
செப்., 15 - அண்ணாதுரை பிறந்தநாள்
க டந்த, 1967ல், தி.மு.க., பெரும்பான்மை பலம் பெற்று ஆட்சியில் அமர்ந்ததும், அண்ணாதுரை முதல்வராக பதவி ஏற்ற போது, தமிழகமே விழாக்கோலம் பூண்டது.
தொடர்ந்து சட்டசபை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது, ஒரு நாள் காங்கிரஸ் சட்டசபை உறுப்பினர், விநாயகம் எழுந்து, 'திருத்தணி சுப்பிரமணியர் கோவிலில் ஆடிக்கிருத்திகை சமயத்தில் பெரிய திருவிழா நடைபெறும். அதற்கு மக்கள் ஏராளமாக வருவர். அதற்காக, அந்த விழாவுக்கு முன்னதாக, அங்கு அரசு அமைத்து வரும் குடிநீர் திட்டத்தை முதல்வர் வந்து திறந்து வைப்பாரா, தேதி கொடுப்பாரா?' என்ற கேள்வியை முன் வைத்தார்.
அதற்கு, 'தம்பியின் (முருகன்) கோவிலுக்கு, அண்ணன் (விநாயகம்) இவ்வளவு அக்கறை காட்டுவது குறித்து, மகிழ்ச்சி அடைகிறேன்...' என, அண்ணாதுரை கூறியதும் சட்டசபையில் சிரிப்பொலி அடங்க வெகு நேரமாயிற்று.
பிறகு குடிநீர் திட்டத்தை துவங்கி வைத்தார், அண்ணாதுரை.
*****
ஏ. வி.மெய்யப்ப செட்டியார், 'ஓர் இரவு' கதையை, அண்ணாதுரையிடம் இருந்து எவ்வாறு விலை பேசி வாங்கினார் தெரியுமா?
திருச்சியில் தங்கியிருந்த, அண்ணாதுரையை பார்ப்பதற்காக எதிர்பாராமல் ஒருநாள் வந்தார், மெய்யப்ப செட்டியார்.
அப்போது, தரையில், பாயில் அமர்ந்து சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார், அண்ணாதுரை. திடீரென்று மெய்யப்ப செட்டியார் வந்துவிட்டதும், அவரை வரவேற்று அங்கிருந்த ஒரே ஒரு நாற்காலியில் அமரச் சொன்னார், அண்ணாதுரை.
அதற்கு சம்மதிக்காமல், அண்ணாதுரையை வலுக்கட்டாயமாக இழுத்து, நாற்காலியில் உட்கார வைத்தார். தான் பாயில் அமர்ந்து, வந்த விஷயத்தை, அண்ணாதுரையிடம் சொன்னார், செட்டியார்.
பேரம் பேசி குறைந்த விலைக்கு, 'ஓர் இரவு' கதையை வாங்கி சென்றார், செட்டியார்.
அவர் சென்றவுடன், அங்கிருந்தவர்கள் அண்ணாதுரையிடம், 'செட்டியாரின் பெருந்தன்மையை பார்த்தீர்களா? அவருக்கு எவ்வளவு மரியாதை. உங்களை நாற்காலியில் உட்கார வைத்து, அவர் கீழே அமர்ந்து அல்லவா பேசிக் கொண்டிருந்தார்...' என, பாராட்டினர்.
சிரித்தபடி, 'செட்டியார், விஷயம் தெரிந்த வியாபாரி. என்னை கீழே உட்கார வைத்து அவர் நாற்காலியில் அமர்ந்து கதையை விலை பேசி இருந்தால், இன்னும் அதிக தொகை கேட்கும் துணிச்சல் எனக்கு வந்திருக்கும்.
'என்னை நாற்காலியில் உட்கார வைத்ததால், அவர் காட்டிய மரியாதையை பார்த்து, அவரிடம் அதிக தொகை கேட்கிற மனம் எனக்கு வரவில்லை. கீழே உட்கார்ந்ததன் மூலம் குறைந்த விலைக்கு கதையை என்னிடமிருந்து வாங்க முடிந்தது. எனக்கு கிடைத்தது மரியாதை. அவருக்கு கிடைத்தது பணம்...' என்றார், அண்ணாதுரை.
*******
எதையும் நகைச்சுவையாக, அதே நேரத்தில் ஆழமாகச் சொல்லக் கூடிய ஆற்றல், அண்ணாதுரைக்கு உண்டு.
அண்ணாதுரை முதல்வராக இருந்த சமயத்தில், சட்டசபையில், விலைவாசி பற்றிய ஒரு பிரச்னை வந்தது.
அப்போது ஆளுங்கட்சியை சேர்ந்த நிதியமைச்சர், 'இந்த ஆண்டு, விலைவாசி எல்லாம் குறைந்துள்ளது. அதுவும், புளியின் விலை ரொம்பவே குறைந்துள்ளது. அதற்காக நாங்கள் பெருமை அடைகிறோம்...' என, பேசினார்.
அதற்கு எதிர்க்கட்சி தலைவரான, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பி.ஜி.கருத்திருமன், 'இல்லை, இல்லை... எங்களுடைய காலத்தில் போட்ட திட்டம் தான் இதற்கு காரணம்...' என்றார்.
அதற்கு, 'இந்தப் புளியின் விலை குறைந்ததற்கு நாங்களும் காரணமில்லை. நீங்களும் காரணமில்லை. புளியமரம் தான் காரணம். அதிகமாக அது காய்த்ததால் தான், விலை குறைந்துள்ளது...' என, அண்ணாதுரை கூற, உடனே சபையில் கலகலப்பு ஏற்பட்டது.
நடுத்தெரு நாராயணன்