/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பழங்கள், காய்கறிகளை விற்க 'ஹாப்காம்ஸ் வாட்ஸாப் சேனல்'
/
பழங்கள், காய்கறிகளை விற்க 'ஹாப்காம்ஸ் வாட்ஸாப் சேனல்'
பழங்கள், காய்கறிகளை விற்க 'ஹாப்காம்ஸ் வாட்ஸாப் சேனல்'
பழங்கள், காய்கறிகளை விற்க 'ஹாப்காம்ஸ் வாட்ஸாப் சேனல்'
ADDED : பிப் 28, 2025 06:10 AM
பெங்களூரு: பெங்களூரின் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போருக்கு, தரமான பழங்கள், காய்கறிகளை அவர்களின் வீடுகளுக்கு கொண்டு சேர்க்க, ஹாப் காம்ஸ் திட்டமிட்டுள்ளது. இதற்காக 'வாட்ஸாப் சேல்ஸ் சேனல்' துவங்க தயாராகிறது.
இது தொடர்பாக, ஹாப் காம்ஸ் அதிகாரிகள் கூறியதாவது:
ஸ்விக்கி, சூமோட்டோ என பல்வேறு ஆன்லைன் மார்க்கெட்டிங் நிறுவனங்கள், பொது மக்களின் வீடுகளுக்கு பொருட்களை கொண்டு சேர்க்கின்றன. அதே போன்று பெங்களூரின் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போருக்கு, தரமான பழங்கள், காய்கறிகளை அவர்களின் வீடுகளுக்கு கொண்டு சேர்க்க, ஹாப் காம்ஸ் திட்டம் வகுத்துள்ளது.
சோதனை முறை
இதற்காக மார்ச் முதல் வாரம், 'வாட்ஸாப் சேல்ஸ் சேனல்' துவங்கப்படும். முதற்கட்டமாக சோதனை முறையில், நான்கைந்து அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு, பழங்கள், காய்கறிகள் சப்ளை செய்யும். திட்டம் வெற்றி அடைந்தால், நகரின் அனைத்து அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும், சப்ளை செய்யப்படும்.
தினமும் 30 சதவீதம் காய்கறிகள், பழங்கள் விற்பனை ஆகாமல் வீணாவதை தவிர்க்க, இத்திட்டம் உதவியாக இருக்கும். வாட்ஸாப் சேனல் வடிவமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. ஆப் நிர்வகிப்புக்கு தினமும் 24 மணி நேரம் செயல்படும் குழு அமைக்கப்படும். முதல் மூன்று மாதங்கள், இக்குழுவினரே ஆப் சேனலை நிர்வகிப்பர். அந்தந்த சீசனுக்கு தகுந்தார் போன்று, காய்கறிகள், பழங்கள் விற்கப்படும்.
ஆர்வம் உள்ளவர்கள், 'க்யூ ஆர்' கோடு ஸ்கேன் செய்து பதிவு செய்து கொள்ள வேண்டும். வாட்ஸாப் சேல்ஸ் சேனலில், 150 க்கும் மேற்பட்ட காய்கறிகள், பழங்கள், தள்ளுபடி சலுகை, விலை என, அனைத்து தகவல்களும் பதிவு செய்யப்படும். பொது மக்கள் விருப்பமான பழங்கள், காய்கறிகளை தேர்வு செய்து கொள்ளலாம்.
24 மணி நேரம்
மக்கள் ஆர்டர் செய்த 24 மணி நேரத்துக்குள், அந்தந்த அடுக்குமாடி குடியிருப்புகளை சென்றடையும். ஆன்லைனில் பணம் செலுத்தலாம். பழங்கள், காய்கறிகளை டெலிவரி செய்யும் போது, பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.
ஹாப்காம்ஸ் அருகில், 200 க்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் பட்டியலிடப்பட்டன. அங்குள்ள மக்கள் நல சங்கங்களுடன் பழங்கள், காய்கறிகள் சப்ளை செய்வது குறித்து, பேச்சு நடத்தப்பட்டுள்ளது. 50 குடியிருப்புகள் சம்மதித்துள்ளன. மற்ற குடியிருப்புகளுடன் பேச்சு நடக்கிறது. வரும் நாட்களில் சம்மதிப்பர் என, நம்புகிறோம்.
ஆன்லைனில் பழங்கள், காய்கறிகளை வாங்குவோருக்கு தள்ளுபடி சலுகை கிடைக்கும். ஆனால் குடியிருப்பு வளாகத்துக்கு வரும் வாகனங்களில் பழங்கள், காய்கறிகள் வாங்குவோருக்கு தள்ளுபடி சலுகை கிடைக்காது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.