தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திரை நட்சத்திரங்களுடன் நந்தவன நாட்கள்! (4)

திரை நட்சத்திரங்களுடன் நந்தவன நாட்கள்! (4)

திரை நட்சத்திரங்களுடன் நந்தவன நாட்கள்! (4)


PUBLISHED ON : ஏப் 26, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 26, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'தாய்' வார இதழில் பணிபுரிந்தவரும், பத்திரிகையாளருமான பிரபு என்ற பிரபாகரன் தான் சந்தித்து பேட்டியெடுத்த திரை நட்சத்திரங்களுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்:

பொதுவாக நான் சினிமா செய்திகள் எழுதுவது அலுவலகத்தில் பலருக்கும் பிடிக்கவில்லை. ஆனால், 'தாய்' இதழின் ஆசிரியர், வலம்புரிஜான் நான் தந்திருந்த, அம்மா படப்பிடிப்பு செய்தியை, சிறப்பு கட்டுரை என, அவரே தலைப்பு போட்டு, தட்டச்சு செய்ய கொடுத்து விட்டார். இதழில், இந்த செய்தி வந்ததும், நன்றிக்கடிதம் அனுப்பினார், படத்தின் தயாரிப்பாளர், ஏவி.எம்.சரவணன். அது, வலம்புரிஜானுக்கு ரொம்ப பிடித்து விட்டது.

ஆசிரியர், வலம்புரிஜான் பெரும்பாலும் கைப்பட எழுதுவது அரிது. மடை திறந்த வெள்ளம் போல அவர் சொல்லச் சொல்ல நாங்கள் எழுதுவோம். இதழில் வெளியான, 'பைரவி பதில்கள்' பகுதிக்காக வாசகர்களிடமிருந்து வந்த கேள்விகளை நாங்கள் படிப்போம்; அவர் பதில் சொல்வார். நாவில், சரஸ்வதி நர்த்தனம் என்பரே, அப்படி பதில் வரும். நாங்கள் அதை எழுதிக் கொள்வோம். அவரின் வேகத்திற்கு நம்மால் எழுத முடியாது. இடையிடையே எங்களிடமும் கேள்விகள் கேட்க சொல்வார். அப்படி ஒருமுறை, 'சினிமா சார்ந்து ஏதாவது கேள்வி கேளு...' என்றார்.

அன்று நான் கேட்ட கேள்வி, விஜயகாந்த் குறித்து! ' சட்டம் ஒரு இருட்டறை சினிமாவுக்கு பிறகு பெரிதாக ஏதும், அவர் நடிக்கவில்லையே... என்ன காரணம்?' எனக் கேட்டேன்.

'தோல்வி எதுவும் நிரந்தரமில்லை. கருப்பு தங்கமான அவர், இப்போது வைரம் போல பட்டை தீட்டப்பட்டு வருகிறார். நிச்சயம் அவர் வெற்றியைத் தொடுவார்...' என்று பதிலளித்தார், வலம்புரி ஜான்.

சட்டம் ஒரு இருட்டறை படத்துக்குப் பின், நெஞ்சில் துணிவிருந்தால், நீதி பிழைத்தது, சாதிக்கொரு நீதி, சட்டம் சிரிக்கிறது, ஆட்டோ ராஜா மற்றும் பட்டணத்து ராஜாக்கள் என, விஜயகாந்த் நடித்த படங்கள் வரிசையாக தோல்வி அடைந்திருந்த நேரம் அது.

அந்தவார, 'பைரவி பதில்கள்' அச்சானதும், 'தாய்' இதழை, விஜயகாந்திடம் நேரில் போய் கொடுத்ததும் அவருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவரைவிட, அவரது நண்பர், இப்ராகிம் ராவுத்தருக்கு பெரிய சந்தோஷம். எம்.ஜி.ஆர்., நடத்தும் இதழில் இப்படி செய்தி வந்தது, சோர்ந்திருந்த அவர்களுக்கு உற்சாகத்தைத் தந்திருக்க வேண்டும்.

கவிஞரும், எழுத்தாளருமான, க.நா.சுப்ரமணியம் அப்போது, 'இலக்கியவாதிகளுக்கு, 'டாக்டர்' பட்டம் தருவேன்...' என்று சொல்லி இருந்தார். ஆராய்ச்சி படிப்பு படிக்காமலே, 'டாக்டர்' பட்டம் பெறலாமா? இதுகுறித்து, எட்டு பேரை சந்தித்து, அவர்களது கருத்துகளை கேட்டு, உடனடியாக செய்தியாக்கி தரவேண்டும் என்று சொல்லி விட்டார், ஆசிரியர்.

நானும், புகைப்படக்காரரும் சைக்கிளில் நேரடியாக பச்சையப்பன் கல்லுாரி போய், பேராசிரியர் பெரியார்தாசனை பார்த்து, கருத்து கேட்டோம். மேலும், இரண்டு பேராசிரியர்களை அவரே பரிந்துரைத்தார். அடுத்து, உயர்நீதிமன்றம் சென்று இரு வழக்கறிஞர்கள் மற்றும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இரு பேராசிரியர்களையும் பார்த்துவிட்டு, சோழா ஹோட்டல் அருகே வரும்போது இரவு மணி 8:00.

அங்குள்ள, ரஷ்யன் கலாசார கழகம் எதிரே கஸ்துாரிரங்கன் சாலையில், ஒரு வீட்டின் கதவில், 'டாக்டர் கைலாசம்' என, போர்டு பார்த்து கதவைத் தட்டும் போது மணி இரவு, 8:30. லுங்கி, பனியன் அணிந்தபடி, கதவைத் திறந்தார், ஒரு பெரியவர். அவரிடம், 'போலி டாக்டர் பட்டம் பற்றி என்ன நினைக்கிறீங்க?' எனக் கேட்க, அவர் கோபத்தில் கதவை ஓங்கி அடித்து மூடிவிட்டு, உள்ளே போய் விட்டார்.

'பத்து நிமிடம் பார்ப்போம்... இல்லைன்னா புறப்படலாம்'ன்னு தீர்மானிச்சோம். 10 நிமிடத்திற்கு பின், போர்டிகோவில் வெளிச்சம் பரவியது. சற்று நேரத்தில், கதவைத் திறந்து, 'வாங்க உள்ளே...' என்றார்.

ஹாலில் அமர்ந்ததும், 'சார் நீங்க...' என கேட்க, 'நான் தான் கைலாசம்...' என்றவர், 'இனிமே எங்கே யாரைப் பார்க்கப் போனாலும், 'அப்பாயின்ட்மென்ட்' வாங்கிட்டு போக கத்துக்குங்க. இஷ்டத்துக்கு வந்து இப்படி கதவைத் தட்டுறது தப்பு...' என்றார். அவர், நீதியரசர், கைலாசம் என, அப்போது தான் தெரிந்தது.

அவரது மனைவி, சவுந்தரா கைலாசம். மரபுக்கவிதை எழுதுவதிலும், ஆன்மிக சொற்பொழிவு ஆற்றுவதிலும் ஈடுபாடு கொண்டவர் என்பது கூடுதல் தகவல்.

'போலி டாக்டர் பட்டம் தருவது, உண்மையான முனைவர்களை அசிங்கப்படுத்தும் செயல்...' என்று தன் கருத்தை தெரிவித்தார், நீதியரசர். காங்கிரஸ் தலைவர், ப.சிதம்பரத்தின் மாமனார் தான், நீதிபதி கைலாசம் என, பின்னர் அறிந்து கொண்டேன்.

'அதிகா லை, 6:00 மணிக்கே அலுவலகம் வந்துருங்க. முக்கியமான செய்தி சேகரிக்க போக வேண்டும்...' என்று கூறி சென்றார், ஆசிரியர். அதிகாலை எங்களை அழைத்து செல்ல, அரசு கார் காத்திருந்தது. காரில், 'குடிநீர் வடிகால் வாரியம்' என, பொறித்திருந்தது. எங்களை அழைத்து செல்ல வந்திருந்தவர், பி.ஆர்.ஓ., நடராஜன். அவர் தான் பின்னாளில் தமிழக அரசியலில், சசிகலா நடராஜன் என, அறியப்பட்டவர்.

எங்களை அழைத்து போய், சென்னை புழல் ஏரிக்கரையில் உட்கார வைத்து விட்டார். மழை வரவேண்டி, குன்னக்குடி வைத்தியநாதன் வயலின் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெற இருந்தது. முதலமைச்சரே இதில் கலந்துக்க வரப்போவதாக சொன்னார், பி.ஆர்.ஓ., நடராஜன்.

'மழை வரவழைக்க வயலின் இசையா?' எனக்கு ஆச்சரியமாக இருந்தது. முதல்வர் வருவதற்கு முன், குன்னக்குடி வைத்தியநாதனிடம் பேசினேன்...

'அமிர்தவர்ஷினி ராகம் ஒரு தெய்வீக ராகம். முத்துசாமி தீட்சிதர் இந்த ராகத்தில் பாடி, மழை வரவழைத்திருக்காரு. ஏன், இலங்கையை, அனுமன் தன் வாலால் தீயிட்டு கொளுத்திய போது, ராவணன் தன் வீணையில் அமிர்தவர்ஷினி ராகம் வாசித்து மழை வரவழைத்தார் என்று கேள்விப்பட்டதில்லையா?' என்றார்.

அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்., வந்து விட நிகழ்ச்சி, ஹோமத்துடன் துவங்கியது. குன்னக்குடி வைத்தியநாதன் வயலின் வாசிப்பில் அவருக்கு நிகர் அவரே. அந்த காலை நேரத்தில் மழை வர வேண்டி, அமிர்தவர்ஷினி ராகத்தில் அவரின் வாசிப்பு அற்புதமாக இருந்தது. முதல்வர் எழுந்து நின்று கைதட்டினார்.

மறுநாள் இந்த நிகழ்ச்சியை கிண்டல் செய்தவர்களும் உண்டு.

அமிர்தவர்ஷினி ராகம் வாசித்த அந்த தருணம் மழை வரவில்லை. ஆனால், இரண்டு நாட்கள் கழித்து இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.



- தொடரும்.ஆர்.பிரபாகரன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us