PUBLISHED ON : ஜூலை 26, 2026

* எம்.பாக்கியலட்சுமி, புதுச்சேரி: சிங்கப்பெண் அதிரடிப் படையினர், பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவது மட்டுமல்லாமல், பள்ளி இடைநிற்றல் மாணவ, மாணவியரையும், மீண்டும் பள்ளியில் சேர்த்து அசத்தி வருகின்றனரே...
சரியான பாதையில் பயணிக்கிறது, சிங்கப் பெண் அதிரடிப்படை. தமிழகத்தில், பெண்களின் கல்வி தகுதி, இவர்களால் மேம்படட்டும். வரதட்சணை கொடுமை, ஆணவக் கொலைகளும் தடுக்கப்பட்டால், இன்னும் சிறப்பு!
* ஜி.மூர்த்தி, சென்னை: 'பிரதம மந்திரி சூரியசக்தி வீடு இலவச மின்சார திட்டம்' மூலம், ஒடிசா மாநிலத்தில், 3,000 குடும்பத்தினருக்கு, மின் கட்டணம் பூஜ்ஜியமாக இருக்கிறதாமே...
எவ்வளவு நல்ல முன்னேற்றம் பாருங்கள். இதை, நாடு முழுதும் செயல்படுத்தினால், மக்களுக்கு மின் கட்டண செலவு குறையும். இதுகுறித்து, மக்களுக்குப் புரியும் வகையில் எடுத்துச் சொல்ல வேண்டியது, மத்திய-மாநில அரசுகளின் கடமை!
* கே.ஜே.செல்வராஜ், கோத்தகிரி: கூட்டணி ஆட்சியை முன்னிறுத்தும் கட்சிக்குத்தான், தங்களின் ஆதரவு என்ற நிலைப்பாட்டில் இருக்கும் சில கட்சிகள், தேர்தலுக்கு முன், விஜய், கூட்டணிக்கு அழைத்தபோது ஏன் தயக்கம் காட்டின?
விஜயின் இந்த இமாலய வெற்றியை, எந்த கட்சியும் எதிர்பார்க்கவில்லையே... 'எதிரியைக் கணிக்கத் தவறிவிட்டோம்...' என, இப்போது புலம்புகின்றனர்!
ஆர்.அபிஷேகமணி, கடலுார்: இளம் வாக்காளர்களைக் கவர, தி.மு.க.,வில் புதிய அணியை உருவாக்கும் திட்டம் பலன் தருமா...
இளைஞரணி தலைவராக, ஸ்டாலின் தன், 63 வயது வரை தொடர்ந்தார்; அதையே தான், அவர் மகன் உதயநிதியும் செய்யப் போகிறார். கட்சி எப்படி இருக்கும் என, சொல்லித் தெரிய வேண்டாம். விஷயம் அதுவல்ல... த.வெ.க.,வைக் கண்டு மிரண்ட பூனை, தன்னைத் தானே சூடு போட்டுக் கொள்கிறது, அவ்வளவு தான்!
எம்.பி.தினேஷ், கோவை: 'யாருக்கும் லஞ்சம் கொடுக்காதீர்கள்; லஞ்சம் கேட்டால், 'விஜய் இருக்கிறார்' என்று சொல்லுங்கள்...' என்கிறாரே, முதல்வர்... இப்படிச் சொன்னால், கோப்புகள் நகருமா?
சொல்லித்தான் பாருங்களேன், தினேஷ். உங்களுக்கு வெற்றி கிடைத்தால், எனக்கும் தகவல் சொல்லுங்கள், சரியா?
ஆ.கணேசன், சென்னை: அம்மா உணவகங்களில் சாப்பிடுவோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதே...
அம்மா உணவகங்களின் தரம் உயர்ந்துள்ளது என்று அர்த்தம். முதல்வர் விஜய்க்கு சபாஷ்! தொடரட்டும் சேவை!
* ஆ.திருவாசகமணி, ஈரோடு: 'ஸ்டாலினுக்கு கோபம் வந்தால், த.வெ.க., ஆட்சி கவிழ்ந்து விடும்...' என்று, அ.தி.மு.க.,வின், ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளது பற்றி...
அராஜகங்கள் எடுபடாது என்பதை, ராஜேந்திர பாலாஜி உணரவில்லையா அல்லது தி.மு.க.,வில் சேர, 'துண்டு' போடுகிறாரா என, தெரியவில்லை; த.வெ.க.,வில் சேர இவர் போட்ட துண்டு, துாக்கி எறியப்பட்டு விட்டதோ, என்னவோ!
வெ.நாராயணன், லால்குடி: 'மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம்...' என, தி.மு.க., உதயநிதி சொல்லி விட்டார்; ஒருவேளை, 'ஏற்க மாட்டேன்...' என, சொல்லி இருந்தால், என்னவாகி இருக்கும்?
மேற்கு வங்கத்தில், தன்னை சிங்கம் என, நினைத்துக் கொண்டிருக்கும் கோமாளி, மம்தா போல் ஆகியிருப்பார்!
கே.ஜே.ராஜ், ஊட்டி: பயணச்சீட்டுக்கு சரியான சில்லரை தரவில்லை எனக்கூறி, கர்நாடக காங்., அரசு போக்குவரத்துத் துறை அமைச்சரையே, அடையாளம் தெரியாமல் இறக்கி விட்டிருக்கிறாரே, அம்மாநில அரசு பேருந்து கண்டக்டர் ஒருவர்...
முகமூடி அணிந்து சென்றதால், கண்டக்டருக்கு, அமைச்சரை யார் என்றே தெரியவில்லையாம். தமிழகத்தில், விஜய் அரசும் இத்தகைய அதிரடி ஆய்வுகளை நடத்துகிறது; ஆந்திராவிலும் நடக்கிறது. எழுச்சி பெறட்டும், தென் மாநிலங்கள்!
கி.பாலமுருகன், ராமநாதபுரம்: 'இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறை, தெற்கிலிருந்து எழுதுவோம்...' என, தி.மு.க., ஸ்டாலின் வலைதளங்களில் பதிவிடுகிறாரே...
முதலில், சொந்த கட்சியின் கோட்பாடுகளை மாற்றி எழுதட்டும்; பிறகு நாட்டை பார்க்கலாம்!
எம்.செந்தில்குமார், சென்னை: 'அறுபது ஆண்டு கழக ஆட்சியை ஓரங்கட்டி, த.வெ.க., வென்றது, வெறும் சினிமா கவர்ச்சி என்பது பொய்; மக்கள் புரட்சி என்பதே மெய்...' என, ம.தி.மு.க., சொல்வது சரிதானே?
உண்மை தான். திராவிடக் கட்சிகள் மட்டுமல்ல; கட்சி துவங்கி, 37 ஆண்டுகள் நிறைவு செய்துள்ள, பா.ம.க., போன்ற கட்சிகளும் விழித்துக் கொள்ளட்டும்!
அ.குணசேகரன், புவனகிரி, கடலுார்: தி.மு.க., அரசு விட்டுச் சென்ற மொத்த கடனில், தமிழகத்தின் ஒவ்வொரு குடிமகனுக்கும், 1,28,934 ரூபாய்க்கு கடன் ஏற்பட்டுள்ளது. அந்துமணியும் அதே அளவு கடனாளியா?
நாம் அனைவருமே கடனாளிகள் தான்! நம் புதிய அரசாவது, இந்த பாரத்தை குறைக்க வழி செய்யும் என, நம்புவோம், குணா!
எம்.செல்லையா, சாத்துார்: 'நோபல் பரிசுக்குத் தகுதியான நபர், நான் மட்டும் தான்...' என்கிறாரே, அமெரிக்க அதிபர், டிரம்ப்?
அடப் பாவமே... நம் வி.சி.க., திருமாவளவனுக்கு இது தெரிந்தால், மனமுடைந்து போய்விடுவாரே!
பா.விக்ரம் பரத், சென்னை: ரயிலின், 'ஏசி' பெட்டிகளில், நான்கு ஆண்டுகளில், 1.27 கோடி பெட்ஷீட்கள் மாயம் என்ற செய்தி குறித்து...
அ.தி.மு.க.,வின் பழனிசாமி பாணியில் கூற வேண்டும் என்றால், நாட்டில் எத்தனை, 'களவாணி'கள் இருக்கின்றனர் என்று தெரிகிறது!
பி.மரகதவள்ளி, செங்கல்பட்டு: கேரளம் மாநிலம், உப்புதாரா என்ற கிராமத்தில், பஞ்சாயத்து பெண் கவுன்சிலர், பாழடைந்த குடிநீர் கிணற்றில் இறங்கி, தானே, நான்கு மணி நேரம் துார் வாரி சுத்தம் செய்துள்ளாரே...
கேரளாவின், 'சிங்கப் பெண்ணை' மனதார பாராட்டுவோம். நம் மாநில பெண் அமைச்சர்கள், பெண் ஊராட்சி தலைவர்கள், பெண் கவுன்சிலர்கள், இதுபோல் உத்வேகம் பெறட்டும்!
* ஒய்.எல்.ஸ்ரீரவிராகுல், ஈரோடு: 'இரண்டாயிரம் கோடி ரூபாய் என்ன... 10,000 கோடி ரூபாய் கொடுத்தாலும், தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என, சொன்ன, எங்கள் கழகத் தலைவர் ஸ்டாலினின் நெஞ்சுரம், தற்போதைய ஆட்சியாளர்களுக்கும் வேண்டும்...' என, பள்ளிக் கல்வித் துறை முன்னாள் அமைச்சர், அன்பில் மகேஷ் கூறியுள்ளாரே...
தமிழக மக்கள், கண்ணை மூடிக்கொள்ள வேண்டிய பூனைகளாகவே இருக்க வேண்டும் என்ற, 'நல்லெண்ணம்' கொண்ட பரம்பரைக்காரரிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? ஆர்வமுடன் கற்றுக் கொடுக்கப்படும் எந்தப் பாடத்தையும் மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கற்றுக் கொள்வர் என்பது, இந்த, 'மாஜி'க்கு தெரியாதோ!
உ.பார்த்திபன் ஜெயக்குமார், துாத்துக்குடி: பெற்றோரை கவனிக்காத பிள்ளைகளிடம் இருந்து சொத்தை திரும்பப் பெறலாம் என, ஐகோர்ட் கூறியுள்ளது வரவேற்கப்பட வேண்டிய விஷயம் தானே...
கைதட்டி வரவேற்கலாம். முதியோர் இல்லத்தில் சேர்வோர் என்ணிக்கை குறையும்; முதியோர் இல்லங்களும் குறையும்!
