PUBLISHED ON : மார் 15, 2026

கெட்டிமேளம் முழங்க, தாலி காட்டும் வைபவம் முடிந்தது.
ரேவதியின் அக்கா பெண்ணின் திருமணம். அவளது அக்கா மேடையிலிருந்தவாறே கீழே நின்றிருந்த ரேவதியை பார்த்து, மணமக்களுடன் போட்டோ எடுக்க கையசைத்து கூப்பிட்டாள்.
சுற்றுமுற்றும் பார்த்தாள், எரிச்சலோடு, 'இந்த மனுஷன் எங்கே போய் தொலைஞ்சார்?' என்று தன் கணவர் செந்திலை, மனதிற்குள் திட்டியவள், இங்குமங்கும் ஓடிக்கொண்டிருந்த தன் சின்ன மகள், நிரூபமாவைக் கூப்பிட்டாள், ரேவதி.
''அப்பா, எங்கேடி?''
''தெரியலையேம்மா,'' என, சொல்லி, அவள் ஓடினாள். மூத்த மகள், அனுபமா மேடையில் மணப்பெண் அருகில் நின்று, ஏதோ கேலியாக பேசிக் கொண்டிருந்தாள்.
''ரேவதி, உன் கணவனை தேடுறியா... அவர், பந்தி ஆரம்பிக்கிறதுக்கு முன்னாலேயே போய் உட்கார்ந்திட்டாரு. இந்நேரம் சாப்பிட்டே முடிச்சிருப்பாரு. இது, உங்க வீட்டு கல்யாணம் மாதிரி தானே. முன்னால நின்னு வந்தவங்களை கவனிக்க மாட்டாரோ,'' என்று, சித்தி வம்பு பேச, அந்தப் பக்கம் வந்த அண்ணி, ''ரேவதி, மாப்பிள்ளை பசி தாங்க மாட்டாரு. சாப்பாடு தீர்ந்து போச்சுன்னா என்ன பண்றதுன்னு பயப்படுவார்,'' என்று அவள் பங்குக்கு கிண்டல் பண்ணினாள்.
அவமானமாக உணர்ந்தாலும், ஒன்றும் பேசாமல் மேடையேறி, மணமக்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டாள். ஒரு வழியாக தன் பெண்களை அழைத்துக் கொண்டு, சாப்பிட்டு முடிக்கும்போது மண்டபமே காலியாகி இருந்தது.
மணமேடை அருகே, ஒரு சேரில் உட்கார்ந்து, வாழைப்பழத்தை உரித்து வாயில் போட்டபடி, ரேவதியின் அண்ணனுடன் பேசிக் கொண்டிருந்தார், ரேவதியின் கணவன், செந்தில்.
''சாப்பாடு சுமார் தான். காலி பிளவர் ரோஸ்ட்டை கருக்கிட்டான். பாயசமும் தண்ணியா இருந்தது,'' என்றவர், ரேவதியைப் பார்த்ததும், அசட்டு சிரிப்புடன், ''போவோமா?'' என்று எழுந்தார், செந்தில்.
ரே வதியின் பிறந்த வீடு, பெரிய குடும்பம். அண்ணன், இரண்டு பேர்; அக்கா இரண்டு பேர். எல்லாருக்கும் பெரிய இடத்து சம்பந்தம். ரேவதி தான் கடைசி. அவள் கல்லுாரி முடித்தவுடனேயே, வங்கியில் வேலை கிடைக்க, அப்பா அவள் திருமணத்தில் மும்முரமானார்.
'ரேவதி, என் நண்பன், பசுபதியோட பையன், செந்தில். பசுபதியும், அவன் மனைவியும் செந்திலுக்கு, 12 வயது இருக்கும் போதே ஒரு விபத்துல இறந்துட்டாங்க. அவன் தாய் மாமன் தான், அவனை படிக்க வெச்சு ஆளாக்கியிருக்கான். செந்தில், மெக்கானிக்கல் என்ஜினியரிங் டிப்ளமோ படிச்சிருக்கான். நல்ல பையன். ஒரு கெட்ட பழக்கமும் கிடையாது...' என்று என்னென்னவோ சொல்லி அவளை, செந்திலுக்கு திருமணம் செய்து வைத்து விட்டார்.
செந்திலுக்கு திருமணத்தின்போது நல்ல சம்பளம் தான். அடுத்தடுத்து, இரண்டு பெண் குழந்தைகள் பிறக்கும் வரை, வாழ்க்கை சுமுகமாக தான் ஓடியது. ஆனால், கம்பெனியில் மேலதிகாரிகளுடன் ஏற்பட்ட பிரச்னையில் அவர் வேலை பறி போக, ரேவதி தான் வேலை செய்யும் வங்கியில் கடன் வாங்கி, தனியாக ஒரு, 'ஒர்க் ஷாப்' வைத்துக் கொடுத்தாள்.
அதில் சொல்லிக்கொள்ளும்படியான வருமானம் ஏதுமில்லை. அச்சமயம், ரேவதிக்கு திருச்சியில் உள்ள வங்கி கிளைக்கு, 'டிரான்ஸ்பர்' வர, செந்திலும் கடையை இழுத்து மூடி விட்டு, அவள் பின்னாலேயே திருச்சிக்கு செல்ல வேண்டியதாயிற்று.
ரேவதி வேலைக்குப் போன பின், தன் பெண்களிடம் ரசனை பொங்க சிறு வயது நினைவுகளை பகிர்ந்து கொள்வார், செந்தில்...
'எங்க அம்மா கை மணமே தனி. வீட்டில் பசு மாடு இருக்கும். மதியம் ஸ்கூலுக்கு கெட்டித் தயிரில் சாதத்தைப் பிசைந்து, ஆவக்காய் ஊறுகாய் வைத்து கொண்டு வருவாங்க பாரு...' என்று அந்த சுவையை நினைத்து சப்புக் கொட்டுவார்.
இவர் பேசுவதை, ரேவதி கேட்டுவிட்டால் போதும், நாக்கு ஊசியாய் குத்தும்.
'இப்படி ஒரு தீனி பண்டாரத்தை யாருமே பார்த்திருக்க முடியாது, உதவாக்கரை. இவரோட எப்படித் தான், 20 வருஷம் குப்பை கொட்டினேனோ...' என, புலம்புவாள்.
கணவரை இப்படி சும்மா இருக்க விடக்கூடாது என்றே, கார் வாங்கினாள். அவளையும், பெண்களையும் ஆபீஸ், காலேஜ் கொண்டு போய் விட, வீட்டு சாமான்கள் வாங்க, 'ஷாப்பிங்' கூட்டிப் போக என்று முழு நேர டிரைவராகவே ஆக்கி விட்டாள்.
அ ன்று, மாலை வேலை முடிந்து, ரேவதி வீட்டுக்கு வரும்போது, ஹாலில் காத்திருந்தார், மூத்த அண்ணன்.
''நம்ம ரம்யாவும், மாப்பிள்ளையும் கலிபோர்னியாவிலிருந்து அடுத்த வாரம் இங்கே வர்றாங்க. ரொம்ப வேண்டியவங்களுக்கு மட்டும் நம்ம வீட்டிலேயே சின்னதா விருந்து ஏற்பாடு பண்ணியிருக்கேன்,'' என்றவர், திடீரென்று நினைவு வந்தவராக, செந்தில் பக்கம் திரும்பினார்.
''மாப்பிள்ளை, ரம்யா கல்யாணத்துக்கு முன், 'அமெரிக்க மாப்பிள்ளை எல்லாம் வேண்டாம். ஒரே பொண்ணு, சொத்து இருக்கு. உள்ளூரிலேயே மாப்பிள்ளை பாருங்க. உங்க கண்ணு முன்னாலேயே இருக்கட்டும்'ன்னு சொன்னீங்க. இப்போ பாருங்க, அமெரிக்க மாப்பிள்ளை, டாலர், டாலரா சம்பாதிக்கறாரு. நல்லவேளை அன்னைக்கு உங்க பேச்சை கேக்கலை,'' என்றார்.
''உங்களுக்கு தெரியாதா, அண்ணா. எந்த காரியத்தை தான் அவர் உருப்படியா செஞ்சிருக்காரு? வக்கணையா சாப்பிடத்தான் தெரியும். எல்லாம் என் தலையெழுத்து,'' என்று அலுத்துக் கொண்டாள், ரேவதி.
முகம் சுருங்க, பேசாமல் இருந்தார், செந்தில்.
''சரிம்மா, நான் புறப்படுறேன். எல்லாரும் விருந்துக்கு வந்துடுங்க,'' என்று புறப்பட்டார், ரேவதியின் அண்ணன்.
வி ருந்து நாளன்று, அண்ணன் வீட்டில் உடன் பிறந்தவர்கள் எல்லாரும் வர, கலகலப்பாக பேசி பொழுது போனது. சாப்பிடும் நேரம் வந்ததும், பெண்களை அழைத்துக் கொண்டு சாப்பிட போனவள், ''என் கணவர் எங்கே அண்ணா. சாப்பிட்டு முடிச்சுட்டாரா?'' என்று கேட்டாள், ரேவதி.
நமட்டு சிரிப்புடன், அவர்... ''கலிபோர்னியாவிலிருந்து வந்த மாப்பிள்ளை திடீரென்று, நண்பர்கள் 20 பேரை சாப்பாட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டாரு. சாப்பாட்டிலே, 'ஸ்பெஷல் ஐட்டம்ஸ்' எல்லாம் பத்துமோ என்னமோ தெரியல. உடனே தயார் செய்ய முடியாது, அதான்...'' என்றார், ரேவதியின் அண்ணன்.
''அதான்னா?'' என்ற, ரேவதியின் குரலில் கோபம் எட்டிப் பார்த்தது.
''மாப்பிள்ளை முதல்ல சாப்பிட உட்கார்ந்தா, எல்லா ஸ்பெஷல் ஐட்டங்களையும், இது நல்லாயிருக்கு, அது நல்லாயிருக்குன்னு நல்லா சாப்பிடுவார். அப்புறம் வந்தவர்களுக்கு பத்தாது, அதான் சும்மா ஒரு சாக்கு சொல்லி வெளியே அனுப்பி வச்சுட்டேன். இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திடுவாரு. மிச்சம் இருப்பதை, 'அட்ஜஸ்ட்' பண்ணி சாப்பிடலாம்,'' என்றார்.
திகைத்துப் போய் நின்றவள், அடுத்த நிமிடம் சுதாரித்துக் கொண்டு, ''அனு, நிரு, வாங்க போகலாம்,'' என்று கிளம்பினாள்.
''என்னம்மா சாப்பிடாம கிளம்பறீங்க?'' என்று, ஆச்சரியத்துடன் கேட்ட அண்ணனிடம், ''வீட்டில் சமைத்து வைத்த சாப்பாடு எல்லாம் வீணாயிடும். நாங்க வீட்டுல போய் சாப்பிட்டுக்கிறோம்,'' என்று சொல்லி, அங்கிருந்து உடனே வெளியேறினாள்.
ஆட்டோவில் போகும்போது மகளிடம், ''அனு, உங்க அப்பாவுக்கு போன் பண்ணி, அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. வீட்டுக்கு வந்திடுங்கன்னு சொல்லிடு,'' என்றாள்.
வீட்டுக்கு வந்ததும் மகள்கள் இருவரும், ''என்னம்மா கோபம் உங்களுக்கு?'' என்று தெரிந்தும், தெரியாதது போல கேட்டனர்.
''உங்க மாமா பேசுவதை கேட்டீங்கல்ல. உங்க அப்பான்னா அவ்வளவு இளக்காரமா போயிடுச்சு அவருக்கு. உங்க அப்பா இப்படி பொறுப்பில்லாம இருக்கறதுனால தானே, அவர் இப்படி பேசுறாரு,'' என்றாள், ரேவதி.
அம்மாவின் தோள் மீது கை போட்டு அமைதிப்படுத்தியவாறு நிதானமாக பேசினாள் ரேவதியின் மகள், அனுபமா...
''யோசித்து பாருங்கம்மா. அப்பா வேலையில்லாமல் இருக்காருன்னா அதுக்கு காரணம் நீங்க தான். அவரை ஒரு வேலையிலும் நிலைக்க விடாமல் உங்களுக்கு, 'டிரான்ஸ்பர்' வர்ற ஊருக்கு எல்லாம் அவரை கூட்டிட்டு வந்துடுறீங்க. வேலை இல்லைன்னு சொல்லியே, உங்களுக்கு டிரைவரா வச்சுக்கிட்டீங்க.
''அப்பாவை பற்றி சொந்தக்காரங்க எல்லார்கிட்டேயும் திட்டி அவமானப்படுத்துறீங்க. சின்ன வயசுல பெத்தவங்க இல்லாம மாமா வீட்டுல வளர்ந்திருக்காரு. சரியான சாப்பாடு கிடைத்ததோ இல்லையோ. அதனால, சாப்பாட்டு மேலே ஆசை வந்திருக்கலாம். அவருடைய ஆசையை நீங்க பலவீனமா நினைக்காம, அதையே பெருமையா, அவருக்கு சாப்பாட்டுல நல்ல ரசனைன்னு நீங்க சொல்லியிருந்தா, சொந்தக்காரங்களும், அவரை கூப்பிட்டு முதல்ல ருசி பார்க்க சொல்லியிருப்பாங்க.
''நம்ம மாமா பொண்ணு, ரம்யாவுக்கு உள்ளூரிலேயே மாப்பிள்ளை பாருங்கன்னு அப்பா சொன்னதோட அர்த்தம், உங்களுக்கு புரியலையா? மாமாவுக்கு வயசாகி, கடைசி காலத்திலே, மகள் ரம்யா மற்றும் பேர பசங்களை, பார்க்கணும்ன்னு அவர் நினைக்கும் போது, அவங்க, பக்கத்தில் இல்லையென்றால், ஏக்கமா இருக்கும். அப்போ தெரியும், அவருக்கு, எவ்வளவு சொத்து இருந்தும் என்ன பயன்னு.
' 'எவ்வளவு திறமைசாலியா இருந்தாலும், 'நீ ஒன்றுக்கும் லாயக்கில்லை'ன்னு கடுகடுத்துக் கொண்டே இருந்தால், 'நான் அப்படித் தானோ...' என்ற தாழ்வுணர்ச்சி அவங்களுக்கு வந்து, ஒதுங்கித்தான் போவாங்க. அது போல தான், இப்போ அப்பாவேட நிலைமையும். நீ, அவரை இப்படி குத்தி குதறிட்டே இருக்காதீங்கம்மா,'' என்று சொல்லி, அம்மா ரேவதியின் கைகளைப் பற்றினாள், அனுபமா.
திகைத்து போனாள், ரேவதி. திரை போல மூடியிருந்த மேலோட்ட வெறுப்புகள் எல்லாம் கழன்று, உண்மையின் முழு வீச்சும் அவளுள் இறங்கியது. தந்தைக்கு உபதேசித்த, குமரனாக, அம்மா முன் நின்றாள் மகள், அனுபமா.
அப்போது, வாசலில் கார் வந்து நிற்க, இறங்கி ஓடி வந்தான், செந்தில்.
''ரேவதி, உனக்கு உடம்பு சரியில்லைன்னு, அனு போன் பண்ணினாள். என்னம்மா ஆச்சு?'' என்று பதறியவாறே கேட்டான், செந்தில்.
''இப்போ, எனக்கு எல்லாம் சரியாயிடுச்சுங்க. இதோ, ஒரு நொடியில் உங்களுக்கு பிடித்த சாப்பாட்டை பண்ணிடறேன். எல்லாரும் சேர்ந்து சாப்பிடலாம்,'' என்றவாறே கிச்சனுக்குள் நுழைந்தாள், ரேவதி.
இனிமேல், 'அப்பாவின், மேல் அம்மா காட்டும் அன்பு, அவரின் மதிப்பை உயர்த்தும்...' என்று புரிந்தது, மகள் அனுபமாவுக்கு.
வி.சம்யுக்தா

