PUBLISHED ON : அக் 04, 2026

தேவகோட்டை பி.நாராயணன் எழுதிய, 'வியப்பூட்டும் செய்திகள்!' என்ற நுாலிலிருந்து:
அயர்லாந்து நாட்டில் பிறந்து, இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான பெர்னாட்ஷாவுக்கு மலர்கள் என்றால், மிகவும் பிடிக்கும். செடி கொடிகளில், பூத்துக் குலுங்கும் பூக்களை மிகவும் ரசிப்பார். ஆனால், தன் இல்லத்தில் உள்ள செடிகளிலிருந்து, மலர் கொத்துக்களைப் பறித்து, அலங்கார ஜாடிகளில் வைப்பதில் அவர் விரும்புவதில்லை.
'மலர்களிடம் அலாதி பிரியம் வைத்துள்ள, நீங்கள், அவற்றைப் பறித்து வீட்டில் வைப்பதில்லையே... ஏன்?' என்று கேட்டார், அவரது நண்பர் ஒருவர்.
அதற்கு, 'மலர்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பது, உண்மை தான். எனக்கு குழந்தைகளிடமும் அலாதிப் பிரியம் உண்டு. அதற்காக குழந்தைகளின் தலையைத் திருகி, வீட்டின் கோப்பைகளில் திணித்து வைப்பது நியாயமாகுமா?' என, பதிலுக்கு கேட்டார், பெர்னாட்ஷா.
*********
ராஜரிஷியாக புதுச்சேரியில் இருந்த அரவிந்தர், தன் மனைவி மிருணாளினிக்கு எழுதிய கடிதம்:
'என் பிரியமுள்ள, மிருணாளினியே. என் செய்வது? நீ ஒரு பித்தனை மணந்து கொண்டாய். உன்னைப் போன்ற இளம்பெண்கள் அனுபவிக்க வேண்டிய இன்பங்களை இழந்து வருந்துகிறாய். உன்னுடன் இருந்து, உனக்கு இன்பம் தரக்கூடிய நிலையில் நான் இல்லையே, என் செய்வேன்! என்னுடைய அன்னையை, ஒரு அரக்கன் கீழே தள்ளி, அவளின் மார்பின் மீது அமர்ந்து, அவளின் ரத்தத்தை உறிஞ்சிக் கொண்டிருக்கிறான். அதைப் பார்க்கிற நான், என் அன்னையை மீட்க வழி தேடாமல், உன்னுடன் காதல் பேசிக் களித்திருக்க, என் மனம் இடம் கொடுக்கவில்லையே...' என்று எழுதியுள்ளார்.
ஆம், அவர் அன்னை என்று குறிப்பிட்டுள்ளது, இந்திய தேசத்தை. அரக்கன் என்று அவர் குறிப்பிட்டது, ஆங்கிலேயர்களை!
******
வட்டிக்கு கடன் வாங்கி, வாழ்க்கையை ஓட்டும் எழுத்தாளர்களை நாம் அறிந்திருக்கிறோம். இந்த விஷயத்தில் வித்தியாசமானவர், நாடக ஆசிரியரான, ஷேக்ஸ்பியர்.
இவர் இங்கிலாந்தில் பிறந்து, உலகப் புகழ்பெற்ற ஆங்கில நாடக ஆசிரியராக பேரும் புகழும் பெற்று பணக்காரரானார். சம்பாதித்த பணத்தை, மற்றவர்களுக்கு மிக அதிகமான வட்டிக்கு, கடன் கொடுத்து வந்தார்.
ஒரு சமயம், இங்கிலாந்தில் பஞ்சம் ஏற்பட்டது. தன்னிடமிருந்த பணத்தில், நிறைய கோதுமை வாங்கி அதை அதிக விலைக்கு விற்க முயன்றார். ஆனால், அவரது முயற்சி வெற்றி பெறுவதற்குள், அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். ஆனால், ஷேக்ஸ்பியரின் நாடக புகழ், அவரை தண்டனை பெறுவதிலிருந்து தப்பிக்க வைத்தது.
*****
இந்தியாவின் ஆறாவது முகலாயப் பேரரசரான ஹவுரங்கசீப், அவரது அப்பா, ஷாஜகானை 1658ல் சிறையில் அடைத்தார்.
அப்போது, சிறையிலிருந்து, தன் மகன் ஹவுரங்கசீப்புக்கு இப்படி ஒரு கடிதம் எழுதினார், ஷாஜகான்...
'நேற்று வரை, 9 லட்சம் பேர் கொண்ட படையின் தலைவனாக இருந்த நான், இன்று ஒரு குவளைத் தண்ணீருக்கு ஏங்கி நிற்கிறேன். இந்துக்கள் போற்றத்தக்கவர்கள், அவர்கள் இறந்தவனுக்குக்கூட தண்ணீர் தருகின்றனர். நீயோ, என் மகன். என்னை தண்ணீரின்றி தவிக்க விட்டிருக்கிறாய்.
'இம்மையிலும், மறுமையிலும் நீ நற்பேர் எடுக்க விரும்பினால், குர்ஆனில் கூறியபடி, தகப்பனார் சொல்லுக்கு கீழ்படிந்து நட, ஒரு தகப்பனுக்கு செய்ய வேண்டிய கடமையை நீ செய்ய வேண்டும். செல்வாக்கிலும், அதிகாரத்திலும் உயர்ந்து நிற்கும், முகலாய அரசு வம்சத்தின் நற்பெயருக்கு களங்கத்தை உண்டு பண்ண வேண்டாம்!' என்று எழுதியிருந்தார்.
நடுத்தெரு நாராயணன்
