
ஜி.அர்ஜுனன், திருப்பூர்: நேபாளத்தின், 47வது பிரதமராக, 35 வயது பாலேந்திர ஷா, பதவியேற்று இருக்கிறாரே...
கடந்த, 2025ல், அந்நாட்டில், சமூக வலைதளங்களை தடை செய்ததால், பெரும் கலவரம் ஏற்பட்டது. அந்நாட்டு பார்லிமென்ட்டையே தகர்க்கும் அளவுக்கு, வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் கிளர்ந்தெழுந்து விட்டனர். தற்போதைய பிரதமர் பாலேந்திர ஷா, பொறியாளர், பாடகர்; 35 வயது இளைஞர். இளைஞர்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக தென்படுகிறார்; பார்ப்போம், என்ன நடக்கிறது என்று!
* எஸ்.செல்லபாண்டியன், பெங்களூரு: ஏ.டி.எம்., கொள்ளையர்கள் இரண்டு பேருக்கு, ராஜஸ்தான் ஐகோர்ட், ஜாமின் வழங்கி, 'தினமும் தலா, ஐந்து மரக்கன்றுகளை, 30 நாட்களுக்கு நட வேண்டும்; பராமரிக்க வேண்டும்...' என, உத்தரவிட்டுள்ளதே...
நல்ல தண்டனை! ஆனால், அந்த கொள்ளையர்கள் மரம் நட்டு பராமரிக்கும்போதே, கொள்ளையும் அடிக்கின்றனரா என்பதையும் கண்காணிக்க வேண்டும்!
வீ.குமாரி, சென்னை: போர் சூழல் காரணமாக, பெட்ரோல் - டீசல் தட்டுப்பாடு நிலவுவதால், தன் நாட்டு மக்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டுமென, ஆஸ்திரேலிய அரசு வேண்டுகோள் வைத்துள்ளதே...
மிக நல்ல வேண்டுகோள். மற்ற நாடுகளும் ஆஸ்திரேலியாவை பின்பற்ற வேண்டும். எல்லா மக்களும், பொது போக்குவரத்தை உபயோகிக்க வேண்டும்!
* ப.காளிதாசன், புதுக்கோட்டை: டில்லி அரசு, பெட்ரோல்-டீசல் வாகனங்களுக்கு பதிலாக, மின்சார வாகனங்களை வாங்கினால், ஊக்கத்தொகை வழங்கப் போவதாக அறிவித்துள்ளது குறித்து...
அருமையா ன ஆலோசனை! பெட்ரோல், டீசல் வண்டிகளின் பயன்பாடு குறையும். டில்லியின் தீராத காற்று மாசு பிரச்னையும் குறையும். கனரக வாகனங்களுக்கும் இத்தகைய மாற்று ஏற்பாடு வந்தால், காற்றின் தரம் மேம்படும். மற்ற மாநிலங்களும் இந்த திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்!
பெ.பொன்ராஜபாண்டி, மதுரை: 'ஆறாம் வகுப்பு முதல் மும்மொழி பாடத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்...' என்று, பள்ளிகளுக்கு, சி.பி.எஸ்.இ., நிர்வாகம், அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளதே...
மாணவர்களுக்கு, சிறு வயதில் எதைச் சொல்லிக் கொடுத்தாலும், எளிதில் கற்றுக்கொள்ளும் திறன் இருக்கும்! இன்னொரு மொழியை கற்றுக்கொள்வதால், பசு மரத்தாணி போல், பதிந்து விடும்! எத்தனை மொழி கற்றுக்கொண்டாலும், தவறே இல்லையே, பொன்ராஜ்!
நோபல் ஜோ ஹாரிஸ், புதுடில்லி: கல்வியையும், மருத்துவத்தையும் நிரந்தரமாக இலவசமாக்கினால், எண்ணற்ற ஏழை மக்களின் ஆசி, ஆட்சியாளர்களுக்கு கிடைக்குமல்லவா?
பல, 'கல்வித் தந்தை'களையும், 'மருத்துவத் தலைவர்'களையும் உருவாக்கும், காசு கொழிக்கும் துறையல்லவா இந்த இரண்டு துறைகளும்! காசு பார்க்கும் அரசியல்வாதிகள், மக்களின் ஆசியை ஒரு பொருட்டா கருதுவரா, ஹாரிஸ்!
கே.ஜே.செல்வராஜ், கோத்தகிரி: 'பதினொரு நாட்களில் பணம் இரட்டிப்பாகும்...' என்ற விளம்பரத்தை நம்பி, புனேயில், 75 வயது மருத்துவர் ஒருவர், 12 கோடி ரூபாயை பறிகொடுத்துள்ளாரே...
'இத்தகைய விளம்பரங்களை நம்பி ஏமாறாதீர்கள்...' என, வங்கிகளும், போலீசாரும் காட்டுக்கத்தலாய் கத்தினாலும், யார் காதிலும் விழுவதில்லை என்பது வெட்கக்கேடு. படித்தவர்களே இப்படி ஏமாந்து போகின்றனர் எனில், அப்பாவி மக்கள் நிலையை என்னவென்று சொல்வது!

