தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

1


PUBLISHED ON : ஜூலை 05, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 05, 2026

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பா - கே

'உ ஸ்... அப்பாடா! அக்னி நட்சத்திர காலம் முடிந்த பிறகும், வெயில் குறையவே இல்லையே...' என்றபடி வந்தமர்ந்தார், 'திண்ணை' நாராயணன்.

'ஓய், நாணா... எல்லாவற்றுக்கும் புலம்பல் தானா? வெயிலோ, மழையோ எது அதிகமானாலும் புலம்புறீரே... எது வந்தாலும் எதிர்கொண்டு சமாளிக்கும் மனநிலை எப்பத்தான் வருமோ!' என்று எகிறினார், லென்ஸ் மாமா.

'ஐயோ, லென்சு, என்ன விட்டுடு...' என்று அலறினார், நாராயணன்.

'மாமா, இந்த ஆண்டு, வானிலையை தலைகீழாக மாற்றக்கூடிய, 'எல்நினோ' உருவாகியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதே...

'எல்நினோ' என்றால் என்ன?' என்று கேட்டான், மாமாவின் உதவியாளன்.

'அப்படி கேள்றா என் சக்கரக்கட்டி. ஓய், நாணா, எல்லாவற்றுக்கும் ஒரு பின்னணி கதை சொல்வீரே... இதற்கு ஏதாவது கதை இருக்கிறதா?' என்று, நாராயணனை வம்புக்கு இழுத்தார், லென்ஸ் மாமா.

'நான், இந்த விளையாட்டுக்கே வரலைப்பா. டேய் தம்பி, எனக்கு ஒரு சொம்பு தண்ணி கொண்டு வந்து கொடுப்பா...' என்று, அந்த உதவியாளனிடம் கேட்டார், நாராயணன்.

சுத்திகரிக்கப்பட்ட ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலை கொண்டு வந்து கொடுத்தான், உதவியாளன்.

அவனை அருகில் வர சொல்லி, விளக்கமளிக்க ஆரம்பித்தார், லென்ஸ் மாமா:

'எல்நினோ' என்ற ஸ்பானிஷ் வார்த்தைக்கு, 'லிட்டில் பாய்' அதாவது, சின்ன பையன் என்று அர்த்தம். வெப்பம் அதிகரிக்கும், மழை பொழிவு குறையும் என்ற அர்த்தத்தில், இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது.

'எல்நினோ' பசிபிக் பெருங்கடலில் நடக்கும் ஒரு தற்காலிக காலநிலை மாற்றம். வழக்கமாக, பசிபிக் பெருங்கடலின் மேற்கு பகுதியில் வெப்பமான நீரும், கிழக்கு பகுதியில் குளிர்ந்த நீரும் இருக்கும். ஆனால், 'எல்நினோ' காலத்தில், இது, அப்படியே தலைகீழாக மாறி, மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு நீர், வழக்கத்தை விட அதிக வெப்பம் அடையும். இது, உலகெங்கும் உள்ள வானிலையை தலைகீழாக மாற்றும் வல்லமை கொண்டது.

பசிபிக் பெருங்கடலின் வெப்பநிலை வழக்கத்தை விட, 60 சதவீதம் அதிகமானால், அதை, 'சூப்பர் எல்நினோ' என்பர். இந்த ஆண்டு, வெப்பநிலை 0.7 செல்ஷியஸ் அளவை அடைந்துள்ளதால், 'எல்நினோ' காலம் தொடங்கி விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது, இந்திய வானிலை ஆய்வு மையம்.

இந்தியாவின் வாழ்வாதாரமாக இருக்கும் தென்மேற்கு பருவமழை, 'எல்நினோ' காலத்தில், வழக்கத்தை விட குறைய வாய்ப்புள்ளது. கடந்த, 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இந்த ஆண்டு மிகக்குறைந்த மழைப்பொழிவு இருக்கும் என, கணிக்கப்பட்டுள்ளது.

மழை வளம் குறையும் போது, நெல், கரும்பு போன்ற பயிர்களின் விளைச்சல் பாதிக்கப்பட்டு, உணவு பொருட்களின் விலை உயரும். இந்தியாவின் பல பகுதிகளில் கடுமையான வெப்ப அளவு உயர்ந்து, குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படும் என்று எச்சரித்துள்ளனர்.

குறிப்பிட்ட கால இடைவெளியில், வெப்பம் அதிகரிப்பதும், மழை குறைந்து, வறட்சி ஏற்படுவதும் ஆதிகாலத்திலிருந்தே ஏற்படுவது தான். இது, நம் புராணங்களிலும் காணப்படுகிறது.

ஹிந்து புராணங்களின்படி, இந்திரன், வருணன் மற்றும் சூரியனால் தான் மழை உருவாகிறது. சூரியன், ஒளியின் கடவுள்; நீரை ஆவியாக்குகிறார். வருணன், நீர் கடவுள்; ஆவியாக்கிய நீரை, மேகமாக மாற்றுகிறார். இந்திரன், மேகத்தை மழையாக கொட்ட வைப்பவர்.

இவர்களுக்குள், யார் பெரியவர் என்ற, 'ஈகோ' சண்டைகளும் உண்டு என, 'ரிக்' வேதத்தில் கூறப்பட்டுள்ளதாம்.

யாதவர்கள், மழை வேண்டி, இந்திரனை பிரார்த்தித்து விழா எடுப்பது வழக்கமாக இருந்துள்ளது. கால்நடைகள் மேய பசுமையான இடம் தேவை. பசுமையை கொண்டுவர மழை தேவை. அதற்கு, இந்திரனின் உதவி தேவை. இதற்காகவே, அக்காலத்தில், இந்திரனுக்கு விழா எடுத்ததாகவும் நம் பழங்கால நுால்களில் இடம் பெற்றுள்ளது.

எல்லாம் சரியாக நடந்தால், என்ன சுவாரஸ்யம் இருக்கும். 'ஹீரோ' என்று இருந்தால், வில்லனும் இருக்கணும் அல்லவா! இந்திரனுக்கு வில்லனாக வந்தவன், விருத்திரன் என்ற அரக்கன். விருத்திரன் என்றால், தடுப்பவன் அல்லது மறைப்பவன் என்று பொருள்.

விருத்திரன் மேகங்களில் உள்ள நீரை சிறைபிடித்து, மழை பெய்ய விடாமல் உலகில் வறட்சியை ஏற்படுத்தினான்.

சும்மா விடுவானா, இந்திரன்... தத்சி என்ற முனிவரின் முதுகெலும்பிலிருந்து செய்யப்பட்ட வஜ்ராயுதத்தால், அரக்கனை கொன்று நீரை விடுவித்ததாக, ஒரு புராண கதை உள்ளது.

'நம் புராண, விருத்திரன் தான், நவீன யுகத்தில், 'எல்நினோ' என்று பெயர் பெற்றுள்ளான்...' என்று நகைச்சுவையாக கூறுகின்றனர், வானியல் அறிஞர்கள்.

பொதுவாக, பூமிக்கு மேல் உள்ள வளிமண்டல காற்று, கன்னியாகுமரி அருகே இரு கிளைகளாக பிரிந்து, ஒன்று அரபிக்கடல் பக்கமாகவும், மற்றொரு கிளை வங்காள விரிகுடா பக்கமாகவும் சென்று இந்தியா முழுவதும் மழை பொழிவை தருகிறது. இதைத்தான், தெ ன்மேற்கு, வடகிழக்கு பருவமழை என்று நாம் குறிப்பிடுகிறோம்.

இந்த ஆண்டு, பசிபிக் பெருங்கடல் பகுதிக்கு மேலே உள்ள வளிமண்டலம், வெப்பமடைந்து, ஈரப்பதமான காற்றின் பெரும்பகுதியை இந்தியாவுக்கு எதிர்திசையில் இழுத்து செல்கிறது. விளைவு, வழக்கமான அளவை விட, இந்த ஆண்டு, நமக்கு மழை பொழிவு குறைந்து விடும்.

இந்தியாவில் பொழியும் மழையில், 80 சதவீதம் பருவகால மழையால் கிடைக்கிறது. நம் விவசாயம், 80 சதவீதம் பருவமழையை தான் சார்ந்துள்ளது.

இப்போது புரிகிறதா, 'எல்நினோ' பற்றியும், மழைபொழிவு குறைவால் ஏற்படும் பாதிப்பும், என்று கூறி முடித்தார், லென்ஸ் மாமா.

'சரி... இந்த பிரச்னையை எதிர்கொள்வது எப்படி?' என்றேன், நான்.

'நாணா மாதிரி புலம்பாமல், தண்ணீரையும், விளை பொருட்களையும் வீணாக்காமல், சேமித்து வைத்து கொள்ளணும். மேலும், புவி வெப்பமயமாவதை தடுக்க, ஏற்கனவே, உலக நாடுகள் கூறியுள்ள வழிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடித்தால் மட்டுமே நாமும், எதிர்கால சந்ததியினரும் நிம்மதியாக வாழ முடியும்...' என்றார், மாமா.

'விளக்கமாக சொன்னீங்க, மாமா. இனி, என் நண்பர்களுக்கும் இதை கூறி, உஷாராக இருக்க சொல்றேன்...' என்றான், உதவியாளன்.

'சபாஷ்டா தம்பி. உன்னை மாதிரி இளைஞர்களால் தான் மாற்றம் வரும்...' என்று அவனை பாராட்டினார், மாமா.

டெயில் பீஸ்:

கடந்த, 2015ல், இதே போல், மழை பொழிவு குறைந்து, வறட்சியும், பயிர் சேதமும் ஏற்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us