PUBLISHED ON : ஜூலை 05, 2026

'தாய்' வார இதழில் பணிபுரிந்தவரும், பத்திரிகையாளருமான பிரபு என்ற பிரபாகரன், தான் சந்தித்து பேட்டியெடுத்த திரை நட்சத்திரங்களுடன் தனக்கு ஏற்பட்ட, அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்: பா ண்டியன்-இளவரசி ஜோடி போல, மோகன்-நளினி ஜோடியும் ராசியான ஜோடி தான். மோகன் அப்போது வெள்ளி விழா நாயகன்.
நளினி எப்போதும் என்னை, 'அண்ணா' என்று தான் அழைப்பார். இன்று வரை அதிலிருந்து மாறவில்லை. டி.ராஜேந்தரின், உயிருள்ளவரை உஷா படத்தில் அறிமுகம் செய்வதற்கு முன்பே, ஒத்தையடி பாதையிலே என்ற படத்தில் நடித்திருந்தார். அதுபோல, ரஜினியின் தங்கையாக, ராணுவ வீரன் படத்தில் நடித்திருக்கிறார். நளினியின் இயற்பெயர், ராணி.
'தாய்' வார இதழில் வாரந்தோறும், 'புதுமுகம் அறிமுகம்!' என்ற ஒரு பகுதியை நாங்கள் ஆரம்பித்து, புதிய நடிகையரை பற்றி ஒரு பக்கத்திற்கு படத்துடன் செய்தி வெளியிடுவோம். நடிகை, நளினியின் படத்தை கொண்டு வந்து கொடுத்தார், புகைப்பட நிபுணர், பிரவீன் குமார். 'புதுமுகம் அறிமுகம்!' பகுதியில் அந்தப்படத்தை வெளியிட்டோம்.
'பிரபல நாட்டிய பயிற்சியாளர் வைக்கம் மூர்த்தியின் மகள். நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு வரை படித்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளை நன்கு அறிந்தவர். தற்போது, டி.ராஜேந்தர் தயாரிக்கும் படத்தில், இவர் அறிமுகமாகிறார். இவருக்கு பரதநாட்டியம் தெரியும்...' என்று குறிப்பிட்டிருந்தோம்.
பத்திரிகையில் செய்தி வந்ததும் நுங்கம்பாக்கம் அரசு பெண்கள் பள்ளியில் இருந்து இரண்டு ஆசிரியைகள் என்னை தேடி வந்து விட்டனர்.
'எங்க பள்ளிக்கூடத்தில் படிக்கிற பொண்ணு, நடிக்கப் போனது மகிழ்ச்சி தான். ஆனால், நீங்க பாட்டுக்கு நுங்கம்பாக்கம் பள்ளியில் படித்தவங்கன்னு செய்தி வெளியிட்டதால், எங்க பள்ளியில் படிக்கிற பொண்ணுங்களை, பசங்க கேலி பண்றாங்க...' என்றனர்.
நான், 'இனி அப்படி செய்தி வராமல் பார்த்துக் கொள்கிறோம்...' என்று அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தேன்.
நளினியின் வீடு அப்போது சென்னை நுங்கம்பாக்கத்தில், வள்ளுவர் கோட்டம் அருகே தான் இருந்தது. வாடகை வீடு தான். அவரது பெரிய அண்ணனும், நடன பயிற்சியாளர். இன்னொரு அண்ணன், ராஜூ துணை ஒளிப்பதிவாளர். குடும்பமே சினிமாவில் தான் இருந்தது. நளினி பேச ஆரம்பித்தால், சீரான நதி போல அவரிடமிருந்து வார்த்தைகள் வந்துவிழும். உயிர் உள்ளவரை உஷா படம் தந்த வெற்றி, நளினியை உச்சத்திற்கு கொண்டு சென்றது. நளினிக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன.
நளினி நடித்த, தங்கைக்கோர் கீதம் படத்தை, ஹிந்தியிலும், தெலுங்கிலும் தயாரித்தார், ஏவி.எம்.குமரன். டி.ராஜேந்தர் நடித்த வேடத்தில், ஹிந்தியில் அமிதாப்பும், தெலுங்கில் சீரஞ்சீவியும் நடித்தனர். இரண்டிலும், நளினி தான் கதாநாயகி.
தெலுங்கில், உயிர் உள்ள பிரேம சாகரம் என்ற பெயரில், நுாறு நாளை தாண்டி ஓடியது. சிரஞ்சீவிக்கு ஜோடியாக தெலுங்கில் நான்கு படமும், கன்னடத்தில் இரண்டு படமும், நளினிக்கு, 'புக்' ஆனது.
எங்கே படப்பிடிப்பு இருந்தாலும் தகவல் தருவார், நளினி. நடிகர் சுரேஷுடன், வாகினி ஸ்டூடியோவில் நடித்துக் கொண்டிருந்தபோது என்னை வரச் சொல்லியிருந்தார், நளினி. நான் அங்கே சென்று, நளினியை பார்க்கும்போது நடந்த விஷயம் இப்போதும் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
வாகினி ஸ்டூடியோவில் ஆஷா படத்திற்காக, சுரேஷுடன் நடித்துக் கொண்டிருந்தார், நளினி. சுரேஷை அப்போது, 'சாக்லேட் பாய்' என, அழைப்பர். இவரது வீடு, சென்னை தி.நகரில் சி.ஐ.டி., நகர் கிழக்கில் இருந்தது. சுரேஷின் அப்பா, கோபிநாத் கன்னடத்தில் பிரபல இயக்குனர்.
சிவகுமார் இரட்டை வேடங்களில் நடித்த, ராமன் பரசுராமன் படத்தை, சுரேஷின் அப்பா தான் தயாரித்திருந்தார். அப்பா இயக்கிய படங்களில், எடிட்டிங் உதவியாளராக இருந்தவர், சுரேஷ். முப்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார், கோபிநாத்.
சுலபத்தில், பேட்டி தரமாட்டார் சுரேஷ். பன்னீர் புஷ்பங்கள் படத்தில், இயக்குனர், பாரதி வாசு இவரை அறிமுகம் செய்தார். நளினியோடு சேர்ந்து, பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பார்.
நான், 'தாய்' இதழில், சுரேஷ் பற்றி எழுதிய செய்திக்கு என்னிடம் சண்டைக்கு வந்து விட்டார். எனக்கு அருகில் இருந்த, நளினி, 'பிரபு அண்ணா மத்தவங்களை மாதிரி இல்ல. பெரும்பாலும் உண்மையைத்தான் எழுதுவார்...' என்று எனக்காக பரிந்து பேசினார். எங்களுக்குள் நளினி ஏற்படுத்திய அந்த சமரசம் மறக்க முடியாதது. இதற்காக தான், என்னை வாகினி ஸ்டூடியோவிற்கு வர சொல்லியிருந்தார், நளினி.
சுரேஷிற்கு அப்பா கோபிநாத் மாதிரி டைரக்டர் ஆக வேண்டும் என்று ஆசை. 'காதல் மற்றும் திரில்லர் கதைகள் தயாரா இருக்கு...' என்று அடிக்கடி சொல்வார். ஆனால், அது நிறைவேறாத ஆசையாக போனது.
பூ விலங்கு படத்தில் அறிமுகமானவர் நடிகர், முரளி. ஒருமுறை என்னை பெங்களுருக்கு வர சொன்னார். அங்கே போனதும், முரளியின் அப்பா சித்தலிங்கய்யா, அடுத்து தான் எடுக்க இருந்த படக் கதையை, என்னிடம் சொன்னார். எனக்கு அந்த கதை பிடிக்கவில்லை. மனதில் பட்டதை நான் வெளிப்படையாக சொல்லி விட்டேன். அப்பா முன் நான் அப்படி பேசியது, முரளிக்கு சற்று மன கஷ்டமாக இருந்தாலும், முரளி வெற்றி நாயகனாக தொடர்ந்து இருக்க வேண்டும் என்ற ஆசையில் தான் அப்படி சொன்னதாக கூறி, சமாதானப்படுத்தினேன்.
தன் மகனை பெரிய, 'ஆக்ஷன்' நாயகனாக நடிக்க வைக்க வேண்டும் என்பது, முரளி அப்பாவின் ஆசை. ஆனால், முரளி அதற்கு நேர் எதிர்... மென்மையான இளைஞராகவே நடிக்க விரும்பினார். இதை என்னிடம் சொல்லி, அப்பாவிடம், 'என் விருப்பத்தை கூறுங்கள்...' என்றார். ஆனால், நான் கூறவில்லை. அதன்பின், தமிழில் பிரபல நடிகராகி விட்டார், முரளி.
- தொடரும்.
ஆர். பிரபாகரன்
