sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/தீபாராதனா! (30)

தீபாராதனா! (30)

தீபாராதனா! (30)

1


PUBLISHED ON : ஏப் 26, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 26, 2026

1


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்கதைச் சுருக்கம்: சட்ட விரோதமான செயல்களில் ஈடுபட்டு வந்த, அஸ்வத் பற்றி, மத்திய அமைச்சரிடம் புகார் செய்ய, யுவராஜும், ஆராதனாவும் டெல்லி சென்றனர். ஆதாரத்துடன் பல தகவல்களை அமைச்சரிடம் எடுத்துக்கூற, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி, அவர்களை அனுப்பி வைத்தார், அமைச்சர்.

தன் அப்பா, ஞானசேகரன் மறைவுக்கு பின், அவரது அறைக்கு செல்லாமலிருந்த தீபா, தன் அண்ணன், கவுதம் பற்றி ஏதாவது தகவல் கிடைக்குமா என்று தேடிப் பார்க்க, அப்பாவின் அறைக்கு சென்றாள்.

அங்கு, அப்பாவின், 'லேப்டாப்'பில், 'பென்-டிரைவ்' ஒன்று இருந்தது. அதை, தன் கணினியில் போட்டு பார்த்தாள்.

அதில், கவுதம் பெங்களூருக்கு வேலைக்கு சென்றது, ஆராதனாவை ஒருதலையாக காதலித்து, அவள் கிடைக்கவில்லை என்றதும், 'ஆசிட்' வீசியது, அதன்பின் நடந்த போலீஸ் விசாரணை, எல்லாவற்றையும் பேசி, பதிவு செய்திருந்தார், ஞானசேகரன்.

மேலும், போதைக்கு அடிமையான கவுதமை மீட்டெடுக்க முயன்றது, அவன் தற்கொலை செய்து கொண்டது, அஷ்வத் மிரட்டலுக்கு பயந்து, கடத்தலுக்கு உடந்தையாக இருந்து, கம்பெனி கைவிட்டு போகுமளவுக்கு நடந்து கொண்டது எல்லாவற்றையும் அந்த பதிவில் சொல்லியிருந்தார். இதை கேட்டதும், தீபா வருந்தி, தன் அப்பா படத்திற்கு முன், நின்று தான் அவரை தப்பாக நினைத்ததை எண்ணி, மன்னிப்பு கேட்டாள்.

சென்னை திரும்பிய ஆராதனா, காரில் சென்று கொண்டிருந்த போது, யுவராஜ் போன் செய்து, 'பரபரப்பான 'பிரேக்கிங் நியூஸ்' பாத்தியா?' என்கிறான்.

யுவராஜ் சொன்ன, 'பிரேக்கிங் நியூஸ்' என்ன என்று அறியும் ஆவலுடன், காரை சாலையோரம் ஒதுக்கி நிறுத்தினாள், ஆராதனா.

மொபைல் போனில் செய்திச் சேனலை தேர்ந்தெடுத்தாள்.

'கோவாவில் இயங்கி வரும் பிரபலமான கேசினோவில் ரெய்டு. பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதை மருந்துகள் சிக்கின.

'கேசினோவை நடத்தி வந்த, அஷ்வத் என்பவரது அலுவலகங்கள், மகாராஷ்டிரா மற்றும் பல மாநிலங்களில் உள்ளன. இங்கெல்லாம், ஒரே நேரத்தில் அமலாக்கத்துறை மற்றும் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

'துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எப்., காவலர்களின் பாதுகாப்புடன், அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று நள்ளிரவு முதல் அதிரடி சோதனை நடத்தியதில், போதைப்பொருள் கடத்தல், விநியோகம் போன்ற பல முறையற்ற செயல்களில், அஷ்வத் ஈடுபட்டுள்ள ஆவணங்கள் கிடைத்தன.

'முறையாகக் குற்றப்பதிவு செய்யப்பட்டு, அஷ்வத்தும், இன்னும் சிலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இம்முறைகேடுகள் மூலம் சட்டவிரோதமாக, கோடிக்கணக்கில் பணப் பரிவர்த்தனை நடந்ததற்கான ஆதாரங்களும் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்!' செய்தி தொடர்ந்தது.

ஆராதனாவின் முகத்தில் புன்னகை மலர்ந்தது.

யுவராஜுக்கு வாழ்த்து அனுப்பிவிட்டு, காரை, தீபாவின் வீட்டை நோக்கிச் செலுத்தினாள்.

கா ர் தீபாவின் வீட்டு கேட்டுக்குள் நுழைய முற்பட்டபோது, தீபாவின் கார் எதிரில் வந்து மறித்தது.

இருவரும் தத்தம் வாகனங்களிலிருந்து இறங்கினர். 'இவள் என் அண்ணன் வாழ்க்கையில் குறுக்கிடாமல் இருந்திருந்தால், அவனையும், என் அன்பான அப்பாவையும் இழந்திருக்க மாட்டேன். எங்கள் வேதனைக்கெல்லாம் ஏதோ ஒருவிதத்தில் இந்த, ஆராதனா தான் காரணம்...' என்று, தீபாவின் உள்மனது பொருமியது.

''நான் இல்லாத நேரமா வந்து எங்கம்மா மனசைக் கலைக்கறியே, என்ன வேணும் உனக்கு?'' என்று முகத்தை இறுக்கமாக வைத்து கேட்டாள், தீபா.

''சொல்றேன், தீபா. ஒரு பெரிய உதவி கேட்டு வந்திருக்கேன். நீயும், அம்மாவும் சேர்ந்து முடிவு செய்ய வேண்டிய முக்கியமான விஷயம் அது. உள்ள போய் பேசலாமா?''

''விஷயம் என்னன்னு சொல்லு. இங்கயே உன்னைத் திருப்பி அனுப்பணுமா, உள்ள போய் பேசலாமான்னு சொல்றேன்.''

தயங்கினாள், ஆராதனா.

''சொல்ல இஷ்டமில்லேன்னா, வண்டியை நகர்த்தி வழிவிடு. எனக்கு முக்கியமான வேலை இருக்கு!'' என்று காரில் ஏறப்போனாள், தீபா.

''உங்க வீட்டை அடமானம் வெக்கணும். வக்கீலோட எப்ப வரலாம்ன்னு பேசத்தான் வந்தேன்,'' என்றாள், ஆராதனா.

ஆராதனா சொன்னதை கேட்டதும், தீபாவின் முகம் இன்னும் சிவந்து போனது.

''ஏய், உன் மனசுல என்ன நெனைச்சிட்டிருக்க? எங்க வீட்டை அடமானம் வைக்க நீ யாரு?''

''ஷ், ஷ்... இது வாசல்ல நின்னு கத்தற விஷயம் இல்ல, தீபா.''

''எங்கண்ணன் தான் உன் மேல, 'ஆசிட்' அடிச்சான்னு சொல்லி, அதுக்கு ஈடா எங்க வீட்டையே கேக்கறியா?''

'கவுதம் தான், 'ஆசிட்' அடித்தது, என்று எப்படி இவள் கண்டுபிடித்தாள்?'

ஆராதனாவுக்கு ஆச்சரியமாயிருந்தது.

''நீ சொல்லலைன்னா, என்னால கண்டுபிடிக்க முடியாதா? எங்கப்பா அதுக்காகதான் உங்க குடும்பத்துக்குப் படியளந்தார். அதுவும் தெரியும். அதுக்காக தலைமுறை தலைமுறையா எங்களைப் பிழிஞ்சு எடுத்து ஓட்டாண்டி ஆக்கப் பாக்கறியா, நீ?''

''தீபா, ப்ளீஸ் உள்ள போய் பேசலாம்.''

விருட்டென்று திரும்பி வீட்டுக்குள் புயலாக நுழைந்தாள், தீபா. பின்னாலேயே தயங்கி நுழைந்தாள், ஆராதனா.

ஹாலில் உட்கார்ந்திருந்த, மஞ்சுளா, ''வாம்மா, ஆராதனா'' என்று புன்னகைத்தாள்.

''நம்மள மொட்டை அடிக்க வந்திருக்காம்மா. இவள வாசலோட தொரத்தி அடிக்காம. சிரிக்கற,'' என்று அதட்டினாள், தீபா.

''தீபா, நிதானமா பேசலாம். உக்காரு. இந்த வீடு தவிர உன்கிட்ட வேற ஏதாவது சேமிப்பு இருக்கா?''

''ஏன், அதையும் சுரண்டி எடுத்திட்டுப் போகணுமா?''

''தீபா!'' என, பதறினாள், மஞ்சுளா.

திலகன், ஆராதனா என்று ஒவ்வொருவராக அம்பைக் கொண்டுவந்து என் இதயத்தில் செருகிவிட்டுப் போவார்கள், நான் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க வேண்டுமா? தீபாவின் ரத்தம் கொதித்தது.

''இதப் பாரு. எங்க குற்ற உணர்ச்சியை துாண்டித் துாண்டி, நீ காசாக்கப் பாக்கறது தெரியும். இருக்கறது இந்த வீடு ஒண்ணுதான். அதையும் தட்டிப் பறிக்க நீ திட்டம் போட்டிருக்கலாம். நான் உசுரோட இருக்கிற வரைக்கும் அது நடக்காது. கெட் அவுட்!''

''இந்த வீட்ல எனக்கும் உரிமை இருக்கு. நீ உக்காரு, ஆராதனா,'' என்றாள், மஞ்சுளா.

திரும்பி அம்மாவை முறைத்தாள், தீபா.

''எனக்கு எடிட்டரோட முக்கியமான, 'மீட்டிங்' இருக்கு. நிக்க நேரமில்ல. ஆனா, ஒண்ணு, என் கையெழுத்து இல்லாம நீ ஒண்ணும் செய்ய முடியாது,'' என்று சொல்லி, அதே வேகத்தில் வெளியேறினாள், தீபா.

''ஸாரி, ஆராதனா. அவ சொல்றதைலாம் மனசுல வெச்சுக்காத. உனக்கு எவ்ளோ பெரிய அநியாயம் நடந்திருக்கு... ஆனாலும், என் மகன் பேரைக் கடைசி வரைக்கும் சொல்லாம, நீ எவ்ளோ நாகரிகமா நடந்துக்கிட்ட. உன்கிட்ட போய்,'' என, மன்னிப்பு கேட்பது போன்ற குரலில் சொன்னாள், மஞ்சுளா.

''பரவாயில்லம்மா,'' என்று கூறி, அவளை நெருங்கி உட்கார்ந்து தான் வந்த விஷயத்தை சொல்லலானாள், ஆராதனா.

''எ ன்னடா சொல்றே?'' என்று சற்று அதிர்ந்து கேட்டாள், திலகனின் அம்மா.

''தீபான்னு ஒரு பொண்ணை, 'லவ்' பண்றதா இல்ல என்கிட்ட சொல்லியிருந்தே? இப்ப வேற பொண்ணு வீட்டுல சம்பந்தம் பேச மும்பைக்கு கூப்புடறாங்கன்னு சொல்றே?''

''தீபா, இப்ப செல்லாக் காசும்மா. அவளே ஏதோ பத்திரிகைல நிருபரா அல்லாடி, சம்பாதிச்சிட்டிருக்கா. நான் சொல்ற பொண்ணு, செம பணக்காரி. அவளால கம்பெனில எனக்குப் பெரிய பதவி கெடைக்கும்.''

''தப்புடா, காசுக்காகவா காதலிச்சே? அந்தஸ்து பார்க்காமதானே, தீபா உன்னை அன்னிக்கு ஏத்துக்கிட்டா? இப்ப, நீ அந்தஸ்து பாக்கறே?''

''உன் மகனோட முன்னேற்றத்துக்காக பேசாம, யாரோ ஒரு, தீபாவுக்காக பேசறியேம்மா?''

''நீ வெறும், 'டியூஷன் டீச்சர்' தானே? வேற ஒரு பணக்காரியை நான் அம்மாவாக்கிக்கப் போறேன்னு நாளைக்கு நீ சொன்னாலும் சொல்வே. நான் மும்பைக்கும் வர மாட்டேன், கிம்பைக்கும் வர மாட்டேன். அப்பா வந்தா கூட்டிட்டுப்போ,'' என்று, திலகனின் அம்மா பிடிவாதமாக சொல்லி, காத்திருந்த மாணவர்களுக்கு, 'டியூஷன்' எடுக்கப் போய்விட்டாள்.

சிவந்த முகத்துடன் வெளியேறி, கதவை அறைந்து சாத்தினான், திலகன்.

இரண்டு படிகள் கூட இறங்கவில்லை, அவன் போன் ஒலித்தது.

சாதனா!

இவள் வேறு, சமயம் தெரியாமல் வெறுப்பேற்றிக்கொண்டு! எடுக்காமல் தவிர்த்தான். இடைவெளியில்லாமல் அவள் அழைத்துக் கொண்டேயிருக்க, எடுத்தான்.

சற்று எரிச்சலுடன், ''யெஸ்...'' என்றான்.

''உனக்கு விஷயம் தெரியுமா? நிமிஷாக்கு, 'ஆக்சிடெண்ட்' ஆயிருச்சு. நினைவில்லாம ஹாஸ்பிட்டல்ல இருக்கா,'' என்று, சாதனா சொல்ல, திலகனின் ரத்தம் வேகம் பிடித்தது.

த ன் அறைக்கதவு திறக்கப்படும் ஒலி கேட்டு நிமிர்ந்தாள், ஆராதனா. முத்துராமன் உள்ளே நுழைய, மரியாதையுடன் எழுந்து நின்றாள்.

''வாழ்த்துகள், ஆராதனா. ஞானசேகரன் சாரை சிக்க வெச்சு, இந்தக் கம்பெனியை கவுத்த, அஷ்வத்தை, 'அரெஸ்ட்' பண்ண நீதான் உழைச்சிருக்கேன்னு எம்.டி., சொன்னாரு. இந்தக் கம்பெனிக்கு வந்ததும், 'ராக்கெட் ஸ்பீடுல' நீ மேல வந்திருக்கே. கம்பெனியையும் மேல கொண்டு வந்திருக்கே.''

''நன்றி, சார். நீங்க எல்லாரும் ஒத்துழைச்சதால தான் இது சாத்தியமாச்சு.''

''ஆராதனா, நம்ம, 'அட்வகேட்' பத்மனாபன்கிட்ட நீ பேசுனதை சொன்னாரு. அது, எனக்கு உறுத்தலா இருக்கு. நீ எடுத்திருக்கற முடிவு சரிதானா, கொஞ்சம் யோசி.''

புன்னகைத்தாள், ஆராதனா.

''நெறைய யோசிச்சு தான் முடிவு பண்ணியிருக்கேன், சார்.''

மு ம்பையின் சிறந்த மருத்துவமனையில், சில கெடுபிடிகளை தாண்டித்தான், நிமிஷா, 'அட்மிட்' ஆகியிருந்த அறைக்கே, திலகன் போக முடிந்தது.

கதவை சற்றே திறந்து, தவிப்புடன் கட்டிலில் கிடந்த, நிமிஷாவைப் பார்த்தான். முகத்தில் ஒன்றிரண்டு இடங்களில் பட்டையாக, பிளாஸ்திரி ஒட்டப்பட்டிருந்தது. வலது கண்ணுக்குக் கீழே ரத்தம் கட்டி கருப்பாகியிருந்தது. இடது காலில் மாவுக்கட்டு போட்டிருந்தது.

நிமிஷாவின் அம்மா அரைப் புன்னகையுடன், அவனை உள்ளே வரலாம் என்றாள்.

''என்ன ஆச்சு ஆன்ட்டி?'' பதற்றத்துடன் கேட்டான், திலகன்.

கொண்டு வந்திருந்த பூக்களையும், பழங்களையும் அங்கே வைத்தான்.

''காரும், லாரியும் டாஷ், டாஷ்,'' என்று திக்கி திணறி பேசினாள், நிமிஷா. ஆனால், அவள் முகத்து தசைகள் ஒத்துழைக்கவில்லை.

''இவ சூப்பரா கார் ஓட்டுவாளே, என்னால நம்பவே முடியல,'' என்றான், திலகன்.

''சிக்னல்ல நிக்காம வந்திருக்கான், லாரி டிரைவர். ராஸ்கல். இப்ப, 'லாக்கப்'ல இருக்கான். ஆனா, இடிச்சது இடிச்சது தானே?'' என்றாள், அவள் அம்மா.

நிமிர்ந்து திலகனிடம், ''உன் பேரன்ட்ஸ் வந்திருக்காங்களா?'' என்றாள்.

''இல்ல, 'நியூஸ்' கேட்டதும், நிமிஷாவை உடனே பார்க்கணும்ன்னு போட்டது போட்டபடி ஓடி வந்துட்டேன்.''

''நல்ல வேளை, அவங்களையும் கூட்டிட்டு வந்திருப்பியோன்னு பயந்தேன்.''

''போன் பண்ணி வரச் சொல்லவா, ஆன்ட்டி?''

''நோ, நோ,'' என்றாள், நிமிஷாவின் அம்மா.

சற்றுத் தயங்கி, ''நீ கொஞ்சம் வெளிய வாயேன், திலக்,'' என்று எழுந்தாள்.

''மம்மி... அந்த டாப்பிக்கை எடுக்காத,'' என்று, நிமிஷா சொல்லச் சொல்ல, அவள் அம்மா, திலகனின் தோளில் தட்டி, வெளியே கூட்டிப்போனாள்.

என்னவென்று புரியாமலேயே அவளைத் தொடர்ந்தான், திலகன்.

மருத்துவமனையின் அந்தப் பகுதி சற்று அமைதியாக இருந்தது. நிமிஷாவின் அம்மா, திலகனை நிமிர்ந்து பார்த்தாள்.

''திலக். பொதுவா எங்களைப் பார்த்தா மாடர்னா இருக்கலாம். ஆனா, எனக்கு பக்தி உண்டு. ஜாதகம், சகுனம் இதுலல்லாம் பயங்கர நம்பிக்கை உண்டு. உன் பிறந்த நாளை வெச்சு ஜாதகம் தயார் பண்ணி, பொருத்தம் பார்க்கக் கொடுத்திருந்தேன். உங்க ரெண்டு பேர் ஜாதகமும் கொஞ்சம்கூடப் பொருந்தலைன்னு ஜோசியர் சொன்னாரு. 'ஆக்சிடெண்ட்' ஆனவுடனே ஜோசியர் கூப்புட்டாரு. கல்யாணப் பேச்சை எடுத்ததால தான் இந்த விபத்துன்னு சொன்னாரு. சகுனமே சரியில்ல, இந்த வரன் வேணாம்ன்னு சொல்லிட்டாரு.''

'ஜோசியத்தில் அவ்வளவு நம்பிக்கை இருந்தால், பொருத்தம் பார்த்துவிட்டு தன் பெற்றோர்களைக் கூட்டி வரச் சொல்ல வேண்டியது தானே...' என்று, திலகனால் கேட்க முடியவில்லை.

''ஆன்ட்டி! வேற ஜோசியர்கிட்டயும் காட்டலாமே?'' என்றான்.

''ஸாரி. உன்னை அர்த்தமில்லாம நிராகரிக்கல. எனக்கும் உன்னைப் பிடிச்சிருந்தது. ஜோசியர் சொன்னது கஷ்டமாத்தான் இருந்தது. ஆனா, என் மகளோட உயிரும், வாழ்க்கையும் முக்கியமில்லையா? உன், 'பேரன்ட்ஸை' நீ கூட்டிட்டு வராதது நல்லதாப் போச்சு.''

திகைத்து நின்றான், திலகன்.

''நிமிஷா என்ன சொல்றா?''

''நாங்க சொன்னா, அவ கேப்பா. நிமிஷாகிட்ட இதுபத்தி பேசிப்பேசி, அவளைக் குழப்பாத, திலக். உனக்கு வேற நல்ல பொண்ணு கெடைக்கும். நிமிஷாவை மறந்துரு.''

திலகனுக்கு, 'ணொங், ணொங்' என்று யாரோ மண்டைக்குள் தட்டுவதுபோல் இருந்தது.

அடுத்த கேள்வி அவன் வாயிலிருந்து தானாக உதிர்ந்தது.

''ஆன்ட்டி. அப்ப என் வேலை?'' என்று தயங்கி இழுத்தான்.

'என்ன பதில் வருமோ?' என்று, நிமிஷாவின் அம்மா முகத்தைக் கவலையுடன் பார்த்தான்.



- தொடரும்.சுபா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us