PUBLISHED ON : ஜன 18, 2026

சினிமா வியாபாரத்தில், விஜயகாந்துக்கென்று இருக்கிற இமேஜை, காயப்படுத்தாமல், படம் எடுத்தால் மட்டுமே, கல்லா கட்ட முடியும். இயக்குனர், விக்ரமன் விபரமானவர். வானத்தைப்போல படத்தில் துவக்கத்தில், மூப்படைந்த, வெள்ளைச்சாமி என்ற அண்ணன் கேரக்டர் மட்டுமே இருந்தது. ஆனால், அது மாத்திரம் போணி ஆகாது என்று நன்கு புரிந்தது.
நடிகர், எஸ்.வி.ரங்காராவ் நடித்த, அன்பு சகோதரர் என்ற படத்தின் பாதிப்பு, வானத்தைப்போல படத்தில், உண்டு என்பது பழைய சினிமா ரசிகர்களுக்கு நன்கு புரியும். ஒரேவிதமான கதை என்றாலும், இயக்குனரின் படைப்பாக அது எப்படி வெளிப்படுகிறது என்பது தான் முக்கியம். விக்ரமனுக்கு இன்னொரு, விஜயகாந்த் தேவைப்பட்டார். 'கிளைமாக்ஸ்' சண்டைக் காட்சியும் தேவைப்பட்டது.
தன் தந்தை, அழகர்சாமியை நினைத்து வணங்கி, அவரைப் போன்றே அரிதாரம் பூசிக் கொண்டார், விஜயகாந்த். கர்மவீரர் காமராஜரின் சாயலில், கதர் வேட்டி, கதர் சட்டையை தொளதொளவென்று தரித்தவாறு, வேறுபட்ட தோற்றத்தில் காட்சியளித்தார்.
விக்ரமனின் கட்டளையை காதில் வாங்கி, எப்போதும் போல், ஓங்கிக்குரல் கொடுக்காமல், அதிர்ந்து நடக்காமல், நிதானத்தின் மறு உருவமாக வெளிப்பட்டார், வெள்ளைச்சாமியாக நடித்த, விஜயகாந்த்.
முத்துவாக இன்னொரு, விஜயகாந்த். மல்லிகை பிராண்ட் ஊறுகாய் வியாபாரி. நடிகை, மீனாவுடன், 'டூயட்' பாடினார். போலீஸ்காரத் தம்பியாக, நடிகர், லிவிங்ஸ்டன் மற்றும் நடிகர்கள் பிரபுதேவா, ரமேஷ் கண்ணா ஆகியோரோடு, நாகேஷ் கால நடிகை, எஸ்.என்.லட்சுமிக்கும் பெருமை சேர்த்த படம், வானத்தைப்போல.
மிகப்பெரிய வசூலை, வானத்தைப்போல படம், விஜயகாந்துக்கு தேடி தந்தது. ஏறக்குறைய, 25 ஆண்டுகள் கடந்தும், இயக்குனர், விக்ரமனின், குறிஞ்சி மலராக வாசம் பரப்புகிறது.
'எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை...' பாடல், தீபாவளியைக் கொண்டாடும் சூழலில், வானொலியில் தவறாமல் இடம்பெறும்.
'க ண்ணுப்பட போகுதய்யா சின்ன கவுண்டரே...' என்ற கவிஞர் வாக்கு பலித்ததோ என்னமோ? தன் நீண்ட கால நண்பரான, ராவுத்தரை பிரிந்து, தனித்து படமெடுக்க தொடங்கினார், விஜயகாந்த். மைத்துனர், எல்.கே.சுதீஷ் தயாரிப்பு பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
'கேப்டன் சினி கிரியேஷன்ஸ்' பட நிறுவனம் உருவானது; தன் பிள்ளையார் சுழியாக, வல்லரசு படத்தை தயாரித்தது. என்.மகாராஜன் என்ற இயக்குனரை இதில் அறிமுகப்படுத்தினார், கேப்டன். வல்லரசு படத்தில், கந்தசாமி என்ற வில்லன் வேடத்தில் அறிமுகமானார், இயக்குனர் பி.வாசு.
விஜயகாந்த் மற்றும் நடிகை, தேவயானி முதல் முறையாக ஜோடி சேர்ந்தனர். தமிழகமெங்கும் பிரமாதமாக ஓடியது. தெலுங்கிலும், 'டப்' செய்யப்பட்டு வசூலைக் குவித்தது. ஹிந்தி நடிகர், சன்னி தியோல் மற்றும் நடிகை ஷில்பா ஷெட்டி நடிக்க, ஹிந்தி ெமாழியில் வெளியானது. இயக்குனர் என்.மகாராஜனே வடக்கிலும் கால் பதித்தார். படத்தை தயாரித்தவர் ஹிந்தி நடிகர், தர்மேந்திரா.
வி ஜயகாந்துக்கு ராசியான எண், ஏழு. ஏழாம் எண்ணை எதிரொலிக்கும் தேதியில், ஏவி.எம்., ஸ்டுடியோவில், விஜயகாந்த் நடிக்க, ரோஜா கம்பைன்ஸ் அதிபர், காஜா மொய்தீன் தயாரிக்க, வாஞ்சிநாதன் திரைப்படத்தின் துவக்க விழா.
இயக்குனரும், நடிகருமான, ஆர்.பாண்டியராஜனின் பண்பான தோழமையால், பட அதிபர் ஆனவர், காஜா மொய்தீன்.
நடிகரும், இயக்குனருமான ஆர்.பாண்டியராஜன் இயக்கிய, கோபாலா கோபாலா படம், காஜா மொய்தீன் தயாரித்த முதல் படம். அடுத்து, இயக்குனர் சேரன் இயக்கத்தில், பொற்காலம் படத்தை தயாரித்த, காஜா மொய்தீனுக்கு திரையுலகில் ஒரு பொற்காலத்தை உண்டாக்கியது. நாலாவது ஆண்டிலேயே, விஜயகாந்துடன் பணியாற்றும் நல்வாய்ப்பு கிடைத்தது.
ஏவி.எம்.,மில், பூஜையை முடித்துக்கொண்டு, காரில் தன் அலுவலகத்திற்குள் நுழைந்தார், காஜா மொய்தீன். அங்கு அடிதடி, தள்ளுமுள்ளு, அமர்க்களம் அனைத்தும் அரங்கேறி கொண்டிருந்தன. பூஜை போட்ட அன்றே படத்தை வாங்குவதற்கு வினியோகஸ்தர்கள் பலரும் உரிமையோடு சொந்தம் கொண்டாடினர்.
காஜா மொய்தீன் அதுவரையில் காணாத பரவசக் காட்சி. நண்பகல் நெருங்குவதற்குள், இரண்டு கோடி ரூபாய்க்கு மேல், வாஞ்சிநாதன் படத்தின் வினியோக ஒப்பந்தம் பூர்த்தியாகி விட்டது.
சென்ற நுாற்றாண்டின் இறுதி வரை, வாஹினி ஸ்டுடியோவில் நான்கு மொழிகளிலும் படப்பிடிப்பு நடைபெறும். இடைவேளை நேரங்களில், அடர்ந்த மர நிழல்களில், அடுத்தடுத்து நாற்காலி போட்டு ஆங்காங்கே நடிகர், நடிகையர் உட்கார்ந்து, பேசி மகிழ்வர். தற்போது, உச்ச நட்சத்திரங்கள் ஓய்வெடுப்பதற்காகவே, 'கேரவன்' உருவாகியுள்ளது. அதன் அருகேகூட, எவரும் செல்ல முடியாதபடி பாதுகாப்பு வளையமும் உருவாக்கப்பட்டது.
அன்று நடந்த வியாபார களிப்பில், விஜயகாந்துக்கு, 'கேரவன்' வாங்கித் தர வேண்டுமென்று முடிவெடுத்தார், காஜா மொய்தீன். அதனாலேயே சங்கடத்தில் சிக்கிக் கொண்டார்.
ஏவி.எம்.,மில், வாஞ்சிநாதனாக, பாடல் காட்சி ஒன்றில் பங்கேற்று விட்டு இடைவேளையில் வெளியே வந்தார், விஜயகாந்த். வாசலில் நின்ற, 'கேரவனை' சுட்டிக்காட்டி, 'உங்களுக்குத்தான் சார்...' என்றார், மொய்தீன்.
அடுத்த நொடி, தன் உதவியாளர்களை நோக்கி, கோபமாக கத்தினார், விஜயகாந்த். 'டேய் யார்ரா அங்கே... 'ஷூட்டிங் பேக்-அப்' கிளம்புங்க போகலாம்...' என்றார்.
இதைக்கேட்டு வெலவெலத்து போனார், மொய்தீன்.
பிறகு எப்படி சமாதானமானார், விஜயகாந்த்.
- தொடரும்
பா. தீனதயாளன்
நன்றி : சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் தொலைபேசி எண்: 7200050073

