
வள்ளியூரில் வட்டிகடை நடத்தி வந்தான், முருகப்பன். ஏழை, எளிய மக்களிடம் அநியாய வட்டி வாங்கி, அவர்களை கொடுமைப்படுத்தினான்.
ஒருநாள், முருகப்பன் கோவிலுக்கு சென்றிருந்தபோது, 'பக்தர்களே! நீங்கள் இறக்கும் போது, எதை நினைக்கிறீர்களோ, அப்படியே தான் அடுத்த பிறவியில் பிறப்பீர்கள்...' என, மறுபிறவியைப் பற்றி சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தார், மகான் ஒருவர்.
ஏதேச்சையாக இதை கேட்ட முருகப்பன், 'நானும் சாகும்போது, மறுபிறவியில் பக்கத்து நகரத்து ஜமீனில் பிள்ளையாக பிறக்க வேண்டும் என, நினைத்துக் கொண்டால், அடுத்த பிறவியில் அதே மாதிரி பிறந்து விடலாமே...' என்ற எண்ணத்துடன், மக்களை மேலும் அதிக வட்டி வாங்கி கொடுமைப்படுத்தினான்.
முருகப்பனின் இறுதிகாலம் வந்தது. அவன் உயிர் போகும் சமயத்தில் தன் மனதில், 'பக்கத்து நகரத்து ஜமீனில் பிறக்க வேண்டும்...' என, நினைத்துக் கொண்டே உயிரை விட்டான்.
அடுத்த பிறவியில் அவன் நினைத்த மாதிரியே, பக்கத்து நகரத்து ஜமீனில் பிறந்தான். பிள்ளையாக அல்ல; ஜமீனில் நாய்க்குட்டியாக பிறந்தான்.
நாய்க்குட்டியாக பிறந்தாலும், முன்ஜென்ம ஞாபகம் முருகப்பனுக்கு இருந்தது. தான் நாயாக பிறந்ததை எண்ணி மிகுந்த வருத்தமடைந்தான்.
அவன், நாய்க்குட்டியாக பிறந்ததும், ஜமீன் குடும்பத்தில் துர்மரணங்களும், அசம்பாவித சம்பவங்களும் நடந்தன.
ஜமீன் குடும்பத்தில் இருந்தவர்கள், 'இந்த நாய்க்குட்டி பிறந்த ராசி தான், நம்மை இப்படி வாட்டி வதைக்கிறது. எனவே, இதை கண் காணாத இடத்தில் எடுத்து போய் விட்டுவிட வேண்டும்...' என்றனர்.
ஜமீன்தாரும், நாய்க்குட்டியாக பிறந்த முருகப்பனை, அதே வள்ளியூருக்கு எடுத்து சென்று விட்டுவிட்டு, தன் நகரத்துக்கு திரும்பினார்.
வள்ளியூரில் இருப்போர், சாப்பிட்டு மிச்சம் மீதி போட்டதை உண்டு, தன் வாழ்நாளை போக்கியது, அந்த நாய்க்குட்டி. முருகப்பனாக தான் இருந்த போது, மக்களுக்கு செய்த பாவங்களை எண்ணி, எண்ணி வருந்தியது, நாய்க்குட்டி. முன்ஜென்ம நினைவுகள் யாருக்கும் வருவதில்லை. அந்த நினைவுகளை முருகப்பனுக்கு கொடுத்து தண்டித்தார், கடவுள்.
முருகப்பன் சாகும் வரை, ஜமீன் குடும்பத்தில் பிள்ளையாக பிறக்க வேண்டும் என, நினைத்து வந்தான். ஆனால், சாகும் போது விதிவசத்தால், ஜமீனில் பிறக்க வேண்டும் என, மட்டுமே நினைத்து விட்டான்.
தீயவர்கள் என்ன தான் குட்டிக்கரணம் அடித்தாலும், செய்த பாவத்திலிருந்து தப்பிக்க முடியாது!
அருண் ராமதாசன்
அறிவோம் ஆன்மிகம்!
ராமேஸ்வரத்தில், முதலில் அக்னி தீர்த்தம் எனும் கடலில் நீராடிய பின், திருக்கோவிலில் உள்ள பல்வேறு தீர்த்தங்களில் நீராட வேண்டும். கடைசியாக, கருவறைக்கு அருகில் உள்ள கோடி தீர்த்தத்தில் நீராடிய பின், வழிபாட்டை துவக்க வேண்டும்.