PUBLISHED ON : ஜூலை 26, 2026

பா - கே
அலுவலகம். மதிய உணவு இடைவே ளை நேரம்.
'மணி... கொஞ்சம் வாயேன். ஒரு முக்கியமான நபரை அறிமுகப்படுத்துகிறேன்...' என்று கூறி, 'கான்பரன்ஸ் ஹாலுக்கு' அழைத்து சென்றார், லென்ஸ் மாமா.
'இவர் ....(பெயர்), டில்லி பல்கலைக்கழகம் ஒன்றில், சமூகவியல் பேராசிரியராக இருக்கிறார். சமூக பிரச்னைகளை பற்றி ஆராய்ந்து, ஆய்வு கட்டுரைகள் எழுதி வருகிறார். இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் நடைபெறும் செமினார்களிலும் தன் ஆய்வு கட்டுரையை சமர்ப்பித்துள்ளார். சமீபத்தில், இவரது ஆய்வு கட்டுரை ஒன்று பல சமூக ஆய்வாளர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. சென்னையில், ஒரு கலந்துரையாடலில் கலந்து கொள்ள வந்தவரை அழைத்து வந்துவிட்டேன். பேசிப் பாரேன். நிறைய விஷயங்கள் கிடைக்கும்...' என்று கூறி, இருவரையும் பரஸ்பரம் அறிமுகப்படுத்தியும் வைத்தார், மாமா.
பேராசிரியரின் சமீபத்திய ஆய்வு பற்றி, நான் விசாரிக்க, சொல்ல ஆரம்பித்தார்:
சிறைச்சாலை என்றாலே, உயரமான மதில்கள், இரும்புக் கதவுகள், கடுமையான பாதுகாப்பு மற்றும் கைதிகளுக்கான கடினமான வாழ்க்கை ஆகியவை தான், பெரும்பாலானோரின் நினைவுக்கு வரும்.
சில நாடுகளில் உள்ள சிறைச்சாலைகள், வழக்கமான இந்தக் கருத்தை, முற்றிலும் மாற்றும் வகையில் செயல்பட்டு வருகின்றன.
தண்டனையை மட்டுமே நோக்கமாகக் கொள்ளாமல், கைதிகளை சமூகத்தில் மீண்டும் நல்ல குடிமக்களாக இணைப்பதற்கும், முக்கியத்துவம் அளித்து வருகின்றன.
ஐரோப்பிய நாடுகளுள் ஒன்றான, நார்வே நாட்டில் உள்ள, பாஸ்டோய் சிறைச்சாலை, உலகின் மிகவும் மனிதநேயமிக்க சிறைச்சாலைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
தலைநகர், ஒஸ்லோவுக்கு அருகிலுள்ள ஒரு தீவில் அமைந்துள்ள இந்தச் சிறைச்சாலையில், விவசாயம், கால்நடைப் பராமரிப்பு, மர வேலை மற்றும் மீன்பிடித்தல் போன்ற பணிகளில், கைதிகள் ஈடுபடுகின்றனர்.
சிறை வளாகத்தில், அவர்கள் சுதந்திரமாக சைக்கிளில் செல்லவும் அனுமதி உள்ளது. இது, அவர்களிடம் பொறுப்புணர்வை வளர்த்து, மீண்டும் குற்றங்களில் ஈடுபடுவதைக் குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நார்வேயின் மற்றொரு புகழ்பெற்ற சிறைச்சாலையான ஹால்டன் சிறைச்சாலை, உலகின் மிக நவீன சிறைச்சாலைகளில் ஒன்றாக அறியப்படுகிறது.
இங்கு, கைதிகளுக்கு தனிப்பட்ட அறைகள், படிக்கும் வசதிகள், இசைப் பயிற்சி அறைகள், உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் தொழிற்பயிற்சி மையங்கள் உள்ளன.
காவலர்களும், கைதிகளும் ஒருவருக்கொருவர் மரியாதையுடன் பழகும் நடைமுறை, இங்கு பின்பற்றப்படுகிறது.
ஜப்பானில் உள்ள சில சிறைச்சாலைகள், கடுமையான ஒழுக்கம் மற்றும் நேர்த்திக்கு புகழ் பெற்றவை. நேரம் தவறாமை, துாய்மை மற்றும் ஒழுங்கு ஆகியவற்றுக்கு, அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
இதெல்லாவற்றுக்கும், 'ஹை-லைட்'டாக இன்னொரு விஷயமும் உள்ளது. அதாவது, சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஒரு கைதி, தன் பாலியல் வேட்கையை நிறைவேற்றிக் கொள்ளவும், சந்ததியினரை உருவாக்கவும், சிறைச்சாலை வளாகத்திலேயே, ஒரு அறையில், சட்டத்துக்கு உட்பட்டு தன் மனைவியுடன் சேர்ந்து இருக்க அனுமதிக்கப்படுகிறது.
சமூகவியலாளரும், எழுத்தாளருமான, கொலம்பஸ் பி.ஹாப்பர் என்ற ஆங்கிலேயர், 1969ல் எழுதிய தன் புத்தகத்தில், 'சிறைச்சாலைக்குள், கணவன்-மனைவி தாம்பத்ய உறவு வைத்துக் கொள்வது யதார்த்தமான ஒரு தீர்வு என்றும், இது, ஓரினச் சேர்க்கையை தடுக்கும்; குற்றவாளிகளின் நடத்தையை மாற்றும்' என்றும் குறிப்பிட்டுள்ளார். இக்கருத்தை உலக நாடுகளும் ஏற்றுக் கொண்டுள்ளன.
'குற்றம் செய்தவரை தண்டிப்பது சரி தான். ஆனால், கணவன் செய்த தவறுக்காக, பாலியல் உறவு கொள்ள முடியாத தண்டனையை, மனைவிக்கு ஏன் கொடுக்க வேண்டும்...' என்று கேட்கின்றனர், சமூகவியலாளர்கள்.
அமெரிக்காவில், மிசிசிபி மாகாணத்திலுள்ள, 'பார்ச்மேன்' என்ற திறந்தவெளி சிறைச்சாலையில், 1918ல், கைதிகளுக்கு, மனைவியுடன் கூடி மகிழ அனுமதியளிக்கப்பட்டது. உலகிலேயே முதன் முதலில் இங்கு தான் இந்த வழிமுறை பின்பற்றப்பட்டது.
அதன்பின், அமெரிக்காவின், 17 மாகாணங்களில் இந்த நடைமுறை விரிவுப்படுத்தப்பட்டது. அடுத்து, சவுதி அரேபியா, பாகிஸ்தான், கனடா, இத்தாலி மற்றும் ஆஸ்திரேலியாவின் சில மாகாண சிறைச்சாலையில், தாம்பத்திய சந்திப்புகள் அனுமதிக்கப்படுகின்றன.
டில்லி பல்கலைக்கழகம், சமூகவியல் துறையில், குற்றவியல் மற்றும் குற்றவியல் நீதி நிர்வாக பிரிவில் முன்பு பேராசிரியராக பணிபுரிந்த, ஸ்ரீவஸ்தவா என்பவரும் இதே கருத்தைத் தெரிவித்திருந்தார்.
இவர் மேற்கொண்ட ஆய்வில், குற்றவாளிகள், 78.5 சதவீதம் பேர் திருமணமானவர்கள் என்றும், அதில், ஆயிரம் கைதிகளின் மனைவியர், ஏற்கனவே, குடும்பத்தை விட்டு வெளியேறி, திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவுகளை வளர்த்துக் கொண்டுள்ளனர் என்றும் கண்டறிந்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள, எரவாடா சிறையில் உள்ள கைதிகளில் பெரும்பாலோர், எச்.ஐ.வி., மற்றும் எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி, 2002ல், ஒரு பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
'இயற்கைக்கு மாறான, பாதுகாப்பற்ற உறவு காரணமாக இது ஏற்பட்டிருக்கிறது. சிறைகளில், நோய் தொற்றை தடுக்க, அரசாங்கம், கோடிக்கணக்கான பணத்தை செலவிடுகிறது. அதற்கு பதிலாக, சிறைக்கைதிகளுக்கு, மாதம் ஒரு முறை, தங்கள் மனைவியுடன் தனியாக சந்திப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய வேண்டும்...' என, 2010ல், மகாராஷ்டிரா அரசுக்கு உத்தரவிட்டனர், பி.பி.மஜும்தார் மற்றும் ஆர்.ஜி.கேத்கர் ஆகிய இரு நீதிபதிகள்.
இதைத் தொடர்ந்து, 2005ல், கொலைக்குற்றம் சாட்டப்பட்டு, பஞ்சாப் மாநிலம், பாட்டியாலா மத்திய சிறையில் இருந்த, ஜஸ்பீர் சிங் என்பவரின் மனைவி, தாம்பத்திய உறவுக்கான உரிமை கோரியும், சிறையில் ஒரே அறையில் தங்கவும் அனுமதி கேட்டார். அதற்கு, வாய்ப்பு இல்லாவிட்டால், செயற்கை கருவூட்டல் முறையில் குழந்தை பெற்றுக் கொள்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும், பஞ்சாப் நீதிமன்றத்தை அணுகினார்.
'குழந்தை பெற்றுக் கொள்ளும் உரிமை, கணவனின் சிறைத் தண்டனைக்கு பிறகும் நீடிக்கும் ஒரு அடிப்படை உரிமை...' என்று, 2014ல், தீர்ப்பு வழங்கினார், நீதிபதி சூர்யகாந்த். இதை தொடர்ந்து, 2022ல், பஞ்சாப் மத்திய சிறை, மாவட்ட சிறையான, நாபாவிலும் கணவன்-மனைவி சந்திப்பு திட்டம் தொடங்கப்பட்டது.
இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை, ஒரு ஜோடிக்கு, இரண்டு மணி நேரம் வரை அனுமதி வழங்கப்படும். இதற்காக, 'அட்டாச்டு' பாத்ரூமுடன் கூடிய தனி அறை ஒதுக்கப்பட்டது. தம்பதி அறைக்குள் சென்றதும், அனைத்து கதவுகளும், ஜன்னல்களும் வெளியிலிருந்து பூட்டப்படும். அவர்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால், காவலரை அழைக்க, அழைப்பு மணியும் வைக்கப்பட்டது. அத்தம்பதியருக்கு, தொற்று நோய்கள் ஏதும் இல்லை என்பதற்கான மருத்துவ சான்றிதழ் மற்றும் திருமண சான்றிதழ் கட்டாயம் வழங்கப்பட வேண்டும்.
இத்திட்டத்தின் வாயிலாக, மாநிலம் முழுவதும், ஆயிரம் கைதிகளுக்கு மேற்பட்டவர்கள் இச்சலுகையை அனுபவித்துள்ளனர். அக்., 17, 2022ல், 17 சிறைச்சாலைகளில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் இத்திட்டத்தை செயல்படுத்தவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
- இப்படி கூறி முடித்தார், அந்த சமூகவியல் பேராசிரியர். அவர் கூறியதை கேட்டதும், ஆச்சரியமடைந்து, ஏதும் பேச தோன்றாமல் நீண்ட நேரம் அமர்ந்திருந்தேன், நான். இப்படி ஒரு கோணத்தில் நீங்கள் சிந்தித்ததுண்டா? எழுதுங்களேன் எனக்கு!
