PUBLISHED ON : ஜன 25, 2026

ஒரு ஊரில், கூலி தொழிலாளி ஒருவனும், ஆடம்பரமிக்க செல்வந்தரும் வாழ்ந்து வந்தனர். கூலித் தொழிலாளி பக்திமானாக இல்லாவிட்டாலும், தினமும் தன் வீட்டின் ஓரத்தில், விஷ்ணு பகவான் படம் ஒன்றை வைத்து அதை வணங்கி வந்தான். செல்வம் அதிகம் இல்லாவிட்டாலும், மன அமைதியுடன் இருந்தான்.
ஆனால், செல்வந்தரோ தினமும் காலையில் குளித்துவிட்டு, பல மணி நேரம் பூஜை, புனஸ்காரம் எல்லாம் முறையாக செய்தும் நிம்மதியின்றி வாழ்ந்து வந்தார்.
ஒரு நாள், விஷ்ணுவை பார்த்து, 'அந்தச் செல்வந்தர் மிகுந்த பக்திமானாக இருக்கிறார். தினமும் பல மணி நேரம் பூஜை எல்லாம் செய்கிறார். தாங்கள் மனது வைத்தால், அவர் நிம்மதியாய் வாழ ஏதாவது செய்யலாமே...' என்றார், நாரதர்.
விஷ்ணுவும், நாரதர் கூறியதற்கு சம்மதம் தெரிவித்து, 'சரி! நீங்கள் பூமிக்குச் சென்று, 'நான் நாராயணனிடமிருந்து வருகிறேன்...' என்று அந்தச் செல்வந்தரிடம் சொல்லுங்கள். அவர், 'நாராயணன் தற்போது என்ன செய்து கொண்டு இருக்கிறார்?' என்று கேட்டால், 'நாராயணன் தற்போது ஓர் ஊசியின் காது வழியாக யானையை நுழைத்துக்கொண்டிருக்கிறார்...' என்று மட்டும் சொன்னால் போதும். அப்படியே அந்த ஏழைத் தொழிலாளியையும் போய் பார்த்து இதே கேள்வியைக் கேட்டு வாருங்கள்...' என்று சொல்லி அனுப்பினார், விஷ்ணு பகவான்.
முதலில், செல்வந்தர் வீட்டிற்கு சென்று அவரிடம், தான் நாரயணரிடமிருந்து வருவதாகச் சொன்னார், நாரதர். அதற்கு, 'தற்போது, நாராயணன் என்ன செய்து கொண்டு இருக்கிறார்?' என்று கேட்டார், அந்தச் செல்வந்தர்.
விஷ்ணுபகவான் சொல்லிக் கொடுத்தது போலவே, 'நாராயணன் ஓர் ஊசியின் காது வழியாக ஒரு யானையை நுழைத்துக் கொண்டு இருக்கிறார்...' என்றார், நாரதர்.
அதற்கு, 'அட... அது எப்படி முடியும்? இது நடக்கிற காரியமா?' என்று கேட்டுவிட்டு, இவர் ஏதோ வாய்க்கு வந்ததை உளறுகிறார் என்று எண்ணி வீட்டிற்குள் சென்று விட்டார், அந்த செல்வந்தர்.
அடுத்தது, அந்த கூலித் தொழிலாளியை பார்க்கச் சென்றார், நாரதர். அவரிடமும் இதே உரையாடல் நடைபெற்றது.
அதற்கு, 'ஓ! அப்படியா? இதில் என்ன விந்தை இருக்கிறது. ஒரு பெரிய ஆலமரத்தையே சின்ன விதையில் அடக்கியவர் தானே அவர். இந்தப் பெரிய பிரபஞ்சத்தை தன் வாயில் வைத்துக் காண்பித்தவர் ஆயிற்றே! அவருக்கு யானையை, ஊசியில் நுழைப்பது என்ன அவ்வளவு பெரிய விஷயமா? நாராயணனால் செய்ய முடியாத செயல் என்று இந்த உலகத்தில் எதுவுமே கிடையாது...' என்று பதில் சொன்னார், தொழிலாளி.
மனமகிழ்ந்த நாரதர், அங்கிருந்து கிளம்பி, விஷ்ணுபகவானிடம் வந்து நடந்ததைச் சொன்னார்.
நாரதரிடம், 'கடவுள் பக்தி என்பது மணிக்கணக்கில் பூஜை, புனஸ்காரங்கள் செய்வது மட்டும் இல்லை. இறைவனின் பாதத்தை, பூரண நம்பிக்கையுடன் நீ யே சரணம் என்று பற்றுவதே உண்மையான பக்தி. உண்மையான பக்திக்கு ஏற்ப ஆசிகள் சென்று கொண்டே இருக்கிறது. அதுவே, அந்த ஏழையின் நிம்மதிக்குக் காரணம்...' என்று விளக்கினார், விஷ்ணுபகவான்.
உண்மையான பக்திக்கு தகுந்த பலன் கிட்டும்!
அருண் ராமதாசன்

