sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/தீபாராதனா! (27)

தீபாராதனா! (27)

தீபாராதனா! (27)


PUBLISHED ON : ஏப் 05, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 05, 2026


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்கதைச் சுருக்கம்: ஆ ராதனா மீது, 'ஆசிட்' வீசியவனை பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வத்தில், பொது நுாலகத்திலிருந்த, 'கம்ப்யூட்டரில்' சேகரித்து வைத்திருந்த பழைய நாளிதழ்களில் வெளியான செய்திகளை ஆராய்ந்தாள், தீபா. அவள் எதிர்பார்த்தபடி, 'ஆசிட்' வீசிய சம்பவம் பற்றி, ஆங்கில செய்தித்தாளில் வெளியாகியிருந்தது. ஆனால், அந்நிகழ்வு, ஹைதராபாத்தில் நடந்ததாக குறிப்பிட்டிருக்க, குழம்பினாள், தீபா. ஆராதனாவுக்கு போன் செய்து ஹைதராபாத்தில் நடந்ததா என்று விசாரிக்க, அதற்கு சரியான பதில் சொல்லவில்லை, அவள்.

மும்பையில், தீபாவின் காதலன் திலகனை, தன் பெற்றோரிடம் அறிமுகம் செய்ததோடு, தன்னை திருமணம் செய்து கொள்ள விருப்பமா என்று கேட்டாள், அவனுடன் வேலை செய்யும், நிமிஷா.

கம்பெனியின் ஏற்றுமதி விஷயமாக, வெளிநாட்டு துறைமுகங்களை பற்றி அறிந்து கொள்ள, அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு, ஆராதனாவை அழைத்து சென்றார், கல்யாண் மேத்தா. ஆராதனாவின் பொறுப்பான செயல்பாடுகளை பாராட்டியவர், கம்பெனியின் டைரக்டர் ஒருவர் விலக இருப்பதால், அந்த இடத்துக்கு அவளை சிபாரிசு செய்வதாக கூறினார்.

அச்சமயம், ஆராதனாவுக்கு போன் செய்து, 'எப்போது நேரில் சந்திக்கலாம்...' என்று கேட்டான், மறைமுகமாக கள்ளக் கடத்தல் தொழில் செய்யும், அஷ்வத்.

அஷ்வத்திடமிருந்தே அழைப்பு வரும் என எதிர்பார்க்கவில்லை, ஆராதனா. ஆனால், எந்த பரபரப்பையும் தன் குரலில் காட்டிக்கொள்ளாமல் தவிர்த்தாள்.

''ஹாய் அஷ்வத், நான் இப்ப நியூயார்க்ல இருக்கேன். ரெண்டு வாரத்துல இந்தியா திரும்பியதும் சந்திக்கலாம்,'' என்றாள்.

''என்ன விஷயமா, 'மீட்' பண்ணனும்?''

''பிசினஸ் விஷயமாத்தான். இப்ப ரெண்டு கம்பெனிங்களோட ஏற்றுமதி, இறக்குமதி என் பொறுப்புல இருக்கு,'' என்றாள்.

''என்னோட, 'பெஸ்ட் சர்வீஸ்', 'மினிமம் ரேட்ல' தர ஆவலாயிருக்கேன்,'' என்று ஆர்வத்துடன் சொன்னான், அஷ்வத்.

இந்த உரையாடல் பற்றி, யுவராஜுக்கு தகவல் அனுப்பிவிட்டு, கல்யாண் மேத்தாவுடன் துறைமுகம் சார்ந்த அதிகாரிகளை சந்திக்க சேர்ந்து கொண்டாள், ஆராதனா.

''நீ வேலைல சேர்ந்து ஆறு வாரம் தானே ஆகுது? அதுக்குள்ள, 'லீவு' கேக்கறே?'' என்றார், உதவியாசிரியர் நாதப்ரியன்.

''முக்கியமான வேலை, சார். ஹைதராபாத் போகணும். அதான்...'' என்று இழுத்தாள், தீபா.

''ஹைதராபாத் என்றா சொன்னே? அப்ப ஒண்ணு செய். இன்னிக்கு இந்தியா முழுக்க தெலுங்கு சினிமாவுக்கு மவுசு கூடியிருக்கு. எப்படி இது சாத்தியமாச்சுன்னு முக்கியமான டைரக்டர்ஸ், நடிகர்களை சந்திச்சு, பேட்டி எடுத்திட்டு வந்திடு!'' என்றார், நாதப்ரியன்.

''சந்தோஷமா செய்யறேன், சார்,'' என்றாள், தீபா.

''நம்ம ஆபீஸ், 'லெட்டர் ஹெட்'ல ஒரு அறிமுக கடிதம் எழுதித் தரேன். உனக்கு உபயோகமா இருக்கும்,'' என்றார்.

கேட்காமலே இப்படியொரு வசதியா? என்று நினைத்து, மகிழ்ச்சியுடன் தலையாட்டினாள், தீபா.

ஆ ராதனா இந்தியா திரும்பியபோது, பயணக் களைப்பு இல்லாமல் மனம் நிறைந்திருந்தது.

நள்ளிரவு தாண்டி வீடு வந்து சேர்ந்திருந்தாள். இறுதித் தேர்வுகள் முடிந்து, ஹாஸ்டலை காலி செய்து வீட்டுக்கு வந்து விட்டான், வருண்.

சற்றும் சோர்வில்லாமல், தன் வெளிநாட்டுப் பயணம் பற்றி, ஆராதனா அப்போதே சொல்லியதோடு, ஞானசேகரன் கம்பெனில டைரக்டரா சேரச் சொன்னதையும், அதற்கு 20 சதவீத ஷேர் வாங்க வேண்டும், என்பதையும் கூறினாள், ஆராதனா.

அம்மாவும், வருணும் ஆர்வத்துடன் கேட்டனர்.

''இந்த, 'ட்ரிப்'ல ஹைலைட்டே, ஞானசேகரன் அங்கிளோட கம்பெனில உன்னை டைரக்டரா சேரச் சொன்னது தான். ஆனா, 20 சதவீத, 'ஷேர்' வாங்க, பணத்துக்கு நாம எங்க போறது?'' என்று கவலையுடன் கேட்டான், வருண்.

''என் மனசுல ஒரு பிளான் இருக்கு, பார்ப்போம். அதுக்கு முன்னால, அஷ்வத்தை மீட் பண்றேன்,'' என்றாள், ஆராதனா.

ஹை தராபாத்.

தான் தங்கியிருந்த ஹோட்டலிலிருந்து வெளியே வந்து, ஆட்டோ பிடித்தாள், தீபா.

வெயில் மெல்ல ஏறத் துவங்கியிருந்தது.

வேடிக்கை பார்த்தபடியே, ஆராதனா மீது, 'ஆசிட்' வீசிய செய்தி வெளியான ஆங்கில தினசரி அலுவலகத்தில் நுழைந்தாள், தீபா.

அடுத்தடுத்த அறிமுகங்களில், அவள் மூத்த துணை ஆசிரியர் அறை வரை அனுமதிக்கப்பட்டாள்.

ஆறு ஆண்டுகளுக்கு முன் வந்திருந்த செய்தியை, போட்டோ எடுத்து தன் மொபைலில் வைத்திருந்ததை அவரிடம் காட்டினாள்.

''என், கசின் சிஸ்டர் மேலதான், 'ஆசிட்' அடிச்சிருக்காங்க. இதுக்கு அப்புறம் இது தொடர்பா வேற என்ன நியூஸ் வந்ததுன்னு எனக்குச் சொல்ல முடியுமா?''

நரைத்த மீசையும், குறுந்தாடியும் விரிய அவர் சிரித்தார்.

''இதெல்லாம் நாங்க தேடிப்போய் சேகரிச்ச செய்தி இல்லம்மா. அப்பப்ப போலீஸ்லேர்ந்து தகவல் வரும். அவங்க கொடுக்கற செய்திக்கு கொஞ்சம் காரம் சேர்த்து போடுவோம். அவ்வளவுதான்.''

தீபா குரலைக் குழைத்துக்கொண்டு கேட்டாள்... ''ஆசிட் அடிச்சவன் யாருன்னு எனக்குத் தெரியணும்னா, எனக்கு நீங்க உதவ முடியுமா?''

அவர், தீபாவின் மொபைல் போனில் வைத்திருந்த செய்தியை வாங்கிப் படித்தார்.

''இதுவா? நம்பள்ளி ஸ்டேஷன் எல்லைல நடந்திருக்கு. அங்க போங்க. இன்ஸ்பெக்டர், சாய்ராம் இருப்பாரு. அவர்கிட்ட நான் பேசறேன். அவர் உங்களுக்கு உதவுவாரு,'' என்றார்.

நன்றி சொல்லி விடைபெற்றாள், தீபா.

அ டர்ந்த மரங்கள் சூழ அமைந்திருந்தது, ஹைதராபாத்தின் நம்பள்ளி போலீஸ் ஸ்டேஷன். காவல் நிலையம் என்று அறிய முடியாதபடி, நவீன கட்டிடம்.

தவிப்புடன் அமர்ந்திருந்தாள், தீபா. இன்ஸ்பெக்டர், சாய்ராம் தலையை இடதும் வலதுமாக ஆட்டினார். ''பார்த்தீங்களா, எத்தனை பைல் என் மேஜை மேல கெடக்கு! சட்டசபையில கேள்வி கேக்கறாங்கன்னு மினிஸ்டர் தொந்தரவு. ஒரு வாரத்துக்குள்ள நான், 'ரிப்போர்ட்' கொடுக்கணும். இதுல ஆறு ஆண்டுக்கு முந்தின கேஸ் பத்தி இப்ப வந்து கேட்டா, என்னம்மா செய்ய முடியும்?''

கோபப்படவில்லை, தீபா.

''ப்ளீஸ், சார்... யாராவது கான்ஸ்டபிளை அனுப்பி, அந்த கேஸ் பைலைக் கண்டுபிடிச்சுக் கொடுத்தா, நான் பத்திரிகைக்கு தேவையான குறிப்புகளை எடுத்துக்கிட்டு போயிட்டே இருப்பேன்,'' என்றவளை, வெறுப்புடன் பார்த்தார், இன்ஸ்பெக்டர்.

''பத்திரிகைக்காரங்க. அழுத்திச் சொன்னா, தப்பா எழுதிருவீங்க,'' என்று, கான்ஸ்டபிளை அழைத்தார்.

கான்ஸ்டபிள் களைப்பாக இருந்தார். இன்னும் சில மாதங்களில் ஓய்வு பெறவிருப்பதாகச் சொன்னார். இரும்பு அலமாரிகளில், சிறிது நேரம் பைலை தேடி எடுத்துவந்து கொடுத்தார்; கூடவே நின்றார்.

துாசு தட்டி, நெஞ்சு படபடக்க, அந்தக் கோப்பைப் புரட்டினாள், தீபா. மொத்தமே மூன்று நான்கு தாள்கள் தான் இருந்தன.

ஆராதனா கொடுத்த புகார், அதை அவள் திரும்பப்பெற்ற கடிதம் எதிலுமே அமிலம் வீசியவன் பெயரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

''இந்த, 'கேஸ்' எனக்கு ஞாபகம் இருக்கும்மா. ஜடாயு மால்ல நடந்துச்சு. அந்தப் பொண்ணு தப்பிச்சிருச்சு. ஆனா, அவங்கம்மா சிக்கிட்டாங்க. ரெண்டே நாள்ல, 'ஆசிட்' அடிச்சவனைப் பிடிச்சுட்டோம்,'' என்றார், கான்ஸ்டபிள்.

தவிப்போடு நிமிர்ந்தாள், தீபா.

''யாரு அது?'' என்று, கேட்டாள்.

''காலேஜ் படிக்கற பையன் மாதிரி தான் இருந்தான். சுவத்தை வெறிச்சுப் பாத்துட்டே இருந்தானே தவிர, எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லல. ஒரு பெரிய மனுஷன், சீனியர் வக்கீலோட வந்தாரும்மா. இன்ஸ்பெக்டர் ஐயாவோட பேசுனாங்க. அடுத்த நாளே, வழக்கை வாபஸ் வாங்கிருச்சு அந்தப் பொண்ணு,'' என்றார்.

''அந்தப் பையன் பேரு, போட்டோ, எந்த காலேஜ், ஏதாவது விவரம் கெடைக்குமா?'' என்று, தவிப்புடன் கேட்டாள், தீபா.

''ஆறு வருஷமாச்சேம்மா. அவன் பேரு மனசுல நிக்கலம்மா. வழக்கை வாபஸ் ஆனபோதே போட்டோவை, பைல்லேர்ந்து எடுத்திட்டுப் போயிட்டாங்கம்மா.''

தளர்ந்தாள், தீபா. ஆனாலும், தன்னை நிதானப்படுத்திக்கொண்டு, ''அந்தக் கேஸை கவனிச்ச இன்ஸ்பெக்டர் யாரு?'' என்றாள்.

''அவரு பேரு, விஸ்வநாத். அவர் மூணு வருஷம் முன்னாலேயே ரிட்டையராயிட்டாரேம்மா.''

அடுத்த சவாலையும் சந்திக்கத் தயாரானாள், தீபா.

''அவரை நான் பார்க்கணுமே!''

''கவர்மென்ட் ஹாஸ்பிடல், பக்கத்துல இருக்கும்மா அவர் வீடு. போன் நம்பர் தரேன், பேசிப் பாருங்க,'' என்றார், கான்ஸ்டபிள்.

''ரொம்ப தேங்க்ஸ்.''

போன் செய்து, விஸ்வநாத்திடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டாள், தீபா.

''என் மகளுக்கு, 'டெலிவரி' ஆகியிருக்கு. பேரனைப் பார்க்கப் போயிட்டிருக்கேன். இன்னிக்கு வேணாம்மா. 'லொகேஷன்' அனுப்பறேன், நாளைக்குக் காலைல வாங்க,'' என்றார், விஸ்வநாத்.

ஏமாற்றத்தை விழுங்கிக்கொண்டு, ''சரி, சார்,'' என்றாள்.

பத்திரிகைக்காக, சினிமா நபர்களைச் சந்திக்க, அன்னபூர்ணா ஸ்டூடியோவுக்கு செல்ல ஆட்டோ பிடித்தாள், தீபா.

செ ன்னை விமான நிலையத்துக்கு அருகில் இருந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலின் பார்.

அங்கேதான், அஷ்வத்துடனான சந்திப்பு ஏற்பாடாகியிருந்தது. அவனை அடையாளம் கண்டு எதிரில் சென்று அமர்ந்தாள், ஆராதனா.

அஷ்வத் பளிச்சென்று இருந்தான். மழமழ முகம். கீழிறங்கிய கிருதாக்கள்.

பூக்கள் அச்சடித்த சட்டை.

''எனக்கு விஸ்கி. உங்களுக்கு?'' என்றான்.

அவனுக்கு விஸ்கியும், தனக்கு ஆரஞ்சுப் பழரசமும், 'ஆர்டர்' செய்தாள், ஆராதனா.

''கீர்த்திலால் கம்பெனிகூட முதல் தடவையா பிசினஸ் பேசறேன். ஆனா, உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு,'' என்றான், அஷ்வத்.

''எனக்குக்கூட உங்களைப் பார்த்தா, ஏதோ ஹிந்திப்படத்துல வர்ற வில்லன் போல இருக்கு,'' என்று கூறி புன்னகைத்தாள், ஆராதனா.

''கீர்த்திலால் கம்பெனில எனக்கு, பிசினஸ் கெடைக்கும்ன்னு எதிர்பார்க்கல. யார் என்னை சிபாரிசு பண்ணது?''

இவன் குரலில் எவ்வளவு பணிவு இருக்கிறது! பதுங்கியிருக்கும் பாம்பு எப்போது சீறப்போகிறது, பார்ப்போம்! என்று நினைத்த ஆராதனா, ''உண்மைல நான் வந்திருக்கறது, கீர்த்திலால் கம்பெனிக்கான பிசினஸ் பேச இல்ல. பர்சனலா ஒரு பிசினஸ் பேச,'' என்றாள்.

புருவம் உயர்த்தினான், அஷ்வத்.

''பர்சனலா நாம பிசினஸ் பேச என்ன இருக்கு?''

''எனக்கு ஒரு வருஷத்துக்குள்ள பெரிய பணம் சேர்க்கணும். உங்க மூலமா இறக்குமதி பிசினஸ் பண்ணா, அதுக்கு வாய்ப்பு இருக்குன்னு சொன்னாங்களே!''

அஷ்வத்தின் புருவங்கள் முடிச்சிட்டன... ''புரியல?'' என்றான்.

''சட்டத்துக்கு எதிரா சில விஷயங்களைக் கடத்திட்டு வர்றதுல நீங்க, 'எக்ஸ்பர்ட்'ன்னு கேள்விப்பட்டேன். வேற எந்த ஏற்றுமதி, இறக்குமதி பிசினஸ்ல உங்க அளவுக்கு வேகமா, இவ்ளோ பணம் சம்பாதிக்க முடியும், சொல்லுங்க.''

ஆஷ்வத் விஸ்கியை பட்டென்று வைத்து, நிமிர்ந்தான்.

''நீங்க ஏதோ உள்குத்து வெச்சு பேசறீங்க. கொஞ்சம் பொறுங்க,'' என்றவன், திடீரென, ''இப்ப ஞாபகம் வந்திருச்சு, இந்த மூஞ்சிய எங்க பாத்திருக்கேன்னு, ஆ..ரா..த..னா!'' முகத்தை சற்றே சுருக்கிக்கொண்டு அவளைப் பார்த்தான்.

''உன் கழுத்து மேலயும், 'ஆசிட்' விழுந்திச்சு இல்ல... அதான் நீ, 'ஹை காலர்' சட்டை போட்டிருக்கியா?''

பதில் சொல்லாமல், பழச்சாறை அருந்தினாள், ஆராதனா.

''உங்கம்மா மூஞ்சிய அப்புறம், 'ரிப்பேர்' பண்ண முடிஞ்சுதா?''

அவனுடைய கேலிப்பேச்சை அலட்சியம் செய்தாள், ஆராதனா.

''என் கடைக்கு எதிர்லதான், 'ஆசிட்' அடிச்சான், அவன். எல்லாமே, 'க்ளியரா' எங்க கடை, 'சிசிடிவி'ல, 'ரெக்கார்ட்' ஆகியிருந்தது. அந்த, 'புட்டேஜ்' என்கிட்ட இன்னும் இருக்கு. ரிலீஸ் பண்ணிடலாமா?'' என்று குரலில் காரம் சேர்த்தான், அஷ்வத்.

- தொடரும்.சுபா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us