தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திரை நட்சத்திரங்களுடன் நந்தவன நாட்கள்! (17)

திரை நட்சத்திரங்களுடன் நந்தவன நாட்கள்! (17)

திரை நட்சத்திரங்களுடன் நந்தவன நாட்கள்! (17)

1


PUBLISHED ON : ஜூலை 26, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 26, 2026

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'தாய்' வார இதழில் பணிபுரிந்தவரும், பத்திரிகையாளருமான பிரபு என்ற பிரபாகரன், தான் சந்தித்து பேட்டியெடுத்த திரை நட்சத்திரங்களுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்:

இன்றைக்கு இருக்கிற திரைப்பட பத்திரிகையாளர்கள் பெரும்பாலோர், நட்சத்திர சந்திப்புகளை,சென்னையில் உள்ள பிரசாத் அரங்கு மற்றும் பிரியாணி விருந்தோடு மட்டுமே நிறுத்தி கொள்கின்றனர். ஆனால், முன்பு அப்படி இல்லை. சென்னையில் நடக்கும் படப்பிடிப்புகளுக்கு நான் சென்று விடுவேன்; முக்கியமான வார இதழ் பத்திரிகையாளர்களும் ஆங்காங்கே இருப்பர். அப்போது, திரை நட்சத்திரங்கள் வீடுகளுக்கு கூட பத்திரிகையாளர்கள் சர்வசாதாரணமாக செல்வதற்கு அனுமதி இருந்தது; நிறைய தகவல்களும் கிடைக்கும்.

நடிகர்களில் மிக வித்தியாசமாக, நிறைய பேசுபவர், நடிகர் ராஜேஷ். நடிகை எஸ்.என்.லட்சுமியின் சகோதரர் மகனான, பாவல் சங்கர் இல்லாமல், ராஜேஷை பார்க்க முடியாது. இருவரும் பேசுவதைக் கேட்டுகொண்டே இருக்கலாம்.

ராஜேஷுக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை அதிகம். வைத்தீஸ்வரன் கோவிலில் நாடி ஜோதிடம் பார்த்து விட்டு வந்து, 'மூன்று மாதத்தில் எனக்கு திருமணம் ஆகி விடும் என்று சொல்லியிருக்கின்றனர். அவர் சொல்வது போல நடக்கிறதா என்று பார்ப்போம்...' என்று சொன்னார். அதன்படி, மூன்று மாதத்தில் ராஜேஷின் திருமணம் நிச்சயமானது.

திருமணத்திற்கு, அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரை அழைக்க வேண்டும் என்று என்னிடம் சொன்னார்.

'முதல்வரை அழைப்பதற்கு வழிகாட்டக்கூடிய சரியான ஆள், ஜேப்பியார் தான். நீங்கள் அவரை அழைத்துக் கொண்டு, ராமாவரம் தோட்டத்துக்கு சென்றால் நிச்சயம், எம்.ஜி.ஆரை சந்திக்கலாம்...' என்றேன்.

'முயற்சி செய்து பார்ப்போமே...' என்று அருகில் இருந்த, பாவல் சங்கரும் தெரிவித்தார்.

அதே போல், எம்.ஜி.ஆரை சந்தித்து பத்திரிகை கொடுத்தார், ராஜேஷ்.

அதிகாலை 5:00 மணிக்கே திருமண விழாவுக்கு வந்து, ராஜேஷை வாழ்த்தினார், எம்.ஜி.ஆர்.,

கம்யூனிச சித்தாந்தத்தில் நம்பிக்கையுள்ளவர், ராஜேஷ். பல்வேறு புத்தகங்களை படித்து, அவற்றை எல்லாம் என்னிடம் பகிர்ந்து கொள்வார். அவருக்கு, வலம்புரி ஜானுடைய எழுத்தும், பேச்சும் எப்போதும் பிடிக்கும். கம்யூனிஸ்ட் தோழர் தா.பாண்டியன் - ராஜேஷ் இருவருக்குமான நட்பு தனி ரகம்.

தா.பாண்டியனுக்கு திரைப்படம் தயாரிக்க வேண்டும் என்று ஆசை வந்து விட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து, தா.பாண்டியன் விலகி, ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி என்ற தனி பிரிவை நடத்தி கொண்டிருந்த நேரம். 'ஜனசக்தி' என்ற நாளிதழையும் அப்போது நடத்தி கொண்டிருந்தார்.

திரைப்படம் தயாரிப்புக்காக, சென்னை தி.நகரில், மூஸா தெருவில், அவர் அலுவலகம் போட்டிருந்தார். அங்கு சென்ற நான், தா.பாண்டியனிடம் பேசும்போது, 'ராஜேஷ் ஒரு பைசா கூட வாங்காமல், நான் எடுக்க இருந்த திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார், அதுபோல, இளையராஜாவும் இசையமைக்க ஒரு பைசா கூட வாங்கவில்லை...' என்றும் அவர் சொன்னது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

தெலுங்கில் வெளியான படம் ஒன்றை தான், தமிழில் எடுக்கிறார் என்ற தகவலும் கிடைத்தது. தெலுங்கு படத்தை இயக்கிய, ராமாராவ் என்பவரே, இந்தப் படத்திற்கும் இயக்குனர். அவருக்கு உதவியாக பணியாற்றியவர், இயக்குனர், ஆர்.வி.உதயகுமார்.

படப்பிடிப்பு, முழுக்க முழுக்க ஈரோடு பகுதிகளில் நடந்தது. சங்கராபரணம் படத்தில் நடித்த, ராஜலஷ்மி இதில், ராஜேஷுக்கு ஜோடியாக நடித்தார். மாணவர்கள் மத்தியிலே, கம்யூனிஸ்ட் கொள்கையை பரப்பக்கூடிய ஒரு திரைப்படம் தான் அது. சங்க நாதம் என்ற தலைப்பு வைத்திருந்தனர். ஆனால், படம் வெற்றி பெறவில்லை.

'வானம்பாடி கவிதா வட்டாரம்' என்ற அமை ப்பு, இலக்கிய உலகில் பரவலாக அறியப்பட்ட காலம். புது கவிஞர்களெல்லாம் ஒன்று சேர்ந்து, இந்த அமைப்பை உருவாக்கி, செயல்படுத்திக் கொண்டிருந்தனர். கவிஞர்கள், சிற்பி, பாலசுப்ரமணியம், புவியரசு, மு.மேத்தா, பாலா, ஞானக்கூத்தன் மற்றும் கங்கைகொண்டான் ஆகியோர் முயற்சியில், மிகப்பெரிய இலக்கிய இயக்கமாக செயல்பட்டுக் கொண்டிருந்தது, அந்த அமைப்பு.

கவிஞர் கங்கைகொண்டான், திரைப்படத் துறையில் கால் பதித்தார். சிற்பி மற்றும் மு.மேத்தா பாடல் ஆசிரியர்களாக இருந்தாலும், கங்கைகொண்டான், இயக்குனராக அவதாரம் எடுத்தார். பிரியமுடன் பிரபு என்ற அந்த படத்தின் படப்பிடிப்பு பெங்களூரில் நடந்தது. கவிஞர் கங்கைகொண்டான் எனக்கு நன்கு அறிமுகம் என்பதால், படப்பிடிப்புக்கு வர சொன்னார். பெங்களூருக்கு சென்றேன். படத்தின், 'ஹீரோ'வான நடிகர் பிரபு, ஏற்கனவே எனக்கு பரிச்சயம். படத்தில் நடித்த, நாகேஷிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார், பிரபு.

தன் மகன், ஆனந்த் பாபுவையும், பெங்களூருக்கு அழைத்து வந்திருந்தார், நாகேஷ். மகனை எப்படியாவது நடிகனாக்கிவிட வேண்டும் என்ற ஆசை அவருக்குள் இருந்தது. ஹோட்டலில், பத்துக்கு பத்து இருந்த அறையில், என் முன், ஆனந்த்பாபுவை, 'டான்ஸ்' ஆடிகாட்ட சொன்னார், நாகேஷ்.

ஆனந்த்பாபு முழங்கால் தேய ஆடிய அந்த ஆட்டம் என்னை பிரமிக்க வைத்து விட்டது. மாலை நேரங்களில் நாகேஷ், நடைப்பயிற்சி செய்ய விரும்புவார். பெங்களூரில், எம்.ஜி.,ரோடு அவருக்கு பிடித்தமான சாலை. நான், பெங்களூரில் இருந்த நாட்களில் மாலை நேரங்களில் நடைப்பயிற்சியின் போது, என்னையும் உடன் அழைத்துச் செல்வார், நாகேஷ்.

அப்போது, 'ஏன் நீங்களே ஆனந்த்பாபுவை வைத்து ஒரு படம் தயாரிக்க கூடாது?' என்று கேட்டேன்.

அதற்கு, 'என்.எஸ்.கிருஷ்ணன் அடிக்கடி சொல்வார், 'நடிப்பவர்கள் எல்லாம் படம் தயாரித்தால், ரொம்ப பண கஷ்டத்துல தான் முடியும். அதனால, படம் தயாரிக்காதே...' என, அறிவுரை சொல்வார். அதையே நான் இன்று வரை கடைப்பிடிக்கிறேன்...' என்றார், நாகேஷ்.

சென்னைக்கு வந்த பின், ஆனந்த்பாபுவே முயற்சி செய்து, நடிகராகி விட்டார். ஆனந்த்பாபு நடிக்க, பாடும் வானம்பாடி என்ற படத்தை, திரைப்பட கல்லுாரி மாணவர், ஜெயக்குமார் இயக்கினார். தயாரிப்பாளர், 'கேயார்' என்று அழைக்கக்கூடிய கோதண்ட ராமையா தயாரித்த படம். ஆனந்த்பாபு நட்சத்திர அந்தஸ்து பெறும் வகையில், வெள்ளி விழா படமாக அமைந்தது.

இந்த சமயத்தில், நாகேஷ் தன் பெயரில், தி.நகர் பாண்டிபஜாரில், 'ஹோலி ஏஞ்சல்' பள்ளி எதிரில், தன் பெயரிலேயே திரையரங்கு ஒன்றை கட்டினார். எம்.ஜி.ஆரை வைத்து தான் திரையரங்கை திறக்க வேண்டும் என்று, மூன்று மாதம் காத்திருந்தார், நாகேஷ்; எம்.ஜி.ஆரும் வந்து திறந்து வைத்தார்.

திரையரங்கில் முதல் காட்சியாக, எம்.ஜி.ஆர்., நடித்த, இதயக்கனி படத்தில் இடம்பெற்ற, 'நீங்க நல்லா இருக்கணும்...' பாடல் ஒலிபரப்பப்பட, அரங்கமே அதிர்ந்தது.

விழாவிற்கு வந்த பலரும் அதை, மீண்டும் கேட்க, நாகேஷ் மீண்டும் அதே பாடலை திரையில் போட, மிகவும் மகிழ்ந்தார், எம்.ஜி.ஆர்.,



- தொடரும்

- ஆர். பிரபாகரன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us