தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

2


PUBLISHED ON : ஜூலை 12, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 12, 2026

2


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நமக்கு நாமே...

சமீபத்தில் என் மகளை பார்க்க, சென்னை சென்றிருந்தேன். அப்பகுதியில் நிறைய தனி வீடுகள் மற்றும் ஒன்றிரண்டு, 'அப்பார்ட்மென்ட்'களும் உண்டு.

என் மகள் வீடு இருக்கும் தெருவை சேர்ந்தவர்கள் ஒன்று சேர்ந்து, ஒரு குழுவை அமைத்து, சேவை செய்து வருகின்றனர்.

எல்லா வீடுகளின் வாசலிலும் புங்கை மரக்கன்றுகளை நட்டு, ஆடு, மாடுகள் மேயாமல் சுருள் வேலி வைத்துள்ளனர். மேலே மின்கம்பிகள் இல்லாத இடங்களிலும், தெரு முனைகளிலும் வேப்பமரக் கன்றுகளையும் வைத்துள்ளனர். அதை, அந்தந்த வீட்டில் உள்ளவர்களே நீரூற்றி பராமரிக்கின்றனர்.

புங்கைமரம் சுற்றுப்புற சூழ்நிலைக்கு மிக நல்லது; ஆக்ஸிஜன் வெளியீடும் அதிகம். பெரிய பெரிய கிளைகள் விடாமல், ஓரளவு உயரத்தோடு குடை போல், படர்ந்து வளர்ந்து நிழல் தரும்.

அதோடு, எல்லா வீட்டு காம்பவுண்டு சுவரிலும், உரிமையாளர் பெயர், வீட்டு கதவு எண் இவற்றை தெளிவாக எழுதி வைத்துள்ளனர். தெரு நாய்களை வளரவிடுவதில்லை. அங்குள்ளவர்கள் யாராவது வீட்டை பூட்டி விட்டு, ஊருக்கு சென்றிருந்தால், தெருவில் உள்ள ஆண்கள் முறை போட்டு அந்த வீட்டை கண்காணிக்கின்றனர்.

அதுபோல், அந்த தெருவில் இருப்பவர்களின் நல்லது, கெட்டது அனைத்துக்கும் அனைவரும் கூட இருந்து உதவிகள் செய்கின்றனர்.

தெருவில் ஆங்காங்கு, 'சிசிடிவி' கேமரா பொருத்தியுள்ளனர். இவர்களை பார்த்து, மற்ற பகுதிகளில் உள்ளவர்களும் இவர்களிடம் ஆலோசனை கேட்டு, இதேபோல் ஆரம்பிக்க போவதாகவும் கூறியிருக்கின்றனராம்.

இதையெல்லாம் பார்த்த எனக்கு, ஆச்சரியமாக இருந்தது. எல்லாவற்றுக்கும் அரசாங்கத்தையே எதிர்பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது; தேவையானதுக்கு மட்டும் அரசு உதவியை கேட்டால் போதும் என்று செயல்படும் அத்தெருவாசிகளை பாராட்டினேன்.

கே.ராஜா, நெய்வேலி.

மகளின் சாதுர்யம்!

சமீபத்தில், வெளியூரில் திருமணம் செய்து வைத்திருந்த, என் உறவினர் மகளைப் பார்க்க சென்றிருந்தேன்.

அவள் வீட்டின் முன், கூட்டம் அதிகமாக இருந்ததால், பதட்டத்துடன் அருகே சென்றேன். பின்னர் தான் தெரிந்தது, வீட்டின் முன்பகுதியில், சிறிய மளிகை கடை இருப்பதும், அந்தக் கூட்டம் பொருட்கள் வாங்க வந்தவர்கள் என்பதும்.

உறவினர் மகளுடன் தனியாக பேசிக் கொண்டிருந்த போது, 'திடீரென மளிகை கடை ஆரம்பிக்க என்ன காரணம்?' என்று கேட்டேன்.

அதற்கு அவள், 'என் மாமியார், நாள் முழுவதும், 'டிவி' சீரியல்கள் பார்த்துக் கொண்டிருப்பார். மற்ற நேரங்களில், தேவையில்லாமல் என்னுடன் வாக்குவாதம் செய்வது வழக்கமாக இருந்தது. அதை எப்படி சமாளிப்பது என்று யோசித்தேன்.

'எங்கள் வீடு நெடுஞ்சாலைக்கு அருகில் இருப்பதால், கணவருடன் ஆலோசித்து, சிறிய மளிகை கடை ஒன்று துவக்கி, அதை மாமியாரிடம் ஒப்படைத்தோம்.

'இப்போது, அவர், மளிகைக் கடையை பொறுப்பாக கவனித்து கொள்கிறார். இதனால், வீட்டில் அமைதி கிடைப்பதோடு, கூடுதலாக வருமானமும் வருகிறது...' என்றாள்.

அவளது சாதுர்யமான யோசனையை மனதார பாராட்டினேன்.

ஆ.வீரப்பன், திருச்சி.

'பார்க்கிங்' மோசடி!

நான் வேலை விஷயமாக வெளியூர் செல்லும்போது, என் இருசக்கர வாகனத்தை, தனியார், 'பார்க்கிங்' இடத்தில் விட்டுவிட்டு, பேருந்து அல்லது ரயிலில் பயணிப்பது வழக்கம். குறிப்பாக, அங்கு, 'சிசிடிவி' கேமரா சரியாக இயங்குகிறதா என, உறுதிப்படுத்திக்கொண்டே வாகனத்தை நிறுத்துவேன்.

ஒரு குறிப்பிட்ட, 'பார்க்கிங்' இடத்தில், இரண்டு முறை வாகனத்தை விட்டுவிட்டு திரும்ப எடுத்து வந்த போது, வரும் வழியில் பெட்ரோல் தீர்ந்து வண்டி நின்றுவிடவே, எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. மறுநாள், வண்டி டேங்கில் முழுமையாக பெட்ரோல் நிரப்பி, அதே இடத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு, சில மணி நேரத்திற்கு பிறகு சென்று பார்த்தபோது, பெட்ரோல் முழுவதும் காலியாக இருந்தது.

உடனே, 'பார்க்கிங்' உரிமையாளரிடம், 'சிசிடிவி' பதிவைக் காண்பிக்க கேட்டபோது, 'அது வேலை செய்யவில்லை...' என்றார்.

போலீசில் புகார் செய்யப்போவதாகக் கூறியதும், பழுதான, 'சிசிடிவி'யை வைத்துக்கொண்டு வாகனங்களில் இருந்து பெட்ரோல் திருடுவதை ஒப்புக்கொண்டார்.

இனி இப்படி செய்யக்கூடாது என்றும், செயல்படும், 'சிசிடிவி'யை பொருத்த வேண்டும் என்றும் எச்சரித்துவிட்டு, அவர் திருடிய பெட்ரோலுக்கான பணத்தை வசூலித்துக் கொண்டு வந்தேன்.

நண்பர்களே... இதுபோன்ற மோசடிகளை தவிர்க்க, 'பார்க்கிங்' இடங்களில், 'சிசிடிவி' உண்மையாக இயங்குகிறதா என்பதை சரிபார்த்து, எச்சரிக்கையாக இருங்கள்!

ஆர்.செந்தில்குமார், மதுரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us