sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

எல்லாருக்கும் நல்லவர்!

/

எல்லாருக்கும் நல்லவர்!

எல்லாருக்கும் நல்லவர்!

எல்லாருக்கும் நல்லவர்!

1


PUBLISHED ON : ஜன 04, 2026

Google News

PUBLISHED ON : ஜன 04, 2026

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வந்தவர்களெல்லாம் வாயாறப் புகழ்ந்தனர். அது, சம்பிரதாயமான புகழ்ச்சியில்லை என்பதை நீர் தளும்பிய அவர்களுடைய கண்களே தெரிவித்தன. கீழ்நிலை ஊழியர்கள் முதல் உயர்நிலை அதிகாரிகள் வரை உடன் பணிபுரிந்தவர்கள், உறவினர்கள், அக்கம் பக்கத்து நண்பர்கள் என்று குழுமிவிட்ட, 100 பேருக்கும் மேலான அவர்கள், சோகம் தாங்காமல், மனம் வருந்தி கொண்டிருந்தனர்.

'இவர் எப்போதுமே, எல்லாருக்குமே நல்லவர், சார். யாருக்கும் எந்தக் கெடுதலையும் நினைச்சும் பார்த்ததில்லை. தவறுகளை மென்மையாக திருத்தி, எல்லார் அன்பையும் கவர்ந்தவர். இப்போது கூட, பாருங்க... யாருக்கும் எந்தத் தொந்தரவும் கொடுக்காமல், ஆஸ்பத்திரிக்கு கூட போகாமல், அமைதியா உயிர் பிரிந்திருக்கிறது. கொடுத்துவைத்த மனுஷன்...' என்று பரவலாக ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டனர்.

நிரந்தரமாக உறங்கிவிட்ட அந்த நல்ல உள்ளத்துக்காரர் பெயர், நித்தியானந்தம். மனைவி, இரு மகள்கள் என்ற ரத்த உறவுகளிடமிருந்தும், பிற பந்த பாசங்களிலிருந்தும் திடீரென்று விடுபட்டு விலகி விட்டவர். மகள்கள் திருமணமானவர்கள். தங்கள் குழந்தைகளால், நித்தியானந்தத்தை தாத்தாவாக்கி மகிழ்ந்தவர்கள் என்பது நிம்மதியான விஷயம்.

ஐம்பது ஆண்டுகள் கூடவே பழகி, இப்போது வெறுமையை, அமிர்தவல்லிக்கு துணையாக்கி விட்டு சென்ற, கணவர். அவர் காட்டிய அனுசரணை ஆரவாரமில்லாதது, உள்ளேயே துய்த்து மகிழத் தக்கது.

நினைவலைகள் புரண்டோடி வந்தன. அவற்றில் அவர் பிறரிடம் காட்டிய அன்பும், சகோதரத்துவமும் தான் அதிகம். பக்கத்து, 'ப்ளாட்'டில் ஒரு முதிய பெண்மணி தனித்து வாழ்ந்து வருகிறாள். ஒரே மகன். மனைவி, குழந்தைகள் என்று வெளிநாட்டில், 'செட்டில்' ஆகிவிட்டவன். அம்மாவுக்காக அவன் வாங்கிக் கொடுத்திருந்த அந்த, 'ப்ளாட்'டிற்கு, ஆண்டுக்கு ஒருதரம் வருவான்.

ஓரிரு மாதங்கள் அம்மாவை சில இடங்களுக்கு அழைத்துச் சென்று, மகிழ்விப்பான். பிறகு சென்று விடுவான். அந்தப் பெண்மணிக்கு நகரிலேயே வெவ்வேறு பகுதிகளில் நாலைந்து உறவினர்கள் இருக்கின்றனர். எப்போதாவது வந்து போய்க் கொண்டுதான் இருப்பர்.

ஆனாலும், நித்தியானந்தம் தான் அவளுக்குப் பெரிய ஆதரவு. எப்போது வெளியே போனாலும், அவளிடம், 'ஏதாவது வேண்டுமா, உங்களுக்கும் சேர்த்து வாங்கி வரட்டுமா?' என்று கேட்டு, அதேபோல வாங்கி வரவும் செய்வார்.

இது மட்டுமல்ல, அந்த, 'அபார்ட்மென்ட்'டில் எந்தப் பொது வேலையானாலும் தானே இழுத்து போட்டு செய்வார். குழாய் பழுதிலிருந்து, ஒட்டுமொத்த குடியிருப்புக்கும் பெயின்ட் அடிப்பது வரை எல்லா வேலைகளுக்கும் யோசனை, திட்டம், வேலையாள் தேர்வு, செலவுப் பகிர்மானம் என்று எந்த தடங்கலும், யாருடைய அனாவசிய இடையூறோ அல்லது சந்தேகமோ இன்றி கச்சிதமாக இவரால் நடந்தேறும்.

ஒருநாளில் நாலைந்து பேருடனாவது தொலைபேசியில் பேசிக் கொண்டிருப்பார், நித்தியானந்தம். அந்த உரையாடலில் அவர் ஆறுதல் சொல்வது தான் அதிகமாக இருக்கும். யாருக்காவது, எந்த வகையிலாவது உதவிக் கொண்டே இருப்பார்.

மருமகன்கள் இருவரும் அடுத்தடுத்து ஆக வேண்டியவற்றை முடுக்கி விட்டுக் கொண்டிருந்தனர். அமிர்தவல்லி உறைந்து போயிருந்தாள். வந்தவர்களெல்லாம் சம்பிரதாயமாக துக்கம் விசாரித்து, சந்தடியில்லாமல் நழுவிக் கொண்டிருந்தனர்.

எல்லாம் முடிந்தது. மூத்த மருமகன், வித்யாதரன், மனைவி பைரவியிடம் மெல்ல விசாரித்தான்.

''நான் கேட்கிறேன் என்று கோபிக்காதே. அரசாங்க ரீதியான, சட்ட ரீதியான நடவடிக்கைகளை அடுத்தடுத்து தொடங்க வேண்டுமே! உன் அப்பா, அம்மாவிடம் சொத்து பத்து பற்றி ஏதேனும் சொல்லியிருக்கிறாராமா?''

விரக்தியுடன் கணவனைப் பார்த்தாள், பைரவி. அவன் கேட்பதில் நியாயம் இருக்கத்தான் செய்தது. துக்கத் தணல் தணியும் முன்பாகவே இப்படிக் கேட்கிறானே என்ற சூழ்நிலைக் கோபம் எழுந்தாலும், அவையும் அடுத்து கட்டாயமாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தானே!

தங்கை, பிரவீணாவும், அவள் கணவன், சுரேஷும் அங்கே வந்தனர். அவர்களிடம் தாங்கள் பேசிக் கொண்டிருந்ததை தெரிவித்தாள், பைரவி.

''எனக்கு சந்தேகமாக இருக்கிறது. அப்பா விபரமாக அம்மாவிடம் சொல்லியிருப்பாரா என்று,'' என, தன் சந்தேகத்தைச் சொன்னாள், பிரவீணா.

''என் யோசனையும் அதுதான். இரண்டு மாதங்களுக்கு முன், அம்மா - அப்பாவை பார்க்க நான் வந்திருந்தேன். அப்போது, ஒரு ஊகமாக அம்மாவிடம் கேட்டேன். அதற்கு அம்மா விவரித்தது தான் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அந்த, 'ப்ளாஷ் பேக்'கை உங்களுக்கும் சொல்கிறேன்,'' என்று அந்த சம்பவத்தை சொற்களால் காட்சிப்படுத்தினாள், பைரவி...

'அ மிர்தவல்லி...' மனைவியை அழைத்தார், நித்யானந்தம்.

'உனக்கு ஒரு, 'டெக்னிக்' சொல்லித் தர்றேன். உன்னோட மொபைல் இருக்கு இல்லே. அதிலே, 'ஸ்க்ரீன் லாக்' பண்ணிக்கோ. அப்பத்தான் வேற யாராலேயும் அதைத் திறந்து பார்க்க முடியாது. உன் தகவல்களை திருட முடியாது...' என்றார்.

'எனக்கு அதெல்லாம் ஒண்ணும் வேண்டாங்க. அதான் நீங்க கூடவே இருக்கீங்களே. எதுக்கு இந்த, 'டெக்னாலஜி'யும், தொல்லையும்?' என்று சற்றே கோபத்துடன் கேட்டாள், அமிர்தவல்லி.

'நான் இருக்கேன், சரிதான். ஆனா நீயும் தெரிஞ்சுக்க வேண்டாமா? இந்த மொபைல் மட்டுமல்ல, என்னோட, 'லேப்-டாப்'ல நான் என்னவெல்லாம், 'ஸ்டோர்' பண்ணி வெச்சிருக்கேன்னு உனக்கு விலாவரியா சொல்றேன், கேட்டுக்கோ...' என, அவர் மேலும் வற்புறுத்தினார்.

'அட, வேண்டாம், விடுங்க. எனக்கு இதெல்லாம் புரியாது...' என்று அவள் மறுத்ததில், பாரம்பரிய, அமங்கல உணர்வு சார்ந்த பயம் தெரிந்தது. குரலில் நடுக்கம். கண்களில் நீரும் தளும்பி விட்டது.

'அட, என்னம்மா நீ, ஒரு விஷயம் தெரிஞ்சுக்கோன்னு தானே நான் சொல்றேன். புது விஷயத்தைத் தெரிஞ்சுக்க மாட்டேன்னு அடம் பிடிக்கறதும் அறியாமை தான். இப்படி நான் சொல்லிக் கொடுத்து, நீயும் தெரிஞ்சுகிட்டதால எனக்கு ஏதேனும் ஆகிடும்ன்னு நீ ஏன் அச்சானியமா பயப்படறே?'

அவர் என்னவோ சாதாரணமாகத்தான் சொன்னார். ஆனால், அமிர்தவல்லிக்கு வயிற்றைக் கலக்கியது.

'சும்மா இருங்க...' என்று சொல்லி, அவருடைய வாயைத் தன் கரத்தால் மூடினாள்.

'அந்த காலத்துல, மரண தண்டனை விதிக்கப்பட்ட, சாக்ரடீஸ் சிறையில இருந்தபோது, ஒரு கைதி ஏதோ ஒரு கவிதையை இசையோடு பாடிக் கொண்டிருந்தானாம். உடனே இவர், 'எனக்கு அதைச் சொல்லிக் கொடேன்...' என்று ஆர்வமாகக் கேட்டாராம்.

அவனோ, 'ஏம்ப்பா உனக்கு நாளைக்கு விஷம் கொடுத்து மரண தண்டனை நிறைவேற்றப் போறாங்க; இப்ப எதுக்கு உனக்கு இந்த ஆசை?' என்று கேட்டானாம்.

'சாவதற்கு முன்னால புது விஷயம் ஒண்ணு தெரிஞ்சுகிட்டு சாகலாமேன்னு தான்...' அப்படீன்னு சொன்னாராம், சாக்ரடீஸ்.

அவன் நெகிழ்ந்து போய் அவருக்குச் சொல்லிக் கொடுக்க, அப்படியே அதே இசையோடு அந்தக் கவிதையை மனம் நிறைஞ்சு பாடினாராம், சாக்ரடீஸ்.

'இதப்பாருங்க, நான் ஒண்ணும், சாக்ரடீஸ் இல்லே. எனக்குப் புதுசா எதையும் தெரிஞ்சுக்க வேணாம். சாக்ரடீஸுக்குப் பொண்டாட்டி, பிள்ளை, குட்டின்னு எதுவும் இல்லே போலிருக்கு. ஆனா எனக்கு எல்லாம் இருக்கு...' என்றாள், அமிர்தவல்லி.

'புதுசா விபரம் தெரிஞ்சுக்கறதுக்கும், பிள்ளை, குட்டி, குடும்பம்ன்னு இருக்கறதுக்கும் என்னம்மா சம்பந்தம்? சரி, இதோ இந்த ஏ.டி.எம்., கார்டு பத்தியாவது தெரிஞ்சுக்கோ. ஏதேனும், அவசரத் தேவை, உடனே பணம் வேணும், யார்கிட்ட போய் கேட்பே? பக்கத்திலேயே இருக்கற ஏ.டி.எம்.,க்குப் போய், 'டெபிட் கார்டை' செருகி, 'பின்கோடு' தட்டினா, பணம் வந்துடப் போகுது...'

'எனக்கு ஏ.டி.எம்.,மும் வேணாம், 'பின்கோடு'ம் வேணாம், எந்த, அவசரத் தேவையும் வரவேணாம்...'

'இல்லேம்மா, இன்னும் அடுப்பூதும் பெண்ணாகவே இருக்கியே... கொஞ்சம் நவீன வசதிகளைப் பத்தியும் தெரிஞ்சுக்கோன்னுதான்...' என்றார், நித்யானந்தம்.

'இதப்பாருங்க, நீங்க அறிவுபூர்வமா பேசறீங்க; நான் உணர்வுப்பூர்வமா பேசறேன். என்னை என் போக்கிலேயே விட்டுடுங்களேன்...' கொஞ்சம் விட்டாள் அழுது விடுவாள் போலிருந்தது!

'சரி, சரி, விடு. இதைப்போய், 'சீரியஸா' எடுத்துக்காதே...' என்று அவளை அணைத்து ஆறுதல் சொன்னார், நித்தியானந்தம்.

'இந்த அணைப்பில் அடங்கிக் கிடக்கறது அறியாமைன்னா நான் இப்படியே இருந்துட்டு போறேன்,' என்று தனக்குள் நிம்மதியுடன் சொல்லிக் கொண்டாள், அமிர்தவல்லி.

அம்மாவிடம் கேட்டுத் தெரிந்து கொண்ட இந்த விபரங்களை, பைரவி சொல்லி முடித்ததும், மற்ற மூவரும் கலக்கப் பெருமூச்சு விட்டனர்.

அ ன்றைய சடங்குகள் முடிந்ததும், பெண்களும், மாப்பிள்ளைகளும் துக்கத்தால் இறுகிய முகத்தினராக இருந்தனர். கூடவே, நித்தியானந்தம் சொத்து சம்பந்தமாக அடுத்தடுத்து நிறைவேற வேண்டிய, வாரிசு சான்றிதழ் போன்ற சட்டபூர்வ வேலைகளை பற்றியும் அவர்கள் யோசித்தனர். நீர் வற்றிய கண்களுடன், சோகப் பதுமையாக அமர்ந்திருந்த அம்மாவிடம் அதுபற்றி பேசவும் பயமாக இருந்தது.

''பைரவி சொன்னதை வெச்சுப் பார்த்தா, அப்பா தன் மொபைலையும், 'லேப்டாப்'பையும், சங்கேத குறியீட்டால், 'லாக்' செய்திருப்பார் என்றே தோன்றுகிறது. அப்பா என்ன நினைச்சிருந்தாருன்னே தெரியலியே! அம்மாவும் தெரிஞ்சுக்கலே,'' என்று, குழப்பத்துடன் சொன்னாள், பிரவீணா.

திடீரென்று அவள் கணவன் சுரேஷ், ''பிரவீணா, உங்க அப்பா மொபைலையும், 'லேப்டாப்'பையும், 'லாக்' பண்ணலே. முக்கியமா, 'லேப்டாப்'பிலே, தன்னோட, 'டெபாசிட்' தொகை, வீடு, நிலம்ன்னு சொத்து, 'எல்.ஐ.சி. பாலிசி' வங்கி கணக்கு விபரம், அந்த தேதிவரைக்கும் வருமான வரி கணக்குத் தாக்கல் வரை பதிவு செய்து வைத்துள்ளார்.

''ஏதேனும் சந்தேகம்ன்னா நாம் தொடர்பு கொள்ள வேண்டிய வங்கி, தனியார் வைப்பு நிதி, அஞ்சலக சேமிப்பு, இதிலெல்லாம் யார் யாரைப் பார்க்கணும், அவங்களோட தொலைபேசி தொடர்பு எண்களையும் குறித்து வைத்துள்ளார்.

''வருமான வரி தாக்கல் செய்யும் ஆடிட்டர் பெயர், அவருடைய தொடர்பு எண், சொந்த வீட்டுப் பத்திரம், தனக்கும், அம்மாவுக்குமான, 'ஹெல்த் இன்சூரன்ஸ்' மற்றும் கையிருப்புப் பணம்ன்னு முழு விபரங்களையும் பதிவு செய்து வெச்சிருக்கார்.

''இந்த எல்லாவற்றுக்கும் உரிய மூல ஆவணங்களையும், 'ஸாப்ட் காபி'யாகவும் வெச்சிருக்கார். அந்த ஆவணங்கள் பீரோவிலே எந்தத் தட்டிலே இருக்குன்னு குறித்துள்ளார். 'பேங்க் லாக்கர்'ல இருக்கற நகைகள் என்ன, வீட்டிலே மற்றும் அம்மாவின் கழுத்து, கைகள், காது, மூக்கு, பாத விரல் மெட்டி வரையிலான நகைகள்ன்னு எல்லா விபரங்களையும் ரொம்பத் தெளிவா எழுதி வெச்சிருக்கார்,'' என்றான்.

மூவரும் வியந்து பார்க்க, ''இந்த சொத்துகளுக்கெல்லாம் அம்மாதான் ஒரே, நேரடி வாரிசு, அவருக்குப் பின்னால், மகள்களுக்கு எந்தெந்த சொத்து யாருக்கு என்ற உயில் விபரங்கள்...'மை காட், வாட் எ மேன்,' நித்யானந்தம்,'' என்று பிரமித்தான், சுரேஷ்.

அவர்கள் பேசிக் கொள்வதையெல்லாம் கவனித்த, அமிர்தவல்லி, 'ஊருக்கெல்லாம் நல்லவரா இருந்தவர், குடும்பத்துக்கும் அப்படித்தானே இருப்பார்...' என்று தனக்குள், சற்றே பெருமையுடன் சொல்லிக் கொண்டாள் .

பிரபு சங்கர்






      Dinamalar
      Follow us