
டிச., 24 எம். ஜி. ஆர்., நினைவு தினம்
எஸ்.எஸ்.பப்ளிகேஷன் வெளியீடான, எழுத்தாளர் டி.எம்.சண்முகவடிவேல் எழுதிய, 'நம்மோடு வாழும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.,' என்ற நுாலிலிருந்து:
எம்.ஜி.ஆர்., பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது காபி, டீ அருந்த மாட்டார்; சோடா மட்டுமே அருந்துவார்.
'எம்.ஜி.ஆர்., தங்கம் போன்ற நிறத்தில் ஜொலிக்கிறார். அதற்கு காரணம் அவர் தங்க பஸ்பம் சாப்பிடுகிறார்...' என்று பரவலாக பேசுவதுண்டு!
ஒரு சமயம் இதை அறிந்து, 'நான், தங்க பஸ்பம் சாப்பிடுவதில்லை. என் உடலை மெருகோடு வைத்துக் கொள்ள, நாள்தோறும் உணவில், கீரையை சேர்த்து கொள்கிறேன்...' என, விளக்கம் தந்தார், எம்.ஜி.ஆர்.,
* 'ஸ்டுடியோ'களில், சினிமா படப்பிடிப்பு நடந்தால், எம்.ஜி.ஆர்., தனியாக, 'மேக்-அப்' அறையில் சாப்பிடுவார். அதுவே, வெளிப்புற படப்பிடிப்பு என்றால், உணவு நேரத்தில், படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் அனைவரையும் அழைத்து, தன் சொந்த செலவில், அவர் சாப்பிடும் உணவு வகைகளையே, அனைவருக்கும் வரவழைத்து, அவர்களை சாப்பிட வைத்து, அவரும் அவர்களுடன் அமர்ந்து சாப்பிடுவார்
* பட தயாரிப்பாளர், சாண்டோ சின்னப்பா தேவர், எம்.ஜி.ஆரை நேரில் பார்த்தால், 'முருகா' என்றும், மற்றவர்களிடம், அவரைப் பற்றி குறிப்பிடும் போது, 'தெய்வம்' என்றும் அழைப்பார்
* எம்.ஜி.ஆரை, 'அண்ணா' என்று தான் அழைப்பார், தெலுங்கு நடிகர், என்.டி.ராமராவ்
* சினிமா உலகில் நுழைவதற்கு முன், பல நாடகங்களில் நடித்தார், எம்.ஜி.ஆர்., முதல் நாடகம், 'மகாபாரதம்!' இதில், அர்ச்சுனனின் மகன் உத்தரனாக நடித்தார்
* எம்.ஜி.ஆர்., 136 படங்களில் நடித்தார். அதில், அதிக படங்களில் வில்லனாக எம்.என்.நம்பியார், 63 படங்களில் நடித்துள்ளார். அடுத்து, 23 படங்களில், பி.எஸ்.வீரப்பா, நடித்துள்ளார்
* எம்.ஜி.ஆர்., அதிக நாட்கள் அதாவது, 100 நாட்கள், 'கால்ஷீட்' கொடுத்து, நடித்த படம், ஒளி விளக்கு
* ஒரு சமயம், எம்.ஜி.ஆரிடம் 'நீங்கள், ஏன் நடிக்கும் பணியிலிருந்து ஓய்வு பெறக் கூடாது?' என கேட்டார், நிருபர் ஒருவர்
அதற்கு, 'ஒருவருக்கு நல்ல வியாபாரம் நடக்கும் போது, யாரும் கடையை மூட மாட்டார்கள்...' என்று பதிலளித்தார், எம்.ஜி.ஆர்.,
* எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த பாடல் எது என்று கேட்டபோது, 'நான் ஆணையிட்டால்... அது நடந்து விட்டால்... என எழுதி, வாலி என்னை முதல்வர் நாற்காலியில் அமர வைத்து விட்டார்...' என்றார்
உடனே, அருகில் இருந்த பாடலாசிரியர், வாலி, 'அந்த பாடலை, எம்.ஜி.ஆரை தவிர வேறு எந்த நடிகருக்கும் என்னால் எழுதியிருக்க முடியாது. காரணம், அவர் மட்டுமே அப்படி பாடி, நடிக்க முடியும். வேறு, நடிகர் யாராவது அப்படி பாடி நடித்தால், மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்...' என்றார்
* எம்.ஜி.ஆரின் கார் நம்பர் 4777. கூட்டினால், ஏழு வரும். அவருடைய பங்களிப்பு அனைத்திலும், ஏழு வரும்படி தான் தேர்ந்தெடுப்பார்!
மணவை பொன்.மாணிக்கம் எழுதிய, 'எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர்.,' என்ற நுாலிலிருந்து:
அன்பே வா படத்திற்காக, சிம்லாவில் படப்பிடிப்பு. 100 கிலோ எடையுள்ள, கிட்டிங் புல் என்ற ஆஜானுபாகுவான தோற்றமுடைய ஹிந்தி நடிகர் வரவழைக்கப்பட்டார்.
கதைப்படி சண்டைக்காட்சியில், கிட்டிங் புல்லை, எம்.ஜி.ஆர்., துாக்கி வீச வேண்டும். அந்த காட்சியில், 'டூப்' போட்டு எடுத்து விடலாம் என, தீர்மானித்தார், இயக்குனர்.
யூனிட் முழுவதும் இச்சண்டை காட்சி பற்றியே பேசிக்கொண்டனர். அதில் ஒருவன், எம்.ஜி.ஆர்., காதுபடவே, 'இந்த கிட்டிங் புல் கிட்ட வாத்தியாரோட ஜம்பம் பலிக்காது...' என்று சொன்னான்.
இது, எம்.ஜி.ஆரை உசுப்பி விட்டது. தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்யும் எம்.ஜி.ஆர்., இதன் பின் கூடுதலாக ஒரு மணி நேரம், 'வெயிட் லிப்டிங்' செய்ய ஆரம்பித்தார். 120 கிலோ வரை பயிற்சியில் அதிகப்படுத்தி தயாரானார்.
'ஏன் அனாவசியமாக, 'ரிஸ்க்' எடுக்கிறீர்கள்? வேண்டாம்...' என்றார், இயக்குனர்.
'முயற்சி செய்து பார்ப்போம். முடியவில்லை என்றால் விட்டு விடுவோம்...' என்றார், எம்.ஜி.ஆர்.,
காட்சிக்கு தயாராகி, கேமரா ஸ்டார்ட் ஆனது.
கிட்டிங் புல்லை அப்படியே தன் தலைக்கு மேலே அனாயசமாகத் துாக்கி, மூன்று சுற்று சுற்றி, வீசி எறிந்தார், எம்.ஜி.ஆர்.,
இதைக்கண்டு யூனிட்டே திகைத்து நின்றது.
உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட, பேராசிரியர் மெ.செ.ரபிசிங் எழுதிய, 'புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் தமிழ்த் தொண்டு!' என்ற நுாலிலிருந்து:
தமிழ்ப்பல்கலைக்கழகம் துவங்க மிகுந்த ஆர்வமும், ஈடுபாடும் கொண்டிருந்தார், எம்.ஜி.ஆர்., பல்கலைக்கழகத்தை எங்கு துவங்குவது என, கேள்வி எழுந்தபோது, 'சென்னையில் துவங்கலாம்...' என்றனர், பலர்.
அதற்கு சம்மதிக்கவில்லை, எம்.ஜி.ஆர்., 'தமிழ்மொழி, கலை, பண்பாடு முதலியவற்றை பாதுகாத்து, வளர்த்து வளப்படுத்திய பாரம்பரிய பெருமைக்குரிய சோழர்களின் தலைநகரமாகிய, தஞ்சையில் தான் துவங்க வேண்டும்...' என்று கூறி, துவக்கி வைத்தார்.
மேலும், அதற்கான இடம் ஒதுக்க கேட்டபோது, பரிந்துரைத்தவர்கள், 100 ஏக்கர் நிலம் வேண்டும் என்றனர். எம்.ஜி.ஆரோ., 1000 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்தார்.
காப்பியச் சுவை அதிகம் கொண்ட காப்பியங்களில், ராமாயணத்திற்கு முக்கிய இடம் உண்டு.
கவிச்சக்கரவர்த்தி கம்பர் கற்பனைத் திறன் மற்றும் கவிதை நயத்துடன் எழுதிய ராமாயணம் இன்று வரை பேசப்பட்டு வருகிறது.
கம்பர் பிறந்தது, நாகை மாவட்டம், குத்தாலம் வட்டத்தில் உள்ள, தேரழுந்துார். இதனை, கம்பர் மேடு என அழைப்பர். கம்பர் நினைவாலயம் கட்ட, பல ஆண்டுகளுக்கு முன்பே அடிக்கல் நாட்டப்பட்டிருந்தாலும், தொடர்ந்து எந்த வேலையும் நடக்கவில்லை.
இது, அப்போது முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட உடனே, 20 லட்சம் ரூபாய் ஒதுக்கி, கம்பர் கோட்டமாக அதனை உருவாக்கி, 1984ல் திறந்து வைத்தார்.
****
துாத்துக்குடியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றிருந்தார், எம்.ஜி.ஆர்., கூட்டத்தில், ஏராளமான பெண்களும் இருந்தனர். கூட்டத்தை கட்டுப்படுத்த, லத்தியால், அவர்களை அடிக்க ஆரம்பித்தனர், போலீசார். இதை பார்த்த, எம்.ஜி.ஆர்., போலீசாரிடம், 'எல்லா லத்திகளும் மேடைக்கு வர வேண்டும்...' என கூறி, அனைத்து, லத்திகளையும் வாங்கி வைத்துக் கொண்டார். நிகழ்ச்சி முடிந்து, மக்கள் அனைவரும் கலைந்து சென்ற பின் தான் அவற்றை திருப்பி தந்தார்.
*****
தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரை, இரண்டாவது உலக தமிழ் மாநாட்டை சென்னையில் நடத்தினார். எம்.ஜி.ஆர்., ஆட்சி காலத்தில், ஐந்தாம் உலக தமிழ் மாநாடு நடத்தும் சூழல் வந்தபோது, 'தமிழ் வளர்த்த பாண்டியர்களின் தலைநகராகிய மதுரையில் மாநாடு நடைபெற வேண்டும்...' என, உறுதியாக கூறி விட்டார், எம்.ஜி.ஆர்.
******
இசை உலகில் அழியா புகழ்பெற்றவர் தியாகராஜர். தியாகராஜர் கீர்த்தனைகள் பெரும்பாலும் தெலுங்கில் இருந்தன. அவற்றை தமிழில் மொழியாக்கம் செய்ய பாடுபட்டார், எம்.ஜி.ஆர்., திருமதி அபயாம்பிகா என்பவரிடம் தமிழில் மொழி மாற்றம் செய்யும் பணி ஒப்படைக்கப்பட்டது. அவை, ராகமும், பாவமும், பொருளும் குன்றாமல் இருக்க, பாலமுரளி கிருஷ்ணா, தன் பங்குக்கு மேலும் மெருகேற்றி பாடி, தியாகராஜர் கீர்த்தனைகளின் தமிழாக்க ஒலிப்பேழை என்ற பெயரில், ஆகஸ்ட 4, 1987ல், வெளியிட்டார்.
- நடுத்தெரு நாராயணன்

