுக்கு சொற்ப ஓட்டு தான் கிடைக்குமோ என, எண்ணத் தோன்றுகிறது!

எம்.கல்லுாரிராமன், ராமநாதபுரம்: முதல்வர் ஸ்டாலினிடம், சொந்தமாக வாகனம் ஏதும் இல்லை என்பது உண்மை தானா அந்துமணியாரே...

ஸ்டாலினின் பெரும்பாலான சொத்துக்கள், அவர் பெயரில் இல்லை என்பது, இதன் மூலம் புரிகிறது!

கே.ஜே.செல்வராஜ், கோத்தகிரி: சுந்தர்.சி.,க்கு அரசியல் ஆர்வம் இருந்தால், தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ.,வில் சேர்ந்து இருக்கலாமே...

'புதிய நீதிக் கட்சி'த் தலைவர், ஏ.சி.சண்முகம், சுந்தர்.சி.,யும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள். சுந்தரின் பல படங்களுக்கு நிதி உதவி அளித்தவர், ஏ.சி.சண்முகம். அந்த பந்தமே, இன்று சுந்தருக்கு, மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வாங்கிக் கொடுத்துள்ளது!

ஆர்.ஜெயலட்சுமி, திருநெல்வேலி: பெண் வாக்காளர்களைக் கவர, இவ்வளவு முயற்சி எடுக்கும் கட்சியினர், வருமான வரி செலுத்தும் பெண்களை நிராகரிப்பதால் வெற்றி பெற முடியுமா?

பெண் வாக்காளர்களில் மிக சொற்பமானவர்களே வருமான வரி செலுத்துவோராக உள்ளனர். கட்சிகளின் வாக்கு வங்கி, அவர்கள் அல்ல. இலவசங்களை வாங்கிக் கொள்வோர் தான், அரசியல்வாதிகளின் பலம்!

எஸ்.பழனிவேல், திருவாரூர்: அண்டப் புளுகு, ஆகாசப் புளுகு இரண்டையும், 'வேட்புமனு சொத்து விபரப் புளுகு' மிஞ்சிவிடும் போலிருக்கே?

ஹா... ஹா... ஹா...! கட்சி பாரபட்சமின்றி, அனைவரும் இதைத்தான் செய்துள்ளனர். நீங்கள் கேட்டது போல, இதே கேள்வியை, 100க்கும் மேற்பட்டோர் கேட்டிருக்கின்றனர், பழனிவேல்!

* வே.ஜெயசீலி, சென்னை: 'கூட்டணியில் இருப்பதால், தி.மு.க., செய்யும் ஊழலுக்கு, நாங்கள் பொறுப்பில்லை.. .' என, மார்க்., கம்யூ., கட்சி மாநிலச் செயலர் ஷண்முகம், நம் நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளாரே...

உண்மையை போட்டு உடைத்து விட்டார், ஷண்முகம். தி.மு.க.,வினர் இதற்கு என்ன பதில் சொல்லப் போகின்றனர் என, பார்ப்போம்!

டி.ரவீந்திரன், சென்னை: தனது தேர்தல் அறிக்கையில், பா.ம.க., '25 ரூபாய்க்கு அசைவ சாப்பாடு வழங்கப்படும்...' என, அறிவித்துள்ளதே...

நடிகர், விவேக்கின் காமெடி போல், காக்கா பிரியாணி போடுவரோ, என்னவோ!

* ஒய்.எல்.ஸ்ரீரவிராகுல், ஈரோடு: '29 வயதுக்கு மேற்பட்ட பட்டதாரிகளுக்கு, மாதம் 4,000 ரூபாய்; டிப்ளமா படித்தவர்களுக்கு, மாதம் 2,000 ரூபாய் வழங்கப்படும்...' என்ற, த.வெ.க., தேர்தல் அறிக்கை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

தன்னை, இளைஞர்களின் பிரதிநிதியாக நினைத்துக் கொள்ளும், விஜய், இலவசங்களை அறிவித்து, இளைஞர்களை சோம்பேறி ஆக்குவதை விட, 'அவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்பேன்...' என, கூறி இருக்கலாம்!

ஜி.விஜயகுமார், கோவை: தி.மு.க.,வுடன் கூட்டணி, 'டீல்' முடிந்த பின், அறிவாலயம் வாயிலில் நின்று பேட்டி கொடுத்த கூட்டணி தலைவர்கள் முகத்தில், மருந்துக்கு கூட, சிரிப்பு இல்லையே...

ம.தி.மு.க., உறுப்பினர், அர்ஜுன் ராஜ் தான் அதற்கு, 'சிரித்துக் கொண்டே அழுகிறோம்...' என, விளக்கம் கொடுத்து விட்டாரே! அதை விடுங்கள்... கூட்டணி தலைவருக்கே, முகத்தில் சிரிப்பே இல்லை... ஏதோ உண்மை புரிந்து விட்டது போலிருக்கிறது!

பெ.பொன்ராஜபாண்டி, மதுரை: தங்களுக்கு எதுவுமே செய்யவில்லை எனக்கூறி, துாத்துக்குடியில் பிரசாரத்துக்கு சென்ற அமைச்சர், அனிதா ராதாகிருஷ்ணன் காரை மறித்து, பெண்கள் சரமாரி கேள்வி எழுப்பி உள்ளனரே...

சரமாரி கேள்விகள் கேட்டால் மட்டும் போதாது; வரும் ஏப்ரல், 23ல், அவர்களுக்கு தக்க பாடமும் புகட்ட வேண்டும்!

* பா.பொன்ரோஸ், சென்னை: 'போதைப்பொருள் இல்லாத தமிழகமே, அ.தி.மு.க.,வின் இலக்கு...' என, சென்னை, ஆயிரம் விளக்கு, அ.தி.மு.க., வேட்பாளர், வளர்மதி குறிப்பிட்டுள்ளது பற்றி...

ஆனால், 'டாஸ்மாக்'கை மூடுவதாக, ஒருவரும் வாக்குறுதி கொடுப்பதில்லையே, பொன்ரோஸ்!

எ.முகம்மது ஹுமாயூன், நாகர்கோவில்: உள்துறை செயலர் யார் என்று தெரியாமலேயே, இரண்டு மாதத்துக்கு முன் மாற்றலாகிப் போனவருக்கு, த.வெ.க., கடிதம் எழுதி இருப்பது பற்றி...

விஜய்க்கு அரசியல் புதிது; அவருடன் இருப்பவர்களுக்கும் விபரம் போதவில்லை என்பது வெட்டவெளிச்சமாகி விட்டது. விஜய் சுதாரிக்க வேண்டும்!



எஸ்.அர்ஷத் பயாஸ், குடியாத்தம்: 'என்.டி.ஏ., கூட்டணி என்றால், 'நோ டெவலப்மென்ட் அலையன்ஸ்' என்கிறாரே, முதல்வர் ஸ்டாலின்?

ஸ்டாலினுக்கு தேர்தல் பரப்புரை எழுதிக் கொடுப்பவர், 'ஆங்கிலப் புலி' போலிருக்கிறது. அவர் எதுகை மோனையுடன் எழுதிக் கொடுப்பதை, இம்முறை தப்பில்லாமல் வாசித்து விடுகிறார், ஸ்டாலின். 'வெரிகுட் டெவலப்மென்ட்!'

சி.ரகுமுருகன், விழுப்புரம்: 'விசிலடிப்பவர்களை, தியேட்டர்களுக்கு அனுப்புங்கள்; சட்டசபைக்கு வேண்டாம். சட்டசபையில் விசிலடிக்க முடியாது...' என, விஜயை, வி.சி., கட்சி, திருமாவளவன் கிண்டல் செய்துள்ளாரே...

கடைசியில், திருமாவளவனாலும் சட்டசபைக்கு போக முடியாத நிலை ஏற்பட்டு விட்டதே, ரகுமுருகன்!

நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி: 'தி.மு.க., ஆட்சியில், இளம் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை...' என, விஜய் கூறுவது ஏற்புடையதா?

இளம் பெண்களுக்கு மட்டுமா... இரண்டு வயது குழந்தை முதல், முதியோர் வரை எந்த பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லை என்ற, செய்திகள் வெளியாவதை நாள்தோறும் படிக்கிறீர்கள் தானே, நடேஷ் கன்னா!

வி.குமார், கோவை: காங்., ராகுல், தேர்தல் பிரசாரத்தின் போது, பீஹாரில் அங்குள்ள குளத்தில் மீன் பிடித்தார். எங்கள் ஊருக்கு பிரசாரத்திற்கு வரும்போது, உக்கடம் குளத்தில் மீன் பிடிபாரா?

இப்படி ஒரு ஆசையா உங்களுக்கு, குமார்? ராகுல் தான், தமிழகம் பக்கம் தலைவைத்துப் படுக்கவே மறுக்கிறாரே!

* எல்.ரவி, தஞ்சாவூர்: எங்கேயோ நடந்த போரை காரணம் காட்டி, பத்திரிகை முதல் பால் வரை விலையை உயர்த்தி விட்டனரே...

அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்களைக்கூட, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து தான், நாம் பயன்படுத்துகிறோம். இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் இனி நாம் சிக்கக்கூடாது என்பதற்காக தான், பிரதமர் மோடி, 'மேக் இன் இந்தியா' திட்டத்தை, மிகக் கடுமையாக வலியுறுத்துகிறார். பத்திரிகைகள் அச்சடிக்கப் பயன்படும் காகிதம் முதல் கச்சா எண்ணெய் வரை, அனைத்தும் கிடைப்பதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால் தான் விலை ஏற்றம்!

* விஜி ஷர்மா, திருவண்ணாமலை: இப்பவும், வாக்குப்பதிவு நாளை லீவு நாள் என்றே நினைத்து, 'டூர்' செல்கின்றனரே...

பொறுப்பற்ற செயல். ஓட்டு போடுவது நம் கடமை; நம்மை ஆள்பவர்களை தேர்ந்தெடுக்கப் பயன்படும் ஆயுதம். நல்லாட்சி வேண்டும் எனில், அனைவரும் ஓட்டு போட்டே ஆக வேண்டும்!






      Dinamalar
      Follow us