தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/விசேஷம் இது வித்தியாசம்: அம்மனுக்கு மீன் படையல்!

விசேஷம் இது வித்தியாசம்: அம்மனுக்கு மீன் படையல்!

விசேஷம் இது வித்தியாசம்: அம்மனுக்கு மீன் படையல்!


PUBLISHED ON : ஜூலை 12, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 12, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜூலை 17 வாராகி நவராத்திரி

புரட்டாசியில் வரும் நவராத்திரியை தான், தமிழகத்தில் பெரிய அளவில் கொண்டாடுகிறோம். ஒடிசா மாநிலத்தில், ஆடி மாதத்தில், ஆஷாட நவராத்திரி என்ற பெயரில் பன்றி முகம் கொண்ட, வாராகி அம்மனை முன்னிலைப்படுத்தி, ஒன்பது நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடுகின்றனர்.

தன்னை யாரேனும் தாக்கினால், உடலிலிருந்து சிந்தும் ஒவ்வொரு துளி ரத்தத்தில் இருந்தும், இன்னொரு அரக்கன் தோன்ற வேண்டும் என்ற வரத்தை, சிவனிடம் பெற்றிருந்தான், ரத்தபீஜன் என்ற அரக்கன். இந்த வரத்தைப் பயன்படுத்தி, தேவர்களுக்கு எதிராக அட்டூழியம் செய்தான்.

அவனை அழித்து தேவர்களைக் காக்க, முடிவு செய்த, பார்வதி, லலிதா பரமேஸ்வரி என்ற பெயருடன் அவதாரம் எடுத்தாள். தன் சக்தியில் இருந்து ஏழு தேவதைகளை உருவாக்கினாள். இந்த ஏழு பேருக்கும் சேனைத்தலைவியாக விளங்கியவள் தான் காட்டுப்பன்றி முகம் கொண்ட, தண்டநாதா. இதற்கு, சேனாதிபதி மற்றும் தண்டனை தருபவள் என்றும் பொருள்.

அவள், ரத்தபீஜனின் ரத்தத்தை முழுமையாக உறிஞ்சி, அவனை அழித்தாள். அவளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஒன்பது நாள் இரவில் பூஜிக்கப்பட்டாள். பன்றிக்கு, வராகம் என்ற பெயருண்டு. எனவே, அவளுக்கு வாராகி என்ற பெயர் ஏற்பட்டு, அதுவே நிலைத்து விட்டது.

இவளுக்கு ஒடிசா மாநிலம், பூரி மாவட்டத்திலுள்ள, சவுராசி கிராமத்தில், 9ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட பழமையான கோவில் ஒன்று உள்ளது. இந்தக் கோவிலில் அருள்பாலிக்கும், வாராகி அம்மனுக்கு முக்கிய படையல், மீன்.

இதற்கு காரணம் இருக்கிறது. தண்ணீரில் வசிக்கும் மீன், அதிலுள்ள அழுக்கை அகற்றுகிறது. இதே போல வாராகி வழிபாடு, பக்தனின் மனதிலுள்ள மாசை சுத்தமாக்குவதை குறிக்கும் வகையிலேயே, அம்மனுக்கு தினமும் மீன் படைக்கும் வழக்கம் ஏற்பட்டது. இந்த அம்மன் தன் வலது கையில் மீன் ஏந்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால், இவளை மத்ஸ்ய வாராகி என்கின்றனர். மத்ஸ்யம் என்றால், மீன். மத்ஸ்ய வாராஹி கோவில் என்று கூறினால் தான், இக்கோவிலுக்கு சரியான வழி காட்டுவர்.

இந்த தேவியின் வயிறு பெருத்து, தொந்தி தெரிகிறது. இந்த பிரபஞ்சத்தையே தன் வயிற்றில் அடக்கி இருப்பதை இது குறிக்கிறது.

ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் இருந்து, 60 கி.மீ., துாரத்திலும், புகழ் பெற்ற சூரியனார் கோவிலான கொனார்க்கிலிருந்து, 30 கி.மீ., துாரத்திலும் உள்ளது, சவுராசி கிராமம். புவனேஸ்வரிலும் இரண்டு ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான வாராகி கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலை, 'வைதால் தேவுலா மந்திர்' என்கின்றனர்.

வாராகி நவராத்திரி, ஜூலை 15ல் துவங்கி 23 வரை ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதில், ஐந்தாம் நாளான பஞ்சமி திதியன்று வாராகியை வழிபட்டால், தடைகளை உடைத்து நல்வாழ்வு தரும்.

தி. செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us