
முன்கதைச் சுருக்கம்: மு ம்பையில், தன்னுடன் பணிபுரியும், சாதனா மற்றும் நிமிஷா என்ற பெண்களுடன் சகஜமாக பழக ஆரம்பித்திருந்தான், தீபாவின் காதலன், திலகன். நாளிதழில் வெளியான விளம்பரத்தை பார்த்து, 'உறைவாள்' என்ற வார இதழில், நிருபர் வேலைக்கு விண்ணப்பித்திருந்தாள், தீபா. அந்த இதழிலிருந்து, வேலையில் சேர கடிதம் வர, அந்த அலுவலகத்துக்கு சென்றாள். அங்கு, அவளுக்கு 'டெஸ்க் ரிப்போர்ட்டிங்' பயிற்சி கொடுத்தார், உதவி ஆசிரியர், நாதப்ரியன். அதற்காக, மேஜையில் இருந்த ஒன்றிரண்டு தினசரிகளை அவளிடம் கொடுத்து, அசாம்ல ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் மோதி யானைங்க இறந்தன செய்தியை பின்னணியா வெச்சு ஒரு விழிப்புணர்வு கட்டுரை எழுதி தரும்படி கூறினார், உடனே பீறிட்டு அழலானாள், தீபா. மி ரண்டு இருக்கையிலிருந்து எழுந்து விட்டார், உதவி ஆசிரியர், நாதப்ரியன்.
தீபாவின் திடீர் அழுகை அக்கம்பக்கத்து சிற்றறைகளிலிருந்தும் சில முகங்களை எட்டிப் பார்க்க வைத்தது.
''தீபாம்மா... நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படி அழறீங்க?''
'இவள் தீவிர மிருக ஆர்வலரா அல்லது யானைகள் மீது பாசம் வைத்திருப்பவளா...' என்று, என்னென்னவோ எண்ணங்களால், அலைக்கழிக்கப்பட்டார், நாதப்ரியன்.
தீபாவின் அழுகை அடங்க சற்று நேரம் ஆயிற்று.
கண்களையும், கன்னங்களையும் கைக்குட்டையால் துடைத்து கொண்டாள்.
முகம் சிவந்து விட்டது.
''சாரி, சார். எங்கண்ணன் ஞாபகம் வந்திருச்சு,'' என்றாள், தீபா.
பெருமூச்சு ஒன்றை விடுவித்தார், நாதப்ரியன்.
''தீபா, உங்கண்ணனுக்கு என்னம்மா? காட்டிலாகால இருக்காரா?''
''இப்ப அவர் உயிரோடவே இல்ல, சார்.''
''யானை அடிச்சிருச்சா?'' என்றார், நாதப்ரியன்.
''இல்ல சார், 'ரயில்வே டிராக்கை க்ராஸ்' பண்றப்ப ரயில் அடிச்சிருச்சு,'' என்றாள், மூக்கை உறிஞ்சியபடி, தீபா.
அவள் மனக்கண்ணில், மூட்டை கட்டி கொண்டுவரப்பட்ட அவள் அண்ணனின் உடல், ஒரு கணம் வந்து போனது.
''ஐயோ, சாரிம்மா. வேற யார்கிட்டயாச்சும், இந்தப் பொறுப்பைக் கொடுக்கறேன். நீங்க வேற, 'டாபிக்'ல பண்ணலாம்,'' என்றார், நாதப்ரியன்.
''இல்ல, சார். எங்கண்ணன் உயிரைக் குடிச்ச ரயில்வே பத்தி மேட்டர் பண்ண, வாய்ப்பு தானா கெடைச்சிருக்கு. நிச்சயம் பண்றேன்,'' என்று எழுந்த, தீபாவை அமரச் சொல்லி சைகை செய்தார், நாதப்ரியன்.
''இப்பதாம்மா ரெட்டிப்பு கவனமா இருக்கணும். நமக்கு பிடிக்குதுன்னோ, வெறுப்பாயிருக்குன்னோ எந்த மேட்டரையும் ஒரு முன்தீர்ப்போட பார்க்கக் கூடாது, எழுதக் கூடாது. ஆயிரம் பேரை ஏத்திக்கிட்டு, 100 கி.மீ., வேகத்துல போற ரயிலு, மாட்டுக்காகவோ, யானைக்காகவோ, இல்ல ஒத்த மனுசனுக்காகவோ, 'சடன் பிரேக்' அடிச்சா வண்டி கவுந்து, 300 பயணிங்க சாவாங்க. அப்படியொரு கோணமும் இருக்கில்ல? நாம தள்ளி நின்னு, கவனமா நடுநிலையோட எழுதணும். சரியா?'' என்றார், நாதப்ரியன்.
மெல்லத் தலையசைத்தபடி, ''புரியுது, சார்,'' என்றாள்.
''தீபாம்மா... வீட்டுக்குபோய், நல்லா எழுதிட்டு வாங்க. எடிட்டருக்குப் பிடிச்சா, உங்க போட்டோவோட வெளியிடுவாரு,'' என்றார், நாதப்ரியன்.
அதை ஒரு சவாலாக எற்று, அந்த தினசரிகளை எடுத்துக்கொண்டு எழுந்தாள், தீபா.
ஜன்னலுக்கு வெளியே பார்வையை எறிந்திருந்தாள், ஆராதனா.
சென்னையில் அதிசயமாக மிக மெலிதான துாறல் காற்றை நனைத்துக் கொண்டிருந்தது. நனைந்த வீதியில் நகரப் போக்குவரத்து சூடான புகை எழுப்பி விரைந்தது. பள்ளிச் சிறுமிகள் சிலர் புத்தகப் பையை தலைக்கு மேல் உயர்த்தி, முகத்தில் பொங்கும் சிரிப்பை மறைக்காமல் அண்ணாந்து மழையை ரசித்தபடி சாலையைக் கடந்தனர். இரு கம்பங்களுக்கு நடுவில் இழுத்துக் கட்டப்பட்டிருந்த ஒரு விளம்பரத் துணி பேனர் காற்றில் உப்புவதும், உள்வாங்குவதுமாக அவள் மனதை போல் அல்லாடிக் கொண்டிருந்தது.
நகத்தைக் கடிக்க முற்பட்டு, 'எதற்கு இத்தனைப் படபடப்பு, பரபரப்பு? கூடாது. அவசியமில்லை...' என்று தன்னையே அதட்டி, விரல்களைக் கட்டுப்படுத்திக் கொண்டாள், ஆராதனா.
'எம்.டி., கல்யாண் மேத்தாவை சந்திக்க நேரம் கேட்டிருந்தாயே. அவர் சென்னைக்கு வந்திருக்கிறார். நம் அலுவலகத்துக்கு, நான்கு மணிக்கு வருவதாக சொல்லியிருக்கிறார்...' என, முத்துராமன் சொன்னதிலிருந்து அவளுக்குள் இந்த பரபரப்பு.
அவளுடைய வித்தியாசமான கோரிக்கையை அவர் ஏற்றுக்கொள்வாரா, நிராகரிப்பாரா? என்று எண்ணியபடியே ஜன்னலை திறந்து அவள் பார்த்து கொண்டிருக்கும் போது, ஒரு, 'பென்ஸ்' கார் அந்தக் கட்டடத்தில் நுழைவது தெரிந்தது. வந்து விட்டார்!
'லிப்ட்' பிடித்து மாடிக்கு வர சில நிமிடங்கள். அவருக்கான அறையில் அமர சில நிமிடங்கள். அப்புறம் அவளுக்கான அழைப்பு வந்து விடும்.
தன் அறையை ஒட்டியிருந்த ஒப்பனையறைக்குள் நுழைந்தாள், ஆராதனா.
சற்றே தன்னை புதுப்பித்துக் கொண்டாள்.
சில நொடிகளில், 'இன்டர்காம்' அவளைக் கூப்பிட்டது.
''மேடம், எம்.டி., உங்களைச் சந்திக்க தயாராக இருக்கிறார்,'' என்று கூறினார், உதவியாளர்.
அவள் எழுந்து, தன்னை நிதானப்படுத்தி, உடைகளை சரி செய்து, சிங்கத்தின் குகை நோக்கி நடந்தாள். கல்யாண் மேத்தா சராசரியை விட கூடுதல் உயரம். சற்று வட்டமான முகம்.
வழுக்கையின் பின்னே, பழுப்பு பிறையாக தலைமுடி. புள்ளி வைத்தாற்போல் அதே பழுப்பில் மீசை. துளைக்கும் கண்கள். செதுக்கிய நாசி. சற்றே கருத்த உதடுகள். வயதுக்குப் பொருத்தமில்லாத பூப்போட்ட சட்டை.
''வேலை பிடிச்சிருக்கா?'' என்று கேட்டார், கல்யாண் மேத்தா.
''ரொம்ப ரசிச்சுப் பண்ணிட்டிருக்கேன், சார்,'' என்றாள், ஆராதனா.
''நீ, முன்பு வேலை பார்த்த கம்பெனி முதலாளி, கீர்த்திலாலை, 'கிளப்'ல, 'மீட்' பண்ணேன். அவர், 'ஆராதனா எங்க கம்பெனியோட பெருமை. அவளை எப்படி நீ சொந்தமாக்கிக்கப் பாக்கலாம்'ன்னு சண்டைக்கே வந்துட்டாரு,'' என்று சிரித்துக்கொண்டே சொன்னார்.
''அது, அவரோட பெருந்தன்மை, சார்,'' என்றாள், ஆராதனா.
''இங்க நீ வந்தப்புறம் எந்தெந்த வேலைல்லாம் நெறிப்படுத்தியிருக்கேன்னு, முத்துராமன் எங்கிட்ட சொல்லிச்சொல்லி பெருமைப்படறாரு, ஆராதனா.''
''அதான சார் என் டூட்டி.''
''வெல், ஆராதனா, அடுத்த மாசம் பத்தாம் தேதியிலேர்ந்து ரெண்டு வாரத்துக்கு ப்ரீயா வெச்சுக்க. என்கூட சிங்கப்பூர், லண்டன், நியூஜெர்சின்னு ஒரு டூர் வரப்போறே!'' என்றார், கல்யாண் மேத்தா.
''சார்?'' என்றாள், திகைத்து.
''அந்தத் துறைமுகங்க எல்லாத்துலயும் நமக்கு, 'பிசினஸ்' இருக்கு. அதெல்லாமும் உனக்கு அறிமுகமாகணும், ஆராதனா.''
''தேங்க்ஸ் சார்.''
''சாரி. என்னைப் பார்க்கணும்ன்னு சொன்னியாமே. அது என்னன்னு கேக்காம நான்பாட்டுக்கு பேசிட்டே போறேன். டெல் மீ,'' என்றார், கல்யாண் மேத்தா.
''நீங்க தப்பா நெனைக்கக்கூடாது, எனக்கு சம்பளம் வேணாம், அதுக்கு பதிலா மாசாமாசம் இந்த, 'ஷிப்பிங் கம்பெனி'யோட, 'ஷேரா' குடுத்துருங்க,'' என்றாள், ஆராதனா.
கல்யாண் மேத்தாவின் புருவங்கள் உயர்ந்தன. உடனே புன்னகைத்தார்.
''பணமாகக் குடுத்தா, அதுல நீ எந்தக் 'கம்பெனி ஷேர்' வேணும்னாலும் வாங்கிக்கலாமே, ஆராதனா. நம்ப 'கம்பெனி ஷேரா'க் கொடுத்தா, அது ஏறும், இறங்கும்,'' என்றார், கல்யாண் மேத்தா.
''அது இறங்காம ஏறிட்டே இருக்கணும்ன்னு நான் இன்னும் கடுமையா உழைப்பேனே, சார்,'' என்றாள், ஆராதனா.
''நீ புத்திசாலிம்மா. உன் இஷ்டப்படியே செய்வோம்,'' என்றார், கல்யாண் மேத்தா.
''ரொம்ப ரொம்ப தேங்க்ஸ், சார்,'' என்று அவர் பாதங்களருகே அவள் குனிய, அவர் தடுத்தார்.
''உன்னோட திறமையும், பணிவும் உன்னை எங்கேயோ கொண்டுபோகப் போகுது, ஆராதனா,'' என்று அவள் உச்சந்தலை தொட்டு அசீர்வதித்தார், கல்யாண் மேத்தா.
தரையில் கோல் ஊன்றும் ஒலி கேட்டு, திரும்பிப் பார்த்தாள், தீபா.
அறைவாசலில் நின்றாள், மஞ்சுளா. சற்றுத் தள்ளி, செவிலி நின்றிருந்தாள்.
''எதுக்கும்மா நீ வந்தே? கூப்புட்டா, நானே வந்திருப்பேனே,'' என்று, எழுந்து அவள் அருகில் சென்றாள், தீபா.
''மணி பதினொண்ணு ஆச்சு. ஏன் இன்னும் உன் 'ரூம்ல லைட்' எரியுதுன்னு பார்க்க வந்தேன்,'' என்ற, மஞ்சுளாவின் வார்த்தைகளில் இன்னும் மழலை இருந்தது.
''ஒரு, 'புராஜெக்ட்' குடுத்திருக்காங்கம்மா. முதல் தடவை எழுதினது எனக்கே பிடிக்கல. அதான் திருத்தி எழுதிட்டிருக்கேன்,'' என்றாள், தீபா.
''ராப்பகலா முழிச்சு வேலை செய்யற நெலமைக்கு என் பொண்ணைக் கொண்டு வந்துட்டாரே உங்கப்பா,'' என்று புலம்பினாள், மஞ்சுளா.
''இல்லம்மா. எனக்கு இந்த வேலை பிடிச்சிருக்கு. கெணத்துத் தவளையாவே இருந்துட்டேன். இப்பத்தான் உலகம் கொஞ்சம் கொஞ்சமா புரியுது. நீ போய்த் துாங்கு,'' என்றாள், தீபா.
ஏதோ முனகிவிட்டு தன்னறைக்கு நகர்ந்து போனாள், மஞ்சுளா.
கட்டுரையை எழுத முற்படும்போதெல்லாம், அடையாளம் காண முடியாதபடி கொண்டு வந்து இறக்கப்பட்ட அண்ணனின் நினைவு வருகிறது என்று சொன்னால் அம்மா தாங்க மாட்டாள்.
பள்ளி வகுப்பிலிருந்து அவசரமாக அழைக்கப்பட்டு வீட்டுக்கு வந்த அந்த தினம், தீபாவின் உடலில் இப்போதும் மின்சாரம் பாய்ச்சிக் கொண்டிருந்தது.
முன்பெல்லாம் இப்படியொரு பதற்றம் வந்தால், திலகனுக்கு போன் செய்து, அவனிடம் தன் மனதில் பொங்குவது எல்லாவற்றையும் கொட்டுவாள்.
இன்றைக்கு என்னவோ, நான்கு முறை போன் செய்தும், வேலையில் பிஸி என்று அவனிடமிருந்து குறுஞ்செய்தி தான் பதிலாக வந்தது.
'அவனும், என்னை போல் இரவு, பகலாக வேலை செய்ய வேண்டியிருக்கிறது...போலும்' என்று சமாதானம் செய்து கொண்டாள்.
பாத்ரூமுக்குள் நுழைந்தாள், தீபா. ஷவருக்குக் கீழே போய் நின்றாள். குளியலோடு அண்ணன் பற்றிய நினைவும் மறைந்து போகட்டும்.
'எத்தனை நேரமானாலும் சரி, நீ அந்த யானைக் கட்டுரையை திருப்தியா முடிச்சிட்டு தான் துாங்கப்போகணும்...' என்று ஆவி படர்ந்த கண்ணாடியில் தன் பிம்பத்திடம் உத்தரவிட்டாள்.
காரை லாவகமாக நிறுத்திவிட்டு இறங்கினாள், ஆராதனா.
வீட்டின் வெளியே எரிய வேண்டிய விளக்குகளை போட்டு, இருட்டை விரட்டினாள்.
அவள் மனம் பூரிப்பில் நிறைந்திருந்தது. வீட்டில் நுழைந்ததும், கைகால் கழுவிக்கொண்டு அம்மாவின் அறைக்குள் நுழைந்தாள்.
''என்ன இன்னிக்கு லேட்டாயிருச்சு?'' மீன்களிடமிருந்து பார்வையை மீட்டு கேட்டாள், ஆராதனாவின் அம்மா.
''கடைக்குப் போயிட்டு வந்தேம்மா,'' என்றபடி, அவளை நெருங்கி உட்கார்ந்தாள், ஆராதனா.
''நாளைக்கு, நீ கோவா புறப்படணும் இல்ல?''
''இல்லம்மா. அந்த, 'ட்ரிப்பை கேன்சல்' பண்ணிட்டேன்.''
''ஏன்? புதன்கிழமை பொது விடுமுறை. யுவராஜை பார்க்க கோவா போகணும்ன்னு சொல்லியிருந்தியே?'' என்றாள், ஆராதனாவின் அம்மா.
''அப்புறம் தான் காலண்டரை ஒழுங்காப் பார்த்தேன். புதன்கிழமை அதைவிட முக்கியமான நாளாச்சே, அம்மாவோட இருக்கணும்ன்னு முடிவு பண்ணிட்டேன், அம்மா.''
அம்மா விரிந்த கண்களால் அவளைப் பார்த்தாள். ''அப்படியென்ன முக்கியம்?''
''எங்கம்மாவுக்கு, 50வது பொறந்தநாள் இல்ல?'' என்றபடி, தன் அம்மாவின் தோளில் தலை சாய்த்தாள், ஆராதனா.
''முட்டாள்,'' என்று அந்தத் தலையை நிமிர்த்தினாள், ஆராதனாவின் அம்மா.
''அது ஒண்ணுதான் கொறைச்சல் இப்ப,'' என்றாள்.
''உனக்கு அது கொறைச்சலாயிருக்கலாம். எனக்கு அது பெரிசு. கொண்டாடறோம். வருணும் வந்துருவான். 'நைட்' பன்னெண்டு மணிக்கு, 'கேக்' வெட்டறோம்.''
''அதெல்லாம் வேணாம், ஆராதனா.''
''வேணும், வேணும், வேணும். எவனோ பண்ண தப்புக்கு உனக்கு எதுக்கும்மா தண்டனை? நீ எதுக்கும்மா ஆறு வருஷமா கூண்டுலயே அடைஞ்சு கெடக்கணும்? நாளைக்கு நாம வெளிய போவோம்,'' என்றாள், ஆராதனா.
அம்மா கோணலாகச் சிரித்தாள்.
''இந்த மூஞ்சியோட வெளிய வரச் சொல்றியா, ஆராதனா.''
''வந்தாலும் தப்பில்ல. ஆனா, உனக்கு அந்த தர்மசங்கடம் வேணாம்ன்னு ஒரு டிரெஸ் வாங்கிட்டு வந்திருக்கேன்.''
கவரிலிருந்து அந்த உடையை பிரித்துக் காட்டினாள், ஆராதனா. சந்தன நிறத்தில் தலைமுதல் கால்வரை மூடும் பர்தா அது. அணிந்தவர் வெளியே பார்ப்பதற்கு வசதியாக கண்களுக்கு மட்டும் ஜன்னல் வலை வைத்து தைக்கப்பட்டிருந்தது.
அம்மா ஏதோ சொல்ல வாய் திறக்க, ''எம்மேல சத்தியம். நீ கண்டிப்பா எங்களோட வெளியே வரே. எந்த மறுப்பும் சொல்லக்கூடாது,'' என்றாள், ஆராதனா.
கண்களில் நீருடன் தலையை ஆட்டினாள், ஆராதனாவின் அம்மா.
''நான் எங்க கேட்டாலும் கூட்டிட்டுப் போவியா? ஆராதனா.''
''சொல்லும்மா. எங்க போலாம்? மகாபலிபுரம், கோவில், பீச், ரெஸ்டாரன்ட்!''
அம்மா மறுத்து தலையசைத்தாள்.
''அதெல்லாம் வேணாம். தீபாவோட அம்மாவை பார்க்கக் கூட்டிப்போ!''
- தொடரும்.சுபா

