
நான், எங்கள் கிராமத்திற்கு வந்து, ஒரு வாரம் ஆகிறது. என் அம்மா இறந்த பின், சொத்து சம்பந்தமான விபரங்களை சேகரிக்க வந்தேன்.
என்னை, அவரது மகன் என, நிரூபிக்க எத்தனை அத்தாட்சிகள் தேவைப்படுகின்றன. அம்மா என, சொன்னதெல்லாம் பொய்யாகி, அம்மாவை, ஆவணங்களால் தேட வேண்டிய காலகட்டம் இது.
கோர்ட், ரிஜிஸ்டர் ஆபீஸ், காவல் நிலையம் என, வழக்கறிஞருடன் அலைந்து திரிந்து கொண்டிருந்தேன். கிடைத்த சில ஆவணங்களுடன், நான், ஊர் திரும்ப வேண்டிய நாள்.
என்னுடைய ஆரம்ப பள்ளி நாட்கள், நான் புரண்டு தவழ்ந்து விளையாடிய மண் எல்லாமே மனதில் தோன்றின. 15 ஆண்டுகளுக்கு முன், நான் சிறுவனாக இருந்த போது, ஆரம்பப் பாடம் படித்தது, முனிசிபல் பள்ளியில் தான்.
வீட்டுக்கும், பள்ளிக்கும் இடைப்பட்ட துாரத்தில், ஒரு பெரிய தோட்டம். மா மரம், கொய்யா மரம், தென்னை மரம், வாழை மரம் என, பழ மரங்கள் உண்டு. திருட்டு மாங்காய் பறித்து, கொய்யா மரம் ஏறி, கொடுக்காப்புளி எடுத்து, இப்படி எங்களுடைய காலம் ஓடியது.
தோட்டக்காரன் வந்தால் ஓடி விடுவோம். என்னுடன் சிலர் வருவர். அதில், சின்னசாமியும் ஒருவன். என் வீட்டில் வேலை செய்த, முனியம்மாவின் மகன். தாயுடன் வருவான். படிப்பு வரவில்லை. பள்ளிக்கே போகவில்லை. மரத்தடி மரத்தடியாக சீட்டு விளையாடி, போலீஸ் வந்தால் ஓடி, ஆனால், இவன் என் நண்பன். என்னுடன் பள்ளிக்கூட வாசல் வரை வருவான்.
ஆரம்பப் பள்ளிபடிப்பு முடித்து இடம் பெயர்ந்து... எல்லாமே மாறிவிட்டன.
என் மேற்படிப்பு, கோவையில் மாமா வீட்டில் ஆரம்பமானது. இன்று எங்கள் கிராமமே அடையாளம் தெரியாமல் மாறி இருந்தது. முன்பு மாந்தோப்பு இருந்த இடத்தில், அடுக்குமாடி குடியிருப்பு வந்திருந்தது.
இன்று, முனியம்மா இருக்கிறாளோ, இறந்து போனாளோ தெரியவில்லை. 15 ஆண்டுகளில் எத்தனை எத்தனை மாற்றங்கள்? நான் அந்த வீட்டை பார்த்தபடி நின்றிருந்தேன்.
யாரோ ஒரு கிழவி, கையில் முறத்துடன் வெளியே வந்தாள்.
''அம்மா இங்க முனியம்மான்னு ஒரு...'' அவள் நிமிர்ந்து பார்த்தாள்.
''முனியம்மா நான்தேன். என்ன வேணும் தம்பி.''
அட ஆமாம். இது, முனியம்மா தான். கொல்லங்குடி கருப்பாயி மாதிரி இருந்தார்.
''அம்மா என்ன தெரியலையா?'' என்றேன்.
கையைக் குவித்து கண் சுருக்கி என்னை நிமிர்ந்து பார்த்தாள்.
''எங்க வீட்டுல நீங்க வேலை செஞ்சீங்களே...'' என்பதற்குள், ''ஆமாம். சின்ன அய்யாவா?''
வீட்டுக்குள் அழைத்து சென்றாள், முனியம்மா.
என் கையைப் பிடித்து கதறினாள். என் தாய் இறந்த செய்தி கேட்டு, அழுதாள்.
''அம்மா இறந்துட்டாங்களா? எனக்கும் என் பையன் சின்னசாமிக்கும் வருசம் தோறும் தீபாவளிக்கு புது துணியெல்லாம் எடுத்து குடுப்பாங்க. நல்ல மனசு அம்மாவுக்கு...''
''ஆமா சின்னசாமி எப்படி இருக்கிறான்?''
ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விட்டாள், முனியம்மா.
''அத ஏன் கேக்குறீங்க தம்பி. படிக்கறது இல்ல. சும்மா கெட்டு குட்டிச்சுவராகி கண்ட கண்ட பசங்களோட சேந்து ஊர் சுத்திட்டு இருந்தான். சின்ன சின்ன திருட்டு. அப்புறம் ஏதாவது களவு போச்சுனா, போலீஸ் இவனை தேடி வீட்டுக்கு வருவாங்க.
''இந்த கண்ணாமூச்சி ஆட்டத்துல நான் தோத்துட்டேன், சின்னய்யா. கண்ணாலம் கட்டி வச்சாலாவது திருந்துவான்னு, அவன பத்தின உண்மை தெரியாத ஒரு பொண்ணுக்கு கண்ணாலம் கட்டி வச்சேன்.
''ஆனா, அந்த மகராசிக்கு எல்லா உண்மையும் தெரிஞ்சு, ஒரு புள்ளைய பெத்து கையில கொடுத்துட்டு, ஆத்தங்கரைக்கு குளிக்க போனவள் திரும்பவே இல்லை. என் பேரன் அருணை, நான் தான் வளக்கறேன்.
''அவனுக்கு, 15 வயசு ஆச்சு தம்பி. ஆனாலும், இவனும் அப்பன் மாதிரியே ஊர் சுத்தறான். படிப்பு வரல. அவ அப்பன் திருடன்னு அவனுக்கு தெரியாது. அப்பா, அம்மா ரெண்டு பேருமே இறந்துட்டாங்கன்னு சொல்லி வச்சிருக்கேன்,'' எனக் கூறி முடித்தாள், முனியம்மா.
அப்போது தான் வெளியே இருந்து, கையில் ஒரு பையுடன் வந்தான், அருண்.
''ஆயா இந்தா முட்டை. எனக்கு ஒரு முட்டை பஜ்ஜி போட்டு கொடு.''
''இருடா. இவனுக்கு படிப்பு வரல. ஆனா, கை வேலையெல்லாம் நல்லா செய்வான் பாருங்க. இந்த முட்டை ஓட்டுல படம் எல்லாம் வரைஞ்சி இருக்கான் பாருங்க. அதோ அந்த கண்ணாடி பீரோ முழுக்க, இவன் போட்ட முட்டை ஓடு படம் தான்,'' என்றாள், முனியம்மா.
உடைந்த கண்ணாடி பீரோவில், விதவிதமான முட்டை ஓவியங்கள் இருந்தன.
''சின்னய்யாவுக்கு வணக்கம் சொல்லுடா. இவங்க வீட்டுல தான், நான் வேலை செஞ்சேன்.''
என்னை பார்த்து கும்பிட்டான், அவன்.
''படிக்கிறியா?'' என்றேன்.
''இல்லீங்கய்யா. படிப்பு வரல.''
அவன் பேசிய போது, என் தோழன் சின்னசாமியை பார்த்த மாதிரி இருந்தது.
''நான் வேலைக்கு ஏற்பாடு செய்யறேன். செய்வியா?''
அவன் பேசவில்லை.
''ஆமா இதெல்லாம் எங்க கத்துகிட்ட?''
''எங்க பள்ளிக்கூடத்துக்கு பக்கத்துல ஒருத்தர் இருந்தாரு. அவரு தான் கத்துக் கொடுத்தார்.''
நான் சிரித்தபடி பார்த்தேன்.
அங்கு இருந்த முட்டை ஓவியங்களில் பட்டாம் பூச்சிகள் பறந்தன. ஒரு கிழவனும், கிழவியும் எட்டிப் பார்த்தனர். ஒரு அழகான தோட்டம் தெரிந்தது.
ஒரு முட்டை ஓவியத்தை எடுத்து என்னிடம் கொடுத்து, ''இந்தாங்கய்யா உடையாது. பதப்படுத்திட்டுத் தான் பண்ணிருக்கேன்,'' எனச் சொல்லி, ஒரு அட்டைப் பெட்டியில் சுற்றிலும் காகிதங்களுக்கு இடையே அதை வைத்து, பரிசாக கொடுத்தான்.
அந்த பட்டாம்பூச்சி, என் பைக்குள் பறந்து கொண்டிருந்தது. நான் கிளம்பினேன்.
ஊ ர் வந்து சேர்ந்ததும், வேலை 'டென்ஷனில்' எல்லாமே மறந்து போனது. ஆனாலும், என், 'ஷோகேசில்' முட்டை பட்டாம்பூச்சி பறந்து கொண்டு தான் இருந்தது.
சில சமயம் நினைத்து கொள்வேன். பிறகு ஏதோ வேலை மறந்து போவேன்.
நாட்கள், வாரங்கள், மாதங்கள் ஓடின.
என் கம்பெனியின், 'பாஸ்' வருகிறார். விமான நிலையத்திற்கு சென்று அவரை அழைத்து வர வேண்டும். காலை 7:00 மணிக்கு விமானம் தரையிறங்குகிறது. அதற்குள் நான், விமான நிலையம் செல்ல வேண்டும். அன்று தாமதமாக எழுந்து விட்டேன். அதனால், எல்லாமே குளறுபடியானது.
''என்னங்க? வீட்ல காசு இல்ல. போறச்சே ஏ.டி.எம்.,ல பணம் எடுத்து கொடுத்துட்டு போங்க,'' என்றாள், என் மனைவி.
நான் அவசரமாகக் கிளம்பினேன்.
விமானம் தரை இறங்குவதற்குள் நான் போய் விடவேண்டும். ஏ.டி.எம்.,மில் பணம் எடுத்து அவளிடம் கொடுக்க நேரம் இல்லை.
மாலை, வேலை முடிந்து வரும்போது, பணத்தை கொடுத்து விடலாம் என, பர்சில் அந்த பணத்தை பத்திரப்படுத்தி விட்டு, காரை கிளப்பினேன்.
அவசரமாக போக வேண்டிய நிர்ப்பந்தம். சந்து பொந்துகளில் எல்லாம் புகுந்து, மெயின் ரோடு போக முயன்றேன்.
நான் அந்த சந்து வழியாக கார் ஓட்டி போன போது, அந்த கரடுமுரடான பாதையில், திடீரென்று யாரோ என் கார் முன் வந்து விழுந்தார். திகைத்து, நான், 'பிரேக்' போட, 'க்ரீச்' என்ற சத்தத்துடன், கார் நின்றது.
திடீரென நாலா பக்கங்களிலும் இருந்து, 'திபு திபு' என, ஆட்கள் ஓடி வந்தனர்.
'ஏன் சார், கண்ணு தெரியலையா? பெரிய மனுஷன், பெரிய காரு. அதான் அலட்சியம். டேய் கீழ இறங்குடா. அடிபட்டவன் செத்துக் கித்து வைச்சிருக்க போறான், நிமிர்த்தி போடு...' என, கூச்சல் போட்டனர்.
கை கூப்பினேன், நான்.
சத்தியமாக, நான் யார் மீதும் காரை ஏற்றவில்லை. இது எப்படி நிகழ்ந்தது? கவிழ்ந்து கிடந்தவனை நிமிர்த்தி போட்டனர். சட்டையெல்லாம் ரத்தம். எனக்கு பகீரென்றது. இது என்ன கொடுமை?
''டேய் போன் பண்றா. போலீஸ் வந்தா நல்லா இருக்கும். சார் வசதியாத் தான் இருக்காரு,'' என, ஒரு பாறாங்கல்லை எடுத்து, காரின் கண்ணாடியை நோக்கி ஓடி வந்தான், ஒருவன்.
''ஐயா என்ன விட்டுடுங்கய்யா,'' என, கைகூப்பி, ''நான் அவசரமா, ஆபீஸ் வேலையா விமான நிலையம் போறேன். நான் பணம் தருகிறேன். ஆபீஸ் வேலை முடிஞ்சதும் நானே வந்து, சிகிச்சைக்கு ஏற்பாடு பண்றேன்.
''பக்கத்திலேயே நிறைய மருத்துவமனை இருக்கு. மொதல்ல இவனை மருத்துவமனையில் சேருங்க. நான் வேலை முடிஞ்சு வந்து நிச்சயமா உதவி பண்றேன். நான் ஏமாற்ற மாட்டேன்,'' என்றேன்.
'பையன் இன்னும் சாகலை...' எனக் கூறி, என்னை கேட்காமலே காரில் இருந்த என் பர்ஸை பிடுங்கிக் கொண்டனர்.
என் கழுத்திலிருந்த, இரண்டு சவரன் மைனர் செயின், கையில் கட்டியிருந்த உயர்ந்த கைக்கடிகாரம், மோதிரம் எல்லாம் பறிமுதல் செய்யப்பட்டன. நல்லவேளை என் காரை உடைக்காமல் விட்டனர்.
நான் தப்பித்தால் போதும் என, அங்கிருந்து கிளம்பினேன்.
வி மான நிலையத்தில், அப்போது தான் தரை இறங்கிக் கொண்டிருந்தது, விமானம். பாஸை அழைத்து வந்து அவரை ஹோட்டலில் தங்க வைத்து, 'மீட்டிங்' முடித்து எல்லாமே எனக்கு சரியாக இருந்தது.
மொபைல் போனை, 'சைலண்டில்' வைத்திருந்த நான், 'ஆன்' செய்யவே இல்லை.
என் வேலை மற்றும் 'லஞ்ச்' முடித்து, நான் கிளம்பும் போது, பகல், 2:00 மணியாகி இருந்தது.
காருக்கு வந்த நான், மொபைலை உயிர்ப்பித்தேன். காவல் நிலையத்தில் இருந்து, ஏகப்பட்ட, 'மிஸ்டு கால்' வந்திருந்தது.
ஏன் என்னவாயிற்று? அந்த அடிபட்ட பையன் இறந்து போய் விட்டானா?
அவசரமாக போனை உயிர்ப்பித்தேன்.
''காட்டூர் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., பேசறேன். எத்தனை தடவை கூப்பிடறது?'' என்றார்.
நான் நடுங்கியபடி, ''ஏன் என்னாச்சு?'' என்றேன்.
''நீங்க நேர்ல வாங்க பேசலாம்.''
நான் அங்கு போக, ஜன்னலில் ஒருவனை கைவிலங்குடன் பூட்டி வைத்திருந்தனர். அவன் திரும்பினான். அவன் சட்டையெல்லாம் ரத்தக்கறை. இவன் அருண் தானே!
''இது உங்க பர்சா பாருங்க. இதுல, 'விசிட்டிங் கார்டு' இருந்தது. இவன் என்ன உதைச்சாலும் ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கறான்,'' என்றார், எஸ்.ஐ.,
அருணைப் பார்த்தேன். அவன் உதடுகளில் காயம்; கண்களில் கண்ணீர்; கைகூப்பினான்.
''இவனுகளுக்கு இதே வேலை சார். ஏதாவது ஒரு பெரிய மனுஷன் கார் முன்னாடி விழறது. அந்த பணக்காரனை மிரட்டி, பணம் பறிக்கிறது. ஒரு கூட்டமே வேலை செய்யுது. ஏதோ ஒரு சினிமா பாத்துட்டு செய்யறாங்க.
''இன்னைக்கு இவன் சிக்கினான். ஒரு பெரிய கூட்டம் இந்த மாதிரி சின்ன பசங்கள மிரட்டி, கார் முன்னால விழ வெச்சு, அப்புறம் அந்த பணத்தை பங்கு போட்டுக்கறாங்க,'' என்றார்.
''ஆமா அந்த ரத்தம்,'' என்றேன்.
''அது ரத்தம் இல்லை, சார். கோழி முட்டையில் துளைப் போட்டு, உள்ளிருப்பதை எடுத்து விட்டு, சிவப்பு மையை நிரப்பி, 'டேப்' போட்டு ஒட்டி, சட்டையின் உள்பக்கம் வச்சிருப்பாங்க. விழுந்த வேகத்துல முட்டை உடைஞ்சு சட்டையெல்லாம் சிகப்பு மை, ரத்தம் மாதிரி பரவிடும்.
''கார்க்காரனும் பயந்து போய், காசு கொடுத்துடுவாங்க. இன்னிக்கு இந்த பையன் சிக்கினான். அவங்க அத்தனை பேரும் ஓடிட்டாங்க. இவன் நல்ல நடிகன்.''
''அவனை, 'ரிலீஸ்' பண்ணிடுங்க. எங்க ஊரு பையன் தான். வேலை தேடி இங்க வந்தான். சாப்பாட்டுக்கு வழியில்லைன்னு சொன்னான். நான் தான், என் பர்ஸை அவன்கிட்ட கொடுத்தேன். ஆபீஸ் வேலையிலே இதெல்லாம் மறந்துட்டுது. நல்லவேளை நீங்க என்னோட, 'விசிட்டிங் கார்டு' பார்த்துட்டு போன் பண்ணி சொன்னீங்க,'' என்றேன்.
விடுவிக்கப்பட்டான், அருண். அவனை அழைத்துக் கொண்டு வெளியே வந்தேன். என் வீட்டு, 'ஷோகேசில்' அவன் எனக்கு பரிசளித்த பட்டாம்பூச்சி வரைந்த முட்டை ஓவியம், என் கண்முன் பறந்தது.
அருண் நடந்ததை சொன்னான்...
''ஆத்தா செத்து போச்சுய்யா. வேலை தேடிட்டு இங்க வந்தேன். யாருமே கண்டுக்கல. யாருமே எனக்கு வேலை குடுக்கல. என்னோட, 'ஷெல்'லை யாருமே வாங்கல. சாப்பாட்டுக்கு வழியில்லை. பட்டினி கிடந்தேன். என்ன பண்றதுன்னே தெரியல. இந்த, 'குரூப்'பில் மாட்டிகிட்டேன்.
''ஏதாவது ஒரு கார் முன்னாடி விழ சொல்வாங்க. அதுக்கு அப்புறமா, எனக்கு கொஞ்சம் பணம் கொடுப்பாங்க, சாப்பிடுவேன். இப்படி தான் நான் வாழ்ந்துட்டு இருக்கேன். நான் துரோகி. உங்களுக்கு துரோகம் செஞ்ச என்னை மன்னிச்சு...'' என, என் கை பிடித்து அழுதான்.
என் காரில் அருணை ஏற்றிக் கொண்டேன்.
''இப்படி ரத்த கறையோட உன்னை வீட்டுக்கு கூட்டிட்டு போய் என் மனைவியிடம் அறிமுகப்படுத்த முடியாது. போகும் வழியில் ஏதாவது, 'ரெடிமேடு' கடை இருந்தால் சட்டை வாங்கிக்கலாம்,'' என்றேன்.
''ஐயா உங்களுக்கு ரொம்ப நல்ல மனசுய்யா. துரோகம் பண்ணின என்ன மன்னிச்சு, எனக்கு நல்லது பண்ண, ஒரு புதுப் பாடமே நடத்தி இருக்கீங்கயா.''
நான் சிரித்தேன்.
''இது புது பாடம் இல்லை. வள்ளுவன் சொன்ன பழைய பாடம் தான். 'இன்னா செய்தாரைன்னு...' சொல்லியிருக்கார். நீ பள்ளிக்கூடம் போகல. அதனால, உனக்கு தெரியல.
''வாழ்க்கையில நாம் சந்திக்கிற ஒவ்வொருத்தர்கிட்டேயும் ஒரு பாடம் இருக்கு. நாமும் கத்துக்கலாம், அவங்களுக்கும் கத்துக் கொடுக்கலாம். இனி, உன்னோட, 'ஷெல்'லுல ரத்தம் இருக்காது. ஓவியம் தான் இருக்கும்.''
அர்த்தம் புரியாமல் கை கூப்பியபடி என்னைப் பார்த்தான், அருண்.
புதிய அருணோதயத்துக்காக நான் காத்திருக்கிறேன். என் கார் வேகம் எடுத்தது.
விமலா ரமணி