தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/மல்லிகை மல்லிகை மானஸா!

மல்லிகை மல்லிகை மானஸா!

மல்லிகை மல்லிகை மானஸா!


PUBLISHED ON : ஏப் 12, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 12, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

''மானஸா!'' என, சத்தமாய் விளித்தார், கணவர் சாமிநாதன். குடுகுடுவென ஓடி வந்தாள், மானஸா. மூச்சிரைக்க வந்தவள், 'ஓம் க்ரீம் காளிகாயை நமஹ!' என, முணுமுணுத்தாள்.

''எங்க போன, என் அன்பான பட்டிக்காடே,'' என்ற, சாமிநாதன், ஒரு ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி. வயது 65. இரட்டை நாடி திரேகம். நடிகர், மோகன்ராமன் சாயல். புகைப்பிடிக்கும் பழக்கமும், மது அருந்தும் பழக்கமும் கொண்டவர். உலகின் எல்லா மக்களையும் தன் காலடியில் நிறுத்தி, அவர்களுக்கு பாடம் சொல்லித்தர விரும்புபவர்.

''பக்கத்து வீட்டு, மாலினியுடன் போனில் பேசிக் கொண்டிருந்தேன்!''

''பட்டிக்காடுக்கு பட்டிக்காடு பிரண்ட்டாக்கும். நீ ஓடிவரும் போது, ஓம்கிரீம் காளிகாயை நமஹ என, முணுமுணுத்தாயே... அது ஏன்?''

''காளி உபாசகி நான்!''

''உப்பு இடப்படாத புதிய தயிரில் பிசையப்பட்ட தயிர் சாதம் நீ. தாய்மையின் வடிவான பார்வதியையோ, கல்விக்கு அதிபதியான, சரஸ்வதியையோ, செல்வத்துக்குரிய லட்சுமியையோ, மீனாட்சியையோ, சீதா தேவியையோ, அம்மனையோ இஷ்ட தெய்வமாய் கொள்ளாமல், உக்கிர தெய்வமான காளியை வழிபடுகிறாய்!''

''காளி தாய்மைக்கும், பாதுகாப்புக்குமான தெய்வம். கடந்த ஐந்து ஆண்டுகளாக எனக்கு இஷ்ட தெய்வம் காளி தான்,'' என்றவள், 'ஹ்ராம் வீஜம் ஹ்ரீம் சக்தி!' என, முணுமுணுத்தாள்.

''மானஸா நமக்கு கல்யாணம் ஆனதிலிருந்து கேட்டுக்கிட்டு இருக்கேன். இப்பயாவது சொல்லு, என்னதான் படிச்ச?''

''அய்யய்யே. நான் எதுவும் படிக்கலைங்க. நான் ஒரு கைநாட்டு, பட்டிக்காடு, பத்தாம்பசலி. ஏதோ உங்களை கல்யாணம் பண்ணியதால், கொஞ்சம் விபரமானவளா இருக்கேன்.''

''நக்கல் பண்றியா?''

''ஹய்யோ, அக்மார்க் நிஜம்!''

''ஒரு பட்டிக்காட்டுக்கு எதுக்கு, மானஸான்னு மாடர்னா பேர் வச்சான், உங்கப்பன்?''

''தப்புதான் தப்புதான். அவரை கண்டிச்சு தண்டிச்சிடலாமா? ஆனா, அவர் இப்ப உயிரோடு இல்லையே. சரி உங்க விருப்பத்துக்காக என் பெயரை, இருளாயீன்னு மாத்திக்கவா?''

''விடுவிடு. இருக்கட்டும்.''

''உங்க கருணைக்கும், பெருந்தன்மைக்கும் நன்றி!''

மானஸா, 170 செ.மீ., உயரம் கூடியவள். பழைய நடிகை, வைஜெயந்திமாலா போல கண்மை போட்டிருந்தாள். நெற்றியில் பழைய ஒரு ரூபாய் அளவுக்கு குங்குமம் இட்டிருந்தாள். இரட்டை மூக்குத்தி, சதை மடிப்புகள் கொண்ட தொண்டைப் பகுதி, நான்கடி நீள அடர் கூந்தல், இடது கையிலும், இடது காலிலும் ஆறு ஆறு விரல்கள், பழைய பண்டரிபாய் குரல் கொண்டவள்.

கணவர் அசைவ விரும்பி; மனைவி கடும் சைவம்.

இருந்தாலும், கணவருக்காக தினம் அசைவம் சமைப்பாள்.

கணவர் நல்ல மூடில் இருக்கும் போது, 'தினமும் குடிக்காதீங்க. வாரத்திற்கு ஒரு முறை அளவா குடிங்க. தினம் ஒரு பாக்கெட் சிகரெட் புகைக்காதீங்க. தினம் காலைல ஒன்று சாயந்தரம் ஒன்று மொத்தம் இரண்டு சிகரெட் புகையுங்க. யார் மீதும், எதன் மீதும் கோபப்படாதீங்க. ஓய்வு வாழ்க்கையை இதம்பதமா அனுபவியுங்க...' என்பாள்.

'நீ அறிவுரை சொல்ற அளவுக்கு நான் ஒண்ணும் தாழ்ந்து கிடக்கல. உன் வேலையைப் பார்...' என்று முந்தி விடுவார்.

கணவரின் எதிர்ப்புகளையும் மீறி, காலையில் ரத்த அழுத்தமும், சர்க்கரை அளவையும் அளப்பாள்.

''இதெல்லாம் செய்ய உனக்கெப்படி அறிவு வந்தது?''

''இந்த ஞானசூன்யம், இதை உங்களுக்கு பார்க்கிற இதய சிறப்பு மருத்துவரின் நர்ஸிடமிருந்து கற்றுக் கொண்டது?''

''ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட் கிட்ட கொஞ்சம் கொஞ்சமா தொழில் கத்துக்கிட்டு டாக்டராகிடு.''

''காலைல எந்திரிச்சு உக்காந்து, இருகை விரல்களையும் நீட்டி மடக்குங்க. தினம் காலைலயிலோ, மாலையிலோ அரைமணி நேரம், 'வாக்கிங்' போங்கன்னு சொன்னா கேக்றீங்களா?''

''அதெல்லாம் சோப்ளாங்கி பசங்க செய்றது. நான் இரும்பு மனுசன். எனக்கு எந்த உடற்பயிற்சியும் தேவையில்லை. நான், நுாறு வயசு வரைக்கும் இருப்பேன்.''

''இருந்தா எனக்கு பெருமகிழ்ச்சி!''

''சந்தடி சாக்குல, நீயும், 97 வயசு வரைக்கும் இருக்க ஆசைப்படுற?''

பதில் பேசாமல் இறுக்கமாக சிரித்தாள், மானஸா.

''உன்னை இவ்வளவு மோசமா மொட்டை அதிகாரம் பண்றேனே, உனக்கு கோபம் வரல?

''துாங்கும் போது என் மூஞ்சில தலைகாணிய அமுக்கி கொல்ல தோணல?''

''உங்க முரட்டுத்தனமான பேச்சு, எனக்கு சிறு குழந்தையின் செல்லக் கிள்ளல்கள். எனக்கான சிறுசிறு சந்தோஷங்களை அனுபவித்துக் கொண்டே உங்களின் ஏச்சுபேச்சுகளை கடந்து போகிறேன். தண்ணீரில் விழுந்த தேளை காப்பாற்றுவது முனிவரின் இயல்பு. காப்பாற்றியதும் முனிவரை கொட்டுவது தேளின் இயல்பு.''

''அடிப்பாதகத்தி, என்னை தேள் என்கிறாயோ!''

''உதாரணங்களை அனுபவிக்கணும், ஆராயக்கூடாது!''

''நீ பெரிய ஆளுடி.''

''இல்லை நான் பெரிய ஆளோட பெண்டாட்டி!''

''நீ என்னன்னமோ எனக்கு சொல்ல வர்ற எனக்குதான் புரியல.''

''உள்குத்து ஏதும் என் பேச்சில் இல்லை, பிராணநாதா!''

''ஓவ்... அப்றம்?''

''அகரனே, அத்தானே, அஹோ, என் ஸ்வாமி!''

''யூடியூபில் பழைய தமிழ் படங்களை பார்க்கிறாய் போலும்!''

''சும்மா கூப்பிட்டு பார்த்தேன்!''

''ஓ.கே., பார்ட்டி நேரம் வந்துவிட்டது. விஸ்கி மற்றும் சோடா பாட்டில்களை எடு. கொறிக்க சிக்கன் செய். காராபூந்தி பொட்டலத்தை பிரித்து கிண்ணத்தில் கொட்டு!''

எல்லாம் கொண்டு வந்து வைத்தாள்.

''இரண்டு பெக்குக்கு மேல் நீங்கள் குடிக்கக் கூடாது!''

''நீ, எனக்கு கட்டளை போடாதே!''

வாயைத்திறந்தால் தொண்டையில் காகம் கொத்தும் அளவுக்கு குடித்தார், சாமிநாதன். மெதுவாக, இரு இட்லிகளை அவருக்கு ஊட்டி, படுக்கையில் படுக்க வைத்தாள், மானஸா.

பக்கத்தில் படுத்துக் கொண்டாள்.

ந ள்ளிரவில் அனிச்சையாக விழிப்பு வந்தது. எழுந்தமர்ந்தாள். உருண்டுபுரண்டு படுத்திருந்த, சாமிநாதனும் எழுந்து உட்கார்ந்தார்.

அறை விளக்கை உயிர்ப்பித்தாள், மானஸா.

வியர்த்திருந்தார், சாமிநாதன்.

''என்னங்க செய்யுது?''

''இடது புஜம் குத்துது. நடு நெஞ்சு கனக்குது,'' மெதுவாக சரிந்தார். வேகமாய் ஓடிப்போய் ஆஸ்பிரின் 300 மி.கி., மாத்திரையும், நைட்ரோகிளிசரின் மாத்திரையும் வாய்க்குள் ஊட்டினாள்.

சவுகரியமாக அவரை அமர வைத்து, சட்டை பட்டன்களை நெகிழ்த்திவிட்டு தலையில் கை கோர்த்தாள். நிமிடத்தில், 100லிருந்து 120 கை அழுத்தம் கொடுத்து செயற்கை சுவாசம் அளித்தாள். பிரயோஜனமில்லை. ஒரு அழுத்தம், இரு சுவாசம் என, வாயோடுவாயாக சுவாசம் அளித்தாள். ஆம்புலன்ஸுக்கு போன் செய்தாள். தானியங்கி வெளிப்புற மின்னதிர்ச்சிக் கருவி கொடுத்து சுவாசத்தை மீட்டாள்.

ஆம்புலன்ஸ் வந்தது.

ஸ்டெச்சரில் கிடத்தி, சாமிநாதனை ஆம்புலன்ஸில் ஏற்றினர். உடன் அமர்ந்து முதலுதவிகளை தொடர்ந்தாள், மானஸா.

ஐ.சி.யூ.,வில், 'அட்மிட்' செய்யப்பட்டார்.

கணவருக்கு செயற்கை சுவாசம் கொடுத்ததிலிருந்து நடப்பு நொடிவரை, 'கீம் கீம் கீம் ஹும் ஹும் தசஷ்ண காளிகே கீம்கீம்கீம் ஹ்ரின் ஹ்ரீம் ஹும்ஹும் ஸ்வாஹா!' என முணுமுணுத்துக் கொண்டே இருந்தாள்.

சாமிநாதனுக்கு நினைவு திரும்பியது.

''மிஸஸ் மானஸா சாமிநாதன்! முதலுதவி மற்றும் சி.பி.ஆர்., பயன்பாடு பற்றி எங்கள் மருத்துவக் கல்லுாரியில் ஒரு ஆண்டு பயிற்சி மேற்கொண்டீர்கள். இதுவரை நீரிலும், நிலத்திலும், நெருப்பிலும் சிக்கிய நுாறு பேரையாவது காப்பாத்தி இருப்பீங்க. 'யூ ஆர் மோர் தேன் எ ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட்.' உங்கள் கணவருக்கு இதயத்தில் நான்கைந்து அடைப்புகள். ஆஞ்சியோ தேவையில்லை. கிமோதெரபி மூலம் அடைப்புகளை நீக்கலாம். மாரடைப்பிலிருந்து உங்கள் கணவரை மீட்ட, நவீன சாவித்திரி நீங்கள்,'' என்றார், பெண் மருத்துவர்.

பலவீனமாக முணுமுணுத்தார், சாமிநாதன். ''அவ ஒரு பட்டிக்காடு. நீங்க சொன்னதெல்லாம் அவ செஞ்சிருக்க மாட்டா!''

''யார் பட்டிக்காடு? உங்க மனைவி பி.எஸ்சி., நர்சிங் படிச்சவங்க. சி.பி.ஆர்., பயிற்சியில் முதல் ராங்க் பெற்ற மாணவி அவர்.''

ஆவென வாயை அகட்டினார், சாமிநாதன். ''அடங்கு காவல்துறை டாபர்மேன்! அவ்வளவு சீக்கிரம் நீ என்னை விட்டுட்டு போக விடுவேனா? நான் பட்டிக்காட்டு ஒப்பனையில் இருக்கும் மருத்துவ தேவதை! உலகில் பெண்கள் யாரும் முட்டாள் அல்ல. முட்டாள் போல் நடிக்கும் பரமபுத்திசாலிகள் பெண்கள்!''

கட்டைவிரல் உயர்த்தினார், மருத்துவர்.

நிலா மகன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us