தென்னையில் வேர் புழுவை கட்டுப்படுத்த கரைசல் தெளிப்பு
தென்னையில் வேர் புழுவை கட்டுப்படுத்த கரைசல் தெளிப்பு
PUBLISHED ON : மார் 25, 2026

தென்னையில் வேர் புழுவை கட்டுப்படுத்துவது குறித்து, திருவள்ளூர் மாவட்டம், திரூர் வேளாண் அறிவியல் நிலைய தாவர நோயியல் துறை உதவி பேராசிரியர் செ.சுதாஷா கூறியதாவது:
தென்னை சாகுபடி செய்யும் போது, ஒவ்வொரு மரத்திற்கும் அதிக இடைவெளி விட வேண்டும். அப்போது தான் காற்றோட்டம் கிடைத்து, மரம் வேகமாக வளர்வதோடு, மகசூலுக்கு வழி வகுக்கும்.
குறிப்பாக, தென்னை வேர் பகுதியை தாக்கும் புழுக்கள், மண்ணில் அதிகமாக முட்டையிட்டு உற்பத்தி செய்யும். புழுக்கள் வண்டுகளாக மாறி தென்னை வேர், குருத்து ஓலை உள்ளிட்டவையை துளைத்து செல்லும் போது, தென்னை மரம் அழிய நேரிடுகிறது.
தென்னை சாகுபடியில் இழப்பு ஏற்படுவதை சரி செய்வதற்கு, மண்ணை ஆழமாக உழ வேண்டும். அப்போது, மண்ணில் இருக்கும் புழுக்கள் பறவைகளுக்கு தீவனமாகிவிடும். மழைக்காலங்களில், மரத்தில் இருந்து வெளி வரும் வண்டுகளை சேகரித்து அழிக்க வேண்டும். விளக்கு பொறிகளை பயன்படுத்தி, வண்டுகளை கட்டுப்படுத்தலாம்.
தென்னை வேரில், 5 மில்லி குளோர்பைரிபாஸ் 1 லிட்டர் நீரில் கலந்து வேரில் ஊற்ற வேண்டும். ரசாயன உரங்கள் இன்றி, ஒரு மரத்திற்கு 5 கிலோ வேப்பம் புண்ணாக்கு கலந்து, தென்னை மரத்தின் வேரில் தெளிக்கலாம்.
மெட்டாரைசியம் அனிசோபிலே என்ற உயிர் கொல்லி மருந்துகளை ஒரு மரத்திற்கு 100 கிராம் கரைசலை தெளிக்கலாம். இதுபோன்ற முறைகளை கையாளும் போது, தென்னை மரங்களை தாக்கும் வேர் புழு மற்றும் வண்டுகளை கட்டுப்படுத்தலாம். மகசூலுக்கும் பஞ்சம் இருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: செ.சுதாஷா,97910 15355.
