sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

ஒரு எதிரி நண்பனாகிறான்!

/

ஒரு எதிரி நண்பனாகிறான்!

ஒரு எதிரி நண்பனாகிறான்!

ஒரு எதிரி நண்பனாகிறான்!

1


PUBLISHED ON : நவ 30, 2025

Google News

PUBLISHED ON : நவ 30, 2025

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''கடைசி ஒரு வருஷம் நீங்க எங்கே வேலை செய்தீங்க என்ற விபரம் இல்லையே,'' கமலின் சுயவிபர குறிப்பை பார்த்து கேட்டார், கற்பகம் கார்மென்ட்ஸின் ஜெனரல் மேனஜர், ராமன்.

''ஜெயில்ல இருந்தேன் சார்,'' என, சலனமில்லாமல் பதில் சொன்னான், சேர்மனின் அந்தரங்க காரியதரிசி வேலைக்கு வந்த, கமல்.

ராமனின் முகம் மாறியது.

''நீங்க ஏன் ஜெயிலுக்கு போனீங்கன்னு தெரிந்து கொள்ளலாமா?'' மெல்லிய குரலில் கேட்டார்.

தொண்டையை கனைத்து கொண்டு பேச ஆரம்பித்தான், கமல்...

''கோவிட் காலத்தில் நான் கடைசியாக வேலை செய்த நிறுவனம் பெரிய நஷ்டத்திற்கு தள்ளப்பட்டது. ஊழியர்களுக்கு, 'போனஸ்' மற்றும் ஊதிய உயர்வு எதுவும் கொடுக்க முடியவில்லை. ஊழியர்களுக்கு சம்பளம் மட்டும் கொடுத்து நிறுவனத்தை மூடாமல் பார்த்துக் கொண்டார், சேர்மன்.

''கடந்தாண்டு முதல், நிறுவனம், பழைய நிலைக்கு திரும்ப தொடங்கியது. யூனியன் தலைவர் கோபியும், அவருடைய சகாக்களும், ஊதிய உயர்வு, 'போனஸ்' எதுவும் சில ஆண்டுகளுக்கு இல்லாததால், பேச்சு வார்த்தை நடத்தி, நாங்கள் கேட்ட ஊதிய உயர்வு, 'போனஸ்' கொடுக்க வேண்டும், என்று சேர்மனை வற்புறுத்தினர். முதலில் மறுத்த சேர்மன், பிறகு வேறு வழியில்லாமல் பேச்சு வார்த்தைக்கு ஒப்புக் கொண்டார்.

''அமைதியாக நடந்த பேச்சு வார்த்தை, வாக்குவாதமானது. நேரம் செல்ல செல்ல, இருதரப்பினரும் மோதிக்கொள்ளும் நிலை ஏற்பட்டது. யூனியன் தலைவர், கோபி கோபம் தலைக்கேற, அங்கேயிருந்த பீங்கானால் செய்யப்பட்ட பூ ஜாடியை எடுத்து சேர்மனை அடிக்க பாய்ந்தார். நிலைமை மோசமாவதை கண்ட நான், கோபியை தடுக்க முயற்சி செய்தேன்.

''என்னை தள்ளிவிட்டு, சேர்மனை நோக்கி முன்னேறினார், கோபி. எனக்கு வேறு வழி தெரியவில்லை. அந்த பூ ஜாடியை அவரிடமிருந்து பிடுங்கி, அவர் தலையில் லேசாக ஒரு தட்டு தட்டினேன். கோபியின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.

''கோபியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். போலீஸ் வந்தது. என்னை கைது செய்தனர். ஒரு வருஷம் ஜெயிலில் இருந்தேன். 'நீ கொஞ்சம் அமைதியாக இருந்திருக்கலாம், இப்போ பாரு பெரிய பிரச்னையாயிடிச்சி...' என்று கூறி, என்னை கை கழுவி விட்டார், சேர்மன். அலுவலக நண்பர்கள் யாரும் ஜெயிலில் என்னை பார்க்க வரவில்லை. இன்னும் அதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.

''மறுபடியும் அதே நிறுவனத்திற்கு சென்று வேலை கேட்டேன். சேர்மன், 'உன்னை போல ஒரு கோபக்காரனை மீண்டும் வேலைக்கு சேர்த்து கொள்ள முடியாது...' என்று சொல்லி விட்டார்.''

கமல் பேசி முடித்ததும், அங்கே மயான அமைதி நிலவியது.

''உங்க விசுவாசம், உங்களின் உண்மை பேசும் குணம் எனக்கு ரொம்ப பிடிச்சி போச்சு. ஆனால், ஜெயிலுக்கு போன உங்களுக்கு என்னால வேலை கொடுக்க முடியாது,'' என, மெல்லிய குரலில் கூறினார், ஜெனரல் மேனஜர், ராமன்.

இந்த பதிலை ஓரளவு எதிர்பார்த்த, கமல், பதில் பேசாமல் இருக்கையை விட்டு எழுந்தான்.

அ தன்பின், கமல் சில இடங்களில் வேலைக்கு முயற்சி செயதான். ஜெயிலுக்கு போன அவனை வேலைக்கு சேர்த்து கொள்ள யாரும் தயாராக இல்லை.

இனி, வேலைக்கு முயற்சி செய்வது வீண் என்று முடிவுக்கு வந்தான், கமல். தந்தை அனுப்பிய பணம் கொஞ்சம் கொஞ்சமாக காலியாகி கொண்டிருந்தது. ஊருக்கு போய் அப்பாவின் மளிகை கடையில் உட்கார்ந்து கொள்ள வேண்டியது தான் என்ற முடிவுக்கு வந்தான்.

அப்போது அவன் மொபைல் போன் சிணுங்க, போனை எடுத்தான்.

''மிஸ்டர், கமல்?''

''எஸ்?''

''நாங்க, 'விக்டரி கார்மென்ட்'ஸிலிருந்து பேசுறோம், உங்களுக்கு நாளைக்கு காலைல, 'இன்டர்வியூ' இருக்குது. 'லொக்கேஷன்' அனுப்புகிறோம், 'இன்டர்வியூ கால் லெட்டர், வாட்ஸ்-ஆப்' பண்ணியிருக்கிறோம், காலை 10:00 மணிக்கு வந்து விடுங்கள். டைரக்டரோட பர்சனல் செகரட்டரி போஸ்ட் ஒண்ணு காலியா இருக்கு.''

''சார், நான் உங்க கம்பெனிக்கு, 'அப்ளை' பண்ணவே இல்லையே!''

''எனக்கு தெரியாது, சார். நாங்க, எச்.ஆர்., டிபார்ட்மென்ட். உங்களை, 'இன்டர்வியூ'க்கு அழைக்க சொல்லி, எங்க டைரக்டர் மனோவோட உத்தரவு.''

'நான் வேலைக்கு விண்ணப்பிக்காமல் எப்படி இது சாத்தியம்...' என்று குழம்பி போனான், கமல்.

'போய்தான் பார்ப்போமே...' என்ற முடிவுக்கு வந்தான்.

அ டுத்த நாள் காலை, 'விக்டரி கார்மென்ட்ஸ்' அலுவலகத்திற்குள் நுழைந்த, கமல், மேலும் குழம்பி போனான். ஆனால், 'இன்டர்வியூ'க்கு நிறைய பேர் வருவர் என்று எதிர்பார்த்திருந்தான். ஆனால், 'இன்டர்வியூ'க்கு அவனை மட்டும் தான் அழைத்திருந்தனர்.

''சார் உங்களை டைரக்டர், மனோ கூப்பிடறார்,'' என்று எச்.ஆர்., சொல்ல, டைரக்டர் அறையில் நுழைந்தான், கமல்.

''வாங்க கமல்,'' என்று நீண்டநாள் பழகியவர் போல வரவேற்றார், டைரக்டர்.

''சார், நான் வந்து ஒரு வருஷம்.''

''மிஸ்டர் கமல், நீங்க ஜெயிலுக்கு போன கதையை சொல்லி போரடிக்காதீங்க. உங்க கதை எனக்கு நல்லா தெரியும். நாளைக்கு காலைல வேலையில, 'ஜாயின்' பண்ணுங்க. என்னுடைய, 'பர்சனல் செகரட்டரி'யா உங்களை நியமித்திருக்கிறேன்.''

கமலுக்கு வார்த்தைகள் வரவில்லை. ''உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. என்னை யார் சிபாரிசு செய்தனர் என்று சொல்ல முடியுமா?'' நடுங்கும் குரலில் கேட்டான்.

''அதெல்லாம் எதுக்கு, கமல். கெட்டவர்கள் நிறைந்த இந்த உலகத்தில், நல்லவர்களும் இருப்பர். அந்த நல்லவர்களை அடையாளம் கண்டுகொள்ள, இந்த கெட்டவர்கள் தான் நமக்கு உதவுகின்றனர். அந்த மாதிரி யாரோ ஒரு நல்லவர் உங்களுக்கு உதவுவதாக வைத்து கொள்ளுங்களேன்,'' என்றார் டைரக்டர், மனோ.

மறுபடியும் நன்றி சொல்லி, அந்த அறையை விட்டு வெளியேறினான், கமல்.

க மல் சென்ற பிறகு, தன்னுடைய மொபைல் போனை எடுத்து எண்களை தட்டினார், மனோ.

மறுமுனையில், ''ஹலோ'' என்ற குரல் ஒலிக்க, ''கோபி நீங்க சொன்னது போல அந்த, கமலுக்கு வேலை போட்டு கொடுத்துட்டேன்,'' என்றார், மனோ.

''ரொம்ப நன்றி சார். நீங்க என்னுடைய துாரத்து உறவினர் என்பதையோ, நான்தான் இந்த வேலைக்கு சிபாரிசு செய்தேன் என்பதையோ, கமலிடம் எப்போதும் சொல்ல வேண்டாம். ரொம்ப ரோஷக்காரன். நான்தான் இந்த வேலையை வாங்கி கொடுத்தேன் என்பது தெரிந்தால், வேலையை துாக்கி போட்டுவிட்டு போய் விடுவான்.

''அவனுடைய இந்த நிலைக்கு நானும் ஒரு காரணம். அந்த குற்ற உணர்ச்சி என்னை குத்திக்கிட்டே இருக்கு. அன்னைக்கு நான் எங்க சேர்மனை அடிக்க போயிருக்க கூடாது. கோபத்தில் புத்தி தடுமாறி போச்சு.''

''பழசையெல்லாம் நினைத்து குழம்பாதீங்க, கோபி. நான் அந்த, கமல் கிட்டே உங்களை பற்றி சொல்ல மாட்டேன் போதுமா?'' என்று சொல்லி, போனை வைத்தார், மனோ.

ஜெ.கண்ணன் வயது : 56. படிப்பு : தனியார் வங்கியில் மேலாளர். இதுவரை இவர் எழுதிய, ஏராளமான துணுக்குகள் மற்றும் ஒரு பக்க சிறுகதைகள் பல இதழ்களில் வெளியாகியுள்ளன. கதைக்கரு பிறந்த விதம்: தொழிற்சங்க தலைவர் ஒருவரை சந்தித்தபோது, தன் வாழ்க்கையில் நடந்த உண்மை நிகழ்வுகளை சொன்னார். அதிலிருந்து பிறந்த சிறுகதை இது. சிறந்த, சிறுகதை ஆசிரியர் என்று பெயர் எடுக்க வேண்டும் என்பது இவரது லட்சியம்.






      Dinamalar
      Follow us