
பதிலடி கொடுத்த, தனுஷ்!
தன் கனவு படமான, வேள்பாரி , என்ற தமிழ் படத்தில் நடிக்க, நடிகர்களான, விக்ரம் மற்றும் சூர்யா மட்டுமின்றி, ஹிந்தி நடிகர், ரன்வீர் சிங் ஆகியோரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார் இயக்குனர், ஷங்கர். ஆனால், அவரது முந்தைய படங்களின் தோல்வி காரணமாக, அப்படத்தில் நடிக்க, அவர்கள் மறுத்து விட்டனர். அதனால், நடிகர், தனுஷை குறி வைத்தார், ஷங்கர்.
ஆனால், 'ஒரு காலத்தில், உங்கள் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று நான் விருப்பம் தெரிவித்த போது, கண்டுகொள்ளவே இல்லை. இப்போது யாருமே, 'கால்ஷீட்' தரவில்லை என்றதும் என் பக்கம் வருவீர்களா? நான் என்ன அவ்ளோ மட்டமா போயிட்டேனா...' என்று கேட்டு, இயக்குனர், ஷங்கரை திருப்பி அனுப்பிவிட்டார், தனுஷ்.
— சினிமா பொன்னையா
ருக்மணி வசந்தை புலம்பவிட்ட, கோலிவுட்!
கன்னட சினிமாவிலிருந்து, கோலிவுட்டுக்கு வந்து, ஏஸ் மற்றும் மதராஸி போன்ற தமிழ் படங்களில் நடித்தார் நடிகை, ருக்மணி வசந்த். ஆனால், அந்த இரண்டு படங்களுமே தோல்வி அடைந்தது. அடுத்தபடியாக, அவரை, 'மெகா ஹீரோ'களுக்கு ஜோடியாக நடிக்க பேச்சுவார்த்தை நடத்தியவர்களும் பின்வாங்கி விட்டனர். என்றாலும், தமிழில் தொடர்ந்து நடிக்க விரும்பும், ருக்மணி வசந்த், 'மேல்தட்டு, 'ஹீரோ'கள் என்னை தவிர்த்தாலும், மூன்றாம் தட்டு, 'ஹீரோ'களுக்கு ஜோடியாக நடித்தாலாவது, 'மார்க்கெட்'டை பிடிப்பேன்...' என்று கல்லெறிந்து வருகிறார்.
— எலீசா
தயாரிப்பாளரை திருப்பியனுப்பிய, தமன்னா!
தற்போது நடிகை, தமன்னாவின், 'மார்க்கெட் டல்' அடிப்பதால், சமீபத்தில் ஒரு படத்துக்கு அவரை ஒப்பந்தம் செய்ய சென்ற, தயாரிப்பாளர், ஒரு கோடி ரூபாய்க்கும் குறைவான சம்பளம் பேசியுள்ளார். அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த நடிகை, தமன்னா, 'ஒரு சோப்பு விளம்பரத்தில் நடிப்பதற்கு கூட எனக்கு, 6 கோடி ரூபாய் கொடுக்கின்றனர். ஆனால், சினிமாவில் நடிப்பதற்கு ஒரு கோடி ரூபாய் கூட தரமாட்டீர்களா? இப்படி அடிமாட்டு சம்பளம் வாங்கி நான் நடிக்க வேண்டிய அவசியமில்லை...' என்று, 'அட்வான்ஸ்' கொடுக்க போனவரை திட்டி அனுப்பி விட்டார்.
— எலீசா
விஜய் சேதுபதி புது முயற்சி!
இயக்குனர், தியாகராஜன் குமாரராஜா இயக்கிய, சூப்பர் டீலக்ஸ் என்ற படத்தில், திருநங்கை வேடத்தில் நடித்து தேசிய விருது பெற்றார் நடிகர், விஜய் சேதுபதி. மீண்டும் அதே இயக்குனர் இயக்கும், பாக்கெட் நாவல் என்ற படத்தில் நடிக்கிறார்.
'முந்தைய படத்தை போலவே இந்த படத்திலும் யாரும் எதிர்பார்க்காத ஒரு மாறுபட்ட ரோலில் நான் நடிக்கிறேன். இந்தமுறையும் தேசிய விருதை வாங்க முயற்சி செய்வேன்...' என்கிறார், விஜய் சேதுபதி.
— சினிமா பொன்னையா
கறுப்புப் பூனை!
வெற்றிகரமான இயக்குனரின், நார்த் மெட்ராஸ் கதைக்களத்தில் நடிக்கும், வம்பு நடிகர், முதலில் தான் மட்டுமே, 'ஹீரோ' என்பதால் உற்சாகமாக இருந்தார். ஆனால், இப்போது அப்படத்தில், பீட்சா நடிகரும் இன்னொரு, 'ஹீரோ'வாக களம் இறக்கப்பட்டு இருப்பதால் கடுப்பில் இருக்கிறார். காரணம், முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகளை, பீட்சா நடிகர் பக்கம் திருப்பி உள்ள இயக்குனர், வம்பு நடிகரின் காட்சிகளை குறைத்து அவரை, 'டம்மி' பண்ணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதை மோப்பம் பிடித்த, வம்பு நடிகர் செம காண்டாகி விட்டார். 'கதை சொன்னது போலவே என் கதாபாத்திரத்தையும் படத்தில் வைக்க வேண்டும். ஒரு காட்சி காணாமல் போயிருந்தாலும், 'டப்பிங்' பேச மாட்டேன்...' என்று இயக்குனருக்கு, 'ஷாக்' கொடுத்துள்ளார்.
டியூட் என்ற தமிழ் படத்தில் நடித்த நடிகை, தற்போது, 'மெகா ஹீரோ'களுக்கு ஜோடியாகி விட்டார். ஆனால், ஆரம்பத்தில் குறைந்த படக்கூலியில் தான் ஒப்பந்தமாகி இருந்த, இரண்டு படங்களுக்கு வாங்கியிருந்த, 'அட்வான்ஸை' திருப்பி கொடுத்து விட்டார். ஆனால், 'அட்வான்ஸ் வாங்கிய படத்தில், பேசிய சம்பளத்தில் நடித்து கொடுத்தாக வேண்டும்...' என்று தயாரிப்பாளர் ஒருவர், டியூட் நடிகை மீது, 'தயாரிப்பாளர் கவுன்சிலில்' புகார் அளித்து விட்டார்.
எக்கச்சக்கமாக மாட்டிக்கொண்ட நடிகை, 'இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் புதிதாக, 'புக்' பண்ண வருபவர்களும், அதே குறைந்த சம்பளமே பேசுவர். அதனால், இந்த விவகாரத்தை வெளியில், 'லீக் அவுட்' செய்து விடாதீர். யாராவது கேட்டால், ஐந்து கோடி ரூபாய் சம்பளம் என, எனக்காக ஒரேயொரு பொய்யை மட்டும் சொல்லி, என்னை காப்பாற்றுங்கள்...' என்று, தயாரிப்பு தரப்பினரிடம் கெஞ்சிக் கேட்டுள்ளார், நடிகை.
சினி துளிகள்!
* கேரள மாநிலத்திலிருந்து, கோலிவுட்டுக்கு இறக்குமதியான, நடிகை, மமீதா பைஜூ, தற்போது தெலுங்கு சினிமாவில், பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
* இயக்குனர், வெற்றிமாறன் இயக்கி வரும், அரசன் படத்தில் நடிகர்களான, சிம்பு மற்றும் விஜய்சேதுபதியுடன், நடிகை, ஆண்ட்ரியாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
* மீசையை முறுக்கு படத்தின், இரண்டாம் பாகம் உருவாகி வரும் நிலையில், முதல் பாகத்தில் நடித்திருந்த, மறைந்த நடிகர், விவேக்கின் குரல், இந்த பாகத்தில், ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
* ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த, கருப்பர் நகரம் மற்றும் மோகன்தாஸ் போன்ற படங்கள் கிடப்பில் இருக்கும் நிலையில், தற்போது நடிகர், விக்ராந்துக்கு ஜோடியாக, அண்டர் 18 என்ற படத்தில் நடித்து வருகிறார்.
அவ்ளோதான்!

