/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
நம்மிடமே இருக்கு மருந்து: மணத்தக்காளி கீரை!
/
நம்மிடமே இருக்கு மருந்து: மணத்தக்காளி கீரை!
PUBLISHED ON : செப் 14, 2025

மணத்தக்காளி கீரை, தமிழ்நாட்டில் பரவலாக காணப்படும், மருத்துவ மூலிகை. இதன் இலைகள், காய்கள் மற்றும் வேர்கள், பல்வேறு நோய்களின் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகின்றன.
இதில், வைட்டமின்கள் ஏ, சி, பி, இரும்பு, கால்சியம் மற்றும் 'ஆன்டி ஆக்ஸிடண்ட்'கள் நிறைந்துள்ளன. இவை, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.
மணத்தக்காளி கீரை, வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண்களுக்கு, இயற்கையான மருந்தாக பயன்படுகிறது. இதன் இலைகளை மென்று சாப்பிடுவதால், வாய்ப்புண்கள் குணமாகும். மேலும், செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகளை தீர்க்கவும் உதவுகிறது.
மணத்தக்காளி கீரையில் உள்ள 'ஆன்டி ஆக்ஸிடண்ட்'கள், கல்லீரலை பாதுக்காக்கின்றன. இது, கல்லீரல் நச்சுகளை அகற்றி, 'ஹெபடைட்டிஸ்-பி' போன்ற நோய்களை தடுக்க உதவுகிறது. இதன் கஷாயம், கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துவதாக, ஆயுர்வேதத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.
மணத்தக்காளி கீரையில் உள்ள, குறைந்த கிளைசெமிக் குறியீடு, நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும், இதிலுள்ள 'பொட்டாஷியம்' ரத்த அழுத்தத்தை குறைத்து, இதய ஆரோக்கியத்தை பேணுகிறது.
இதன் இலைகளை அரைத்து தோலில் பூசுவதால், எக்ஸிமா, அரிப்பு மற்றும் புண்கள் குணமாகின்றன. இதிலுள்ள, அழற்சி எதிர்ப்பு பண்புகள், மூட்டுவலி மற்றும் வீக்கத்தை குறைக்கின்றன.
மணத்தக்காளி கீரை, கண் புரை நோயை தடுப்பதாகவும், சளி மற்றும் இருமலை போக்குவதாகவும் கருதப்படுகிறது. இதன் காய்களை உணவில் சேர்ப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
மணத்தக்காளி கீரையை உணவில் அளவோடு சேர்த்துக் கொள்வது முக்கியம்.
- வி.பரணிதா

