
குடிப்பழக்கத்தை விட்டொழிக்க...
சமீபத்தில், என் நண்பரை பார்க்க, அவர் வீட்டுக்கு சென்றபோது, வீட்டின் முன்புறம் உள்ள இடத்தில் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தார், நண்பர்.
அவரிடம், 'இவ்வளவு நாள் காலியாக இருந்த இடத்தை, பூங்கா போல மாற்றியிருக்கிறீர்களே... எப்போதிலிருந்து தோட்டக்கலை மீது ஆர்வம் வந்தது?' என்றேன்.
அதற்கு, 'இதை தோட்டக்கலை ஆர்வத்தில் செய்யவில்லை. குடிப்பழக்கத்தை விட்டொழிக்க வேண்டும் என்ற முடிவில் தான், இந்த செயலில் இறங்கினேன்...' என்றார், நண்பர்.
அதுபற்றி விளக்கமாக கூறும்படி கேட்டேன்.
'முன்பெல்லாம், சிறு சிறு சண்டை, பிரச்னை, சோர்வு, மன அழுத்தம் போன்ற காரணங்களால், மது குடிப்பதற்கு கிளம்பி விடுவேன். அதனால், என் உடல்நலம் கெடுவதை உணர்ந்து, குடிப்பழக்கத்தை விட்டொழிக்க, என் மனைவி தான், நீங்கள் குடிக்க வேண்டும் என்று தோன்றும் போதெல்லாம், ஒரு செடி வாங்கி வளர்க்குமாறு அறிவுறுத்தினாள்.
'அவளுடைய ஆலோசனையை செயல்படுத்தி பார்க்கலாமே என்று ஆரம்பத்தில் ஒருசில செடிகளை வாங்கி வளர்க்க ஆரம்பித்தேன். நாளடைவில் அவை வளர்வதை பார்த்ததும் மனதில் சந்தோஷம் பிறந்தது. குடிக்கும் எண்ணம் வரும் போதெல்லாம் புதிய வகை செடிகளை வாங்கி வந்து ஆர்வத்தோடு வளர்க்க ஆரம்பித்தேன்.
'செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுதல், களை எடுத்தல், உரம் போடுதல், பூச்சி மருந்து தெளித்தல் போன்ற வேலைகளில் மூழ்கி விடுவதால், எனக்கு குடிக்கும் எண்ணம் வருவதே இல்லை. அதுவுமில்லாமல், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு இரவு நன்றாக உறக்கமும் வருகிறது...' என்றார், நண்பர்.
நண்பரது மாற்றத்தை, மனதாரப் பாராட்டினேன். குடிப்பழக்கத்தை விட்டொழிக்க நினைப்பவர்கள், என் நண்பர் செய்தது போல் முயற்சிக்கலாமே!
- வி.முருகன், ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம்.
மாணவனை திருத்திய, ஆசிரியை!
எங்கள் பக்கத்து வீட்டில் வசிக்கும் தம்பதிக்கு, இரு மகன்கள். அதில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் எப்போதும், மொபைல் போனை பார்த்து கொண்டும், அதில், கேம் விளையாடியபடியும் இருந்தான். அவனது பெற்றோர் எவ்வளவோ சொல்லியும் அவன் கேட்பதாக இல்லை. இதனால், தேர்வுகளிலும் மதிப்பெண்கள் குறைந்தன.
பொறுத்து பொறுத்து பார்த்த அவனது பெற்றோர், அவன் பயிலும் பள்ளிக்கு சென்று, வகுப்பு ஆசிரியையிடம் புகார் அளித்தனர்.
அதைக்கேட்ட ஆசிரியை அந்த மாணவனை அழைத்து, 'நீ தொடர்ந்து, மொபைல் போன் பார். ஆனால், நாளை முதல் மொபைலில் 'யுடியூப்-ஆப்'பில் தினமும் ஒரு நீதிக் கதையை கவனமாக பார்த்து, அதை மனதில் உள்வாங்கி, கதையின் கருத்தை புரிந்து, அக்கதையில் உள்ள நீதியின் அடிப்படையில் புதிய கதையை உருவாக்கி, தினமும் காலை, என் எதிரே மாணவர்களிடம் நீ உருவாக்கிய நீதிக் கதையை சொல்ல வேண்டும்...' என்ற தண்டனை கொடுத்தார், வகுப்பாசிரியை.
அதன்படி, அவனும் ஆசிரியை கூறியபடி, ஆர்வமாக புதிய நீதிக் கதைகளை உருவாக்கி, அந்த கதைகளை தினமும் வகுப்பில் கூற ஆரம்பித்தான்.
நாளடைவில் நீதிக் கதைகள், அவனுக்குள் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியது. இப்போது படிப்பில் தீவிர ஆர்வம் செலுத்த ஆரம்பித்து விட்டான். அவனது ஒழுக்கமும் பல மடங்கு உயர்ந்தது. அவன் மட்டுமல்லாமல், வகுப்பில் உள்ள மற்ற மாணவர்களுக்கும், அவன் கூறும் கதைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கவே, அவர்களிடமும் நல்ல மாற்றம் வர ஆரம்பித்து விட்டது.
ஒரு மாணவன் செய்யும் தவறை அதன் மூலமாகவே சாமர்த்தியமாக திருத்திய, அந்த ஆசிரியையை, பாராட்டினர், அந்த மாணவனின் பெற்றோர்.
- பே.ராமலட்சுமி, ராசபாளையம்.
வயதானவர்களை புரிந்து, நடந்து கொள்ள வேண்டும்!
எழுபது வயதை கடந்த நான், தினமும் காலை, 5:30 - 6:00 மணிக்குள், வீட்டு வாசலின் முன்புறம் நான் வளர்க்கும் பல்வேறு பூச்செடிகளிலிருந்து பூஜைக்காக பூக்களை பறிப்பது வழக்கம். சில நாட்களுக்கு முன் எதிர்வீட்டில் புதிதாக குடிவந்த, 40 வயது மதிக்கத்தக்க பெண்மணியும், அதே காலை நேரம் வாசல் பெருக்கி, கோலம் போடுவார்.
அப்பெண்மணியின் அழகை நான் ரசிப்பதற்காகவே, பூ பறிக்கும் சாக்கில் தினந்தோறும் காலையில் வாசலுக்கு வருவதாக, என் பக்கத்து வீட்டு பெண்மணியிடம், ஒருநாள் புகார் சொல்லி இருக்கிறார். என்னையும், என் குடும்பத்தாரையும் நன்கு அறிந்த பெண், இந்த விஷயத்தை தன் கணவரிடம் கூறியுள்ளார். அந்த நண்பர் மறுநாள் என்னிடம் இதைச் சொல்லி வருத்தப்பட்டார்.
மாற்று ஏற்பாடு செய்வதாக அவரிடம் சொல்லி, அடுத்த நாள் முதல் காலை 7:00 மணிக்கு மேல் பூ பறிப்பதை வழக்கமாக்கிக் கொண்டேன்.
இரு வாரங்களுக்கு பின், மார்க்கெட்டுக்கு சென்றபோது, அங்கு வந்த அப்பெண் என்னிடம், 'வணக்கம் சார், நல்லா இருக்கீங்களா? இப்பல்லாம் விடியற்காலையில் பூ பறிக்கிறதில்லே போலிருக்கு?' என்று கிண்டலான தொனியில் கேட்டார்.
உடனே, 'ஆமாங்க மேடம், கடந்த ஒரு மாசமா காலையில் பூ பறித்த பின் எனக்கும், என் மனைவிக்கும் நாள் தவறாம வீணா ஏதாவது வாக்குவாதம் வந்துக்கிட்டே இருந்தது. நான் விடிகாலையில் தெருவிலே யாரையாவது பார்க்கறதாலே தான் இப்படி பிரச்னை வருதோன்னு மனைவி கூற, எனக்கும் அந்த சந்தேகம் வந்தது. அதனால், சூரிய உதயத்துக்கு பின் பூ பறிக்கிறேன்...' என்று பவ்யமாகவும், உறுதியான குரலிலும் சொன்னதைக் கேட்ட அப்பெண்மணியின் முகம் சிவந்து, வேறு பேச்சு பேசாமல் சென்று விட்டார்.
எல்லா ஆண்களையும் ஒரே தராசு தட்டில் எடை போடும் மனோபாவம் பல பெண்மணிகளிடம் இருப்பது மிகப்பெரிய துரதிஷ்டம். 'காடு வா வா... வீடு போ போ' எனும் மனநிலையில் வாழும், 90 சதவீத மூத்த குடிமக்களை தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதும், விமர்சிப்பதும் ஆரோக்கியமான செயல் அல்ல.
தொலைக்காட்சி மற்றும் நாளிதழ்களில் தவறான ஆண்களை குறித்து வரும் செய்திகளை கேட்டும், படித்தும் எல்லா ஆண்களும் ஒரே மாதிரி தான் என்று நினைக்க கூடாது.
- எஸ்.ஜானகிநாதன், சென்னை.

