PUBLISHED ON : மே 31, 2026

மீண்டும் விழிப்பு வந்தது, மாசிலாமணிக்கு. அடிநெஞ்சில் இருந்து ஒரு பயம், மனதை கவ்வ, எழுந்து போய் தண்ணீர் குடித்து விட்டு வந்தார். அதன்பிறகு உறக்கம் வரவில்லை. பல்வேறு சிந்தனைகள் எழுந்து, அந்த இரவு துாங்கா இரவாகி போனது.
ஆறு மாதமாய் இதே நிலைதான். இனம் புரியாத பயம் மனசுக்குள். வேலை நேரத்தில் என்று அவ்வப்போது தோன்றிய பயம், இப்போது இரவிலும் வந்து அச்சுறுத்த ஆரம்பித்து இருந்தது.
ஐம்பது வயதில், உண்டான இந்த அதிசய நோய். அவரைத் துன்புறுத்தாமல் இல்லை.
'வாயு பொருட்களை சேர்த்துக்காதே தம்பி, வாழைக்காயும், உருளைக்கிழங்கும் ஆகவே ஆகாது...' என்று ஆரம்பித்த மாயவரத்து அத்தை, சைவத்தில் ஒன்றிரண்டும், அசைவத்தில் அதுகூட வேண்டாம் என்று அறிவுரை சொல்லி வைத்தார்.
அப்படியே தான் வாயைக் கட்டிப் பார்த்தார். இரண்டு நாட்களுக்கு நன்றாகத்தான் போனது. மீண்டும் மூன்றாவது நாள் அதே பயம், அதே வேர்த்துக் கொட்டுதல். இரவில் துாக்கம் இல்லாமல் எழுந்து அமர்ந்து கொள்வார். அந்தச் சமயத்தில் மட்டும் ஏற்படும் சிந்தனைகளுக்கு எல்லையே இருக்காது.
டாக்டரிடம் சென்றால், 'எதுவுமில்லை...' என்று ஒரே வார்த்தையை, வேறு வேறு தொனியில் சொன்னார்.
''தம்பி, நம்ம ஊர்ப்பக்கம் சாமியார் ஒருத்தர் வந்திருக்கார். நம்ம கையைப் பார்த்ததும் நடந்ததை அப்படியே சொல்றாராம்,'' என்றார், சித்தி.
''நடந்ததைச் சொல்ல அவர் எதுக்கு, சித்தி. நமக்கே தெரியுமே. நடக்கப் போறதைச் சொல்வாரா?'' என்று அலுப்போடு கேட்ட, மாசிலாமணியை மனதுக்குள் திட்டினார், சித்தி.
''இந்த அகராதியால தான் அத்தனையும் மாடு மேய்ஞ்சு போச்சு. நீ புறப்பட்டு வா. அவர்கிட்டே கையைக் குடுத்து பார்ப்போம்,'' என்ற, செய்யாறு சித்தியின் பேச்சைக் கேட்டு, ஐந்தாயிரம் ரூபாய் தண்டம் அழுதது தான் மிச்சம்.
செய்யாறு சென்று ஜோதிடரிடம் காட்ட, அவர் சோழியை உருட்டிப் போட்டு, இது செய்வினைக் கோளாறு என்று சொல்லி விட்டுப் போனாலும் போய் விட்டார், எந்த சொந்தக்காரனை பார்த்தாலும் அது இவனாக இருக்குமோ என்று சந்தேக பார்வையும் சேர்ந்து கொண்டது.
தட்சணை, போக்குவரத்து செலவு என்ற வகையில், ஐயாயிரம் ரூபாய் செலவாகி இருக்க, அந்த துயரம் வேறு பக்கம் இருந்து மனசைக் கடித்தது என்றால், 'கிழக்கு பக்கம் தலைவச்சு படுக்க கூடாது. மேற்குல உட்காந்து சாப்பிடக் கூடாது...' என்ற அவரின் கட்டுப்பாடுகளை கடைபிடித்து நொந்துதான் போனார்.
'மாசிலாமணி, இது, 'சைக்கலாஜிகல் ப்ராபளம்.' நீ, இதுக்கு ஒரு, மனநல மருத்துவரை பார்க்கணும். உனக்கு விருப்பம்ன்னா சொல்லு, நான், 'அட்ரஸ்' தர்றேன். நீ போய் பார்த்து பேசிட்டு வா. மனநல மருத்துவரைப் பார்க்கிறவங்க எல்லாரும் மனநோயாளி கிடையாது. உடம்புக்கு நோய் வந்தால் டாக்டரைப் பார்க்கிறோம் இல்ல, அதுமாதிரி தான் இதுவும்...' என்று, உடன் வேலை செய்யும், கணேசன் தான் இந்த முகவரியைத் தந்து அனுப்பினான்.
நீண்ட யோசனைக்கு பிறகுதான் கிளம்பி வந்திருந்தார், மாசிலாமணி. இருமருங்கிலும் அடர்ந்திருந்த மரங்களும், அதில் அப்பி இருந்த பறவைகளும், அவர் மனதை ரம்மியமாக்கியது.
இவர் முறை வந்ததும் உள்ளே சென்றவரை இன்முகத்துடன் வரவேற்றார், மனநல மருத்துவர், பிரபாகர்...
''வாங்க, மிஸ்டர் மாசிலாமணி.''
ஏதோ பல ஆண்டுகள் பழகியது போல், அவர் அழைத்ததே இதமாக இருந்தது. பத்து நிமிடம் செலவு செய்து, தன்னை வாட்டி வதைக்கும் பிரச்னையை சொல்லி முடித்தார், மாசிலாமணி. எந்த சலனமும் இல்லாமல் கேட்டுக் கொண்டிருந்தார், டாக்டர் பிரபாகர்.
''இதுக்கு ஏதாவது மருத்துவம் பார்த்திருக்கீங்களா, மிஸ்டர் மாசிலாமணி?''
''இது என்னங்கிற தெளிவான சிந்தனை இல்லை டாக்டர். வாயுக் கோளாறு, பேய், பிசாசு, சூன்யம்ன்னு இது நிறத்துக்கு ஒரு பெயர் வச்சிட்டு திரிஞ்சது. ஆனால், உண்மையில் இந்த பயம் எதனால வருதுன்னு தெரியல,'' என்றார் வருத்தத்தோடு.
''அந்த பயம் தோன்றும் போது உங்களுக்கு என்ன சிந்தனை வரும்?''
முதன்முறையாக அவருக்கு வருகிற சிந்தனைக் குறித்து கேள்வி கேட்கிறார். சந்தோஷமாய் உணர்ந்தார்.
''ஏதேதோ சார். அதையெல்லாம் வெகு நாள்பட்ட நினைவுகள்.''
''உதாரணத்துக்கு ஏதாவது ஒன்றிரண்டு சொல்ல முடியுமா?''
''எங்க சித்தப்பா, தியாகராஜன். அவர்கூட சின்ன வயசில ஏதோ மனத்தாங்கல். அவர்கூட பேச்சுவார்த்தை நின்னு போச்சு. திடீர்ன்னு ஒருநாள் அப்பாவுக்கு போன் செஞ்சு பேசியவர், என்னை பேசக் கூப்பிட்ட போது, கோபத்துல நான் பேச மறுத்துட்டேன். அடுத்த இரண்டு நாள்ல திடீர்ன்னு அவர் மாரடைப்புல இறந்து போயிட்டார். அவர்கூட பேசாதது குற்றவுணர்வா இருக்கு.”
''வேற?''
''என் உறவுக்காரர் ஒருத்தர், அவங்க வசதி வாய்ப்புகளை பார்த்து ஏளனமா பேசி இருக்கேன். அப்படி பேசினது தப்புன்னு இப்போ மனசுக்கு தோணுது. இதுவரைக்கும் அப்படி சிந்தனை வந்ததில்லை.''
''இன்னும் ஏதாவது குறிப்பிடும்படி இருக்கா?''
''என் ப்ரெண்ட், சங்கரலிங்கம். அவன் என்னை நிறையவே நம்புவான். அவனைப் பிரிய முடியாதுங்கிற காரணத்துக்காக சேர்ந்தே ஒரே, 'க்ரூப்' எடுத்தோம். அவனுக்கு நல்லா வர்ற கணக்கு பாடப் பிரிவை விட்டு வேற பாடப்பிரிவை தேர்ந்தெடுத்தவன் ரொம்ப சாதாரண நிலையில இருக்கான். அதுக்கு நான்தான் காரணம்ன்னு என் மனசு என்னை குற்றம் சாட்டுது.''
''இன்ட்ரெஸ்டிங்.''
''அப்பறம் என் கல்யாண சமயத்துல, என் உறவுக்கார பெண் வசதி இல்லாததை காரணம் காட்டி வேண்டாம்ன்னு சொல்லிட்டு, வரதட்சணைக்காக வேறு இடத்துல கல்யாணம் பண்ணிட்டேன். அது தப்பான செயல்ன்னு எனக்கு தோணுது இப்போ.''
டாக்டர் தலையசைத்து ஆமோதித்தார்.
''இது எல்லாம் இயல்பாய் நடந்த விஷயங்கள். இதுல குற்றவுணர்வுக்கான இடம் எங்கே வந்தது? அதுவும் குறிப்பா பதட்டமும், பயமும் வரும்போது மட்டும் இது எப்படி வருது?'' என்றார் கவலையாக.
அவரை பரிசோதித்த பின், ஆழ்ந்த உறக்கத்திற்கும், மனசு அமைதியுறவும் மாத்திரைகள் எழுதித் தந்தார், மருத்துவர்.
''மிஸ்டர், மாசிலாமணி இந்த மாத்திரை கண்டிப்பா உங்கள் ஆழ்மனதை அமைதிப்படுத்தும். கண்டிப்பா இந்த நினைவுகளில் இருந்து விடுபடுவீங்க. ஆனால், இது நிரந்தரமல்ல, மிஸ்டர் மாசிலாமணி,'' என்ற போது அவரை கவலையாகப் பார்த்தார், மாசிலாமணி.
''மனித மனம் விசித்திரமானது மிஸ்டர், மாசிலாமணி. நான், ஈ எறும்புக்கு கூட துரோகம் செய்ததில்லைன்னு தனக்காக வாதாடும் உங்க மனம் தான், நீங்க பயப்படும்போது கைகள் கட்டப்பட்டு செயலற்று நிற்குது.
''அந்த செயலில்லாத சமயத்தில் தான் நீங்கள் செய்த தவறுகள் உங்களுக்கு எதிராக சாட்சி சொல்லுது. இதெல்லாம் குற்றம்ன்னு சொல்கிற உங்கள் மனசாட்சி தான், நேர்மையா உங்ககிட்டே உண்மை பேசுது,'' என்றார் புன்னகையோடு.
தலை குனிந்து கொண்டார், மாசிலாமணி.
''இதில் வருத்தப்பட எதுவுமில்லை, மாசிலாமணி. குறையும், குற்றமும், சுயநலமும் மனித வாழ்க்கையின் அங்கம். இது எல்லாம் என்கிட்டே இல்லைன்னு சொல்லிக்கறது கூட ஒரு வகையில் ஏமாற்று வேலை.
''இது எல்லாம் கலந்த கலவை தான் மனிதர்களின் பிறப்பே. வயது ஆக ஆக நம்மை எப்படி தவறு செய்வதில் இருந்து திருத்திக்கறோம் என்கிறதில் இருக்கிறது நம் மனமுதிர்ச்சி,'' என்றார், மருத்துவர்.
உணர்ந்ததாய் தலை அசைத்தார்.
''நம்முடைய மனசாட்சி சுட்டிக்காட்டற தவறுகள் தான், நாம் செய்த குற்றம். நம்முடைய மனசாட்சியை விட பெரிய சாட்சி யாரும் இருக்க முடியாது. ஆனால், அது அமைதியாகப் பேசும். அதன் சத்தம் நம் காதுகளை எட்டுறதே இல்லை.''
''டாக்டர்,'' என்று நா தழுதழுத்தார்.
''நாம செய்தது தவறுன்னு, நம்மகிட்டே ஒப்புக்கொள்வதில் கூட எதுக்கு ஈகோ? குற்றத்துக்கு நிவாரணம் இல்ல. ஆனால், குற்றவாளிக்கு நிவாரணம் உண்டு. யாருக்கு குற்றம் இழைத்ததாய் உங்க மனசு சொல்லுதோ, அவங்களுக்கு நல்லது நினைங்க. அது முதல் பரிகாரம்.
''அவங்க குடும்பத்தார் கூட உறவு வச்சுக்கங்க, உதவிகள் செய்யுங்க. இதன் மூலம் உங்களுக்கு ஏற்படற குற்றவுணர்வு குறைந்து போகும். நாளாக ஆக, அவர்களை பற்றி சிந்திக்கும் போதே, அவர்களுக்கு செய்த மற்ற விஷயங்கள் நியாபகம் வருமே தவிர, பழைய நினைவுகள் வராது.
''இதை முயற்சி செய்து பாருங்க. கண்டிப்பா, 'ரிலீப்' கிடைக்கும்,'' என்று முடித்தார் புன்னகையோடு, மருத்துவர்.
வெளியில் வந்து மாத்திரைகளை வாங்கிக் கொண்டு, தெரு விளக்கின் அடியில் வந்து நின்றவர், தன் சித்தப்பா மகனின் மொபைல் போன் எண்ணை தேட ஆரம்பித்திருந்தார்.
எஸ்.பர்வின் பானு
