விசேஷம் இது வித்தியாசம்: ஆமை புகுந்தால் வீடு உருப்படும்!
விசேஷம் இது வித்தியாசம்: ஆமை புகுந்தால் வீடு உருப்படும்!
PUBLISHED ON : ஜூலை 05, 2026

ஜூலை 11 - கூர்ம ஜெயந்தி
'ஆமை புகுந்த வீடு உருப்படாது!' என்று சொல்வதைக் கேள்விப்பட்டுள்ளோம்; ஆனால், உருப்படும் என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கிறதா?
திருமாலின் தசாவதாரங்களில், இரண்டாவது அவதாரம், கூர்மம். கூர்மம் என்றால், ஆமை.
இந்த அவதாரம், வைகாசி பவுர்ணமியில் நடந்ததாக ஒரு சாராரும், ஆனி தேய்பிறை துவாதசியில் நிகழ்ந்ததாக மற்றொரு சாராரும் சொல்வர். பஞ்சாங்கங்களில், இந்த இரண்டு நாளில் ஏதாவது ஒன்றை, கூர்ம அவதார நாளாக குறித்திருப்பர்.
இது, உலகத்திற்கு, ஒழுக்கத்தையும், மனவலிமையையும் கற்றுத்தர வந்த அவதாரம். பாற்கடலைக் கடைந்த போது, மந்தர மலையை மத்தாகக் கொண்டனர், தேவ-அசுரர்கள். அதைக் கடலில் நிலை நிறுத்த, ஒரு பொருள் தேவைப்பட்டது. அப்போது, திருமால் ஆமையாக உருமாறி கடலுக்கடியில் சென்று, தன் முதுகில் மலையைத் தாங்கிக் கொண்டார். மலை போல துயரங்கள் வந்தாலும், அதைத் தாங்கும் மனஉறுதி வேண்டும் என்பதை இச்செயல் சுட்டிக்காட்டுகிறது.
தன்னுள் அத்தனை உறுப்புகளையும் ஒடுக்கிக் கொள்ளும் சக்தியுடையது, ஆமை. இது, மனக்கட்டுப்பாட்டை குறிக்கிறது. ஆக, மனக்கட்டுப்பாடும், மனவலிமையும் இருந்தால் எதிலும் வெற்றி தான் என, நமக்கு பாடம் நடத்துகிறது, ஆமை. இதனால், இந்த ஜந்துவை, தன் அவதார கோலமாகக் கொண்டார், திருமால்.
கூர்மம் என்றால், குறுக்கிக் கொள்ளுதல் என்ற பொருளும் உண்டு. இதனால் தான், குறளில்,
ஒருமையுள் ஆமை போல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்புடைத்து!
என்கிறார், வள்ளுவர்.
ஒரு பிறப்பில், கண், காது, மூக்கு, வாய், உடல் ஆகிய, ஐந்து உறுப்புகளை அடக்கிக் கொண்டால், அது ஏழு பிறவிக்கும் பயனைத் தரும் என்பது இதன் பொருள்.
ஆமை புகுந்த வீடு உருப்படாது என்ற சொலவடை ஏன் வந்ததென்றால், அது மெதுவாக நடக்கும் இயல்புடையது. இதை சோம்பல் என்றும் சொல்லலாம். சோம்பேறிகளைக் கொண்ட வீடு உருப்படாது என்பதால் அப்படி கூறினர். மற்றபடி ஆமை என்ற ஜந்துவுக்கும், வீடு உருப்படாமல் போவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அப்படி இருந்தால், திருமால், இதைத் தன் வடிவமாக ஏற்றிருப்பாரா?
பாரதத்தில், கூர்ம அவதார கோவில்கள் குறைவு. கர்நாடகா மாநிலம், சித்ரதுர்கா மாவட்டம், ஹொசதுர்கா அருகில் கவி ரங்கபுரா கிராமத்தில், ரங்கநாத சுவாமி கோவில் உள்ளது. இங்கு மூலவரே, கூர்மம் தான். குன்றிலுள்ள குகைக்கோவில் இது.
பெங்களூருவிலிருந்து ஹொசதுர்கா, 214 கி.மீ., துாரம். ரயிலில் செல்லலாம். இங்கிருந்து, 30 கி.மீ., சென்றால் கவிரங்கபுராவை அடையலாம். சென்னையில் இருந்து, ஷிவமொகாவுக்கு விமானம் உண்டு. இங்கிருந்து கவிரங்கபுராவுக்கு 133 கி.மீ.,
கோவில் திறக்கும் நேரம்: காலை 9:00 மதியம் 2:00 மணி.
- தி. செல்லப்பா
