PUBLISHED ON : ஜன 11, 2026

அகல்யா புரண்டு படுத்தாள்.
துாக்கம் எங்கோ, 10 ஊர் தள்ளி நின்று வேடிக்கை பார்த்தது. எப்படி வரும் உறக்கம்? தெளிந்த மனதும், நிறைந்த உணர்வும் இருந்தால்தானே! உடல் மட்டும் சோர்வுற்றால் போதுமா என்ன? அடுத்த நாள் என்ன நடக்குமோ, மதியம் என்ன நடக்குமோ, சாயங்காலம் என்ன நடக்குமோ என்று அங்கமெல்லாம் ஒவ்வொரு நிமிடமும் பதறிக்கொண்டே இருக்கிறதே!
''அகல்யாக்கா, அகல்யாக்கா,'' என, ஓடி வந்தாள், பவானி. குரலின் பதைபதைப்பே அவள் கொண்டு வரும் செய்தியை சொல்லி விட்டது.
விருட்டென எழுந்தாள்.
''என்ன பவானி. என்ன என்ன?''
''பெரியம்மாவுக்கு, உயிர் பிரிஞ்சிட்ட மாதிரி தான் இருக்கு. பாவம்க்கா, நல்ல பெண்மணி.''
''அய்யோ, டாக்டரை கூப்பிடு,'' என்று விரைந்தாள், அகல்யா.
உண்மைதான். பெரியம்மா போய் விட்டாள்.
இந்த மாதத்தில் இது, இரண்டாவது மரணம். 10 நாட்களுக்குள், இரண்டு மரணங்கள்.
ஒவ்வொரு முதியவராக வந்து, பெரியம்மாவை சூழ்ந்து கொண்டனர்.
அத்தனை முகங்களிலும் துக்கம்; அதைவிட அச்சம். கருமை நிறம் அந்த அறையையே சூழ்ந்து கொண்டது.
'சாரதாம்பாள் முதியோர் இல்லம்' என்ற பெயர்ப்பலகை மேல், வரிசையாக அண்டங்காக்கைகள் உட்காரத் துவங்கின. உடல் நடுங்கினாள், அகல்யா.
மொ பைல் போனில் எதிர்பார்த்திருந்த அழைப்பு வந்து விட்டது.
மந்திரமூர்த்தி சார்!
''என்ன, அகல்யா நடக்குது? அந்தம்மாவுக்கு பெரிய பிரச்னை எதுவும் இல்லையே... வழக்கம் போல டாக்டர், 'செக்-அப்' எல்லாம் நடந்துச்சா இல்லையா?'' என்றார்.
வழக்கமாக அவர் குரலில் பரிவு இருக்கும், அக்கறை இருக்கும். இப்போது முழுக்க முழுக்க எரிச்சலைத் தவிர வேறு இல்லை.
''ரொம்ப சாரி சார்,'' என்பதற்குள் தொண்டை வழுவழுத்துப் போனது.
''சாரியா?''
''நாப்பது பேர் இருக்காங்க, சார். சொந்த, தாய்-தகப்பன் போலத்தான், பாத்துக்கறேன். இது, சம்பளத்துக்காக செய்கிற வேலை இல்லை. சின்ன வயது முதலே என் மனதில் உருவான சேவை உணர்வு. பி.எஸ்.சி., 'சோஷியல் சர்வீஸ்' படிச்சதே இப்படி வந்து பணி செய்யணும்ன்னு தான் சார்.''
''அகல்யா, உன் மேல் குறை சொல்வது என் நோக்கம் இல்லே. உனக்கே தெரியும், நானும் அமைதி தேடி இந்தியாவுக்கு வந்தவன் தான். அமெரிக்க தொழில் வாழ்க்கை தராத திருப்தியை, இந்த முதியோர் காப்பகங்கள் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் தான், நாலு இடங்களில் துவங்கி நடத்தறேன். உன்னை மாதிரி சேவை மனப்பான்மை உள்ளவர்களை தேடித்தான் பொறுப்பாளர்களாக போடறேன். ஆனாலும், இப்படி அடுத்தடுத்து முதியவர்கள் இறந்து போவது நியாயம் இல்லை,'' என்றார்.
''ஆமாம் சார். எனக்கும் தாங்க முடியலே. நான் துாங்கி ரெண்டு வாரம் ஆச்சு. வேலுத்தாய் அம்மா இறந்ததே பெரிய வேதனை. இப்ப, காசி பெரியம்மா இறந்துட்டாங்க. கடவுள் மேல் சத்தியமா சொல்றேன். எல்லாரையும் அன்பா, அக்கறையா தான் பாத்துக்கறேன்.
''வயதானவங்களுக்கு எலும்பு முறிவு சீக்கிரம் ஏற்படும், வழுக்கி விழுவது நடக்கும், ஜீரணக் குறைபாடு இருக்கும், கண்பார்வை மங்கும், நடக்கவே சிரமமாக இருக்கும்ன்னு ஒவ்வொரு விஷயத்தையும் மனசுல வெச்சுக்கிட்டுதான் கவனிக்கிறேன், சார். ஒரு வேலையும் செய்ய விடாம, குழந்தை போல பாத்துக்குறேன். கதை சொல்லி ஊட்டி விட்டிருக்கேன். ஆனாலும், ஏன் இப்படி நடக்குதுன்னு தெரியலே,'' குலுங்கி அழுதாள் அகல்யா.
சங்கடத்துடன் அவர் மெல்லச் சொன்னார்...
''அழாதே, அகல்யா. உன் மேல் குறை சொல்லணும்ன்னு சொல்லலே. என்ன கோளாறு என்று பாரும்மா. நான் மதியம் வரேன்,'' என்று, சொல்லி போன் அழைப்பை துண்டித்தார், மந்திரமூர்த்தி
'ஏன் இப்படி நடக்கிறது?' என்பது புரியாமல் நடந்தாள், அகல்யா.
ஆ தரவற்றோர் இல்லத்தில் தான் பெரும்பாலும் வளர்ந்தாள், அகல்யா.
சித்தி மட்டும் எப்போதாவது வந்து பார்த்து விட்டு, கண்ணீர் விட்டுப் போவாள். படுக்கை, உணவு, பொழுதுபோக்கு என்று எதுவும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. ஏதோ ஒரு மேம்போக்கான வாழ்க்கை.
ஆனால், மனதில் படிப்படியாக ஒரு எண்ணம் வளர்ந்து கொண்டே இருந்தது. கூட இருந்த தோழி, ஜோதி மிகப் பெரிய ஆறுதல்.
ஆதரவற்றோருக்கு, பணி செய்ய வேண்டும். அது தொடர்பான படிப்பில் சேர வேண்டும். விலக்கப்பட்டவர்களிடம் தங்களைப்போல் அன்பு காட்டுவதும், கருணை காட்டுவதுமாக வாழ்க்கை நகர வேண்டும். முதியவர்களாக இருக்கட்டும். அன்பின் செடியில் வளரும் எல்லா மலர்களும் மனிதன் கையில் போவதில்லையே... நிறைய பூக்கள் நடைபாதையில் விழுந்து நசுக்கப்படுகின்றன. அந்தப் பூக்களுக்கு தாங்கள் பாதுகாவலர்களாக இருக்க வேண்டும்.
படிப்பு முடியவும், மந்திரமூர்த்தியின், 'ஆலமரங்கள்' என்ற அமைப்பு அவர்களை பணியில் அமர்த்தவும் சரியாக அமைந்தது. 'சாரதாம்பாள் முதியோர் இல்லம்' என்று அவர், இரண்டு இடங்களில் நடத்த முதலில் திட்டமிருந்தார். அகல்யா, ஜோதி இரண்டு பேருக்கும் பயிற்சிகள், 'ஒர்க்ஷாப்' என்று கொடுத்து பொறுப்பாளர்களாக நியமித்து விட்டார்.
கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் அந்தப் பணியில் அவ்வளவு ஆர்வமாக ஈடுபட்டனர்.
அப்பா, அம்மாவின் இரு மடங்கு உருவங்களாக, தாத்தா - பாட்டிகளை பார்த்து குளிர்ந்து போனாள், அகல்யா. மாசற்ற சிரிப்புக்கும், பாசாங்கற்ற பேச்சுக்கும் மயங்கினாள்.
அவர்களைக் கையில் வைத்து தாங்கினாள். பணியாளர்களை சுறுசுறுப்பாக இருக்க வைத்து, முதியோர்களை செல்லமாக வைத்துக் கொண்டாள். மனப்பூர்வமாக அன்புமழை பொழிந்து பாசவட்டத்துக்குள் வைத்துக் கொண்டாள்.
ஆனாலும், அவர்கள் மகிழ்ச்சியாக இல்லையா? ஏன் இப்படி நோய்வாய்ப்படுகின்றனர்; ஏன் மரணங்களைத் தழுவுகின்றனர்.
மொபைல்போனில் குறுஞ்செய்தி ஒலி கேட்டது. ஜோதி அனுப்பியிருந்தாள்.
அதில், 'உன்னைப் பார்க்க வேண்டும், அகல்யா. வருகிறாயா? எனக்கு இங்கே புது, 'அட்மிஷன்'கள் தினம் வருவதால் நகர முடியவில்லை. 'ஜஸ்ட்' இரண்டு மணி நேரம் வந்துவிட்டுப் போ தங்கம்...' என்றிருந்தது.
'உடனே வருகிறேன்...' என்று பதில் செய்தி அனுப்பினாள், அகல்யா. மனம் எதையோ தேடி ஏன் அலைகிறது என்று தெரியவில்லை.
ஜோ தியின் காப்பகம் முதல் பார்வையிலேயே கண்களை கவர்ந்து விட்டது.
அப்படியே நின்று விட்டாள், அகல்யா.
முதியவர்கள் கூட்டம் கூட்டமாக தோட்டத்தில் இருந்தனர்.
''ஏய் சின்னு. என் செடியைப் பார்த்தியா? நாலாவது இலை விட்டிருக்கு. சூப்பர் இல்லே?'' என்று, தள்ளியிருந்த பாட்டியிடம் உற்சாகமாக சொன்னார், பெரியவர் ஒருவர்.
''அட பெரியசாமி. நாலாவது இலைக்கு இவ்வளவு அலட்டலா? என்னுடையது பார்த்தியா? மொட்டே விட்டிருக்கு,'' என்றாள், பாட்டி.
''மொட்டு விட்டதா பெரிசு? என் கீரைப்பாத்தி முழுசாவே வளந்துட்டது. இன்னிக்கு சமையலுக்கு இதுதான்.'' என்றாள், இன்னொரு பாட்டி.
''வாத்துக் கூட்டம் பின்னாடி ஓடறா பாரு, வேலம்மா. அட, முட்டை போட்டிருக்கு வாத்துங்க, சூப்பர்!''
''சின்ன வயசுல இருந்தே முருங்கைன்னா அவ்வளவு ஆசை எனக்கு. குழந்தை வளர்க்கிற மாதிரி வளர்ப்பேன். எல்லாம், 40 வயசோட போச்சு. இப்போ இந்த, 70 வயசுல எனக்குன்னு ஒரு முருங்கை மரம் வளர்ப்பேன்னு நினைச்சு கூட பாக்கலே,'' என்ற, முதியவர்...
''அட, இங்க பாருங்கடா. நம்ம பார்வதி அம்மா, மருதாணி மரத்தை எம்புட்டு நல்லா வளக்குதுன்னு.''
''ஆமா, மருதாணி பிடிக்காத பெண் உண்டா, நம்ம ஊருல? அதுவும் இது பெண் மரம். விரல்ல வெச்சா அப்படி தீ மாதிரி சிவக்கும். இன்னிக்கு நைட்டு டின்னர் முடிஞ்சதும், பெண்கள் எல்லாரும் கைகளில் வெச்சுக்கலாம்,'' என்றாள், பார்வதி.
''சுட்ட வடுன்னு முடிகிற குறள் சொல்லுங்க பாக்கலாம் யாராச்சும்,'' என்ற, மணியிடம்...
''இன்னிக்கு குவிஸ் மாஸ்டர் திருக்குறளை கையில் எடுத்துட்டார், டோய்,'' என்றனர், அங்கிருந்தவர்கள்.
அப்படியே நகராமல் பார்த்துக் கொண்டு நின்றாள், அகல்யா.
பின்னால் தோளில் வந்து மென்மையாகப் படிந்தது, ஒரு கரம்.
''ஜோதி, என்ன அதிசயம் இதெல்லாம்? இவ்வளவு உற்சாகமா, இத்தனை ஆர்வமா இருக்காங்க, இந்த முதியவர்கள். எப்படி ஜோதி?'' என்றாள்.
மென்மையாகச் சொன்னாள், ஜோதி...
''ஆமாம், அகல்யா. நானும் முதலில் இந்த பெரியவர்களை உள்ளங்கையில் வைத்து தாங்கினேன். இமை போல பார்த்துக் கொண்டேன். ஓடாமல், நகராமல், நிற்காமல் அவர்களை சொகுசாக வைத்து கொண்டேன். ஆனால், அவர்களுக்கு அதில் சந்தோஷமே இல்லை என்பதை விரைவிலேயே புரிந்து கொண்டேன், அகல்யா!''
''என்ன?''
''ஆமாம். ஒரு உண்மை எனக்கு உறைத்தது, அகல்யா. வாழ்வின் அர்த்தம் என்ன என்று யோசித்தேன். ஏதாவது ஒரு குறிக்கோள், அதை நோக்கிய பயணம், சின்னஞ்சிறு அடிகள். அது நிறைவேறும் போது கிடைக்கும் மனநிறைவு. இது தானே வாழ்வின் அர்த்தம்? என்ன செய்யலாம் என்று யோசித்தேன்; விடை கிடைத்தது.
''ஒவ்வொருவருக்கும் செடி, விதை, கோழிக்குஞ்சு, வாத்துக் குஞ்சு, நாற்று என்று கொடுத்தேன். வளர்த்து ஆளாக்குவது உங்கள் பொறுப்பு என்று சொன்னேன். 'இதெல்லாம் வளர்ந்து வரும்வரை நாங்கள் உயிரோடு இருப்போமா?' என்று முதலில் சிரித்துக் கொண்டே கேட்டனர்.
''ஆனாலும், பணி செய்யத் துவங்கினர். ஒரு உயிர் நம்மை நம்பி இருக்கிறது என்கிற பொறுப்பு அவர்களை செயலாற்ற வைக்கிறது. அதை சரியாக நிறைவேற்றுவது நம் கடமை என்கிற உணர்வு அவர்களை ஊக்குவிக்கிறது. பாரேன் எவ்வளவு ஆர்வமாக வேலை செய்கின்றனர். கூடவே, பணியாட்களும் இருப்பர்,'' என்று கூறினாள், ஜோதி.
இதையெல்லாம் பரவசத்துடன் பார்த்தபடியே நின்றாள், அகல்யா.
''லட்சியத்துடன் கூடிய வாழ்க்கையில் தான் அர்த்தமும் இருக்கு, பலனும் இருக்கு இல்லையா, அகல்யா? சின்ன இலக்குகள், சின்ன சவால்கள் இவை எல்லாம் தான் வாழ்க்கையை பொருள் உள்ளதாக ஆக்கி, வாழ்வதற்கான காரணங்களைக் கொடுக்கிறது, இல்லையா?''
கண்களில் நீர் பெருகியதோடு, மனதில் தெளிவும் கிடைப்பதை உணர்ந்து, தலையசைத்து புன்னகைத்தாள், அகல்யா.
வி. உஷா

