sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

தீபாராதனா! (22)

/

தீபாராதனா! (22)

தீபாராதனா! (22)

தீபாராதனா! (22)


PUBLISHED ON : மார் 01, 2026

Google News

PUBLISHED ON : மார் 01, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முன்கதைச் சுருக்கம்: மு ம்பையிலிருந்த, திலகன், 'புராஜெக்ட்' ஒன்றுக்காக தீவிரமாக பணிபுரிந்து வந்தான். அவனுடன் பணிபுரியும் சாதனாவும், நிமிஷாவும் திலகனிடம் அதிக உரிமை எடுத்து பழகி வந்தனர்.

தீபாவிடம் ஒரு தலைப்பு கொடுத்து கட்டுரை எழுதி வரும்படி கூறியிருந்தார், அவள் பணிபுரியும் பத்திரிகையின் உதவி ஆசிரியர். தீபாவும், முயற்சி எடுத்து, விடிய விடிய விழித்திருந்து கட்டுரை தயார் செய்தாள்.

தீபாவின் அம்மாவை சந்திக்க வேண்டும் என்று கேட்டாள், ஆராதனாவின் அம்மா. சற்று தயங்கினாலும், தீபாவின் அம்மா மஞ்சுளாவிடம் அனுமதி கேட்டு, தீபா வீட்டுக்கு தன் அம்மாவை அழைத்து சென்றாள், ஆராதனா. அவள் தம்பி வருணும் உடன் சென்றான்.

அப்போது...




ஆ ட்டோவிலிருந்து, தீபா இறங்குவதைப் பார்த்ததும், தன் காரை லாவகமாக திசை மாற்றினாள், ஆராதனா. தெருமுனையில் காரைத் திருப்பி நிறுத்தினாள். ''அம்மா, தீபா வீட்ல இருக்க மாட்டான்னு நெனைச்சுதான் அவங்கம்மா இந்த நேரத்துக்கு வரச் சொன்னாங்க. அவ மூஞ்சில முழிச்சாலே சந்தோஷம்லாம் போயிடும். திரும்பிப் போயிடலாம்,'' என்றான், வருண்.

''உங்கம்மாவைப் பாக்கணும்ன்னு அவ நெனைச்சபோது வந்து பார்த்தா இல்லியா? இப்ப அவங்கம்மாவைப் பார்க்க நாம ஏன் தயங்கணும்?'' என்றாள், அம்மா.

''ஆமா, வருண். அம்மாவோட பொறந்தநாள் ஆசை இது. நிறைவேத்தறதா சத்தியம் பண்ணியிருக்கேன்,'' என்றாள், ஆராதனா.

''அப்புறம் உங்க இஷ்டம்,'' என்றான், வருண்.

தீபாவை பார்த்ததும் அதிர்ந்தாள், மஞ்சுளா.

ஐயோ, சற்று நேரத்தில் ஆராதனாவும், அவள் அம்மாவும் வருவதாக சொல்லியிருந்தார்களே என்ற பதைப்பு மஞ்சுளாவின் நெஞ்சைப் படபடக்க வைத்தது.

எ... என்ன, தீபா திடீர்னு வந்திருக்கே? என்று கேட்பதற்குள், மஞ்சுளாவின் நாக்கு உலர்ந்து விட்டது.

''ஏம்மா, நம்ம வீட்டுக்கு நான் எப்ப வேணும்னாலும் வரக்கூடாதா?'' என்று தீபா, சிரித்தவாறே கேட்டு, கடகடவென்று படிகளில் ஏறித் தன் அறைக்கு விரைந்தாள். அதே வேகத்தில் கீழிறங்கி வந்தாள்.

''இதை மறந்துட்டுப் போயிட்டேம்மா. எடுக்க வந்தேன். ஆட்டோ, 'வெயிட்டிங்'ல இருக்கு,'' என்று ஒரு, 'பென்டிரைவை' காட்டிச் சொல்லிவிட்டு செருப்புகளை அணிந்தாள், தீபா. அந்த நேரம், காம்பவுண்டில் அந்தக் கார் நுழைந்து நின்றது.

காரிலிருந்து, ஆராதனா இறங்குவதை பார்த்ததும், திகைத்தாள்.

''ஹாய், தீபா,'' என்றபடி, ஆராதனா காரின் பின்கதவு திறந்து, தன் அம்மா இறங்க வழி செய்தாள். பர்தாவில் வந்திருப்பது யாரென்று தெரியாமல், தீபாவின் புருவங்கள் முடிச்சிட்டன.

''யார் இது? என்ன வேணும் உனக்கு?'' என்று இறுக்கமான குரலில் கேட்டாள், தீபா.

''எங்கம்மா! உங்கம்மாவை பார்க்க கூட்டி வந்தேன். 'பர்மிஷன்' வாங்கிட்டேன்,'' என்றாள், ஆராதனா.

தீபா முகம் வெளிறியது.

''என்னம்மா இது? நீயும் சேர்ந்துகிட்டு, என் முதுகுக்குப் பின்னால சதி பண்றியா?'' என்று கேட்டாள், தீபா.

செவிலியை உள்ளே போ என்று சைகை செய்தாள், மஞ்சுளா.

''அப்டிலாம் இல்ல, தீபு,'' என்று, மஞ்சுளா சொல்லும்போதே, ஆராதனாவும், வருணும் தங்கள் அம்மாவை இருபுறமும் அணைத்து உள்ளே கூட்டி வந்தனர். ''ஒவ்வொண்ணா தட்டிப்பறிக்கற கூட்டம்மா இது. உன்னையும் என்கிட்டேர்ந்து தட்டிப் பறிக்க அவங்கம்மாவையும் கூட்டிட்டு வந்திருக்காங்களா?'' என்று அவர்களை காழ்ப்புடன் பார்த்தாள், தீபா.

''அக்கா, ஏற்கனவே சொல்லியிருக்கேன். எங்கம்மாவை ஏதாச்சும் பேசினீங்கன்னா,'' என்று, வருண் விரலை உயர்த்தி எச்சரிக்கை செய்தான்.

''என்னடா செஞ்சிருவே?'' என்று மார்பை முன்தள்ளிக்கொண்டு வந்து, அவனெதிரில் மறித்து நின்றாள், தீபா.

''ஒரு நாள் இல்லேனா, ஒரு நாள் உன்னை போலீஸ்ல பிடிச்சுக் குடுக்காம நான் ஓய மாட்டேன்,'' என்றான், வருண்.

உயர்த்திய வருணின் விரலைப் பிடித்து அமர்த்தினாள், ஆராதனா.

''தீபா, பிரச்னை வேணாம்,'' என்றாள், அமைதியான குரலில், ஆராதனா.

''ஒட்டகம் மாதிரி மூக்கை நுழைக்கறவங்ககிட்ட பிரச்னை பண்ணிட்டிருக்க எனக்கு நேரம் இல்ல,'' என்று காரமாகச் சொன்னாள், தீபா. மஞ்சுளா பக்கம் திரும்பினாள்.

''உன் இஷ்டப்படி என்ன வேணா பண்ணும்மா,'' என, விருட்டென்று வெளியேறினாள், தீபா.

ஆட்டோ புறப்படும் ஒலி அடங்கியதும், மெல்ல வாய் திறந்தாள், மஞ்சுளா.

''சாரி, உங்களை, வாங்கன்னு சொல்லக்கூட முடியல. என் ரூமுக்குப் போயிடலாம்,'' செவிலியை அழைத்தாள். அவள் துணையுடன் தன் அறைக்குச் சென்றாள்.

அவர்களும் உள்ளே வந்ததும், ''சமையல்காரர் துரைகிட்ட எல்லாருக்கும் ஜூஸ் தயார் செய்ய சொல்லு,'' என்று சொல்லி, செவிலியை அனுப்பி கதவை மூடச் சொன்னாள், மஞ்சுளா.

பர்தாவின் முகத்திரையை நீக்காமல், ஆராதனாவின் அம்மா பேசினாள்...

''உங்களைச் சந்திக்கறதுல ரொம்ப சந்தோஷம்,'' குழறலாக அவள் பேசுவதை, ஆராதனா எடுத்துச் சொல்லி விளக்கினாள்.

''ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சு நீங்க வந்திருக்கக் கூடாதா? உங்க மூடு கெட்டிருக்காது,'' என்றாள், மஞ்சுளா.

''தீபா உடனே திரும்பிப் போயிடுவான்னு எங்களுக்கு தெரியாது, ஆன்ட்டி,'' என்று, ஆராதனா சொல்ல, கையசைத்து மறுத்தாள், அவள் அம்மா.

''இது நல்லது தான். பின்னால தீபாவுக்கு தெரியவந்தா, அப்போ இன்னும் சந்தேகம் பெரிசாகும்; சிக்கலாகும்,'' என்றாள்.

''உங்க முகத்தை நான் பாக்கலாமா?'' என்று கேட்டாள், மஞ்சுளா.

''ம்ம்...'' என்றவாரே, அவள் முகத்திரையை உயர்த்தி தலைக்கு மேல் போட்டுக் கொண்டாள், ஆராதனாவின் அம்மா.

மஞ்சுளாவின் உடல் உதறியது.

''ஐயோ, என்ன கொடுமை இது!'' என்று அலறினாள், மஞ்சுளா.

''ஒரு விதத்துல இதுதான் அந்த நல்லவரை எங்களுக்கு அறிமுகம் செஞ்சு வெச்சது,'' என்று, ஞானசேகரனின் புகைப்படத்தைக் காட்டினாள், ஆராதனாவின் அம்மா.

''இதைவிட மோசமா என் முகம் இருந்தப்ப தான் முதல்முதலா அவர் என்னைப் பார்த்தாரு,'' எனறாள், ஆராதனாவின் அம்மா.

அவர்கள் சந்தேகப்பட்டது போல் தன் அழகைப் பார்த்து மயங்கி, ஞானசேகரன் வரவில்லை, அந்த அழகால் அவரை மயக்கி, மடக்கி தன்னுடன் இருத்திக் கொள்ளவில்லை என்பதை, அம்மா எவ்வளவு நாசூக்காக உணர்த்துகிறாள் என்று ஆச்சரியப்பட்டாள், ஆராதனா.

''இதுக்கு காரணம் யாருன்னு பதில் கெடைக்காம, தீபா தவிச்சிட்டிருக்கா,'' என்றாள், மஞ்சுளா.

''அது தெரிஞ்சு இது மாறப்போறதில்ல, விடுங்க. என் குழந்தைங்க நல்லா இருக்கணும். அறியாமக்கூட உங்க வருத்தம் அவங்களுக்கு சாபமா மாறிடக்கூடாது. அதுக்காகத்தான், பல வருஷம் கழிச்சு இன்னிக்கு நான் வெளியவே வந்தேன்,'' என்று கூறினாள், ஆராதனாவின் அம்மா.

சற்று நேரம் அங்கு மவுனம் கோலோச்சியது.

கதவு தட்டப்பட்டதும், முகத்திரை மீண்டும் கீழிறங்கி முகத்தை மூடியது.

செவிலியிடமிருந்து, பழச்சாறு கோப்பைகளை வாங்கிக்கொண்டு, வருண் கதவை மீண்டும் மூடினான்.

''நீங்க ஏதாவது தனியாப் பேசணும்ன்னா, நாங்க ரெண்டு பேரும் வெளிய இருக்கோம்,'' என்றாள், ஆராதனா.

''அவசியமில்ல,'' என்றாள், ஆராதனாவின் அம்மா.

''அவர் திடீர்ன்னு எதிர்பாராம போயிட்டாரேன்னு அதிர்ச்சில இருந்தப்ப, இவங்க ரெண்டு பேரும் வந்து, அப்பான்னு சொல்லி அழுததும், நான் கலங்கிப் போனது என்னவோ உண்மை தான். இவங்க மேல மட்டுமில்ல, பாக்காத உங்க மேலயும் ஒரு காழ்ப்பு இருந்தது. ஆனா, கொஞ்சம் கொஞ்சமா உண்மை தெரிய ஆரம்பிச்சதும், என் கோபம் நியாயம் இல்லாததுன்னு எனக்குப் புரிஞ்சு போச்சு. தீபாவுக்கு அந்தப் பக்குவம் வர இன்னும் நேரம் பிடிக்கலாம். இவங்க வீணாப்போகணும்ன்னு நான் ஒருநாளும் நெனைக்க மாட்டேன். அதே போல, தீபாவுக்கு நீங்களும் எந்த சாபமும் குடுக்காதீங்க, ப்ளீஸ்,'' என்றாள், மஞ்சுளா.

''சீச்சீ, அவ மேல எனக்கு எந்தக் கோபமும் இல்ல,''என்றாள், ஆராதனாவின் அம்மா.

''தம்பி, அந்த பீரோ சாவிய எடு. பீரோவைத் திற. மேல்தட்டுல பிரிக்காம ஒரு புடவை இருக்கு பாரு, அதைக் கொண்டுவந்து கொடு,'' என, மஞ்சுளா சொல்லச் சொல்ல, வருண் அவள் குறிப்பிட்ட புடவையைக் கொண்டு வந்து அவள் மடியில் வைத்தான்.

''உங்களுக்குப் பொறந்த நாள்ன்னு, ஆராதனா சொன்னா. இந்தாங்க,'' என்றாள், மஞ்சுளா.

''ஐயோ, ரூம்லயே அடைஞ்சு கெடக்கற எனக்கு எதுக்குப் புதுப் புடவை?'' என்றாள், ஆராதனாவின் அம்மா.

''மொதமொதல்ல எங்க வீட்டுக்கு வந்திருக்கீங்க. மறுக்காம வாங்கிக்குங்க,'' என்றாள், மஞ்சுளா.

'வாங்கிக்கொள்...' என்று, ஆராதனா சைகை செய்ய, அவள் அம்மா தயக்கத்துடன் புடவையைப் பெற்றுக் கொண்டாள்.

''நீங்களும் ஒரு நாள் எங்க வீட்டுக்கு வரணும். நீங்க சொன்னா, ஆராதனாவோ, வருணோ வந்து உங்களைக் கூட்டிட்டு வருவாங்க,'' என்றாள்.

இருவரும் சகஜமாகப் பேசப் பேச, ஆராதனா முகத்தில் புன்னகை மலர்ந்தது.

உ றைவாள் அலுவலகம்.

தன் இருக்கையில் அமர்ந்து, அச்சிட்ட இரண்டு செட் தாள்களை அருகருகில் வைத்து பரிசீலித்துக் கொண்டிருந்தாள், தீபா.

'கட்டுரை நல்லா வந்திருக்கு, தீபா. ஆனா, வெறும் செய்திச் சுருக்கம் போல இல்லாம, இன்னும் கொஞ்சம் பாலீஷ் பண்ணனும். நான் திருத்தித் தரேன். ரெண்டையும் படிச்சுப் பாருங்க. அந்த நகாசு பிடிபட்டுரும்,' என்று சொல்லியிருந்தார் உதவி ஆசிரியர், நாதப்ரியன்.

ஆனால், அவள் கவனம் கட்டுரையில் பதிய மறுத்தது. 'திடீரென்று அம்மா எப்படி, ஆராதனாவுக்கு நெருக்கமானாள்? என்னிடம் கூடச் சொல்லாமல், இந்த சந்திப்பு எப்படி ஏற்பாடானது? 'பென்டிரைவ்' எடுக்க நான் மட்டும் போகாமல் இருந்திருந்தால், இந்த விவகாரமே இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்குமோ?

'முதலில் அப்பா, அப்புறம் கம்பெனி வேலை, கார் என்று ஒவ்வொன்றாக என்னிடமிருந்து தட்டிப் பறித்தது போதாது என்று, என் அம்மாவையும் பிரித்து, என்னை தனிமையில் தள்ளத் திட்டமிட்டிருக்கிறாளா, அந்தச் சிறுக்கி?' என்று, எண்ணி அவளையறியாமல், விழிகள் ஈரமாயின. யாரும் பார்க்கும் முன், கண்களைத் துடைத்துக் கொண்டாள், தீபா.

மும்பை.

ஜன்னலுக்கு வெளியே மாலை சூரியன் மஞ்சள் பந்தாக கடல் நோக்கி இறங்கி கொண்டிருந்தது.

திலகன், நிமிஷா, சாதனா மூவரும் பொது மேலாளர், ராஜீவ் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

''சார் எங்க, 'புராஜக்ட் சப்மிஷனை' பாத்தீங்களா, இல்லியா? காலைலேர்ந்து, 'ரிசல்ட்'டுக்காக, 'வெயிட்' பண்றோம், சார்,'' என்றாள், நிமிஷா.

''ஓ.கே., இப்ப சொல்றேன். மூணு பேரும் வித்தியாசமா யோசிச்சிருக்கீங்க. கங்கிராட்ஸ்,'' என்று அவர் கட்டை விரலை உயர்த்தி காட்டினார்.

''தேங்க் யூ, சார்,'' என்றனர், மூவரும்.

''ஆனா, மூணுல எது, 'பெஸ்ட்'ன்னு கேட்டீங்கன்னா, நிமிஷா கொடுத்த ஐடியா தான்,'' என்றார், பொது மேலாளர், ராஜீவ்.

''ஓ,'' என்றாள், நிமிஷா.

''நம்பர் டூ, சாதனா. மூணாவது தான், திலகன்,'' என்றார்.

திலகனுக்கு சுருக்கென்றது. போட்டியில் தோற்று விட்டானா?

''இல்ல, சார், திலக் தான் நம்பர் ஒன்,'' என்றாள், நிமிஷா.

திலகன் திகைத்து, நிமிஷாவை பார்த்தான்.

''ஏம்மா, நீ ஜி.எம்.,மா, நான் ஜி.எம்.,மா?'' என்றார், ராஜீவ்.

''நீங்கதான் சார் ஜி.எம்., ஆனா, நீங்க நம்பர் ஒண்ணுன்னு, 'செலக்ட்' பண்ணீங்களே, அது எனக்கு, திலக் பண்ணிக் கெடுத்தது,'' என்றாள், நிமிஷா.

ராஜீவ் முகம் சுருங்கியது.

''திலக். இவ சொல்றது உண்மையா?'' என்று கேட்டார், ராஜீவ்.

தலை குனிந்து மவுனமாகத் தலையசைத்தான், திலகன்.

''இது ரொம்பத் தப்பு, திலக். வேலை, 'கன்பார்ம்' ஆனப்புறம், நாளைக்கு, நிமிஷா ரொம்ப முக்கியமான ஒரு முடிவு எடுக்க வேண்டி இருந்தா, உன்னை, 'கன்சல்ட்' பண்ணிட்டிருக்கணுமா? அவளுக்கே அந்தத் திறமை இருக்கணும் இல்ல? இதுக்காக உனக்கு, 'நெகடிவ் மார்க்' குடுக்கப் போறேன்,'' என்றார், ராஜீவ்.

''சாரி, சார்,'' என்று பதறினான், திலகன்.

''தப்பு என்னோடது தான், சார்... எனக்கு இல்ல மார்க்கை குறைக்கணும்?'' என்றாள், நிமிஷா.

பொது மேலாளர் ராஜீவ் கைகளை விரித்துப் புன்னகைத்தார். ''உனக்கு மார்க் குறைக்கற பவர் எனக்கு ஏது, நிமிஷா?'' என்றார்.

சாதனா, திலகன் இருவரும் திடுக்கிட்டு அவளைத் திரும்பிப் பார்க்க, நிமிஷா அவர்கள் பார்வையைத் தவிர்த்தாள்.

''சார், ப்ளீஸ்,'' என்றாள், நிமிஷா.

''ஓ.கே., முதல் தடவைங்கறதால, யாருக்கும் 'நெகடிவ் மார்க்' குடுக்கல. ஆனா, திலக், இன்னொரு தடவை இந்த தப்பை பண்ணாத,'' என்றார், ராஜீவ்.

''ஷ்யூர், சார்,'' என்றான், அவசரமாக திலகன்.

அப்போது, 'இன்டர்காம்' போன் ஒலித்தது. அதை எடுத்து பேசிவிட்டு, நிமிஷாவிடம்...

''உன்னை எம்.டி., கூப்புடறாரு,'' என்றார், ராஜீவ்.

''சாரி, கய்ஸ்,'' என்று, நிமிஷா விலக, 'நீங்கள் போகலாம்' என்பது போல் மற்ற இருவருக்கும், சைகை செய்தார், ராஜீவ்.

வெளியே வந்ததும், திலகனை மறித்தாள், சாதனா.

''இன்னிக்கு என் கூட பீர் சாப்புடறதா, 'ப்ராமிஸ்' பண்ணிருக்கே, மறக்காத, திலக்,'' என்றாள், சாதனா.

''நிமிஷாவும் வராளான்னு கேட்போம்,'' என்று, சாதனாவிடம் சொன்னான், திலகன்.

''நோ, நீயும், நானும் மட்டும் தான். என் ஸ்கூட்டர்லயே போயிருவோம். உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும். கொஞ்சம் சரக்கு உள்ள போனாத்தான் அதை வெளிப்படையா என்னால சொல்ல முடியும்,'' என்றாள், சாதனா.

அது என்ன என்று தெரிந்துகொள்ளும் ஆர்வம் இருந்தாலும், நிமிஷா என்ன சொல்லப் போகிறாளோ என்ற திகிலுடன் தலையாட்டினான், திலகன்.

- தொடரும்

- சுபா






      Dinamalar
      Follow us