தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/உனக்காகவே நான்! (9)

உனக்காகவே நான்! (9)

உனக்காகவே நான்! (9)


PUBLISHED ON : ஜூலை 05, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 05, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்கதைச் சுருக்கம்: அ த்தை மகன், ராஜாமணியை, மூத்த அண்ணனாக தான் நினைப்பதாகவும், கிரிக்கெட் வீரர் சித்தார்த் கவுதம், தன்னை திருமணம் செய்து கொள்ள விரும்புவதையும், தங்கை சுசீலாவிடம் சொன்னாள், நித்யா. இதை, அவளது அம்மாவும் கேட்டு, அதிர்ந்தாள். நித்யாவின் அப்பாவும் விஷயம் அறிந்து, அவளை கேவலமாக பேச, ஆத்திரமடைந்து அவரை எதிர்த்து பேசினாள், நித்யா. மறுநாள் கல்லுாரிக்கு சென்ற, நித்யாவை எதிர்கொண்டு, தன் காரில் ஏற்றி சென்றான், சித்தார்த் கவுதம். நித்யாவை பற்றியும், அவளது குடும்பத்தை பற்றியும் சகல விஷயங் களையும் அறிந்திருந்த சித்தார்த், அவளை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக மீண்டும் வலியுறுத்த, நித்யாவும் சம்மதித்தாள். கா ரில் பேசிக்கொண்டே சென்ற, நித்யா, ''ராமரை பிடிக்குமா? கிருஷ்ணரை பிடிக்குமா?'' என்று சித்தார்த்திடம் கேட்டாள்.

''எனக்கு கிருஷ்ணரை தான் மிகவும் பிடிக்கும். ஏனென்றால், கிருஷ்ணர் தான் அதிபுத்திசாலி, 'செம ஷார்ப்' மற்றும் 'அட்வெஞ்சரஸ் கேரக்டர்!' வெறும் வீரம் மட்டும் போதுமா? வாழ்க்கை ரம்மியமா, கலர்புல்லா இருக்கணும்ன்னா குறும்பும், விளையாட்டும், கிண்டலும், கேலியும் தேவை தானே. அதோட, அந்த கோபிகா ஸ்த்ரீகள்...''

''அதெல்லாம் சரி. நான் ஒத்துக்கறேன். ஆனால், பெண்கள் விஷயத்தில்.''

''அது ரசனை. எப்பேர்ப்பட்ட ரசனை தெரியுமா? ஆணோ, பெண்ணோ... ரசிக்கத் தெரிய வேண்டாமா? தத்தியாகவா இருப்பது?'' என்றான், கவுதம்.

''சரி, நீங்க ராமனா, கிருஷ்ணனா?''

''ரெண்டும் தான். உன் விஷயத்துல, ராமன். மீதி விஷயத்துல, கிருஷ்ணன்,'' என்று சிரித்தான்.

அந்தச் சிரிப்பில் மனதைப் பறிகொடுத்து, தன்னை மறந்தவளின் தோள் மீது கைபோட்டு இழுத்து தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான், சித்தார்த்.

''ஐயோ, ரோடு, ரோடு. காரு,'' என்று பயந்தாள்.

''கார் தானாகப் போகும். பயப்படாதே. நாளை உன் வீட்டுக்கு வரப் போகிறேன்.''

''ஐயய்யோ... அப்பா!''

''அவரைப் பார்க்கத்தான் வரப் போகிறேன்.''

''எதுக்கு?''

''பொண்ணு கேட்க.''

''ஐயய்யோ... கொன்னுடுவாரு.''

''எப்படி கொல்றாருன்னு நானும் பார்க்கிறேன். இது, சாதாரணக் கை இல்ல. 'கிரிக்கெட்' மட்டை பிடிச்ச கை. எத்தனை, 'ஸ்ட்ராங்'ன்னு நீயே தெரிஞ்சுக்குவ,'' என்று சொல்லி, குறும்பாகச் சிரித்தான், அவன்.

''ஏய்,'' என, செல்லமாக அடிக்கக் கை ஓங்கினாள், அவள்.

அந்தக் கையை பற்றி முத்தமிட்டு சொன்னான்...

''நாளை காலை, உங்க வீட்டு, ஹிட்லர் கடைக்கு கிளம்பறதுக்கு முன்னால் வரட்டுமா, சாயந்திரம் வரட்டுமா?''

''காலையிலேயே வாங்க.''

''ஓ.கே., 'ஹனி...' காலையில் வர்றேன்.''

அவனது கண்களின் மினுமினுப்பில், காதல் என்றால் என்ன என்பதை பரிபூரணமாக புரிந்து கொண்டாள், நித்யா.

அ து, செல்வந்தர்கள் வாழும் தெரு இல்லை.

செல்வந்தர்களுக்கும், நடுத்தர வர்க்கத்தினர்களுக்கும் நடுவில் உள்ள, 'அப்பர் மிடில் கிளாஸ்' என்னும் இடையினர்கள் வசிக்கும் தெரு. அடுக்குமாடி கட்டடங்கள் எட்டிப்பார்க்காத இடம். சின்னச் சின்னதாய் தனித்தனி வீடுகள். ஒரு வீட்டுக்கும், மறு வீட்டிற்கும் இடையில் குட்டி, 'காம்பவுண்ட்' சுவர். இரண்டு கார்கள் நிற்கக்கூடிய இடைவெளிக்குப் பின் இரும்பு கேட். பின்னால், இரண்டு மூன்று தென்னை மரங்கள். இன்றைய காலகட்டத்தில் அரிதாகிப் போன கிணறு, ராட்டினம், தாம்பு கயிறு, கட்டி இழுக்க வாளி, துணி துவைக்கும் கல், ஒட்டி கட்டப்பட்ட தண்ணீர் தொட்டி, சின்ன 'சிமென்ட்' தரைக்கு அப்பால், வாழை மரங்கள் மற்றும் பூச்செடிகள் என, 1960ம் ஆண்டுகால விஷயங்கள்; மாறாத சம்பிரதாயங்களை மீறாத மனிதர்கள் வசிக்கும் தெருவாக இருந்தது. நித்தம் புழங்குகிறவர்களை தவிர, அந்நிய மனிதர்கள் அதிகம் வராத தெரு. கடைசி வீட்டிற்கு விருந்தாளி வந்தால், இந்த கடைசி வீட்டிற்கும் தெரிந்து விடும்.

அப்படிப்பட்ட தெரு அன்று அதிகாலையிலிருந்து அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது. செய்தித்தாள்களின் நிருபர்களும், புகைப்படக்காரர்களும் எந்த வீடு என்று அறியாமல் அந்தக் கோடிக்கும், இந்தக் கோடிக்கும் வலம் வந்து கொண்டிருந்தனர். தொலைக்காட்சி 'சானல்'களை சேர்ந்த வண்டிகள் வரிசையாக நின்று கொண்டிருந்தன. தெருவில் வசிப்பவர்களுக்கு எதுவும் புரியவில்லை.

சரியாக, காலை 7:30 மணியளவில், நீண்ட நெடும் வெள்ளை நிற கார் தெருவினுள் நுழைந்த போது, மீடியாக்காரர்கள் பரபரத்தனர். 'பிளாஷ் லைட்'கள் மின்னின. பத்திரிகை நிருபர்கள் காரோடு ஓடி வந்தனர். தொலைக்காட்சி கேமராக்கள் சுறுசுறுப்படைந்தன.

கார், நித்யாவின் வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டு, கீழே இறங்கினான், சித்தார்த் கவுதம்.

''சார், சார்...'' என, நிருபர்கள், 'மைக்'கோடு அவனை நெருங்கிய போது தான் தெரு விழித்துக் கொண்டது.

''சித்தார்த் கவுதம்டா!''

''கூடவே, ரிஷப் ஷெட்டிடா!''

இளைஞர்களும், இளம் பெண்களும் அவர்களை நோக்கி ஓடி வந்தபோது, அவர்களை கையமர்த்தினான், சித்தார்த். மீ டியாக்காரர்களிடம், புன்னகையோடு, ''ஹலோ, 'பிரதர்ஸ்' ஒரு அரைமணி நேரம், 'வெயிட்' பண்ணுங்க, 'ப்ளீஸ்.' உங்க அத்தனை பேருக்கும் பதில் சொல்றேன்,'' என்றவன், சக வீரன் ரிஷப் ஷெட்டியின் கைப்பற்றி, 'கமான்... வி வில் கோ!' என்று, நித்யாவின் வீட்டினுள் நுழைந்தான், சித்தார்த் கவுதம்.

அவனை முதலில் கண்ட, சுசீலா ஆச்சரியம் தாங்காமல் நின்றாள்.

''என்ன, சுசீ... என்னைப் பத்தி நிறைய அக்காகிட்ட சொன்னயாமே!''

அ தற்குள் அப்பா வரவேற்பறைக்கு வந்தார். சுசீலா மெல்ல நழுவி கதவருகில் நின்று கொண்டாள்.

''யாரு நீங்க?'' என்று சிடுசிடுத்தார், அப்பா.

கதவருகிலிருந்து ஓடிவந்த, சுசீலா, ''அப்பா 'கிரிக்கெட் பிளேயர்ஸ்'ப்பா. இவரு சித்தார்த் கவுதம், அவரு, ரிஷப் ஷெட்டி,'' என்றாள், தன் சந்தோஷத்தை அடக்கிக் கொள்ள முடியாதவளாக!

அவளை ஒரு முறை முறைத்த அப்பா, ''நான் உன்னைக் கேக்கல. நீ உள்ள போ,'' என்றார்.

''அவளை ஏன் மாமா போகச் சொல்றீங்க? அத்தை, நாராயணன், ரெண்டு பேரையும் வரச் சொல்லுங்க. நித்யா... 'வேர் ஆர் யூ?' நீயும் வெளிய வா.''

''மாமாவா, அத்தையா? என்ன சொல்றீங்க?''

''நீங்க நித்யாவோட அப்பா தானே? அவுங்க அம்மா தானே? நித்யாவை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா, நீங் க எனக்கு மாமா, இவங்க அத்தை இல்லையா?''

தன் வாழ்நாளில் முதல் முறையாக வாயடைத்து நின்றார், அவர்.

தொடர்ந்து பேசினான், சித்தார்த்...

''நித்யாவை நான் ரொம்ப நாளா காதலிக்கிறேன். அது, அவளுக்கே தெரியாது. ரெண்டு நாள் முன்னால தான் அவகிட்டயே சொன்னேன். எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியது உங்க பொறுப்பு. சிம்பிளா நீங்க கல்யாணத்தை முடிங்க. நான் 'கிராண்டா ரிசப்ஷன்' வெச்சுக்கறேன்.''

''வெளிய போடா நாயே,'' என்று கை நீட்டி வாசலைக் காட்டினார், அவர். முகமெல்லாம் சிவந்து கிடந்தது.

''நோ, நோ... 'மைண்ட் யுவர் லாங்வேஜ்' மாமா,'' என்றவன், ''அத்தை, நீங்க என்ன சொல்றீங்க? உங்களுக்கு இதில் ஆட்சேபனை எதுவும் இருக்கா?'' என்றான்.

அம்மா என்ன சொல்லப் போகிறாள் என்பதை எதிர்பார்த்து ஆர்வமாகக் காத்திருந்தாள், நித்யா.

அம்மா, அவளை ஒரு முறை ஏறிட்டாள். பின்பு அப்பாவைப் பார்த்தாள். அந்தப் பார்வையில், மிதமிஞ்சிய வெறுப்பு தெரிந்தது. முகத்தில் பழிவாங்கும் பாவனை மேலோங்கி இருப்பதை கவனித்தாள். அம்மா சொல்லப் போவதை அனேகமாக யூகித்து விட்டாள், நித்யா.

அதுபோலவே அம்மா பேசத் துவங்கினாள். அவளைப் போலவே குரல் கம்பீரமாக வெளிப்பட்டது...

''இதைப் பாருங்க, மிஸ்டர் சித்தார்த் கவுதம். நீங்க, எங்க வீட்டுக்கு வர நாங்க ரொம்பக் குடுத்து வெச்சிருக்கணும். என் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கறதுல எனக்குப் பரிபூரண சம்மதம். அது, அவளுடைய பூர்வ ஜென்ம புண்ணியம். நான் மனசார சொல்றேன். நீங்க அவளைக் கூட்டிக்கிட்டுப் போய் கல்யாணம் பண்ணிக்குங்க. சந்தோஷமாக இருங்க. என் வாழ்த்து உங்களுக்கு எப்போதும் உண்டு.''

''ரொம்ப சந்தோஷம் அத்தை. நன்றி அத்தை. நீங்களாச்சும் கல்யாணத்துக்கு வரக்கூடாதா?''

''இல்லப்பா, இவரு என்னை வெளிய அனுப்பமாட்டாரு.''

''அனுப்புனா வாங்க. நம்ம வீட்டுக்கு போயிடலாம்.''

''இன்னும் ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க கல்யாணத்துக்கு. நாராயணன் பாவம், அப்பாவி. உலகம் தெரியாதவன். அப்பன் சொல்லைத் தட்டாதவன். அவனுக்கு ஒரு வழி ஏற்படுத்திக் கொடுக்கணும்.''

''இதையெல்லாம் நான் செய்ய மாட்டேனா, அத்தை. கண் அசைவுல எல்லா வேலையும் முடிக்க என்னால் முடியும்.''

''உன்னால் முடியும்ன்னு எனக்கு தெரியும். ஆனால், என்னால் அப்படி வர முடியாது. குடும்பம்ங்கறது துாக்கணாங்குருவி கூடு மாதிரி; சுலபமா பிரிக்க முடியாது.''

''சரிங்க அத்தை. அப்போ எங்களை வாழ்த்துங்க. வா, நித்யா. கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கலாம். மாமா, இப்படி வந்து அத்தை பக்கத்துல நில்லுங்க.''

சரேலென்று முகத்தை திருப்பிக் கொண்டு போனார், அவர்.

''அவரு அப்படித்தான்,'' என்றாள், நித்யாவின் அம்மா.

''விடுங்கத்தை. அவர் குணம் அப்படி. வா, நித்யா, அம்மா கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கலாம்.''

இருவரும் வணங்கி எழுந்த போது, 'கரகர'வென்று கண்ணீர் வடித்தாள், அம்மா.

''என்னை மன்னிச்சுருடி, நித்யா... உன்னை நான் புரிஞ்சுக்கல. எத்தனையோ விதத்துல உன் மனசைக் குத்தி ரணமாக்கி இருக்கேன்.''

''அம்மா, என்ன இது? நான் செஞ்சதும் தப்புதானேம்மா.''

''சின்னப் பொண்ணுடி நீ. அறியாமல் செஞ்சது. அது கூடப் புரியாமல் நான்...'' என்று விசும்பினாள்.

''விடும்மா. அதையெல்லாம் ஏன் இப்ப நினைச்சுக்கணும்.''

நித்யாவை கட்டி முத்தமிட்டு சொன்னாள்...

''தீர்க்காயுசா, தீர்க்க சுமங்கலியா இருடி.''

''போகலாமா, நித்தி?''

''இருங்க. என், 'டிரஸ்' எல்லாம்.''

''இதைத்தான், வெகுளின்னு சொன்னேன். ஒரு துணிக்கடையே வாங்கித்தர என்னால் முடியும்ங்கற போது, இப்படி கேட்டா? இதுக்குப் பேர் தான் குழந்தைத்தனம்,'' என்று, சித்தார்த் சிரித்ததை கண்ட அம்மா நினைத்துக் கொண்டாள்...

'எத்தனை அழகா இருக்கான் இவன், என் பொண்ணுக்கு ஏத்த மாதிரி!'

''நித்யா, காதுல, கழுத்துல, கைல இருக்குறதையெல்லாம் கழட்டிக் கொடுத்துட்டு வா.''

''மாப்பிள்ளே,'' என்று வாய் நிறைய அழைத்தாள், அம்மா...

''இதெல்லாம் இவ அப்பா வாங்கிக் கொடுத்தது இல்ல. எங்கம்மா வீட்டுலேயிருந்து நான் போட்டுக்கிட்டு வந்தது. எங்கம்மா எனக்கு தந்தது . பரம்பரையா வருது. ரொம்ப ராசியானது. தாய் வீட்டு சீதனமா இது மட்டுமாவது அவகிட்ட இருக்கட்டும்.''

''சரிங்க அத்தை. உங்க, 'சென்டிமென்ட்'டை நான் மதிக்கிறேன். அப்ப நாங்க கிளம்புறோம், அத்தை. கல்யாணம் எங்கன்னு தெரியப்படுத்துறேன். முடிஞ்சா வாங்க. கிளம்பலாமா, நித்யா.''

சட்டென்று, சுசீலாவை திரும்பி பார்த்து சிரித்தான். அவளது உள்ளம் கொள்ளை போனது.

வெ ளியில் வந்து, நித்யாவின் கைப்பற்றி சற்று உயர்த்தி காட்டி சொன்னான்...

''நண்பர்களே, 'திஸ் ஈஸ்' நித்யா, என் மனைவியாகப் போகிறவள். கல்யாணம் திருப்பதியில் நடக்கும். 'ரிசப்ஷன்' இங்கு தான் இருக்கும். நீங்க எல்லாரும் வரணும்.''

கூட்டம் ஆரவாரம் செய்தது. கை தட்டி தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

தொலைக்காட்சி, 'சானல்'கள் அதை, 'லைவ்' ஆகக் காட்டின. 'பிளாஷ்'களில் மின்னிய புகைப்படங்களையும், செய்திகளையும் தங்கள், பத்திரிகைகளுக்கு ஒப்படைக்க ஓடினர், நிருபர்கள்.

கூட்டத்தின் முன்னால் நின்றிருந்த, பத்ரி என்ற கல்லுாரி மாணவனை, நித்யாவின் வீட்டின் எதிரில் வசிப்பவனை அருகில் அழைத்து அணைத்துக் கொண்டான், சித்தார்த்.

''நன்றி, 'ப்ரோ!' நீ, நித்யா பத்தின எல்லா தகவல்களையும் கொடுத்ததால் தான் இது சாத்தியமாச்சு.''

''இது என் பாக்கியம். உங்களுக்கு செய்ய குடுத்து வெச்சிருக்கணும்.''

''கல்யாணத்துக்கு நிச்சயம் வந்துடு,'' என்று சொல்லி, மூவரும் அந்த வெளிநாட்டு காரில் ஏறினர்.

அம்மாவும், சுசீலாவும் வாசலுக்கு வந்து, அன்பாகவும், பெருமையாகவும் கையசைத்தாலும், கண்கள் கலங்கின.

''நேரா நாம இப்ப, ராஜாமணி வீட்டுக்குப் போறோம்,'' என்றான், சித்தார்த் கவுதம்.

''ராஜாமணி இப்ப இங்க இல்ல. குலுமணாலி போயிருக்காரு.''

''தெரியும். அவரோட அப்பா, அம்மாகிட்ட ஆசிர்வாதம் வாங்கிக்க வேணாமா?'' என்று பதிலளித்த, சித்தார்த் கவுதமை பெருமை பொங்கப் பார்த்தாள், நித்யா.



— தொடரும்

இ.ரங்கநாயகி


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us