PUBLISHED ON : ஜூலை 05, 2026

எம்.செல்லையா, ஆத்துார்: 'ஹிந்தி பேசுபவர்கள் கூட, என்னை, 'கிங் மேக்கர்' என்று சொல்கின்றனர்...' என்கிறாரே, வி.சி., கட்சி திருமாவளவன்...
ஆமாமாம்! ஈரானுடன் போர் செய்ய, இஸ்ரேலுக்கு கட்டளையிடுவதற்கு முன், அமெரிக்க அதிபர் டிரம்ப், இவரிடம் தான் ஆலோசனை நடத்தினார்!
மூ.வள்ளி, வீரபாண்டி, கோவை: கூட்டணி கட்சிகள் அனைத்தும் வெளியேறி, தி.மு.க.,வை தனிமரம் ஆக்கிவிட்டதே...
அதை உணராமல் உதயநிதி, இன்னும் சிறுபிள்ளைத்தனமாக பேசிக் கொண்டிருக்கிறார். கொந்தளிக்கும் கட்சியினரை, எப்படி கட்டியணைப்பது என்ற குழப்பத்தில், தலைவர் ஸ்டாலின் தவிக்கிறார். உதயநிதியின் கைக்கு கட்சி சென்றால், அழிந்து விடும் என்பதால் தான், துரைமுருகன் போன்றோர், பொறுப்பை விட்டுக் கொடுக்கத் தயங்குகின்றனர்!
ஆ.கணேசன், சென்னை: 'தமிழ்நாட்டின் பெருமையே, மக்கள் நலத் திட்டங்கள் தான். அவை நிறுத்தப்படாது...' என்று, நிதியமைச்சர் மரிய வில்சன் கூறியுள்ளாரே...
த.வெ.க., அரசு அனைவரிடமும் இணக்கமாக செயல்பட்டு, நல்ல திட்டங்களைச் செயல்படுத்த முன் வருகிறது. மற்ற கட்சிகள், 'நெகட்டிவ்' அரசியலை மட்டும் பேசி, குறை கூறி, காரியத்தைக் கெடுக்காமல், நல்ல ஆலோசனைகளை வழங்க முன்வர வேண்டும்!
வி.பிரான்சிஸ்கா, சென்னை: சட்டசபையில் முதல்வர் பேச்சு எப்படி?
வாயைத் திறங்கள் சி.எம்., எனக் கூறியவர்கள் எல்லாம் வாயடைத்து போய் விட்டனரே, பார்த்தீர்களா... சட்டசபையின் கடைசி நாளில், சரவெடி போட்டுவிட்டார், விஜய்!
பி.ஜெயபிரகாஷ், அரண்மனைபுதுார், தேனி: நான்கு மாநில வாக்காளர் அட்டைகளை சட்ட விரோதமாக வைத்திருப்பதாக, நடிகர் பிரகாஷ் ராஜ் மீது வழக்கு உள்ளதே...
தீய சக்திகளுடன் தொடர்புடைய கட்சிகளுக்கு, ஜால்ரா அடிக்கும் பழக்கம் உள்ளவர், பிரகாஷ் ராஜ் என்பது, நாட்டிற்கே தெரியும். தேசிய வாக்காளர் சிறப்பு திருத்தப் பட்டியலை தயார் செய்வதை எதிர்த்து இவர் குரல் கொடுத்தபோது கூட, இத்தகைய மோசடியில் இவர் ஈடுபட்டிருப்பார் என நினைக்கத் தோன்றவில்லை. சட்டம் தன் கடமையைச் செய்யும். பொறுமையுடன் இருப்போம், ஜெயபிரகாஷ்!
பி.ஆனந்த், சென்னை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தொகுதி, த.வெ.க., எம்.எல்.ஏ., இளங்கோவன், தன் மகளை, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 6ம் வகுப்பில் சேர்த்துள்ளாரே...
நல்ல விஷயம் தானே... அரசு பள்ளிகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைக் கண்கூடாகக் கண்டு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், ராஜ்மோகனுக்கும், எம்.எல்.ஏ., இளங்கோவன் தெரியப்படுத்துவார் என எதிர்பார்ப்போம்!
கா.காளீஸ்வரி, புதுக்கோட்டை: 'கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றச் சொல்லி, பொதுமக்கள் தெருவுக்கு வந்து போராடத் துவங்கி விடுவரோ என அஞ்சி, அவர்களின் கோபக்கனலில் இருந்து தப்பித்துக் கொள்ளவே, நிதித் துறையின் வெள்ளை அறிக்கை வெளியிட்டு, த.வெ.க., அரசு நாடகம் ஆடுகிறது...' என, தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் நிதியமைச்சர், தங்கம் தென்னரசு கூறியது பற்றி...
தங்கள் ஆட்சிக்கு முந்தைய, அ.தி.மு.க., அரசு குறித்த வெள்ளை அறிக்கையை, முன்பு தி.மு.க., வெளியிட்ட காரணத்தை, இப்போது தான் தங்கம் தென்னரசு கூறுகிறார்!
சுப்புலட்சுமி சந்திரமவுலி, சென்னை: உ.பி.,யில் பா.ஜ.,- எம்.எல்.ஏ., தீரேந்திர சிங், விமான நிலையம் கட்ட நிலம் கொடுத்த விவசாயிகளை, விமானத்தில் அழைத்துச் சென்று கவுரவப்படுத்தி இருக்கிறாரே...
நிலம் கொடுத்த, பெரிய மனதுடைய விவசாயிகளையும் பாராட்டுவோம்; அவர்களை கவுரவப்படுத்திய, எம்.எல்.ஏ.,வையும் பாராட்டுவோம். அந்த மாநிலத்தின் வர்த்தகம் மற்றும் சுற்றுலாத் துறை போன்ற பல தொழில்களும் முன்னேற்றம் அடையுமே!
எம்.பி.தினேஷ், கோவை: 'விவாகரத்துகள் அதிகரிக்க, மொபைல் போன் முக்கிய காரணம்...' என, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறியுள்ளாரே...
உண்மையைத் தான் கூறி இருக்கிறார், நீதிபதி. இக்காலத்தில், வீட்டுக்குள் யாரும் ஒருவருடன் ஒருவர் பேசி மகிழ்ந்து, ஒன்றாக உண்டு, சந்தோஷமாக இருப்பதில்லையே... குழந்தைகள் உட்பட அனைவரும், மொபைல் போனில் தானே மூழ்கி உள்ளனர்! அப்புறம் எப்படி குடும்ப உறவு மேம்படும்?
மூ.வள்ளி, கோவை: 'ஒடிசாவில், எல்.கே.ஜி., முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை, இலவச கல்வி வழங்கப்படும்...' என, அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதுபோன்ற நல்ல திட்டங்களை, தமிழக அரசு கொண்டு வருமா?
முன்னாள் முதல்வர் காமராஜரின் கனவு இது. தனது, ஆதர்ஸ ஐந்து கதாநாயகர்களில், காமராஜரையும் ஒருவராக வைத்திருக்கிறார், முதல்வர் விஜய். அரசு கஜானாவை போதுமான அளவு நிரப்பியவுடன், இதைச் செய்வார் என, எதிர்பார்க்கலாம். இதோடு, மருத்துவத்தையும், அதற்கான காப்பீட்டையும் இலவசமாக கொடுத்தால், விஜயை மக்கள் கொண்டாடுவர்!
வீ.குமாரி, சென்னை: ஜெர்மனியின் சர்வாதிகாரி, ஹிட்லரிடம் இருந்து பெற்ற உத்வேகத்தில் தான், நீர்நிலைகளைப் பாதுகாக்கும் சிறப்பு அதிரடிப் படைக்கு, 'ஹைட்ரா' என்று பெயர் வைத்ததாக, தெலுங்கானா முதல்வரான காங்.,கை சேர்ந்த, ரேவந்த் ரெட்டி கூறி உள்ளாரே...
ஹிட்லர், சர்வாதிகாரி என்று மட்டும் தான் சொல்லிக் கொண்டிருக்கிறோம். அவர் செயல்படுத்திய நல்ல திட்டங்கள், யாருக்கும் தெரியவில்லை. அதை வெளிக் கொணர்ந்துள்ளார், தெலுங்கானா முதல்வர், ரேவந்த் ரெட்டி. தெலுங்கானாவில் நீர்நிலைகள் இத்திட்டத்தால் மேம்பட்டால், மற்ற மாநிலங்களும் பின்பற்றலாமே!
சி.ஆர்.ஹரிஹரன், ஆலுவா, கேரளா: தமிழக அரசின், 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை' பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் குறைக்குமா?
விஜய் அரசின் நல்ல திட்டம் இது. இப்படையில் பெரும்பாலானோர், துடிப்புடன் செயல்படும் இளம் பெண்களாகவும் உள்ளனர். முந்தைய ஆட்சிகளில் இருந்தது போல், இப்படை சுணங்கிப் போகாமல், சீறி செயல்பட்டால், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்து, மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழலாம்!
டி.ஜே.ரகுராமன், சென்னை: காஷ்மீரின் ஒரு கிராமத்தில், அரசு பள்ளி ஒன்றுக்கு, ஹிந்தி நடிகர், அக்ஷய் குமார், 1 கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ளாரே...
இப்படி நாடு முழுதும், எல்லா நடிகர்களும் அரசு பள்ளிகளை தத்தெடுத்துக் கொண்டால், பள்ளிகளின் தரம் உயரும்; மாணவர்களும் ஆர்வமுடன் பள்ளிக்கு வரும் நிலை உருவாகும்!
மு.கருப்பசாமி, சென்னை: 'தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் பங்காளிகள். நாங்கள் கூட்டணி வைத்தால் என்ன தவறு?' என்று, தி.மு.க., செய்தித் தொடர்பாளர், ஆர்.எஸ்.பாரதி கூறுவது பற்றி...
'நாம பேசறது ரொம்ப அதிகம்...' என, ஆர்.எஸ்.பாரதியே நினைத்திருப்பார். ஆனால், ஆட்சி போய்விட்டதே! 'எதைத் தின்றால் பித்தம் தெளியும்' என்ற கதை தான். பாவம், விட்டு விடுவோம்!
