தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

1


PUBLISHED ON : ஏப் 19, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 19, 2026

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பா கே

அலுவலக நேரம் முடிந்த மாலை நேரம்...

'மணி, கோடை வெயில் கொளுத்த ஆரம்பித்து விட்டது. காட்டன் டவுசர் மற்றும் டீ-ஷர்ட் வாங்கணும். 'ஷாப்பிங் மால்' போகலாம். என்னுடன் வாயேன்...' என்றார், லென்ஸ் மாமா.

'எனக்கும் வாங்கணும்...' என்று எங்களுடன் ஒட்டிக் கொண்டார், மூத்த செய்தியாளர் ஒருவர்.

மூவரும், சென்னையின் பிரதான பகுதியில் இருந்த, அந்த, 'ஷாப்பிங் மாலுக்கு' சென்று, ஆண்களுக்கான, 'ரெடிமேட்' கடை ஒன்றினுள் நுழைந்தோம்.

மாமா, தன் அளவை கூறியதும், மளமளவென்று, பெர்முடாஸ் எனப்படும், 'தொள தொள' அரை டவுசர் மற்றும் டீ-ஷர்ட்களை எடுத்து போட்டார், விற்பனையாளர்.

எனக்கு எதுவும் வேண்டாம் என்று நான் கூறியதும், அவர்கள் இருவரும், தலா அரை டஜன் டவுசர் மற்றும் டீ-ஷர்ட்கள் தேர்ந்தெடுத்தனர்.

பணம் கட்டுமிடத்தில், தன்னிடமிருந்த, 'கிரெடிட் கார்டை' எடுத்து கொடுத்து, நிமிஷத்தில், பணம் செலுத்திவிட்டு வந்தார், லென்ஸ் மாமா.

'பணத்தை நிதானமாக எச்சில் தொட்டு எண்ணிக் கொண்டிருப்பதை விட, கார்டில் பணம் செலுத்துவது சுலபமாக உள்ளது. பணத்தை கையில் வைத்திருந்தால், பிக்பாக்கெட் அடித்து விடுவரோ, தொலைந்து போய் விடுமோ என்ற பயமில்லாமல் நடமாட முடிகிறது. கிரெடிட் கார்டு கண்டுபிடித்தவனுக்கு நன்றி சொல்லணும்...' என்றார், மாமா.

அங்கிருந்து வெளியேறி மெதுவாக நடக்க ஆரம்பித்தோம்.

'கிரெடிட் கார்டு' கண்டுபிடித்ததற்கு ஏதாவது காரணம் இருக்கணுமே... உங்களுக்கு தெரியுமா?' என்று நான் கேட்க, 'இதுபற்றி சமீபத்தில் படித்திருக்கிறேன்...' என்று கூற ஆரம்பித்தார், மூத்த செய்தியாளர்:

கிரெடிட் கார்டு, மறதி காரணமாக உருவானது என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கும். இந்தச் சிறிய பிளாஸ்டிக் கார்டு உருவானதற்கு பின்னணியில், வேடிக்கையான ஒரு சம்பவம் இருக்கிறது.

கடந்த, 1949ல், அமெரிக்காவை சேர்ந்த, பிராங்க் மெக்னமாரா என்ற தொழிலதிபர், நியூயார்க் நகரில் உள்ள, உணவகம் ஒன்றுக்கு சென்றார். சாப்பிட்டு முடித்து, பில் கட்டும்போது தான் தெரிந்தது, அவர் தன் பர்ஸை வீட்டிலேயே மறந்து வைத்து, வந்து விட்டார் என்று.

அந்த தர்மசங்கடமான சூழலில் இருந்து தப்பிக்க, அவர் தன் விசிட்டிங் கார்டில் கையெழுத்திட்டு, கொடுத்து, 'பிறகு வந்து பணம் செலுத்துகிறேன்...' என்று உறுதி அளித்தார். இந்தச் சின்ன மறதி தான், 'டைனர்ஸ் கிளப்' என்ற உலகின் முதல் கிரெடிட் கார்டு நிறுவனம் உருவாகக் காரணமாக அமைந்தது.

கடந்த, 1950ல், வெளியிடப்பட்ட முதல் கார்டு, 'டைனர்ஸ் கிளப்' கிரெடிட் கார்டு தான். இது, அட்டை காகிதத்தால் செய்யப்பட்டது. அப்போது, இது, 27 உணவகங்களில் மட்டுமே செல்லுபடியானது.

அதன்பின், 1958ல், 'அமெரிக்கன் எஸ்பிரஸ்' நிறுவனம், முதல் முறையாக பிளாஸ்டிக் கார்டுகளை அறிமுகப்படுத்தியது. அதே ஆண்டில், 'பேங்க் ஆப் அமெரிக்கா' இன்று பெருமளவில் பயன்படுத்தப்படும், 'விசா' கார்டுக்கு வித்திட்டது.

கடந்த, 1966ல், பல வங்கிகள் இணைந்து, 'இன்டர்பேங்க் கார்டு அசோசியேஷன்' என்ற அமைப்பை துவங்கின. அதுவே, இன்று நாம் பயன்படுத்தும், 'மாஸ்டர்ஸ் கார்டு!'

கடந்த, 1970ல், கார்டின் பின்புறம் இருக்கும், கருப்பு நிறப்பட்டை அறிமுகமானது. இதனால், தகவல்களை வேகமாக படிக்கவும், பண பரிவர்த்தனைகள் விரைவில் நடைபெறவும் வழிவகுத்தது.

இந்தியாவில், 1980களில் தான் முதன் முதலில், கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்தியது, மத்திய வங்கி. ஆரம்பத்தில், இந்த கார்டுகள், வசதி படைத்தவர்களிடம் மட்டுமே இருந்து, இன்று சாதாரண டீக்கடை வரை வந்து சேர்ந்துவிட்டது.

மேலும் சில வியப்பூட்டும் தகவல்கள்...

* ஐ.ஓ.எஸ்., தரநிலையின்படி, அனைத்து கார்டுகளும் ஒரே அளவில் (85.60 மி.மீ., நீளம், 53.98 மி.மீ., அகலம்) தான் இருக்கும்

* தகவல்கள் திருடப்படுவதை தவிர்க்க இன்று, 'சிப்' மற்றும் 'பின்' முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது

* இன்று, கார்டை தேய்க்காமலேயே, 'டாப்' செய்து, பணம் செலுத்தும் வசதி வந்து விட்டது.

கிரெடிட் கார்டு, ஒரு கத்தி போன்றது. சரியாக பயன்படுத்தினால், அது ஒரு சிறந்த நிதி ஆயுதம். தவறாகப் பயன்படுத்தினால் அது, நம்மை அழிக்கும் வட்டிப் பொறி.

- என்று கூறி முடித்தார், மூத்த செய்தியாளர்.

'டீ குடித்துவிட்டு செல்லலாம்...' என்றார், மாமா. வழக்கமாக செல்லும், டீ கடைக்கு சென்று, இஞ்சி டீயும், வடையும் கேட்டார், லென்ஸ் மாமா.

'காஸ்' சிலிண்டர் தட்டுப்பாட்டால், வடை, போண்டா எதுவும் போடுவதில்லை. டீ கூட விறகு அடுப்பில் தான் போடுகிறோம். கொஞ்சம் புகை நாற்றம் வரும். 'அட்ஜெஸ்ட்' செஞ்சுக்கங்க...' என்றார், டீக்கடை நாயர்.

ஒரு பக்கம் வியாபாரம் குறைந்தாலும், மக்களின் ஆரோக்கியம் மேம்படும் என்று நினைத்து, அங்கிருந்து கிளம்பினோம்.



காலணிகள் தயாரிக்கும் பெரிய கம்பெனி ஒன்று, கிராமப் பகுதிக்கு தங்களுடைய ஊழியர்களை அனுப்பி, 'நம் தயாரிப்பை அங்கே எப்படி விற்பது என்று பார்த்து வாருங்கள்...' என்று கூறியது.

போன குழு திரும்பி வந்து, 'கிராமத்தில் இதெல்லாம் விற்பனையாகாதுங்க. அங்கே யாரும் செருப்பு போடுவதில்லை...' என்றனர்.

ஆனால், அந்த அதிகாரிகள் கொஞ்சம் யோசனை செய்து, வேறொரு குழுவை அக்கிராமத்திற்கு அனுப்பி வைத்தனர்.

அக்குழு திரும்பி வந்து, 'அங்கு காலணிகள் நிறைய விற்கும். அங்குள்ள யாருக்கும் செருப்பு போட்டு பழக்கமில்லை. செருப்பு போட்டால், என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை அவர்களுக்கு விளக்கினோம். அதனால், எங்களுக்கு நி றைய, 'ஆர்டர்' வந்து விட்டது...' என்றது, அக்குழு.

ஆக, இது தான் அணுகுமுறை. உற்பத்தி செய்த பின், பொருளை நேர்மையான முறையில் விற்பனை செய்ய வேண்டும்.

சாலையில், விசிறி விற்பனையாளர் ஒருவர், தன்னிடமுள்ள விசிறிகளை விற்பனை செய்துகொண்டே வந்தார்.

'இந்த விசிறி எவ்வளவு நாள் உழைக்கும்...' என்று கேட்டார், ஒருவர்.

'இது, 100 ஆண்டுகள் உழைக்கும்...' என்றார், விற்பனையாளர்.

'அப்படியா...' என்று, இரண்டு விசிறிகளை வாங்கினார், அந்த மனிதர். அதை விசிறிப் பார்த்ததில், மூன்று நாளில், அது, 'அவுட்!'

திரும்ப, அந்த விசிறி விற்கும் ஆள் வந்தார்.

அவரிடம், 'என்னங்க உங்க விசிறி, 100 ஆண்டுகள் உழைக்கும் என்றீர்கள். அதுக்குள்ளே கிழிந்து போய் விட்டதே...' என்று கேட்டார்.

'நீங்க எப்படி விசிறினீர்கள்?' என்று கேட்டார்.

வாங்கியவர் விசிறி காட்ட, 'நீங்க, இப்படி விசிறக் கூடாது, ஐயா. விசிறியை நேராகப் பிடித்து கொண்டு, உங்கள் தலையை மட்டும் அப்படி இப்படி ஆட்ட வேண்டும். அப்போது தான், 100 ஆண்டுகள் இது இருக்கும்...' என்றார்.

எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us