/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
விசேஷம் இது வித்தியாசம்: தந்திரத் திருவிழா!
/
விசேஷம் இது வித்தியாசம்: தந்திரத் திருவிழா!
PUBLISHED ON : ஜன 18, 2026

ஜன., 19 - 27 சியாமளா நவராத்திரி
சூரியனின் தெற்கு திசை பயண காலமான தட்சிணாயணத்தில் வரும், புரட்டாசி மாத மகாளய அமாவாசைக்கு அடுத்த நாள் துவங்கும், சாரதா நவராத்திரியே அனைவராலும் ஒருமித்து கொண்டாடப்படுகிறது. அவரது வடக்கு திசை பயண காலம் துவங்கும், தை மாத அமாவாசைக்கு மறுநாள் துவங்கும், சியாமளா நவராத்திரியை தாந்த்ரிகம் தெரிந்தவர்கள் கொண்டாடுவர்.
இறைவனை நம் பிடிக்குள் கொண்டு வர, நம் மகான்களில் பலர் அன்பை அவருக்கு காணிக்கையாக அளித்தனர். என்ன நடந்தாலும் பரவாயில்லை, சிவனை அடைந்தே தீருவோம் என, கங்கணம் கட்டி, பக்தி செலுத்தியவர்கள் நாயன்மார்கள். அன்பை பொழிந்து கண்ணனைக் கட்டிப் போட்டனர், பாண்டவர்களும், கோபிகைகளும்.
பக்தியில் இன்னொரு வகை இருக்கிறது. அதுதான் மாந்த்ரிகம், தாந்த்ரிகம். இவற்றில் தாந்த்ரிகத்தின் அடிப்படையில், சக்தி தேவியை, 10 வடிவங்களாக பிரித்து வழிபடுவதே, சியாமளா நவராத்திரி.
வாழ்வில் எதிர்மறை சக்திகளால் நாம் படும்பாடு ஏராளம். இயற்கை நம்மை ஒருபுறம் பாடாய் படுத்துகிறது. சுனாமி வந்து ஜீவன்களைக் கொல்கிறது. கொரோனா போன்ற கொடிய நோய்கள் தாக்கி உயிர்கள் அழிகின்றன. தேசங்களுக்கிடையே பகைவர்களால் போர்த்தொல்லை, குடும்பத்துக்குள்ளேயே பணம், பதவி, பகட்டு என, போராட்டம்.
இந்த எதிர்மறை சக்திகளை வெல்வதற்கு, தந்திரமே சரியான உபாயம். அதற்குரிய கலையே தாந்த்ரிகம். இதற்கு அதிபதி, சக்தி தேவி. இவளை, 10 தாந்த்ரிக தேவிகளாகப் பிரித்துள்ளனர். காளி, தாரா, திரிபுரசுந்தரி, புவனேஸ்வரி, பைரவி, சின்னமஸ்தா, துாமாவதி, பகளாமுகி, மாதங்கி மற்றும் கமலாத்மிகா ஆகியோரே அவர்கள். இந்த சக்திகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகை எதிர்மறை சக்தியை அழிக்கின்றனர். நலமாய் வாழ வரம் தருகின்றனர்.
இவர்களில், மாதங்கி என்பவள் தான், சியாமளா எனப்படுகிறாள். பச்சை நிறமுடைய இவள், வீணை ஏந்தியிருப்பாள். கல்விக்கும், ஞானத்துக்கும் அதிபதி. கற்றவனுக்கு என்றும் அழிவில்லை. ஏட்டு படிப்பு மட்டுமல்ல, மந்திரத்தையும், தந்திரத்தையும் கூட, கற்றால் தான் தெரிந்து கொள்ள முடியும். கல்வி இருந்தால், வாழ்வில் அனைத்தும் சாத்தியம். ஒரு தொழிலில் உச்சகட்ட வெற்றி பெறவும் கல்வியே தேவை. இதற்கு, ராஜ மாதங்கி வழிபாடு அவசியம்.
தமிழக மக்கள் கொடுத்து வைத்தவர்கள். ஏனெனில், மதுரை மீனாட்சியம்மன் கோவில், ராஜமாதங்கி பீடமாக உள்ளது. நாம் அவளை வழிபட்டாலே அனைத்து செல்வமும் பெறலாம். சாரதா நவராத்திரி காலத்திலும் நாம் கல்விக்கு அதிபதியான, சரஸ்வதி பூஜைக்கே முக்கியத்துவம் தருகிறோம் என்பது விசேஷத் தகவல்.
ஆக, பக்திக்கு ஆதாரம் கல்வி என்பதை உணர்ந்து, தாந்த்ரிக தேவியான சியாமளாவுக்குரிய நவராத்திரியையும் கொண்டாடி மகிழ்வோம்.
தி. செல்லப்பா

