தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வாரமலர்/உனக்காகவே நான்! (2)

உனக்காகவே நான்! (2)

உனக்காகவே நான்! (2)


PUBLISHED ON : மே 17, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 17, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்கதைச் சுருக்கம் : நித்யாவின் அத்தை மகன், ராஜாமணி. வித்தியாசமான புத்தகங்களை படித்தால் அதை கொண்டு வந்து, நித்யாவிடம் கொடுப்பான். அவன் தரும் புத்தகங்கள் மூலமாகத்தான் நித்யாவிற்கு எழுத்தும், இலக்கியமும் அறிமுகமாயின. ஆனால், ராஜாமணி வீட்டுக்கு வருவது, அவள், அப்பாவுக்கு பிடிக்காது. அம்மா, பேரழகி. ஜமீன் பரம்பரை என்பதால், மரக்கடை வைத்திருக்கும் கணவனை எளக்காரமாய் பேசுவாள். நறுக்நறுக்குன்னு பேசுவாளே தவிர, வேறு ஒரு குறையும் அவள் மீது சொல்ல முடியாது. ஆனால், தனக்கே சக்களத்தியாக மாறுவாள் சகுந்தலா என்பவள் என்று தெரியாமல், வீட்டுவேலை செய்ய கிராமத்திலிருந்து அழைத்து வந்தாள்.

பாட்டி உயிரோடு இருந்த போதே, கடைசித் தங்கை, பானுமதி பிறந்த பின், உதவிக்காக ஊரிலிருந்து அம்மாவால் அழைத்து வரப்பட்டவள் தான், சகுந்தலா டீச்சர். டீச்சர் என்றால், பி.ஏ., பி.எட்., படித்தவர் அல்ல. வெறும் அங்கன்வாடி ஸ்கூல் டீச்சர் தான். அம்மாவின் துாரத்து உறவு. ஏழ்மைக் குடும்பம். அம்மாவின் வீட்டிலேயே சாப்பிட்டு, இட்ட வேலைகளை செய்து வளர்ந்தவர். ஆகவே, அம்மா உதவிக்கென்று கேட்டதும், அனுப்பி வைத்து விட்டனர். சகுந்தலா அழகெல்லாம் இல்லை. மாநிறம். ஒடிசலான தோற்றம். சற்று உயரம். முகத்தை முந்திக்கொண்டு தெரியும் எடுப்பான மூக்கு. பெரிதான மோட்டு நெற்றி. தலைமுடி நடுமுதுகை கூட எட்டாது.

'அழகே, அழகே நீ எதுக்குப் பொறந்தேன்னு கேட்டால், அழகா இருக்கிறவங்களுக்கெல்லம் அழகு காட்டப் பொறந்தேன்னு சொல்லிச்சாம்...' என்று கூறி, சிரிப்பாள், சகுந்தலா.

சிரிக்கும் போது மட்டும் சற்று லட்சணமாக தெரிவாள்.

'ஏன், சகுந்தலா நீ கல்யாணம் பண்ணிக்கல?' என்று ஒருநாள் கேட்டார், பாட்டி.

'பணமிருந்து அழகிருந்தாலே கல்யாணமாக மாட்டேங்குது. எனக்கெல்லாம் எங்கிருந்து ஆகும், பாட்டி?' என, அதையும் சிரித்துக் கொண்டே தான் சொல்வாள்.

'ஏன் ஆகாது? ஆகும். இனிமேலா ஒருத்தன் பொறந்து வரப்போறான். எங்கேயோ பொறந்து வளர்ந்திருக்கான். யாருன்னு தான் தெரியல. நேரமும், காலமும் கூடி வந்திச்சுன்னா தானாக தேடி வருவான்!'

'உங்க வாய் முகூர்த்தம். அப்படியே நடக்கட்டும் பாட்டி!'

ஆள் தான் ஒல்லிப்பிச்சே தவிர, வேலை படு நேர்த்தியாக இருக்கும். பளிச்சென்று அப்படியோர் சுத்தம். பாத்திரங்கள் துலக்கிக் கழுவினால், அம்மாவின் முகம் மாதிரி டாலடிக்கும். வீடு பெருக்கித் துடைத்தாள் என்றால், பளிச்சென்று இருக்கும். இந்த உருவமா இப்படி வேலை செய்கிறது என்று தோன்றும்.

பாட்டியே அதிகாலை நாலரைக்கெல்லாம் எழுந்திருப்பவர். சகுந்தலா அதற்கு முன்னரே எழுந்து விடுவாள். எழுந்ததும் குளித்து, தலை சீவி, பொட்டு வைத்து லட்சணமாக வருவாள். டிக்காஷன் போட்டு பால் காய்ச்சி, காபி கலந்து நுரை ததும்ப பாட்டிக்கும், அப்பாவுக்கும் தந்து விடுவாள்.

அம்மா கொடுக்கிற காபியின் தரம் ஆளுக்குத் தகுந்த மாதிரி மாறும். பாட்டிக்கு தரப்படும் காபியில், நீர் சற்று துாக்கலாக இருக்கும். பாட்டி அதை இவளிடம் நிறைய நாள் சுட்டி காட்டியிருக்கிறார். ஆனால், சகுந்தலாவிடம் அதெல்லாம் இல்லை. எல்லாருக்கும் ஒரே மாதிரி தான் செய்வாள். எந்தப் பாகுபாடும் இருக்காது. மோரில் தண்ணியும், காபியில் நீரும் விடப்படாத காரணத்தினாலேயே பாட்டிக்கு, சகுந்தலா மீது ஒருவித அபிமானம் ஏற்பட்டிருந்தது.

நித்யாவுக்கும், சகுந்தலா டீச்சரை பிடித்துப் போயிற்று. அம்மா மாதிரி கோபம் காட்டாமல், சிடுசிடுக்காமல் எதற்கும் பொறுமையாக, நிதானமாக இருந்ததே காரணம்.

சகுந்தலா வீட்டுக்கு வந்தபோது, நித்யாவுக்கு எட்டு வயது. அண்ணன் இரண்டு வயது மூத்தவன். தங்கை சுசீலா இரண்டு வயது சின்னவள். கடைசித் தங்கை, பானுமதி கைக்குழந்தை.

பானுமதியை பாட்டி தான் குளிப்பாட்டுவார். தரையில் உட்கார்ந்து புடவையை முழங்காலுக்கு மேல் விலக்கிக் கொண்டு, கால்களை நீட்டி, இருகால்களுக்கு இடையிலுள்ள இடை வெளியில் குழந்தையைக் குப்புறப் போட்டு, வெது வெதுப்பான நீரை இரு கைகளிலும் ஏந்தி, குழந்தையின் முதுகில் தட்டித் தட்டி பாட்டி குளிக்க வைப்பதை பார்க்க, வியப்பாக இருக்கும். அருகிலேயே நின்று குவளையில் நீர் மொண்டு பாட்டியின் குவிந்த கைகளில் ஊற்றுவாள், சகுந்தலா.

'என்னையும் இப்படித்தான் குளிப்பாட்டினயா, பாட்டி?' என்று கேட்டாள், நித்யா.

'உன்ன மட்டுமில்ல. உங்கொப்பன, அத்தைமாரை, உங்கண்ணன், தங்கச்சி அத்தனைப் பேரையும் இப்படித் தாண்டி குளிப் பாட்டினேன்...' என்றாள்.

குழந்தையை குளிப்பாட்டுவது மட்டும் தான் பாட்டியின் வேலை. பூத்து வாலையால் துடைத்து, பேபி பவுடர் போட்டு, பூவுடலை மணக்கச் செய்து, கவுன் அணிவித்து, வீட்டில் தயாரித்த மை தீட்டி, கருப்பு சாந்தில் நெற்றியிலும், கன்னத்திலும் பொட்டு வைத்து, அம்மாவின் அறைக்கு கொண்டு போய் தொட்டிலில் விடுவது, சகுந்தலாவின் வேலை.

இடைப்பட்ட நேரத்தில் சமைத்தும் முடித்திருப்பாள், சகுந்தலா. அப்பா, அண்ணன், நித்யா, தங்கை சுசீலா நால்வரையும் உட்கார வைத்து, சுடச்சுட சாம்பாரும், முழுத்தக்காளி மிதக்கும் ரசமும், கட்டித் தயிரும் பரிமாறுவாள்.

'டீச்சர், அப்பா மாதிரி எனக்கும் முழுத் தக்காளி போட்டு ரசம் வேணும், டீச்சர்...' என, அப்பாவின் தட்டில் மட்டும் தினமும் முழுத் தக்காளி போடப்படுவதைக் கண்டு, ஒருநாள் கேட்டாள், நித்யா.

அதை கேட்டுக் கொண்டிருந்த, அம்மா கடுகடுத்தாள்.

'ஆளாளுக்கு முழுத்தக்காளி போட்டு ரசம் ஊத்தி சாப்பிடுங்க. குடும்பம் உருப்பட்டுடும். பெரிய, மைசூர் மகாராஜா பரம்பரை பாரு. ஒரு நாளைக்கு ஒரு கிலோ தக்காளி வாங்கணும். இதப்பாரு, சகுந்தலா, தேவையில்லாத வழக்கமெல்லாம் பண்ணாத. விரலுக்கேத்த வீக்கம் தான் வீங்க முடியும். இனிமே இந்த மாதிரி முழுத்தக்காளி போடுற பழக்கத்தை விடு. ஒண்ணு சாம்பாருக்கு, ரெண்டு ரசத்துக்குன்னு கணக்கு வச்சிக்க...' என்றாள், அம்மா.

ஆனால், அம்மா சொன்னதை, சகுந்தலா கேட்கவில்லை. அம்மா சொன்ன எதையுமே அவள் கேட்பதே இல்லை. பார்த்துப் பார்த்து அப்பாவுக்கு செய்ததிலும், கவனித்துக் கொண்டதிலும் அம்மாவுக்கு ஏதோ பொறி தட்டியிருக்க வேண்டும்.

'இனிமே, நீ அவருக்கு எதுவுமே செய்ய வேண்டாம். காபியோ, சாப்பாடோ நானே பார்த்துக்கறேன்...' என்றாள், ஒருநாள்.

சகுந்தலா டீச்சர் அழ ஆரம்பித்தாள். அறையினுள் இருந்த அப்பா வேகமாக வந்தார். அம்மாவைக் கோபமாக பார்த்து, 'ஏன் அவளை செய்ய வேணான்ற?' என்று கேட்டார்.

'வேணாம், நானே செய்யிறேன். இத்தனை நாளும் நான் தானே செய்தேன்...'

'அவ செய்துக்கிட்டிருக்கா இல்ல... செய்யட்டும்!'

'இல்ல வேணாம்...' என, அம்மா உறுதியாக சொல்ல, அப்பா சண்டை போடத் துவங்கினார். அம்மா கத்த, அப்பா அடிக்க, வீடு வழக்கப்படி ரணகளமானது. பாட்டி மறுநாளே கிளம்பி, தன் இரண்டாவது மகள் வீட்டிற்கு போய் விட்டார்.

அந்த வயதில் இவளுக்கு ஒன்றும் புரியவில்லை. அம்மா ஏன் அப்படி சொன்னாள் என்று தெரியவில்லை. சகுந்தலா டீச்சர் அழுத காரணத்தையும் அறியவில்லை. அதன்பின், சகுந்தலா டீச்சரிடம் பேசுவதில்லை, அம்மா. அப்பாவிடம் பேசுவதில்லை, சகுந்தலா டீச்சர்.

வீடு மிகவும் இறுக்கமாக இருந்தது. அப்பாவும், அம்மாவும் கடுவன் பூனைகளாக சத்தம் போட்டுக் கொண்டே இருந்தனர். இரவு படுக்கும் போது, 'பயமா இருக்குக்கா...' என்பாள், தங்கை சுசீலா.

இவளுக்கும் உள்ளுக்குள் ஒருவித பயம் ஓடிக்கொண்டே தான் இருந்தது. வீட்டில் பெருத்த சண்டை ஏற்படப் போவதற்கான அறிகுறி தெரிந்தது. பாட்டி இல்லாதது வேறு சங்கடப் படுத்தியது. ஆனாலும், தங்கை, சுசீலாவை அணைத்து அமைதிப்படுத்த முயன்றாள், நித்யா.

வீடு இருந்த நிலையில் ஒருநாள், நித்யாவை அருகில் கூப்பிட்டார், அப்பா.

'நான் ஒரு லெட்டர் தரேன். அதை, சகுந்தலா டீச்சர்கிட்ட கொண்டுபோய் தந்துடறியா?'

'சரிப்பா தரேன்...'

'இந்த விஷயம் உங்கம்மாவுக்கு தெரியக்கூடாது...'

'சரிப்பா...'

'எப்படி குடுப்ப?'

'கவுன்ல மறைச்சு கொண்டு போய் குடுப்பம்ப்பா...'

கொடுத்தாள். அப்பா, திரும்பத் திரும்ப கொடுத்ததை மீண்டும், மீண்டும் கொண்டு போய், சகுந்தலாவிடம் கொடுத்தாள்.

தினமும், மாலை பள்ளி விட்டு வந்ததும், சகுந்தலா டீச்சர் இவளை அழைத்துக் கொண்டு காய்கறி வாங்கப் போனாள். அங்கே அப்பா வந்தார்.

கோவிலுக்கு கூட்டிப் போனாள். அங்கேயும் அப்பா வந்தார்.

'இந்தா, உனக்குப் பிடிச்ச ஐஸ்கிரீம், சாக்லேட் எல்லாம் வாங்கி சாப்பிடு...' என்பார்.

'ஹை!' என்று அப்பா கொடுத்த காசை வாங்கிக்கொண்டு சந்தோஷமாக அவர்களை விட்டுப் போனாள், நித்யா. அவளை அனுப்பிவிட்டு, அவர்கள் இருவரும் ஒதுக்குப் புறமாக யாருமற்ற இடத்திற்கு போயினர்.

நித்தமும் இது நடந்தது.

ஒருநாள்-

'இன்று சாயந்திரம் பீச்சில் சந்திக்கலாம். வழக்கப்படி ஏதாவது சாக்கு சொல்லி, என் பெண்ணோடு வந்து விடு...' என்று எழுதி, சின்னதாக மடித்து, 'இந்தாம்மா... இதை, சகுந்தலா டீச்சர்கிட்ட குடு...' என்ற அப்பாவிடமிருந்து, கடித மடிப்பை வாங்கி கொண்டு போன போது எதிர்பட்டாள், அம்மா.

'என்னடீ கைல?'

'ஒண்ணுமில்லம்மா...'

'பின்ன எதுக்குடி கவுனை அப்படி ஒட்டி பிடிச்சுக்கிட்டிருக்க? கிட்ட வாடி பார்க்கலாம்!'

அவள் ஓட முயன்ற போது, அம்மா எட்டிப் பிடித்தாள். அவள் கையிலிருந்த கடிதத்தைப் பிடுங்கி பிரித்துப் படித்தாள்.

முகம் ஜிவுகிவுத்தது. கண்கள் சிவக்க அவளை ஏறிட்டாள், அம்மா.

இவளை பயம் கவ்விக் கொண்டது.

- தொடரும்.

இ.ரங்கநாயகி


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us