PUBLISHED ON : ஏப் 26, 2026

பா - கே
'மணி... இன்று மாலை, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐ.பி.எல்., கிரிக்கெட் மேட்ச் பார்க்கப் போறேன். மதியமே கிளம்பிடுவேன். என் மொபைல் போனையும், 'ஸ்விட்ச் ஆப்' செய்து வைத்து விடுவேன். மாமி போன் செய்தால், சொல்லிடு...' என்றார், லென்ஸ் மாமா.
'மாமா... அந்த மேட்சை, 'டிவி'யில் பார்த்தால் போதாதா? கூட்ட நெரிசலில் சிக்கி, கஷ்டப்பட்டு பார்க்கணுமா?' என்றேன், நான்.
'நேரில் பார்ப்பதில் கிடைக்கும், 'த்ரில்' 'டிவி'யில் பார்த்தால் கிடைக்குமா? கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில், ஆட்டம், பாட்டத்துடன் பார்க்கும் சுவாரஸ்யம் தனி...' என்றார், மாமா.
'இவரை திருத்த முடியாது. சின்ன பசங்களோடு சேர்ந்து, விசிலடித்தபடி பார்த்தால் தான் மாமாவுக்கு திருப்தி...' என்று நினைத்து விட்டு விட்டேன்.
'அப்பப்பா... கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பித்து விட்டாலே, தீபாவளி வந்துவிட்டது போல துள்றாங்கப்பா... அப்படி என்ன தான் இருக்கிறதோ இந்த விளையாட்டில்...' என்று அலுத்துக் கொண்டார், 'திண்ணை' நாராயணன்.
'ஓய், நாணா, கிரிக்கெட் பற்றி உமக்கு தெரிந்தது அவ்வளவு தான். பிரதமர் முதல் உள்ளூர் பிரபலம் வரை, பைனல் மேட்சை நேரில் சென்று, பார்ப்பதை, 'டிவி'யில் காட்டுவரே... மறந்து விட்டீரா? அது ஒரு துள்ளாட்டமான விளையாட்டுயா. அதுமட்டுமல்ல, கிரிக்கெட் வீரர்களுக்கு இருக்கும் செல்வாக்கும், புகழும் வேற, 'லெவல்!'
'மேலும், கிரிக்கெட் வீரர்கள் சம்பாதிப்பதை போல், வேறு எந்த விளையாட்டு வீரரும் சம்பாதிக்க முடியாது...' என்றார், லென்ஸ் மாமா.
'அதெல்லாம் போட்டியில், கலந்து கொள்ளும் வரை தான். 'ரிட்டையர்' ஆகிவிட்டால், எல்லாம் முடிந்தது...' என்றார், நாராயணன்.
'நீர் எந்த காலத்தில் இருக்கிறீர்... அவர்கள் வாழ்நாள் முழுவதும் பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டும். சொல்கிறேன், கேட்டுக்க...' என்று ஆரம்பித்தார், லென்ஸ் மாமா:
பிரபல, 'பிராண்டு' தயாரிப்புகளுக்கு, விளம்பர மாடலாக மற்றும் விளம்பர துாதுவர்களாக இருக்கும் நம் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சம்பாதிக்கும் தொகையை கேட்டால், அசந்துடுவீங்க.
இந்தியாவில், ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகள் துவங்கிய பின், இவர்கள் நடமாடும் ராஜாக்கள் ஆகிவிட்டனர். இவர்களுடைய மதிப்பு, நம் பழைய சமஸ்தானங்களின் ராஜாக்களிடம் கூட இருந்திருக்காது.
விளம்பர உலகில், இன்று, இந்திய கிரிக்கெட் வீரர்கள், மற்ற விளையாட்டு வீரர்களை விட, முன்னணியில் உள்ளனர்.
விளம்பர படங்களில் நடிக்க, ஆண்டுக்கு, 250 முதல் 300 கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டுகிறார், பிரபல கிரிக்கெட் வீரர், விராட் கோலி.
இவருக்கு, சமூக வலைதளம் மூலம் மட்டும் கிடைக்கும் வருமானம், ஒரு பதிவுக்கு, 8 முதல் 11 கோடி ரூபாய்.
அடுத்து, சமூக வலைதளங்களில் மிகவும் நம்பிக்கைக்கு உரிய முகமாக உள்ளவர், நட்சத்திர வீரரான, எம்.எஸ்.தோனி. விளம்பர உலகில் இவருக்குள்ள செல்வாக்கின் மதிப்பு, ஆண்டுக்கு, 2,252 கோடி ரூபாய்.
தோனி, மாடலாக இருக்கும் பிரபல பிராண்டுகள், ரீபோக் ஷூ, டி.வி.எஸ்., மோட்டார், பூஸ்ட் சத்து பானம், பாரத் மேட்ரிமனி, டிரீம் 11 மற்றும் சில.
இரண்டாம் கட்ட வீரரான, ரோகித் சர்மா விளம்பர மாடலாக இருப்பதன் மூலம், ஆண்டுக்கு, 60 முதல் 70 கோடி வரை வருமானம் ஈட்டுகிறார்.
இவர், அடிடாஸ் ஷூ, 'ஓப்போ' மொபைல் போன், ஜியோ சினிமா, மேக்ஸ் லைப் இன்ஷுரன்ஸ் போன்ற, பிராண்டுகளுக்கு விளம்பர மாடலாக உள்ளார்.
* சுப்மன் கில் - விளம்பர மாடலாக ஆண்டுக்கு, 40 கோடி ரூபாய் சம்பாதிக்கிறார்
* ஹர்திக் பாண்டியா - கில்லட் ரேசர் மற்றும் சில பேஷன் பிராண்டுகளுக்கு மாடலாக இருந்து, ஆண்டுக்கு, 100 கோடி ரூபாய் வருமானம் ஈட்டுகிறார்
* ஜஸ்பிரித் பும்ரா - கடந்த ஆண்டு மட்டும் விளம்பர படங்களில் நடித்ததில், 90 முதல் 110 கோடி ரூபாய் வரை சம்பாதித்துள்ளார். இதுதவிர, முன்னணி வேகப்பந்து வீச்சாளராக இருப்பதால் கிடைக்கும் வசதிகள் மற்றும் சலுகைகள் தனி
* ஸ்ரேயாஸ் ஐயர் - ஆண்டுக்கு, 70 முதல் 85 கோடி ரூபாய் வருமானம்
* ரவீந்திர ஜடேஜா - ஆண்டுக்கு, 40 முதல் 50 கோடி ரூபாய் வருமானம்
* முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் - ஆண்டுக்கு, 1,250 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிகர மதிப்பு கொண்டுள்ளார்.
தங்கள் உற்பத்தி பொருளுக்கு, நட்சத்திர வீரர்கள் விளம்பரம் செய்வதால், மக்களை விரைவில் சென்றடையும் என்ற அடிப்படையில், நிறுவனங்கள் மத்தியில் இவர்கள் மதிப்பு உயர்ந்து, வருமானமும் பெருகுகிறது. இருதரப்பினரும் லாபம் ஈட்டுகின்றனர்.
இன்னொரு கூடுதல் தகவல், கிரிக்கெட் முன்னாள் கேப்டன் தோனியிடம், தனி ஜெட் விமானம் உள்ளது.
நாணா... கிரிக்கெட் விளையாட்டுக்கும், வீரர்களுக்கும் எந்த அளவுக்கு புகழும், மதிப்பும் உள்ளது என்று இப்போதாவது தெரிந்து கொண்டீரா? என்று கூறி முடித்தார், லென்ஸ் மாமா.
இவ்வளவு நேரம் வாய் பிளந்து கேட்டுக் கொண்டிருந்த நாராயணன், அதிர்ந்து, சிலையாகி அமர்ந்திருந்தார்.
கடிகாரத்தை பார்த்து, 'ஐயயோ... நேரம் ஆகிவிட்டது...' என்று கூறியபடி, அவசர அவசரமாக கிளம்பினார், லென்ஸ் மாமா.
ப
வங்கி ஒன்றுக்கு வந்தார், ஒருவர். அவர், 'செக்' ஒன்றை, கவுன்டரில் இருந்த வங்கி ஊழியரிடம் கொடுத்தார். உடனே, அந்த, 'செக்'கை, சோதித்துப் பார்த்தார்.
அந்த கையெழுத்தில் கொஞ்சம் வித்தியாசம் இருந்தது போல் இருந்தது.
உடனே, 'கையெழுத்தில் கொஞ்சம் வித்தியாசம் இருக்குங்க. அதனாலே பணம் தர முடியாது. உங்களுக்கு தெரிந்தவர்கள் யாராவது, இன்னார் தான் நீங்கள் என்று, உங்களை அடையாளம் காட்டுவதாக இருந்தால் சொல்லுங்கள். அதை நம்பி பணம் கொடுக்கிறோம்...' என்றார், வங்கி ஊழியர்.
உடனே, அந்த, 'செக்'கை கொண்டு வந்த நபர், திரும்பி பார்த்தார். துாரத்தில், கவுன்டருக்கு பக்கத்தில் போலீஸ்காரர் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.
'அந்த போலீஸ்காரருக்கு என்னைத் தெரியுங்க...' என்றார், அந்நபர்.
இங்கே இருந்து கொண்டே, அந்த போலீஸ்காரரிடம், 'என்னை தெரியுமா?' என்று கேட்டார், வந்தவர்.
அவரும், 'ஆமாம்!' என்று தலையை ஆட்ட, பணத்தை கொடுத்து விட்டார், வங்கி ஊழியர்.
இவர் போன பின், அந்தப் போலீஸ்காரர் பக்கத்தில் வந்தவுடன், 'அவரை எப்படி உங்களுக்கு தெரியும்?' என்றார், அந்த ஊழியர்.
'வேறு ஒண்ணும் இல்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன் போலி, 'செக்'கை கொடுத்து, பணம் வாங்கியதற்காக, அரஸ்ட் ஆகி, ஆறு மாதம் அந்த ஆள் ஜெயிலில் இருந்தார். அப்போது தான் அவரை தெரியும்...' என்றார், போலீஸ்காரர்.
'ஙே' என்று விழித்தார், வங்கி ஊழியர்.
எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.
