
முன்கதைச் சுருக்கம்: கதாநாயகி தீபா, தன் காதலன் திலகனுடன் கோவிலுக்கு சென்றாள். திலகனை, தன் அப்பாவிடம் அறிமுகப்படுத்தி, அவனையே திருமணம் செய்து கொள்ள அனுமதி வாங்கி விடுவதாக உறுதி அளித்தாள், தீபா.
பிசினஸ் விஷயமாக பெங்களூரு சென்ற, தீபாவின் அப்பா ஞானசேகரன், சென்னை திரும்பியதும், நேராக, அலுவலகம் போய்விட்டு, வீட்டுக்கு வருவதாக தகவல் அனுப்பினார்.
அப்பா வந்த பின், திலகன் பற்றி பேசுவதற்காக, காத்துக்கொண்டிருந்தாள், தீபா.
நகங்களைக் கடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள், தீபா.
ஹாலின் கூரையில் தொங்கிய சரவிளக்கு, அதன் கண்ணாடி கோளங்கள் வழியே பல வண்ணங்களை சுவர்களிலும், பளிங்கு தரையிலும் சிதறவிட்டிருந்தது. அந்த வண்ணங்கள், தீபாவின் உயர்ரக இரவாடையிலும் சில வடிவமைப்புகளை பதித்திருந்தன.
எதிரில், 'டிவி'யில், ஆங்கில சேனலில் யார் யாரோ, எது எதையோ போட்டிக்காக சமைத்து கொண்டிருந்தனர். தீபாவின் விழிகளில் அந்தக் காட்சிகள் விழுந்து, கவனமின்றி நழுவிக் கொண்டிருந்தன.
''தீபா,'' என, மூன்றாம் முறை அழைக்கப்பட்டதும் தான் தீபாவுக்கு உறைத்து, நிமிர்ந்தாள்.
''புருஷன் வீட்டுக்குப் போறதுக்கு சமையல் கத்துக்கறியா, தீபா?'' என்று சின்னச் சிரிப்புடன் கேட்டாள், அவள் அம்மா மஞ்சுளா.
ஹாலிலிருந்து உள்ளறைக்கு போகும் வாசல் அருகில் அவள் கதவில் சாய்ந்து நின்றிருந்தாள். ஓவியர்கள் விரும்பும் ஒயிலான தோற்றம். திருத்திய புருவங்களும், அடர்ந்த கூந்தலும், செதுக்கியது போன்ற முகமும், மிக நேர்த்தியான உடலமைப்பும், அவள், 47 வயதைக் கடந்து விட்டவள் என்பதை மறுத்தன. சர விளக்கின் வண்ணஜாலம் அவள் முகத்திலும் விளையாடுவதை கவனிக்க தவறவில்லை, தீபா.
சொல்லப் போனால், தன் அம்மாவின் அழகை பொறாமையோடு ரசிக்கும் ஒரு மகளாகவே இருந்தாள், தீபா.
''என்ன பதிலே காணும்?'' மஞ்சுளாவின் குரலிலும் இளமை இருந்தது.
''நான் ஏம்மா சமையல் கத்துக்கணும்? நீ என்ன வீட்ல சமைச்சிட்டா இருக்க? சைவத்துக்கு ஒண்ணு, அசைவத்துக்கு ஒண்ணுன்னு, ரெண்டு சமையல்காரங்க இங்க இல்லையா? என் வீட்லேயும் அப்படி வெச்சுக்க முடியாதா?''
நெருங்கி வந்து, தீபாவின் அருகில் அமர்ந்தாள், மஞ்சுளா.
''நீ கேட்டா உங்கப்பா ஒவ்வொரு நாட்டுலேர்ந்தும் ஒரு, 'ஸ்பெஷலிஸ்ட்'டைக் கொண்டு வந்து உன் சமையலறையில எறக்கிடுவாரு. அது எனக்கும் தெரியும். மணி 11:00 ஆகுது. இன்னும் துாங்காம ஹால்ல உக்காந்திருக்கியேன்னு கேட்டேன்.''
''அப்பா வர்றதுக்காக காத்திட்டிருக்கேன்,'' என, கொட்டாவியை மென்றாள், தீபா.
''அப்பாவுக்கு போன் பண்ணி, 'லேட்' ஆகுமான்னு கேக்கறது தான!''
''பெங்களூர்லேர்ந்து ஈவினிங்கே வந்துட்டாரு. ஆபீஸ்ல முக்கியமான, 'மீட்டிங், லேட்' ஆகும்ன்னு, 'மெசேஜ்' பண்ணிட்டாரு. ஆனா, அப்பாவை நாளைக்கு அறிமுகப் படுத்தறேன்னு திலகனிடம் சொல்லிட்டேன். அப்பாவோட சம்மதம் வாங்கணுமில்ல?''
''ஏய், நீ அந்த, திலகன் விஷயத்துல ரொம்ப அவசரப் படறயோன்னு தோணுது. அவன் இன்னும் படிப்பே முடிக்கல.''
''பைனல் செமஸ்டர்மா. அவன் நம்ம கம்பெனில தான், 'இன்டர்ன்ஷிப்' பண்ணான். அவனுக்கு கம்பெனி ரொம்ப பிடிச்சுப் போச்சு.''
''பிடிக்காதா, பின்ன? கோடி கோடியா உங்கப்பா வளர்த்து வெச்சிருக்கற கம்பெனியாச்சே! அவங்கப்பா மாதிரி, கவர்மென்ட் பெஞ்சை தேய்ச்சிட்டு உங்கப்பாவும் உக்காந்திருந்தா, அவன் உன்ன, 'லவ்' பண்ணிருப்பானா யோசி.''
''உனக்கு ஏம்மா அவனைப் பிடிக்கல? திலகன்கிட்ட மேல வரணும்ன்னு ஒரு துடிப்பு இருக்கும்மா. அவன் வளரும் போது, நம்ம கம்பெனியையும் மேல மேல வளர்த்துக் குடுப்பான்.
''உங்கப்பாவும் சாதாரண டைலரா இருந்தவர் தான!''
''அப்பா உன் அழகப் பாத்து மயங்கி, 'லவ்' சொன்னப்போ, சந்தோஷமாத்தான இருந்தது? கல்யாணத்துக்கப்புறம் தான் நம்ம, 'பிசினஸ்' இப்படி ராட்சச தனமா வளர்ந்தது. 'அது மஞ்சுளாவோட அதிர்ஷ்டம்'ன்னு எத்தனை தடவை பெருமை பீத்திட்டிருக்காரு, அப்பா. அந்த மாதிரி திலகனும் சொல்லுவான்மா.''
மஞ்சுளாவின் முகம் சுருங்கியது.
''அடிக்கடி உங்கப்பா பெங்களூரு போறாரே, ஏன்னு கேட்டியா, தீபா?'' மஞ்சுளாவின் குரலில் சின்னக் கசப்பு இருந்தது.
''சொந்த பிசினஸ்ன்னு இருந்தா, டிராவல் அதிகம் இருக்கும். நீ ஏன் கேக்கறே?''
''எனக்குக் கொஞ்ச நாளாவே ஒரு சந்தேகம்.''
''என்னன்னு?''
''ஒருவேளை அவருக்கு இன்னொரு, 'செட்-அப்' இருக்கோன்னு,'' என சொல்லி, மகளின் முகத்தைப் பார்க்காமல் தவிர்த்தாள், மஞ்சுளா.
''சீச்சீ, வாயக்கழுவும்மா. அப்பாவை போய் சந்தேகப்பட்டுக்கிட்டு? உன்னத் தொரத்தித் தொரத்தி காதலிச்சவர். இன்னிக்கும் உன் மேல ஒரு மயக்கத்துல இருக்கறவரு. அவருக்கு இங்க என்ன குறைன்னு வேறொருத்தியைத் தேடிப் போகணும்? எதனால இந்த சந்தேகம்?''
பதில் சொல்லாமல், தன் நகங்களைச் சற்று நேரம் ஆராய்ந்து கொண்டிருந்தாள், மஞ்சுளா.
''உள் மனசு சொல்லுதுன்னு வெச்சுக்க.''
என்ன நினைத்துக் கொண்டாளோ, ''எனக்குத் துாக்கம் வருது,'' என்று சடாரென்று எழுந்து போய்விட்டாள்.
இ மைகளை அழுத்தும் துாக்கத்தை எதிர்த்து போராடி, சோபாவிலேயே ஒருக்களித்து சாய்ந்து கொண்டாள், தீபா. அம்மாவுக்கு ஏன் அப்படி ஒரு சந்தேகம் வந்தது? அப்பாவிடம் தான் பார்க்காத எந்த மாற்றத்தை அம்மா பார்த்தாள்? தீபாவுக்குப் புரியவில்லை.
கண்கள் மொபைல் போனை மேய்ந்தன. நேரம், 11:30 மணியை நெருங்கிக் கொண்டிருந்தது.
முக்கியமான, 'மீட்டிங்' என்றாலும் கூட, அப்பா வர இவ்வளவு தாமதமாகுமென்று நினைத்திருக்கவில்லை, தீபா. கவனத்தை ஒரு நிலையில் வைத்திருப்பதே பெரும்பாடாக இருந்தது.
இனிமேலும் விழித்திருக்க முடியாது என்று அவள் கொட்டாவிகளுடன் எழுந்த போது, இரும்பு கேட்கள் திறக்கப்படும் ஓசை கேட்டது. அதைத் தொடர்ந்து அப்பாவின் கார் வீட்டுக்குள் நுழையும் ஒலி கேட்டதும், தீபாவுக்கு மீண்டும் சுறுசுறுப்பு வந்தது.
தொலைக்காட்சியை அணைத்தாள்.
ஓட்டுநர், அப்பாவின் பிசினஸ் பெட்டியை கொண்டு வந்து, டீப்பாய் மீது வைக்க, பின்னாலேயே நுழைந்தார், ஞானசேகரன்.
தீபா விழித்திருப்பதைப் பார்த்ததும், புருவங்களை உயர்த்தினார், ஞானசேகரன்.
அவர் முகத்தை பார்த்ததும் சற்றே திடுக்கிட்டாள், தீபா.
எப்போதும் போல் உற்சாகமாக இல்லாமல், மிகவும் களைத்து போனவராக, கசங்கிய சட்டையுடன் அவரை பார்த்தது ஆச்சரியமாக இருந்தது. எதையோ இழந்தவர் போல் அவர் உடல் மொழியே பொலிவிழந்து இருந்தது. ஆனாலும், அவளுக்காக அவர் தன் முகத்தில் வலிய ஒரு புன்னகையை அணிந்து கொண்டதை கவனித்தாள், தீபா.
இந்நிலையில் அவரிடம் தான் நினைத்ததை பேசுவது நியாயமா என்ற தயக்கம் அவளை தடுமாற வைத்தது.
''என்ன கண்ணு, இன்னும் துாங்காம முழிச்சிட்டிருக்க?''
அவர் குரலில் பாசத்தையும், நெருக்கத்தையும் குழைத்து கேட்டாலும், கண்கள் களைப்பாகவே இருந்தன.
''அப்பா, ரொம்ப, 'டயர்டா' இருக்கீங்களா?'' என அவர் கையை அணைத்துக் கொண்டு, கேட்டாள், தீபா.
''ஒண்ணுமில்லேம்மா. மீட்டிங் கொஞ்சம் காரசாரமா போயிருச்சு. பிசினஸ்ல இருந்தா எல்லாத்தையும் சந்திச்சுத்தான ஆகணும்? நீ சொல்லு. எனக்காகவா, 'வெயிட்' பண்ணிட்டிருக்க?''
''ஆமாப்பா. சாப்ட்டு வாங்க. மூடு இருந்தா பேசலாம்.''
''என்னம்மா விஷயம்?''
''நீங்க முதல்ல டிரஸ்ஸெல்லாம் மாத்திக்கிட்டு, 'ரிலாக்ஸ் 'ஆகுங்க. அப்புறம் சொல்றேன்.''
''எனக்கு சாப்பாடு வேண்டாம், கண்ணு. துரைகிட்ட சொல்லிடு. 15 நிமிஷம் கழிச்சு என் ஸ்டடி ரூமுக்கு வா பேசலாம்,'' என்றபடி மாடிப்படிகளில் ஏறினார், ஞானசேகரன்.
இன்றைக்கு அப்பா இருக்கும் நிலையில் அவரிடம் சொல்லலாமா, வேண்டாமா? சொல்லாமல் விட்டால், நாளைக்கு திலகனை ஏமாற்ற வேண்டியிருக்குமே! கொஞ்சம் குழம்பினாலும், எடுத்த வேலையைத் தள்ளிப்போட வேண்டாமென்று முடிவு செய்தாள், தீபா.
எஜமானனுக்கு உணவு பரிமாற, துாங்காமல் காத்திருந்த துரையிடம் தகவல் கொடுத்து படியேறினாள். தீபா.
ஞானசேகரன் தன் பிரத்யேக அறையில் இருந்தார்.
சாய்வு நாற்காலியில் சரிந்து உட்கார்ந்திருந்தார். குளித்து பைஜாமா, ஜிப்பாவுக்கு மாறியிருந்தார். பொதுவாக இந்த அறையில் அவர் எப்போதுமே அவள் பார்வையில் கம்பீரமாகத் தோன்றுவாரே... இன்றைக்கு என்னாயிற்று? ஏன், தன்னைச் சுருக்கிக் கொண்டு, சற்று ஒடுங்கி உட்கார்ந்திருப்பது போல் தோன்றுகிறது?
'ஏசி' அப்போது தான் இயங்க ஆரம்பித்திருந்தது.
நாற்காலியை அவர் அருகில் இழுத்துப்போட்டு உட்கார்ந்தாள், தீபா.
''அப்பா, இப்ப பேசலாமா, நாளைக்கு பேசலாமா?''
''ஏன் டியர், எதுக்காக இப்படி தயங்கி தயங்கி முழுங்கற? என்ன வேணும், தைரியமா சொல்லேன். புது டிரஸ், புது புக்ஸ், காரை மாத்தணுமா? இல்ல பழைய காலேஜ் பிரண்ட்ஸோட வெளிநாட்டு, 'ட்ரிப்' ஏதாவது போகணுமா?''
தீபாவின் முகத்தில் வந்து விழுந்த முடிக்கற்றையை விரலால் சுண்டிக்கொண்டே கேட்ட, ஞானசேகரனின் குரலில் போலியான உற்சாகம் இருந்தது.
''ஏம்ப்பா, அதையெல்லாம் விட சீரியஸா கேக்கறதுக்கு என்கிட்ட எதுவும் இருக்காதுன்னு நினைச்சுட்டீங்களா?''
அவள் முகத்தில் விளையாடிய மெல்லிய வெட்கத்தை அவர் கவனித்தார்.
''நீயே சொல்லும்மா,'' என்றார்.
''அண்ணன் திடீர்ன்னு செத்துப் போனதும், ஆடிப் போனீங்களே... நம்ம கம்பெனிய பொறுப்பா, நம்பிக்கையா கவனிச்சுக்க இருந்தவனும் போயிட்டானேன்னு அடிக்கடி வருத்தப்பட்டீங்களே!''
''இப்ப எதுக்கும்மா உங்க அண்ணனை பத்தி ஞாபகப்படுத்தறே?''
அவர் முகத்தில் மெல்லிய வலி தெரிந்தது.
''இல்லப்பா. எனக்குத் தெரிஞ்ச ஒரு பையனைப் பத்திச் சொல்லலாமா?''
அவர் விரல்களை நீவிக் கொண்டே கேட்டாள், தீபா.
''கம்பெனி வேலைக்கு சிபாரிசா, இல்லாட்டி...'' என்று இழுத்தார், ஞானசேகரன்.
''முதல்ல நான் சொல்றத கேளுங்களேன்,'' என்று சிணுங்கியபடி, அவரை இன்னும் நெருங்கி உட்கார்ந்தாள், தீபா.
''பேரு திலகன். பேரே கம்பீரமா இருக்கு இல்ல? வயசு 27. பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன்ல கோல்டு மெடலிஸ்ட். இப்போ எம்.பி.ஏ., முடிக்கப் போறான். துடிப்பான பையன். அப்பாவுக்கு கவர்மென்ட் வேலை. அம்மா டியூஷன் டீச்சர். ரெண்டு தங்கைங்க இருக்காங்க. பிஸினஸ்ல பெரிசா எதையாவது சாதிக்கணும்ன்னு அவன்கிட்ட ஒரு வெறியிருக்கு.
''பார்த்தவுடனே, உங்களுக்கு அவனைப் பிடிக்கும். நம்ம கம்பெனில, 'இன்டர்ன்ஷிப்' பண்ணி, முத்துராமன் அங்கிள்கிட்ட நல்ல பேரு வாங்கியிருக்கான். நீங்க ஒரு தடவை அவனை சந்திச்சு பேசினீங்கன்னா உங்களுக்கே அவனைப்பத்தி இன்னும் நல்லா புரியும். நாளைக்கு நீங்க எப்போ, 'ப்ரீ'ன்னு சொல்லுங்க. கூட்டிட்டு வரேன்.''
''ஏய், ஏய்... 'பிரேக்' விடாம படபடன்னு பேசறே? எனக்கு இப்போ ஒரு விஷயம் தெளிவாத் தெரியணும். அந்த, திலகனப்பத்தி பேசும்போது, உன் முகம் ஏன் செவக்குது? நம்ம கம்பெனில அவனுக்கு ஒரு வேலை வாங்கித் தரணும்ன்னா, முத்துராமனை பார்த்தாலே போதும்ன்னு உனக்கே தெரியும். நானே பர்சனலா பார்க்கணும்ன்னு நீ சொல்றதப் பாத்தா!''
வெட்கப் புன்னகையுடன், ''நீங்க ரொம்ப ஷார்ப்புப்பா,'' என்றாள், தீபா.
''பேரென்ன சொன்னே?''
''திலகன்பா.''
''அவனை எப்ப பாக்க முடியும்ன்னு நாளைக்குச் சொல்றேன், கண்ணம்மா'' என்றார், ஞானசேகரன்.
அடுத்த, 24 மணி நேரத்துக்குள், விதி வேறு விதமாக விளையாடப் போகிறது என்பது தெரியாமல், சந்தோஷத்தில் அவர் கன்னத்தில் முத்தம் பதித்தாள், தீபா.
- தொடரும்.
சுபா