PUBLISHED ON : ஜூலை 12, 2026

'தாய்' வார இதழில் பணிபுரிந்தவரும், பத்திரிகையாளருமான பிரபு என்ற பிரபாகரன், தான் சந்தித்து பேட்டியெடுத்த திரை நட்சத்திரங்களுடன் தனக்கு ஏற்பட்ட, அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்:
பூவிலங்கு படம் வெளிவந்து ஒரு ஆண்டுக்கு பின், புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமானார், முரளி. கன்னடம் மற்றும் தமிழில் ஒரே சமயத்தில் படமாக்கப்பட்டது. அஜேயா என்ற பெயரில் கன்னடத்தில் உருவானது. அதில், சந்தியா என்ற புதுமுக நடிகையை, முரளிக்கு ஜோடியாக நடிக்க வைத்தார், அவரது அப்பா. படப்பிடிப்பின் போது, அங்கிருந்த என்னை, 'அண்ணா...' என்று, சந்தியா அழைத்ததை, கிண்டல் செய்ய ஆரம்பித்தார், முரளி.
'அப்ப நீங்க எனக்கு மச்சான் தானே...' என்று அவர் அடிக்கடி சொல்ல ஆரம்பித்தார். சித்தியின் கொடுமையில் சிக்கிக் தவிக்கும் இளம் பெண்ணின் கதை அது. சொத்துக்காக ரவுடி கும்பலிடமிருந்து, சந்தியாவை மீட்பது தான் படத்தின் கதை. இளையராஜா இசை அமைத்திருந்தார்.
இளையராஜாவுக்கு, முரளியை மிகவும் பிடிக்கும். இந்தப் படத்திற்காக, கவிஞர் பொன்னடியான், 'ஹீரோ ஹீரோ...' என்ற பாடலை எழுதினார். அடுத்து, முரளிக்கு பெரிய வெற்றி தந்த படம், கீதாஞ்சலி. படத்தை, தயாரித்தவர், இளையராஜா. பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்த, கே.ரங்கராஜ் தான் இயக்குனர். பாடல்களுக்காகவே இப்படம் வெற்றி பெற்றது.
கதை அம்சத்தில், முரளிக்கு நல்ல பெயர் வாங்கி தந்த படம், இயக்குனர், மணிவண்ணன் இயக்கிய, இங்கேயும் ஒரு கங்கை. படப்பிடிப்பு முழுவதும் கோபிசெட்டிபாளையம், பொள்ளாச்சி பகுதியில் நடந்தது. சில விடுபட்ட காட்சிகளுக்காக, விஜயா கார்டனில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அப்போது நானும், ஜெய்மோகனும் அங்கு சென்று பேசிக்கொண்டு இருக்கும் போது, இங்கேயும் ஒரு கங்கை படத்தின் புதுமுக நாயகியான நடிகை, தாராவை, எனக்கு அறிமுகம் செய்து வைத்தார், முரளி. அப்போது, தாரா தங்குவதற்கு வீடு இல்லாமல் சிரமப்படுவதாக சொன்னார். அருகில் இருந்த, மணிவண்ணன், 'பிரபு உங்க கங்காநகர் பக்கம் வீடு பார்த்து கொடுங்களேன். அவங்க வீடு இல்லாம, ஹோட்டல்ல தங்கி ரொம்ப சிரமப்படுறாங்க...' என்றார்.
தாராவும், 'எனக்கு உடனே ஒரு வீடு பார்த்துக் கொடுங்க...' என்று கேட்டார்.
குழந்தை நட்சத்திரமாக கன்னடத்தில் நடித்தவர், அவர். அனுராதா என்பது தான் அவரது உண்மையான பெயர். தாரா என பெயர் மாற்றியது, இயக்குனர் மணிவண்ணன்.
தெளிவாக, அருமையாக தமிழ் பேசுவார், தாரா. இங்கேயும் ஒரு கங்கை படத்திற்கு பிறகு, அவர் கன்னட படங்களில் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து, தேசிய விருது வாங்கக்கூடிய அளவிற்கு தன்னை உயர்த்தி கொண்டார். அதன் பின் அரசியல்வாதியாகவும் வாய்ப்பு கிடைத்தது. பாரதிய ஜனதா கட்சியில் அவர் சேர்ந்து, நியமன உறுப்பினராக இருந்தபோது, ஏழை சேரி மக்களுக்காக அவர் சில திட்டங்களை உருவாக்கி, நடைமுறைப்படுத்தியதை மிகவும் மகிழ்ச்சியுடன் சொல்வார்.
மணிவண்ணன் பரபரப்பான இயக்குனராக இருந்த போதும், அவருக்கும், எனக்கும் நெருங்கிய நட்பு இருந்தது. நான் குடியிருந்த பகுதிக்கு, காலை நேரத்தில் நடைப்பயிற்சிக்காக வந்து விடுவார், மணிவண்ணன். அமைதியான ஏரியா என்பதால் அதைத் தேர்ந்தெடுத்திருந்தார்.
அதே சமயம், அண்ணாநகரில் இருந்து ஒளிப்பதிவாளர், சபாபதியும் காலை 7:00 மணிக்கு வந்து விடுவார். நாங்கள் அனைவரும் என் வீட்டில் உட்கார்ந்து, விதவிதமான கதைகளை பற்றி விவாதிப்போம். கதை சொல்வதில், மணிவண்ணனுக்கு நிகர் அவர் தான். பேசிக் கொண்டிருக்கும் போதே கதை மற்றும் ஒவ்வொரு கேரக்டரையும் தனித்தனியாக ரசித்து அவர் பேசும் போது மெய் மறந்து கேட்பேன். மணிவண்ணன் பரபரப்பான இயக்குனராக வெற்றி பெற்றதற்கான ரகசியம் இது தான்.
கதை, வசனகர்த்தாவாக இருந்த, கலைமணி படம் தயாரிப்பில் ஈடுபட்டதோடு, மணிவண்ணனை இயக்கும்படி வற்புறுத்தி வந்தார். பல நாள் முயற்சிக்குப் பின், படம் இயக்க சம்மதித்தார், மணிவண்ணன். பட விவாதத்திற்காக ஹோட்டல் பாம்குரோவில் தங்கியிருந்தார், கலைமணி. ஒருநாள் மணிவண்ணன் என்னை அங்கே வரச் சொன்னார். இப்படத்துக்கு, இளையராஜா இசையமைச்சா நல்லா இருக்கும் என, மணிவண்ணன் விரும்பினார். அந்த நேரத்தில் மிகவும், 'பிஸி'யாக இருந்தார், இளையராஜா.
இளையராஜா இசையமைத்து, படப்பிடிப்பு நடக்க முடியாமல் இருந்த தயாரிப்பாளர்களை தேடி அலைந்தார், கலைமணி. அப்படி தேடித்தேடி, அவர்களிடமிருந்து ஆறு பாடல்களை வாங்கி வந்தார், கலைமணி. அந்த ஆறு பாடல்களை எனக்கு போட்டு காட்டினார், மணிவண்ணன்.
நானும், அப்பாடல்களை கேட்ட பின், 'இது, பட்டணத்து காதல் கதையா, கிராமத்து காதல் கதையா என்று கேட்டதும், நிச்சயம் கிராமத்து கதை தான்...' என்று மணிவண்ணன் கூறியதும், 'கிராம சூழ்நிலைக்கு ஏற்றார் போல் எல்லா பாடல்களும் அருமை என்றேன்.
சிவாஜி-சரோஜாதேவி நடித்த, பாகப்பிரிவினை படத்தை தான் சற்று மாற்றி, இங்கேயும் ஒரு கங்கை படமாக உருவானது. படம் வெற்றி பெற்றது. இதில், ஜனகராஜ் வில்லன். வினு சக்கரவர்த்திக்கு தனியாக ஒரு பாடலை கொடுத்து, அவரையும் ஒரு மிகப்பெரிய நடிகனாக்கிய படம் இது. இந்த படத்தால் முரளிக்கு பட வாய்ப்புகள் அதிகரித்தது. அதைத்தொடர்ந்து, இயக்குனர், மணிரத்தினத்திடமிருந்து அழைப்பு வந்த போது, அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
சத்யராஜ் இல்லாமல் , மணிவண்ணன் இல்லை என்ற அளவுக்கு இருவரும் பல படங்களில் இணைந்து நடித்தனர். மணிவண்ணனின் கதை விவாதங்களில் பங்கெடுப்பார், சத்யராஜ். ஒரு நாள் மணிவண்ணன் எடுத்த முடிவு. சத்யராஜ் வாழ்க்கையை மாற்றியது. அது என்ன?
தொடரும்
ஆர். பிரபாகரன்
