
சென்னையில் ஜெமினி ஸ்டுடியோ உதயமானதற்கு ஒரு கதை உண்டு.
இயக்குனர் கே.சுப்பிரமணியமும், வேறு சிலரும் சேர்ந்து, 'மோஷன் பிக்சர் புரொடியூசர்ஸ் கம்பைன்ஸ்' என்ற ஸ்டுடியோவை நடத்தி வந்தனர். நவாப் ராஜமாணிக்கத்தின், 'இன்பசாகரன்' நாடகம், இந்த ஸ்டுடியோவில் திரைப்படமாக தயாராகி வந்தது.
அப்போது, ஸ்டுடியோவில் தீ விபத்து ஏற்பட்டு, இன்பசாகரன் படத்தின், 'நெகட்டிவ்' எரிந்து போயிற்று. ஸ்டுடியோவும் சேதம் அடைந்தது. இதனால், ஸ்டுடியோ மூடப்பட்டு, ஏலத்துக்கு வந்தது.
உயர்நீதிமன்ற அதிகாரி முன்னிலையில், 'டெண்டர்' முறையில் ஸ்டுடியோ ஏலம் விடப்பட்டது.
'சீல்' செய்யப்பட்ட, ஐந்து கவர்கள் அவருக்கு வந்தன. ஒவ்வொன்றாக பிரித்து பார்த்தார், அதிகாரி.
முதல் கவரில் குறிப்பிடப் பட்டிருந்த தொகை - 70 ஆயிரம் ரூபாய்; இரண்டாவது கவர் - 82 ஆயிரம்; மூன்றாவது கவர் - 75 ஆயிரம்; நான்காவது கவர் - 80 ஆயிரம்; ஐந்தாவது கவர் - 86 ஆயிரத்து, 427 ரூபாய் 11 அணா 9 காசு.
ஸ்டுடியோ எவ்வளவு பெறும் என்பதை, கே.சுப்பிரமணியத்திடம் முன்கூட்டியே கேட்டறிந்து, அணா, பைசாவுடன் துல்லியமாக ஏலம் கேட்டவர், வேறு யாருமில்லை; எஸ்.எஸ்.வாசன் தான்.
ஸ்டுடியோ, வாசன் கைக்கு வந்ததும், 'ஜெமினி ஸ்டுடியோ' என, பெயர் சூட்டப்பட்டது. ஸ்டுடியோவை 1940ல், திறந்து வைத்தவர், ராஜா சர் முத்தையா செட்டியார்.
*********
ஒருமுறை, திருச்சியில் இருந்த, டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜனை பார்க்க வந்திருந்தார், வ.உ.சி.,
வ.உ.சி., உடன் மூட்டை முடிச்சுகளை துாக்கி கொண்டு, ஒரு வேலைக்காரரும் வந்தார். சிறையிலிருந்து விடுதலை பெற்ற பின், குடும்ப வாழ்க்கையை, மிகவும் சிரமத்துடன் நடத்தி வந்தார், வ.உ.சி.,
இவருக்கு எப்படி வேலைக்காரர் வைத்து கொள்ளும் அளவுக்கு வசதி வந்தது என, ராஜனுக்கு சந்தேகம் எழுந்தது.
'என்னய்யா வேலையாள் வச்சுக்கற அளவுக்கு உனக்கு வசதி வந்திடுச்சா...' எனக் கேட்டார், டாக்டர் ராஜன்.
அதற்கு, 'அதெல்லாம் ஒண்ணுமில்ல. காருண்யமிக்க கவர்மென்ட் தான் இதுக்கு காரணம்...' என்றார், வ.உ.சி.,
'அது எப்படி?' எனக் கேட்டார், டாக்டர் ராஜன்.
'வேற ஒண்ணுமில்லை. தேசியப் போராட்ட வீரர்களை கண்காணிக்கறதுக்கு, ஆங்கில அரசாங்கம் உளவாளிகளை அனுப்பறதுண்டு. என்னை கண்காணிக்கறதுக்காக இந்த ஆளை, உளவாளியா அனுப்பி இருக்காங்க.
'நான் பார்த்தேன். இந்த உளவாளிய என் நண்பனாகவே ஆக்கிக் கொண்டேன். அவருக்கும், என் மேல் பிடித்தம் வந்து விட்டது. நமக்குள்ள என்ன ஒளிவு மறைவு இருக்கு.
'சில செய்திகளை அப்பப்ப சொல்வேன். இவர் ஆங்கில அரசாங்கத்துக்கு சொல்வார். அதனால், என்கிட்டேயே எனக்கு உளவாளியாகவும், உதவியாளராகவும் உலாவிகிட்டு இருக்கார்...' என்றார், வ.உ.சி.,
அரசு செலவிலேயே, ஒரு வேலைக்காரரை வைத்து கொண்டதை நினைத்து சிரித்தார், ராஜன்.
***********
கவிஞர் வாலியிடம், 'வாலி என, ஏன் பெயர் வைத்துக் கொண்டு இருக்கிறாய்?' எனக் கேட்டார், ஹரிகதை கதாகாலட்சேப புகழ், எம்பார் விஜயராகவாச்சாரியார்.
'வாலி யாரோடு சேர்கிறானோ,அவருடைய பலத்தில் பாதி அவனுக்கு வந்து விடுமாம். பெரியவர்களோடு பழகும் போது, அவர்கள் அறிவில் பாதி எனக்கு வந்து விடுமல்லவா, அதனால் தான்...' என்றார், வாலி.
'அப்படி உனக்கு அறிவு வந்ததாக தெரியவில்லையே...' என்றார், ஆச்சாரியார்.
'நான் இன்னும் அறிவாளிகளையே சந்திக்கவில்லையே...' என்றார், வாலி.
இதை கேட்டதும், மவுனமானார், ஆச்சாரியார்.
- நடுத்தெரு நாராயணன்