PUBLISHED ON : செப் 14, 2025

இயக்குனர் ஆர். செல்வராஜின் அடுத்த முயற்சி, அகல் விளக்கு. அதில், துணிந்து, விஜயகாந்தை கதாநாயகனாக்கி, படம் இயக்கினார்.
விஜயகாந்த், 'ஹீரோ' ஆக அறிமுகமான முதல் படத்திலேயே இளையராஜாவின் இசை. அதிலும், உச்சாணிக் கொம்பில் உலவிக் கொண்டிருந்த, நடிகை ஷோபாவுடன், 'ஏதோ நினைவுகள்...' என்ற 'சூப்பர் ஹிட் டூயட்' பாடலை பாடி, நடிக்கும் சர்க்கரைப்பாகு சந்தர்ப்பம்.
தேர்தலில் போட்டியிட்டு, மக்கள் சேவகனாக தேர்வாகி, ஊழலை ஒழிக்கப் போராடும் அற்புதமான வேடம். தனுஷ்கோடியாக விஜயகாந்தும், நவநீதமாக ஷோபாவும் மிக இயல்பாக நடித்திருந்தனர். ஆனால், அகல் விளக்கு போதிய வசூல் பெறவில்லை.
விஜயகாந்தின் அடுத்த படமான, துாரத்து இடி முழக்கம், 1980 டிசம்பர் முதல் வாரத்தில் வெளியானது . அந்த ஆண்டு, விஜயகாந்த் கதாநாயகனாக நடித்து வெளி வந்த ஒரே படம். அதன் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர், கே.விஜயன்.
மு ன் பின் பழக்கமோ, அறிமுகமோ கிஞ்சித்தும் இல்லாத கே.விஜயனும், விஜயகாந்தும் இணைந்து பணியாற்ற காரணமாக இருந்தது, ஓர் இஸ்திரி கடை.
சினிமா வாய்ப்பு தேடி, தேடி களைத்து போய், அந்த இஸ்திரி கடைக்கு ஓய்வெடுக்க போவார், விஜயகாந்த். அது, சினிமாக்காரர்கள் பலரும் வந்து போகும் இடம்.
அன்றைய பிரபல கதாசிரியர், உசிலை சி.சோமநாதன், அந்த இஸ்திரி கடையின் வாடிக்கையாளர். கே.விஜயனிடம், விஜயகாந்தை அறிமுகப்படுத்தினார், உசிலை சி.சோமநாதன்.
'நான் தேடிக்கொண்டிருந்த, மீனவன் பொன்னன் இவர் தான்...' என, விஜயகாந்தின் களையான முகத்திலும், கருப்பு நிறத்திலும், கட்டான தேகத்திலும் கவரப்பட்டு, துாரத்து இடி முழக்கம் படத்தில் நடிக்க வைக்க உடனே, ஓ.கே., சொன்னார், கே.விஜயன்.
எஸ். ஏ.சந்திரசேகரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது, விஜயகாந்துக்கு.
வாகினி ஸ்டுடியோவில், இவரை பார்த்து, 'தம்பி உங்க பேரு என்ன?' என்றார், எஸ்.ஏ.சி.,
'விஜயராஜ் சார்...' என்றார், விஜி.
'உங்களுக்கு சினிமாவில் நடிக்க ஆர்வம் இருக்கா?'
'நான் ஏற்கனவே, எம்.ஏ.காஜா சார் இயக்கத்தில், இனிக்கும் இளமை படத்தில் நடிச்சிருக்கேன். ஆர்.செல்வராஜ் சாரோட, அகல் விளக்கு , கே.விஜயன் சாரோட, துாரத்து இடி முழக்கம் போன்ற படங்களில், 'ஹீரோ' ஆக நடிச்சிருக்கேன்...' என்றார்.
எஸ்.ஏ.சி.,யின், சட்டம் ஒரு இருட்டறை திரைப்படம், துரிதமாக துவங்கியது. துாரத்து இடி முழக்கம் படத்தில் இணைந்து நடித்த, பூர்ணிமாவே இதிலும், விஜயகாந்துக்கு ஜோடி.
கடந்த, 1981ல், பொங்கலுக்கு வெளியான, மீண்டும் கோகிலா, சிவாஜியின், சத்திய சுந்தரம், கே.பாக்யராஜின், மவுன கீதங்கள் ஆகிய, மூன்று திரைப்படங்கள், திரையரங்குகளை நோக்கி மக்களை ஈர்த்தன. அதுவும், மவுன கீதங்கள் படத்தின், 'மூக்குத்தி பூ மேலே...' பாடலுக்காகவே தியேட்டர்கள் தளும்பின.
மூன்று முத்தான குடும்ப சித்திரங்களுக்கு மத்தியில், முழு, 'சஸ்பென்ஸ் த்ரில்லர்' படமான, சட்டம் ஒரு இருட்டறை வசூலை வாரி குவித்தது. அதுவரையில் தமிழ் சினிமா காணாத புதுமை சித்திரம்!
சட்டம் ஒரு இருட்டறை படம் எடுத்த எடுப்பிலேயே, விஜயகாந்தை பட்டி தொட்டிகளில் பரவலாக கொண்டு சேர்த்தது. தங்களில் ஒருவனாக, விஜயகாந்தை மிக எளிதாக ஏற்றுக் கொண்டனர், இளைஞர்கள்.
மு ரட்டுக்காளை படத்தின் மூலம், ஏவி.எம்., நிறுவனம் மீண்டும் படத் தயாரிப்பில் ஈடுபட்டது. எர்ர மல்லி என்ற தெலுங்கு படம், ஆந்திராவில் அட்டகாசமாக ஓடிக் கொண்டிருந்தது. முதலாளி வர்க்கத்தை எதிர்க்கும் தொழிலாளர் போராட்டமே, படத்தின் அடிநாதம். அதன் உரிமையை வாங்கியது, ஏவி.எம்., நிறுவனம்.
தமிழில் சின்ன பட்ஜெட்டில் எடுத்தால், பெரிய லாபம் வரும் என, நம்பினர். எர்ர மல்லி படத்தை தமிழுக்கு ஏற்ற வகையில் திரைக்கதை அமைத்து கொடுத்தார், இயக்குனர் ராஜசேகர். படத்தை இயக்கினார், ராம.நாராயணன். சங்கர் கணேஷ், இசை. பாடல்கள், வைரமுத்து என்று மிகக்குறைந்த முதலீட்டுக்கு தகுந்த வகையில் யூனிட் உருவானது.
எர்ர மல்லி தமிழில், சிவப்பு மல்லி என்ற பெயரில், திரைப்படமாக உருவானது. இரண்டு நாயகர்களின் கதை. உயிரைப் பணயம் வைக்கும், தியாகு என்ற கேரக்டரில் சந்திரசேகரும், ரங்கன் கேரக்டரில் சிவகுமாரும் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்பது, ஏவி.எம்.மின் தீர்மானம்.
அந்த முடிவுக்கு கட்டுப்படவில்லை, சிவகுமார். ரங்கனைவிட, தியாகு கதாபாத்திரமே மக்களின் மனதில் நிலைத்து நிற்கும். அந்த அற்புதமான சித்தரிப்பில் தான் நடித்தால், மீண்டும் ஒரு சுற்று வரலாம் என, நினைத்தார்.
சிவகுமார் எத்தனை போராடியும், தியாகு வேடம் அவருக்கு இல்லை என்றானது. அடுத்து யார் என்று தேடிய வேளையில், விஜயகாந்த் தேர்வானார். சட்டம் ஒரு இருட்டறை செய்த வசூல் சாகசம், கோலிவுட் பரமபதத்தில் பெரிய ஏணியின் உச்சியில் விஜயகாந்தை அட்டகாசமாக நிறுத்தியது.
சிவப்பு மல்லி திரைப்படம், ஆகஸ்ட் 16, 1981ல், வெளியாகி வெற்றி பெற்றது. சூப்பர் ஸ்டார் படத்தை காட்டிலும், சிவப்பு மல்லி குக்கிராமங்களிலும் சிறப்பாக வசூல் செய்து, சாதனை புரிந்தது. வைரமுத்து எழுதிய, 'ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்...' பாடல், 'சூப்பர் டூப்பர் ஹிட்' ஆனது.
'எரிமலை எப்படி பொறுக்கும்? நம் நெருப்புக்கு இன்னும் உறக்கம்...' பாடல் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்து, சிம்ம கர்ஜனை புரிந்தது.
சிவப்பு மல்லி துவங்கி, விஜயகாந்தின் குரல், திரையில் ஒலிக்கத் துவங்கியது. விஜயகாந்தை மக்கள் அங்கீகரித்தனர். ஆனால், அன்றைய பிரபல நாயகிகள் அவரை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.
- தொடரும்
பா. தீனதயாளன்
நன்றி : சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
மொபைல் எண்: 7200050073

