PUBLISHED ON : மார் 22, 2026

காசி செல்வதற்கு நடு இரவு தான், ரயில் என்பதால், நானும், என் மனைவி ஜானகியும், 10:00 மணிக்கே, கேரள மாநிலம், திரிச்சூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து விட்டோம். இன்னும் முழுசா ரெண்டு மணி நேரம் இருந்தது. வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தோம்.
அப்போது ஒரு பாட்டி, வயது, 80க்கு மேல் இருக்கும். நடுத்தர வயதில் ஒரு மகன், மருமகள் மற்றும் பேத்திகள் என, ஸ்டேஷனுக்கு வந்திருந்தனர். கூடவே, மருமகளின் தங்கை என்று நினைக்கிறேன், குழந்தைகள், அவளை, 'சித்தி, சித்தி...' என்று சொல்லிக் கொண்டிருந்தன.
''நீங்க போய் துாங்குங்க, நாங்க போய்ட்டு வர்றோம். ரம்யா, திவ்யா சமர்த்தா சித்தி சொல்லறதை கேட்டுகிட்டு இருக்கணும், படுத்தக்கூடாது,'' என்றாள், குழந்தையின் அம்மா.
''சரிம்மா,'' என்ற, குழந்தைகள் பாட்டியை கட்டிப் பிடித்து, ''பாட்டி பத்திரமா போயிட்டு வா,'' என்றனர்.
பாட்டி மலர்ந்து சிரித்தாள். குழந்தைகளை அணைத்துக் கொண்டாள். பாட்டியின் கண்களில் கண்ணீர்.
''ஏன் பாட்டி அழறீங்க? ஒரு வாரத்தில் திரும்பி வந்திடப் போறீங்க, அழாதீங்க,'' என, சமாதானப்படுத்தினாள் பெரியவள், ரம்யா.
இதை பார்த்ததும், எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. என்ன அன்பான குடும்பம்.
ரயில் வருகையை அறிவித்தனர். என்னதான் முன்பதிவு செய்திருந்தாலும், மூணு நிமிஷம் மட்டும் ரயில் இந்த ஸ்டேஷனில் நிற்கும் என்பதால், அவசரமாக ஏறி உட்கார்ந்தோம்.
எங்களுக்கு எதிரில் தான், பாட்டிக்கும், அவரது மகன், மருமகளுக்கும் இருக்கைகள். நல்லவேளை எனக்கும், பாட்டிக்கும், 'லோயர் பெர்த்!' அனைவரும் துாங்க ஆரம்பித்தோம்.
பா ட்டி, காலை 4:00 மணிக்கே எழுந்து உட்கார்ந்து கொண்டாள். மற்றவர்களுக்கு தொந்தரவு கொடுக்கக்கூடாது என்றோ அல்லது மருமகள் மேல் உள்ள பயமோ தெரியாது. 'பத்மா, பத்மா...' என்று, தன் மருமகளை மெல்லிய குரலில் கூப்பிட்டாள். மருமகள், பத்மா கொஞ்சம் கூட அசைந்து கொடுக்கவில்லை.
'நான், என்னம்மா என்ன வேணும்?' என்று கேட்டேன். பாட்டிக்கு, 'டாய்லட்' செல்ல வேண்டும்போல.
ஐந்து நிமிடம் கூட கடந்து இருக்காது... மீண்டும் மருமகளை கூப்பிட, கோபத்தில் வெடித்தாள், பத்மா.
''கொஞ்சம் நிம்மதியா துாங்க விடுங்க,'' என்று திரும்பி படுத்து கொண்டாள்.
நான், என் மனைவி, ஜானகியை எழுப்பினேன். மெல்லிய குரலில் சொன்னேன்.
பாட்டியை மெதுவாக தொட்டு, 'வாங்க...' என்று அழைத்துச் சென்றாள், ஜானகி. பாட்டிக்கு ரொம்ப சந்தோஷம். திரும்பும்போது என்னை நன்றியுடன் பார்த்தாள்.
ஈரோடுக்கு ரயில் வந்து சேர்ந்தது. நானும், மனைவியும் எழுந்து கொண்டோம். பாட்டி கஷ்டப்பட்டு உட்கார்ந்து கொண்டிருந்தாள். அவரை எங்கள் பக்கம் வந்து உட்காரச் சொல்லி, காபி வாங்கி கொடுத்தோம். 8:00 மணிக்கு தான் எழுந்தாள், பத்மா.
போர்த்திக் கொண்டிருந்த போர்வை கீழே விழ, அதை எடுத்துக்கூட போடாமல், செருப்பை மாட்டிக் கொண்டு, வாயில் பிரஷுடன், சென்றாள், பத்மா. பாட்டி, அதை எடுத்து மடித்து வைத்தாள். அவரது மகன், குறட்டை விட்டு துாங்கிக் கொண்டிருந்தான்.
பல் தேய்த்து வந்தவள், காபி வாங்கிக் குடித்தாள். பாட்டியிடம், 'வேண்டுமா?' என்றுகூட கேட்கவில்லை. குடித்தவள் மீண்டும், 'மிடில் பெர்த்'தில் ஏறி துாக்கத்தை தொடர்ந்தாள்.
ஒருமணி நேரம் கழித்து எழுந்து வந்தான், பாட்டியின் மகன்.
''அம்மா காபி வாங்கித்தரவா?'' என்று கேட்டான். பாட்டி நாங்கள் வாங்கித் தந்ததை சொன்னாள்.
ஒரு சினேக பார்வை பார்த்து, அவனும் பல் தேய்க்க போய்விட்டான். பாட்டிக்கு பசிபோல. கொண்டு வந்திருந்த பாத்திரத்தை திறந்தாள். அருமையான வத்தல் குழம்பு மணத்தது. பாட்டி இரண்டு இட்லிகளை அதில் குழைத்து சாப்பிட்டு தண்ணீர் குடித்தாள். நாங்கள் தோசை வாங்கி சாப்பிட்டோம். பாட்டியின் மகனும் மீண்டும் மேலே ஏறிப் படுத்துவிட, பாட்டி எங்களிடம் பேசிக்கொண்டு வந்தாள்...
ஐம்பது வருஷத்துக்கு முன் பாட்டியின் குடும்பம், பூங்குண்ணம் கிராமத்தில் இருந்ததாகவும், இது, இவரது இரண்டாவது மகன் என்றும், இவரது முதல் மகன், பத்மநாபனை, அவரது பெரியப்பா காசி போகும் போது கூட்டிக்கொண்டு போனதாகவும், அங்கு அவன் தொலைந்து விட்டதால், அவர் கங்கையில் விழுந்து தற்கொலை செய்து கொண்டதாகவும், காணாமல் போகும்போது மூத்த மகனுக்கு வயது நான்கு இருக்கும்...
அண்ணனின் தற்கொலையும், மகன் காணாமல் போனதும், பாட்டியின் கணவரை பாதித்துவிட, நடைப் பிணமாக இருந்ததாகவும், வீட்டை விற்று, வேறு ஊரில் சிறிய வீடு ஒன்று வாங்கி மீதித்தொகையை வங்கியில் போட்டு, இளைய மகனை படிக்க வைக்கவும், கணவருக்கு மருத்துவம் பார்க்கவும் செலவழித்ததாக, சொன்னார்.
மூத்த மகன் காசியில் ஒரு மெஸ்ஸில் வேலை செய்வதாக கேள்விப்பட்டு அவனைப் பார்த்து வர பாட்டி ஆசைப்பட்டதாகவும், மருமகள் அந்த ஆசையை நிறைவேற்றப் போகிறாள், என்று பாட்டி கூற, என்னை உற்றுப் பார்த்தாள், ஜானகி.
மதியம், சைடு பெர்த்தில் இருந்த வடநாட்டுக்காரன், மேல் பெர்த்தில் இருந்த தன் நண்பனுடன் பேச, மேலே போய் உட்கார்ந்து கொண்டான். பாட்டி, மிடில் பர்த்தில் போய் படுத்து துாங்கி விட்டாள். நானும், ஜானகியும் கண்மூடி படுத்திருந்தோம். பத்மாவும், அவள் கணவரும் பேசிக் கொண்டிருந்தனர்...
''பத்மா அங்க போய் அண்ணனை எப்படி தேடி கண்டுபிடிக்க போறோம்ன்னு தெரியலை. அம்மா வேற ஆசையா வர்றாங்க.''
''இங்க பாருங்க கோவிலுக்கு பக்கத்தில ஒரு கேரளா பிராமின் மெஸ் இருக்காம். அதுல இருக்கிறதா வந்த தகவல் அது. சரியான்னு தெரியாது. ஆனா, உங்க அண்ணா கிடைச்சாலும், கிடைக்காட்டியும் இனி உங்கம்மா காசில தான் இருக்கணும் சொல்லிட்டேன்,'' என்றாள், பத்மா.
''பத்மா என்ன சொல்றே? அண்ணா இருந்தா சரி, கண்டுபிடிக்க முடியலேன்னா?''
''இல்லேன்னா என்ன? அந்த, காசி விஸ்வநாதன் பார்த்துக்குவான் கவலைப்படாதீங்க. போற உசிரு காசில போகட்டும்.''
''என்னடி இப்படி இரக்கம் இல்லாம பேசறே? அது என் அம்மா,'' என்றான்.
''அப்படியா?'' என்றாள், பத்மா.
''அம்மாகிட்ட வீட்டை எழுதிவாங்கி ஒரு மாசம் கூட ஆகலை.''
''இங்க பாருங்க எனக்கு உடம்புக்கு முடியலை. நமக்கு ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க. வீட்டை நானா போகும்போது கொண்டு போகப் போறேன்? வித்தா, 60 லட்சம் ரூபாய் கிடைக்கும். மூணா பிரிச்சு ரெண்டு பங்கு நம்ம குழந்தைகளுக்கு. ஒண்ணு நமக்கு அவ்வளவு தான்,'' என்று உறுதியாக சொன்னாள், பத்மா.
''ஏன்டி அம்மாவுக்கு ரெண்டுவாய் சாதம் கொடுக்க உன்னால முடியாதா?''
''இப்பவே உங்க அம்மாக்கு முடியலை. நாளைக்கு படுத்துட்டா யாரு பாக்கறது? செலவு செய்ய, உங்ககிட்ட பணம் இருக்கா. உங்களுக்கு, 'பென்ஷன்' இருக்கா? வேலையை விட்டு நிக்கறப்போ, உங்க முதலாளி என்னத்தை பெரிசா தந்திடப்போறான். அது மட்டும் இல்லே உங்கண்ணா கிடைச்சா உங்கம்மா ஆசையா அவர் கூட இருப்பா.''
''கிடைக்காட்டி...''
''நீங்க வேணா அம்மா கூட அங்கே இருந்துக்குங்க. என்னால முடியாது,'' என்றாள், பத்மா.
நான் பாட்டியை பார்த்தேன். கண்கள் மூடி துாங்கிக் கொண்டிருந்தாள். ஆனால், இரு கண்களிலும் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.
சரிதான். காசியில் வசிக்கும் நாங்கள், திருச்சூருக்கு தேடிக்கொண்டு வந்தது இவர்களைத் தான் என்று புரிந்தது. சிறுவயதிலிருந்து, பாட்டியின் மகன், பத்மநாபன் என் அண்ணண் என்று தான் நான் நினைத்து கொண்டிருந்தேன். பல ஆண்டுகளுக்கு முன், காசியில், வழி தவறி அழுதுகொண்டிருந்த பத்மநாபனை, வீட்டுக்கு கூட்டி வந்து, அவனது சொந்தபந்தங்களை தேடியுள்ளார், என் அப்பா. அப்போது நான் பிறக்காததால், பத்மநாபனையே தன் மகனாக வளர்த்து வந்ததாக, இரண்டு ஆண்டுகளுக்கு முன், அப்பா சாகும் தருவாயில் என்னிடம் சொன்னார்.
அதன்பின், ஒருமுறை நானும், அண்ணனும் திரிச்சூர் வந்து தேடி, இவர்கள் பற்றி யாருக்கும் தெரியாததால் திரும்பி விட்டோம். அண்ணன் பத்மநாபன், எங்க மெஸ்ஸில் நன்கு உழைத்து பெரிய ஹோட்டலாக மாற்றினார். இப்போ அண்ணன் இல்லை.
போன மாதம், 'ஹார்ட் அட்டாக்'கில் இறந்துவிட, அண்ணனுக்காக எங்கள் சொத்தில் ஒரு பங்கை எடுத்து, அவரது குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு கொடுக்க, அவர்களை தேடி தான் நாங்கள் வந்தோம்.
இவர்கள் காசிக்கு வந்து, அண்ணன் இறந்தது தெரிந்தால் பாட்டி ரொம்ப கவலைப்படுவாள். என்ன செய்யலாம்? என்று யோசித்தேன். அப்படியே அண்ணன் இல்லை என்றால், இவர்கள் பாட்டியை கோவிலில் விட்டுவிடுவர் என்பதும் புரிந்தது.
'குடும்ப சொத்து வேண்டும். ஆனால், மாமியார் வேண்டாம்...' என்ற மருமகளையும், மனைவியை கண்டு நடுங்கும் மகனையும் பார்க்க பார்க்க வெறுப்பாக இருந்தது.
சிறுவயதில் இருந்து என்னுடன் வாழ்ந்த அண்ணனின் அம்மா, இல்லை என்னோட அம்மாவை இவர்களிடம் விட மனது ஒப்பவில்லை. அவர்கள் அசந்து துாங்கிக் கொண்டிருந்தபோது, வாரணாசிக்கு ரெண்டு ஸ்டேஷனுக்கு முன்பே, பாட்டியை அதாவது, அம்மாவையும், ஜானகியையும் அழைத்துக் கொண்டு இறங்கி விட்டேன்.
''அம்மா நான் தான், உங்க மகன், பத்மநாபன். உங்களை எல்லாம் தேடித்தான், கேரளா வந்தேன். நல்லவேளை கிடைச்சிட்டீங்க,'' என்றேன்.
அம்மா நடுங்கும் கைகளால் என் முகத்தை வருட, நான் கண்களில் கண்ணீருடன் சிலிர்த்து நின்றேன். என்னை முழுவதும் புரிந்துகொண்ட, ஜானகி, அம்மாவை அரவணைத்துக் கொண்டாள்.
ஆர். சுந்தரம்
