தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : ஜூலை 05, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 05, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஓய்வு என்பது புதிய தொடக்கம்!

அரசு பணியில் இருந்து, ஓய்வு பெற்ற என் நெருங்கிய நண்பரை, சமீபத்தில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

'ஓய்வு பெற்ற பின், வாழ்க்கை எப்படி இருக்கிறது?' என்று கேட்டேன்.

அதற்கு, 'நான் ஓய்வு பெற்ற முதல் சில நாட்கள் ரொம்ப கடினமாக இருந்தது. ஒரு கட்டத்தில், 'நான் தேவையில்லாதவனா ஆகிட்டேனோ! மீதி நாட்களை வெறுமனே தான் வாழணுமா...' என்று என்னை நானே கேட்டு, அதற்கான பதிலை தேட ஆரம்பித்தேன்...

'காலையில் நடைப்பயிற்சி செல்லும்போது, என்னைப் போன்ற பணி ஓய்வு பெற்ற பலரை சந்தித்தேன். அவர்களும் என்னைப் போலவே, 'நேரம் போகவில்லை, வாழ்க்கை வெறுமையாக உள்ளது...' என்று சொல்லிக்கொண்டிருந்தனர். அப்போது தான் ஒரு எண்ணம் தோன்றியது. 'நாம் எல்லாரும் சேர்ந்து ஏதாவது சேவை செய்யலாமா?' என்று கேட்டேன்.

'அனைவரும் ஒப்புக்கொள்ளவே, ஒரு சிறிய குழு ஆரம்பித்தோம். தனியாக வாழும் முதியவர்களுக்கு உதவி செய்வது, மருத்துவ முகாம்கள் நடைபெறும்போது ஒத்துழைப்பு தருவது, மரக்கன்று நடுதல் போன்ற சின்ன சின்ன வேலைகளைச் செய்ய ஆரம்பித்தோம்.

'இப்போது மனசு நிறைவாக உள்ளது. முன்பு நேரம் போகவில்லையேன்னு நினைத்த நாங்கள், இப்போது நேரம் போதவில்லைன்னு சொல்லும் நிலைக்கு வந்து விட்டோம். நான் ஓய்வு பெற்றது என் வேலையிருந்து தான், வாழ்க்கையிலிருந்து இல்லை...' என்றார்.

அவரது அனுபவத்திலிருந்து, ஓய்வு என்பது ஓய்ந்து போவது அல்ல, நாம் சேர்த்த அனுபவத்தை சமூகத்துடன் பகிரும் பொன்னான வாய்ப்பு என்ற உண்மையை உணர்ந்தேன்.

ஓய்வுபெற்றவர்களே... வாழ்க்கை உங்களுக்கு ஒரு புதிய தொடக்கத்தை அளிக்கிறது. அதை அர்த்தமுள்ளதாக மாற்றுவது உங்கள் கைகளில் தான் உள்ளது!

அ.துரைமணி, நாகர்கோவில்.

ஆசிரியர்களுக்கு ஆதரவாக இருங்கள்!

சமீபத்தில், வெளியூரிலுள்ள என் உறவினரைப் பார்க்க சென்றிருந்தேன். அப்போது, போலீஸ் வாகனத்தில் சிலரை பிடித்துப் போவதைப் பார்த்து, அதுபற்றி உறவினரிடம் விசாரித்தேன்.

அதற்கு அவர், 'எங்கள் ஊரிலுள்ள பள்ளி வளாகத்தின் அருகில், அவர்கள் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்தனர். இது, மாணவர்களின் பாதுகாப்புக்கு ஆபத்தாக இருக்கும் என்பதால், அப்பள்ளி ஆசிரியர் ஒருவர் தைரியமாக அவர்களைத் தட்டிக் கேட்டார்.

'அதனால் அந்த நபர்கள், குறிப்பிட்ட அந்த ஆசிரியரை மிரட்டினர். இந்த விஷயம் மாணவர்களின் பெற்றோருக்கு தெரிய வந்ததும், அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, காவல் நிலையத்தில் புகார் கொடுத்து, அந்த சமூக விரோதிகளை கைது செய்ய வைத்துள்ளனர்.

'அதோடு, அந்த ஆசிரியரின் துணிச்சலையும், பொறுப்புணர்வையும் பாராட்டி, 'நாங்கள் எப்போதும் உங்களுடன் இருப்போம்...' என்று மாணவர்களின் பெற்றோர் உறுதியளித்துள்ளனர்...' என்றார்.

அதைக் கேட்டபோது, எனக்கு மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் இருந்தது.

இதேபோல் ஒவ்வொரு ஊரிலும், பள்ளி வளர்ச்சியிலும், மாணவர்களின் பாதுகாப்பிலும் அக்கறை கொண்ட, நல்ல ஆசிரியர்களுக்கு, பெற்றோர்களும், சமூகமும் ஆதரவாக இருந்து, அவர்களோடு இணைந்து செயல்பட்டால் மட்டுமே, பள்ளி சூழல் பாதுகாப்பாக மாறி, மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையும்.

வ.முருகன், விழுப்புரம்

நல்லதொரு சேவை!

சமீபத்தில், கேரளம் மாநிலம், பாலக்காட்டிற்கு சென்றிருந்தேன். அங்கு, பேக்கரியுடன் இணைந்த டீ கடை ஒன்றில், தேநீர் அருந்திய பின், பணம் செலுத்துவதற்காக சென்றேன். கட்டணம் செலுத்துமிடத்தை சுற்றியிருந்த பலகையில், 'பிளம்பர், எலக்ட்ரீஷியன், கார்பென்டர், ஏ.சி., மெக்கானிக், வெல்டர்' மற்றும் மேஸ்திரி என, பல்வேறு தொழில் செய்பவர்களின், 'விசிட்டிங் கார்டுகள்' வைக்கப்பட்டிருந்தன.

இதுகுறித்து கடைக்காரரிடம் கேட்டேன்.

அதற்கு, 'கடைக்கு வருபவர்களில் யாருக்காவது, தங்கள் வீட்டில் குழாய் பழுது அல்லது மின்பழுது ஏதாவது ஏற்பட்டிருந்தால், இங்குள்ள அட்டைகளிலிருந்து, சம்பந்தப்பட்டவர்களிடம் தொடர்பு கொண்டு, வேலையை முடித்து கொள்வர்; இத்தொழில் செய்பவர்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும். மேலும், என் கடையின் பெயரும் பட்டித்தொட்டி எல்லாம் பரவும்.

'விளம்பரம் செய்து, தொழிலை மேம்படுத்திக் கொள்ளும் வசதி, இத்தகைய சிறு தொழில் செய்பவர்களுக்கு இருக்காது என்பதால், இலவசமாக ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறேன்...' என்றார், கடைக்காரர்.

கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு, தேவையான நபர்களின் தொடர்பு எண்கள் ஒரே இடத்தில் கிடைக்கின்றன; தொழிலாளர்களுக்கு, புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கின்றனர் மற்றும் இவருடைய கடைக்கும், மக்களுடைய நன்மதிப்பு கிடைக்கிறது.

ஒரே செயலில், மூன்று தரப்பினரும் பயன்பெறும் இந்த எளிய யோசனை, சிறந்த சேவையாக தோன்றியது.

இப்படிப்பட்ட சிறிய முயற்சிகளாலும், பல குடும்பங்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்ற முடியும் என்று உணர்த்தும், கடைக்காரரை மனதார பாராட்டினேன்.

— பி.என்.பத்மநாபன், கோவை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us