
கோவில் விழாக்களில் அரசியலை தவிர்க்கலாமே!
ச மீபத்தில், என் கிராமத்து உறவினர் வீட்டிற்கு சென்றபோது, கோவில் திருவிழா களைகட்டியிருந்தது. கோவில் முன்புறம் போடப்பட்டிருந்த மேடையில், ஊரார் ஏற்பாடு செய்திருந்த கலை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தன.
அப்போது, கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட, என்னவென்று உறவினரை விசாரித்தேன்.
'ஒரு அரசியல் கட்சியின் உறுப்பினர்கள், தங்கள் தலைவரின் பெயரில் பேனர்கள் வைத்து, விழாவை அரசியலாக்க முயன்றுள்ளனர். இதனால், ஊரார் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டு, பிரச்னை ஆகியுள்ளது...' என்றார்.
ஊர்க்காரர்களில் சிலர், 'இது, கோவில் விழா. அரசியல் இதில் தேவையில்லை. கடவுளின் முன் அனைவரும் சமம். இங்கு கட்சிப் பாகுபாட்டை புகுத்தி, நம் நட்புறவைக் கெடுத்துக் கொள்ளாமல், ஒற்றுமையாக கொண்டாடுவோம்...' என, மோதலை சுமூகமாக பேசி முடித்ததை கவனித்தேன்.
விழாக்களில் அரசியல் கலப்பது பக்தியை குலைக்கும். ஒற்றுமையே பலம் என்ற உயரிய நோக்கோடு விழா நடத்திய ஊர்க்காரர்களை மனதாரப் பாராட்டினேன்.
அந்த சம்பவம், கோவில் விழாக்களை அரசியல் இல்லாமல், பக்தியுடன் கொண்டாட வேண்டும் என்பதை உணர்த்தியது.
- ஆ.வீரப்பன், திருச்சி.
அதிக ஒலியால் வந்த வினை!
சமீபத்தில், என் உறவினர் திருமணத்தில் கலந்து கொண்டேன். உறவினர் பணக்காரர் என்பதால், பெரிய மண்டபம் மற்றும் பாட்டு கச்சேரிக்கும் ஏற்பாடு செய்திருந்தார். மாலை, வரவேற்பு விழா நடந்தது, மண்டபத்தில் கூட்டம் அதிகமாகவே இருந்தது.
ஒருபுறம் அனைவரும் பந்தியில் சாப்பிட, இன்னொரு பக்கம் மணமக்களுக்கு பரிசளித்து, போட்டோவும் எடுத்துக் கொண்டிருந்தனர். நானும், சாப்பிட்டு முடித்து, மணமக்களுக்கு பரிசளித்துவிட்டு, உறவினர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன்.
திரைப்பட பாடல்கள் ஒலித்தபடி இருக்க, அதன் பக்கத்தில் சில இளைஞர்கள் நடனமாடி கொண்டிருந்தனர். போக போக இசையின் சத்தம் அதிகமாக, அந்த இடமே அதிரும் அளவுக்கு இருந்தது. அது, எனக்கும், என் உறவினர்களுக்கும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
திடீரென என் பக்கத்தில் இருந்த, வயதான முதியவர் ஒருவர் மயங்கி விழுந்தார். உடனே, பாட்டை நிறுத்த சொல்லி, அருகில் இருந்த மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றோம்.
அங்கு, அவரை பரிசோதித்து, 'இது, 'மைல்ட் பர்ஸ்ட் அட்டாக்' பயப்பட தேவையில்லை. மண்டபத்தில் அதிக சத்தத்தை கேட்டதால், அவரது இதயம், அந்த சத்தத்தை ஏற்க முடியாமல், திடீரென, 'அட்டாக்' வந்துள்ளது. இனி, இதுபோன்ற விழாக்களில் கலந்து கொள்வதை தவிருங்கள்...' என்று கூறினார், டாக்டர்.
நல்லவேளையாக திருமண நிகழ்ச்சியில் எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை என்று நிம்மதி அடைந்தோம்.
வாசக, வாசகியரே... எவ்வளவு பெரிய ஆடம்பரமான திருமணமாக இருந்தாலும், இதுபோன்ற அதிக சத்தத்துடன் பாட்டு போடுவதை தவிர்க்க வேண்டும். இந்த சம்பவம் அனைவருக்கும் ஒரு பாடமாக அமையும்.
- செ.சவுமியா, தர்மபுரி.
மரம் நடும் மாணவர்கள்!
அண்மையில், என் நண்பனை சந்திக்க, அவர் தாளாளராக இருந்து நிர்வகிக்கும் பள்ளிக்கு சென்றிருந்தேன்.
நான் சென்றிருந்த போது, அப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சில மரக்கன்றுகள் நட, தற்போதைய மாணவர்கள் தண்ணீர் விடுவதை கவனித்தேன்.
அதுபற்றி, நண்பரிடம் விசாரித்தேன்.
'எங்கள் பள்ளியில், பிளஸ் 2வில், முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு, மற்ற சிறப்பு பரிசுகளோடு, பள்ளியின் சார்பில் மரக்கன்றுகள் வழங்கி, அவர்கள் நினைவாக, அவர்களின் கைகளாலேயே பள்ளி வளாகத்தில் நட செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறோம்.
'அதற்கு சுழற்சி முறையில் தண்ணீர் விட, 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களை, தினம், 10 பேர் கொண்ட குழு என, பல குழுக்கள் அமைத்துள்ளோம். அதன் மூலம், நாமும் நல்ல மதிப்பெண்கள் எடுத்து, நம் கைகளால் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட வேண்டும் என்ற உத்வேகம் பிறக்கிறது.
'மதிப்பெண்களுக்காக மட்டுமின்றி, இயற்கையை மதித்தல், சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர்தல் போன்ற நன்மைகளுக்காகவும், இதை நடைமுறைப்படுத்தி வருகிறோம்.
'இதோடு, மறுசுழற்சி, பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்தல், மின்சாரம் மற்றும் நீர் சேமிப்பு போன்றவற்றை பற்றிய விழிப்புணர்வு வகுப்புகளையும் நடத்தி வருகிறோம். இதற்காக, ஆண்டு இறுதியில் சிறந்த சுற்றுச்சூழல் பங்களிப்பு செய்த மாணவர்களுக்கு, சான்றிதழும், பரிசுகளும் வழங்குகிறோம்...' என்றார்.
எதிர்கால தலைமுறையை திறமையானவர்களாக மட்டுமின்றி, சுற்றுச்சூழல் ஆர்வலர்களாகவும் உருவாக்கும் அவரின் சேவையை, மனதாரப் பாராட்டினேன்.
- வடிவேல் முருகன், நெல்லை.

