தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திரை நட்சத்திரங்களுடன் நந்தவன நாட்கள்! (3)

திரை நட்சத்திரங்களுடன் நந்தவன நாட்கள்! (3)

திரை நட்சத்திரங்களுடன் நந்தவன நாட்கள்! (3)


PUBLISHED ON : ஏப் 19, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 19, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'தாய்' வார இதழில் பணிபுரிந்தவரும், பத்திரிகையாளருமான பிரபு என்ற பிரபாகரன், தான் சந்தித்து பேட்டியெடுத்த திரை நட்சத்திரங்களுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்:

நான் ஒரு வழியாக போராடி, 'தாய்' வார இதழில், 1982ல் வேலைக்குச் சேர்ந்து விட்டேன். அதன் ஆசிரியர், வலம்புரிஜான் எனக்கு புதிய அத்தியாயத்தை காட்டினார்.

'தாய்' வார இதழுக்காக, ஜனரஞ்சகமாக செய்திகளை சேகரித்து எழுதத்தான் ஆரம்ப நாட்களில் வாய்ப்பளித்தார் ஆசிரியர், வலம்புரிஜான்.

எம்.ஜி.ஆரின் சொந்தப் பத்திரிகை அது என்பதால், போகும் இடமெல்லாம் ராஜமரியாதை கிடைத்தது.

சென்னை மூர்மார்க்கெட்டில் இருந்து அப்போது தான் மிருகக்காட்சி சாலை வண்டலுாருக்கு மாற்றப்பட்டிருந்தது. அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர்., தான் திறந்து வைத்தார். மூர்மார்க்கெட்டில் இருந்து விலங்குகளை மாற்றும் போது, லட்சுமி என்ற குரங்கு காணாமல் போய்விட்டது. இதை ஒரு ஆங்கில வார இதழ் செய்தியாக வெளியிட்டது. அந்த இதழை என்னிடம் தந்து, அந்த குரங்கு எங்கே என்று விசாரித்து எழுத சொல்லிவிட்டார், வலம்புரிஜான். மூர்மார்க்கெட்டில் ஏற்கனவே மிருகக்காட்சி சாலை இருந்த இடத்தில், லட்சுமி குரங்கு பற்றி நான் விசாரித்தேன். சரியான பதில் கிடைக்கவில்லை.

மூன்று நாட்கள் தேடி அலைந்தும் பலன் இல்லை. சினிமாவுக்கு விலங்குகளை வாடகைக்கு தரும், புலிக்குட்டி கோவிந்தராஜனிடம், குரங்கு எங்கே போயிருக்கும் என, விசாரித்த போது, 'விலங்குகள் ஒரு இடத்தில் இருந்து, வேறொரு புது இடத்துக்கு மாத்தனா அதுகளுக்கு பிடிக்காது. பழைய பழகிய இடம் தேடித்தான் வரும்...' என்றார்.

'காணாமல் போன, லட்சுமி குரங்கை எப்படி ரயிலில், வண்டலுாருக்கு கூட்டிட்டுப் போனாங்களோ, அதே மாதிரி ரயில்ல சென்ட்ரல் வந்து, பழைய மூர்மார்க்கெட்டுக்கு வந்திருச்சு...' என்று செய்தியாக்கி கொடுத்தேன். நான் எழுதிய, 'லட்சுமி எங்கே?' செய்தி, தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் பார்வைக்கே போகும்ன்னு நான் எதிர்பார்க்கவில்லை.

'தாய்' இதழ் அச்சடித்ததும் முதல் இரண்டு இதழ்கள், ராமாவரம் தோட்டம், முதல்வர் வீட்டுக்குப் போய் விடும். முதல் பக்கத்திலேயே, 'லட்சுமி எங்கே?' என்ற செய்தியைப் படித்த முதல்வர், வலம்புரிஜானை தொடர்புகொண்டு, 'செய்தி ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கு...' என்று பாராட்டியுள்ளார்.

என்னை அழைத்து தகவலைச் சொன்னார், வலம்புரிஜான். முதலில் எழுதிய செய்தியே முதல்வரிடம் பாராட்டு பெற்றதில் எனக்கு தலைகால் புரியவில்லை.

சினிமா ஆசையில், எப்படியாவது சினிமா செய்தி எழுதிவிட வேண்டும் என்று மனதுக்குள் தீர்மானித்து செயல்பட்டாலும், பொதுவான செய்தி சேகரிப்பவனாகவே வாய்ப்பு தரப்பட்டது.

சென்னையில், ஆஸ்திரேலியா-இந்தியா பெண்கள் அணியினர் கலந்துகொள்ளும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடந்தது. இதை, அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர்., துவக்கி வைக்கிற தகவல் வந்ததும்,

நானும், புகைப்பட கலைஞர் ஜெய்மோகனும் சேப்பாக்கம் மைதானம் போனோம். அங்கே முதல்வர் எம்.ஜி.ஆர்., அமைச்சர் ராகவானந்தம் உடன் போட்டியைத் துவக்கி வைக்க வந்தபோது, அருகே சென்று முதல்வரிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். குரங்கு செய்தியை குறிப்பிட்டு நேரிலும் பாராட்டினார். எம்.ஜி.ஆர்.,

ஜெய்மோகன் சைக்கிள் ஓட்ட, பின்னால் நான் உட்கார்ந்துகொண்டு தினசரி செய்தி சேகரிக்க, நகரை வலம் வருவோம்.

சினிமா படப்பிடிப்பு நடப்பதை எப்படியாவது பார்க்க வேண்டும் என்று எனக்குள் உந்துதல். ஒரு நாள் அதிகாலை வாகினி ஸ்டுடியோ அருகே இருந்த கட்டடத்தில், ஏவி.எம்.மின், அம்மா படத்தின் படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு போய் விட்டேன். இப்போது போல கோரவன் வண்டி எல்லாம் அப்போது கிடையாது. நடிகர்கள் அனைவரும் ஸ்டுடியோ, ‛மேக்- அப்' அறையில் தான் இருப்பர். அல்லது பெரும்பாலும் படப்பிடிப்பு அருகே குடைக்கு கீழே நாற்காலியில் உட்கார்ந்து இருப்பர்.

அம்மா படத்தை இயக்கி கொண்டிருந்தவர் இயக்குனர், ராஜசேகர். எங்கள் இருவருக்கும் பூர்வீகம் அடுத்தடுத்த ஊர் என்பதால், ஏற்கனவே அறிமுகம் இருந்தது. டிபன் சாப்பிட்டுக் கொண்டு இருந்தவரிடம் மெல்லப் போய், 'தாய் வார இதழில இருந்து வருகிறேன்...' என்று சொன்னதும், என்னையும் அருகே உட்கார்ந்து சாப்பிடச் சொன்னார். அருகே அமர்ந்திருந்த நடிகர், பிரதாப் போத்தனிடம் என்னை அறிமுகப்படுத்தி வைக்க, வெறும், 'ஹாய்' என்று சொல்லி, அவர் எழுந்து போய்விட்டார்.

படத்தின் கதாநாயகியாக, நடிகை, சரிதா நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன. அப்போது யாரிடமும் நெருங்கி பேச மாட்டார், சரிதா.

இயக்குனர் ராஜசேகர் இயக்கிய படங்களிலேயே அதிகம் கவனம் செலுத்தி வந்தவரிடம், 'அக்னிசாட்சி படத்தின் கேரக்டர் என்ன?' என கேட்க, என்னை மேலும் கீழும் பார்த்தவர், பெண்களுக்கு பிடிச்ச கேரக்டர் அவ்வளவு தான். அதுபற்றி வெளியே இப்ப பேசுறது தப்பு...' என்றார்.

வரலாறு காணாத வெற்றி பெற்ற, மரோசரித்ரா திரைப்படம், அவருக்கு மிகப்பெரிய அந்தஸ்தை தந்த படம். அதற்கடுத்து, தண்ணீர் தண்ணீர் படம். தண்ணீர் பிரச்னையை மையமாக வைத்து, கோமல் சுவாமிநாதன் உருவாக்கிய நாடகத்தை இயக்குனர், கே.பாலச்சந்தர் படமாக எடுத்தார். சரிதாவுக்கு தனி, 'இமேஜ்' உருவாகியிருந்த நேரம் அது. இந்தச் சூழலில் தான். ஏ.வி.எம்., தயாரிப்பு என்றதும், அம்மா படத்தில் நடித்தார்.

'மரோசரித்ரா காதல் படம். அது மாதிரி நிஜவாழ்க்கையில் நீங்கள் காதலித்தது உண்டா?' என கேட்க, 'பெண்கள்ன்னா காதலிக்கணுமா...' என்று கேட்டு, மவுனமாகி விட்டார்.

ராஜசேகர், படத்தைப் பற்றி நிறைய தகவல்கள் சொன்னார். அனைத்தையும் தொகுத்து எழுதி, வலம்புரிஜானிடம் கொடுத்தேன். அதை வாங்கி மேஜை மீது வைத்து விட்டார். எனக்கு பகீர் என்றது.

-தொடரும்

புகைப்பட கலைஞர். ஜெய்மோகன் சினிமாகாரர்களை சந்திப்பதில் அதிகம் ஆர்வம் கொண்டவர். சபாரி டிரஸ் தான் போடுவார். அதில் மேல் பாக்கெட்டில், 'பாக்கெட் டிரான்ஸ்சிஸ்டர் ஒன்று வைத்திருப்பார். பாடல்களை இடைவிடாமல் கேட்டுக் கொண்டே இருப்பார். வானொலியில், நேயர் விருப்பம் பாடலுக்காக கடிதம் எழுதுவார். எப்போதும் கைவசம் அஞ்சல் அட்டைகளை வைத்திருப்பார். இதனால், படப்பிடிப்பு தளங்களுக்கு சென்றால், நடிகையருக்கு அவரை ரொம்ப பிடிக்கும்.

- ஆர். பிரபாகரன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us